Wednesday, December 28, 2011

தீட்சை

குருவே சரணம்! குரு திருவடி சரணம்.

என் குரு
திரு அருட்பிரகாச வள்ளலார் பாதம் பணிந்து அவர் ஆசியுடன் இக்கட்டுரையை எழுதுகிறேன். இவை அனைத்தும் ஞான சற்குரு எங்களுக்கு உபதேசம் அளித்தவையே. அதை உங்களிடம் பகிர்வது மகிழ்ச்சி கொள்கிறேன்.ஒரு மனிதன் எப்போது மனிதனாகிறான்? மாதா, பிதாவை பெற்றவன் மனிதனல்ல!?

குருவை பெற்றவன் தான் மனிதனாகிறான்! உருவத்தால் மனிதனானவன் உள்ளத்தாலும் பண்பட்டு உண்மையிலேயே மனிதனாவது ஒரு ஞான குருவை பெற்ற பின்னரே!

மாதா பிதாவை காட்ட! பிதா குருவை காட்ட வேண்டும்! குருதான் இறைவனை காட்ட முடியும்!

பழைய காலங்களில் சிறுவனாயிருக்கும்போதே எல்லோரையும் குருகுலத்தில் சேர்த்துவிடுவார். அங்குதான் அவனுக்கு எல்லாம் போதிக்கபடுகிறது.

உலகில் வாழவும் இறைவனை உணர்த்தியும், ஒருவனை முழு மனிதனாக மாற்றி விடுவது குருகுல வாழ்க்கையே!

இன்றைய கல்வி வெறும் ஏட்டுச்சுரைக்காயாகவே உள்ளது.

மாணவர்கள் மனனம் செய்து மதிப்பெண்களை பெறுகிறார்கள்?! யாரும் புரிந்துகொள்வதில்லை.

இன்றைய பெற்றோரும் தன்பிள்ளை அதிகம் சம்பாதிக்க எந்த கல்வி படிக்கனுமோ அதில்தான் சேர்த்து விடுகிறார்கள்.

பணம் பணம் என அலைகிறார்கள். முடிவில் பினமாகித் தான் போகிறார்கள்.

கம்ப்யூட்டர் மோகம் எல்லோரையும் பிடித்து ஆட்டுகிறது. கை நிறைய சம்பாதிக்கிறார்கள். சிறிது நாளிலேயே இயந்திரமாகி விடுகிறார்கள். வாழ்வில் நிம்மதியில்லை!

அமைதி இல்லை - ஓய்வில்லை என்று அதைத்தேடி மது, மாது என போதிக்கும் கேளிக்கைக்கும் அடிமையாகிறார்கள். முடிவில் அழிந்துதான் போகிறார்கள்.

"தம் மதி கெட்டவர்களுக்குதான் நிம்மதி இருக்காது" தடுமாறுவர்! தறுதலையாக திரிவர்!

இது எது போலென்றால் புதையலைத் தேடிப் போய் கரடியிடம் மாட்டிகொண்ட கதை தான்?!

ஒழுக்கமில்லாதவன் சேர்க்கும் பணம் நிலைப்பதில்லை பணம் அல்ல வாழ்க்கை!

அடிப்படை கோளாறு ஆரம்பக் கல்வியிலேயே! ஒழுக்கம் கற்பிக்கப்படுவதில்லையே!

மனித வாழ்க்கை ஒழுக்கம் என்னும் அஸ்திவாரத்தில் மேல் எழுப்பபடுவதே!?

"ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப்படும்" ------- குறள்

ஒருவனுக்கு மேன்மையுண்டாக்குவது நல்ல நடத்தைதான் அதனால் நல்ல நடத்தையை உயிரைவிடச் சிறந்ததாகப் பாதுகாக்க வேண்டும். ஒழுக்கம் இல்லாதவன் மனிதனல்ல மிருகம்?!

"கல்தோன்றி மண் தோன்றா காலத்து முன் தோன்றிய மூத்த தமிழ்" என்று உலகோரால் போற்றப்படும் நம் தாய் மொழியாம் தமிழில் எத்தனையோ ஞானநூற்கள் நீதி நூற்கள் உள்ளனவே!? படிப்பது யார்?

இன்றைய உலகில் பழைமையான மொழி தமிழ்! இங்கு இது சிறப்படைய காரணம் ஒழுக்கத்தை, நீதி நெறி தவறாத நல்ல வாழக்கையை அறிவுறுதிதயதுதான்.

உலகமக்கள் அனைவருக்கும் பொதுவான கலாசாரம் வாழ்க்கைமுறை இங்கு வழங்கப்பட்டதால் தான்!

இதுதான் சனாதன தர்மம்
இதுவே உன்னதமான கலாச்சாரம்!
இதுவே மனிதன் மனிதனாக வாழ வழிகாட்டியது!

"ஐந்து கண்டம் அளாவிய தமிழ்" என திருமூலர் குறிப்பிடுகிறார் என்றால் பழங்காலத்தில் உலகில் இருந்த 5 கண்டங்களிலும் தமிழ் தமிழர் கலாச்சாரம் - சனாதன தர்மமே தழைத்தோங்கியிருந்தது என்பதை உணரலாமல்லவா?!

மனிதன் பிறப்பு இறப்பு வாழ்க்கை நிலைகளை பார்த்தோமல்லவா? இந்த வாழ்வு முழுமைபெறுவது நாம் பெறும் "வீடுபேறில்" தான் இருக்கிறது. அறிந்தோமல்லவா?!

அதற்க்கு வழி ஒழுக்கம் - பின் குரு வழி உபதேசம் தீட்சை பெற்று நம் வாழ்வை மேம்படுத்துவதுதான்!

தவ வாழ்க்கையை தன்னை உணரும் வழி! பிறப்பு இறப்புக்கு காரணமான வினைகளை வேரறுக்க, ஒளியாகிய நம் உயிரைப் பற்றி நின்றாலே முடியும்!

"சிவத்தை பேணல் தவத்திற்கு அழகு"

ஔவையார் கூறியது, சிவமாகிய ஒளியை பேணி பெருக்குவதே தவம் என்பதே!


சக்கர நெறிநில்:
------------------------
ஔவையார் கூறியது சக்கரம்போல் உள்ள கண்மணியைப் பற்றித்தான்! "வெட்டாத சக்கரம்" என இன்னொரு ஞானி கூறியதும் இதைத்தான்!

கண்மணியை - அதில் உள்ள ஒளியை பற்றி அந்த நெறிப்படி வாழ் என்பதே பொருள்.!

மோனம் என்பது ஞானவரம்பு:
--------------------------------------------
மோனம் என்றால் மௌனம். மௌனமாக இருப்பதே ஞானிகள் செயல். மௌனகமா இருப்பது என்பது வாய் பேசாமல் இருப்பதல்ல!

மெளனமாக இருக்கும் கண்மணியை குறிப்பதாகும். "கண்டவர் விண்டிலர் விண்டவர் கண்டிலர்" என சொல்லப் படுவது இதுதான்.

காணுகின்ற கண்தான் கண்டவர் அது பேசாது. மௌனமாகவே உள்ளது. விண்டவர் என்பது பேசுபவர் வாய் தான். விண்டிடும் வாய் பார்க்க முடியாது.

காணும் கண்ணே மௌனம் - மோனம். மோனமாகிய கண்ணில் நிற்பதே ஞானம்.

"ஒத்த இடத்து நித்திரைகொள்"

முதுகுவலி கழுத்துவலி உடல் வலியால் அவதிப்படும் நோயாளிகளுக்கு இன்றைய டாக்டர்கள் சமதரையில் தலையணை இன்றி படுத்து உறங்க சொல்கிறார்கள். இது உடலுக்கு ஆரோக்கியம்.

ஒத்த இடம் - ஒன்று போல் இருக்கும் இரு இடம் நம் இரு கண்கள்தான்!

நம் கண்மணியில் உள்ள ஒளியில் நிலைத்து தூங்காமல் தூங்குவதே ஞானம்!

இப்படி பொருள் கொள்வதுவே அறிவு உள்ளவர்கள் செயல்.

"பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர ஒழுக்க
நெறி நின்றார் நீடுவாழ் வார்" - குறள்

போய் நீக்கி சத்தியமாக, ஒழுக்கமாக நல்ல நெறியோடு வாழ்பவர்; தன் உடலில் ஐந்து பொறிகளுக்கும் வாயிலாக கண்மணியில் உள்ள ஒளியில் ஐம்பூதங்களையும் சுட்டு எரித்து வந்தாலே மரணமின்றி நீடுடி காலம் வாழலாம்.

"அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு" ---- குறள்

எல்லா உயிர்களிடமும் அன்பு பாராட்டி வாழ்பவனே தன் உடலில் உள்ள - கண்மணியில் சிறு ஒளியாக துலங்கும் உயிரை அறிந்து உணர்வான், வாழ்வான். உடலும் அழியாது.

அன்பில்லாதவன் உடல் வெறும் எலும்பும் தோலுமான பிண்டமே.

"கண்ணிற்கு அணிகலம் கண்ணோட்டம் அஃதின்றேல்
புண்ணென்று உணரப் படும்.
---- குறள்

நம் கண்களின் சிறப்பு என்னவென்றால்; கண்மணியிலுள்ள சிறு ஒளியை அறிந்து உணர்ந்து உள் ஓடிஅக்னியுடன் சேர்வதே!? இதை அறியாதவர்களுக்கு இருப்பது புண்தான்!

"தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சிதன்
மெய்வருத்தத் கூலி தரும்" ------------ குறள்

எல்லாம் வல்லவன் என இறைவனை சொல்கிறோம்! அப்படியிருக்க தெய்வத்தால் ஆகாதது என வள்ளுவர் எதை சொல்கிறார்?

இங்குதான் குரு உபதேசத்தின் முக்கியத்துவம் உணரலாம்!

தெய்வம் பெரோளியானது! நம் கண். மணியில் சிறு ஒளியாக இருக்கிறது!

நம் கண்மணியின் மத்தியில் உள்ள சிறு துவாரத்தின் உள் இந்த இறைவன் சிறு ஜோதியாக துலங்குகிறான்.

நம் கண்மணியின் மத்தியிலுள்ள சிறு துவாரம் ஒரு ஜவ்வால் அடைபட்டுள்ளது! இறைவனை மறைத்து இருக்கிறது.

ஜவ்வால் அடைபட்ட துவாரத்தை திறக்க வைக்க முயற்சிப்பதே நாம் செய்யும் தவம்!

அந்த ஜவ்வு நீங்கி நாம் நம் உயிரான ஆத்ம ஜோதியை தரிசிக்க வேண்டும். இதுதான் நாம் செய்ய வேண்டியது.

இங்கே தெய்வம் உள்ளே உள்ளது. வாசலாகிய ஜவ்வு மறைத்துள்ளது இங்கே தெய்வத்தாலாகது!

குருமூலமாக தீட்சைபெற்று அந்த ஜவ்வு நீங்க தவம் செய்வதே நாம் செய்யும் முயற்சி.

நம் முயற்சி தீவிரமாக, தீவிரமாக தீ-உரமாக, தீ-உரமாக, தீ-விரைவாக பெருகி, சிறுவாசலை அடைத்து கொண்டிருக்கும் மெல்லிய ஜவ்வு உருகி கரைந்துவிடும்!?

இந்த ஜவ்வு - மறைப்புதான்; ஏழு திரைகளாக வைத்து அதன்பின் ஜோதிவைத்து வடலூரில் சத்திய ஞானசபையில் திவருட்பிரகாச வள்ளலார் இராமலிங்க சுவாமிகளால் ஜோதி தரிசனம் காண்பிக்கப்படுகிறது.

மனிதன் தன்னுள் காண வேண்டிய உணர வேண்டிய ஆன்ம தரிசனக் காட்சியே வள்ளலார் புறத்தே காட்டி நமக்கு அறிவுறுதியிருக்கிறார்கள்.

வள்ளலாரின் சிறப்பு இதுதான்! எல்லா ஞானிகளும் பற்பல விதங்களிலும் பரிபாசையாக சொல்லியிருக்கிறார்கள்.

வள்ளல் பெருமான் அகநிலையை அப்பட்டமாக அப்படியே புறத்தே காட்டி, அப்படியாவது மக்கள் உணர்ந்து மரணமில்லா பெருவாழ்வு அடையட்டுமே என்ற பேராசையால் நிர்மானித்துள்ளார்கள்.

ஜவ்வுதான் 7 திரைகள் என்று அதன் தன்மைகளை வெகு விளக்கமாக திருவருட்பா - அருட்பெரும்ஜோதி அகவலில் அருளியிருகிறார்கள்.

சைவ சித்தாந்தத்தில் பக்தியாக கூறியிருக்கிறார்கள். பதியாகிய இறைவனை பசுவாகிய ஆன்மாக்கள் அடைய தடையான பாசத்தை நீக்க வேண்டும் என்பதே.

பாசந்தான் மும்மலங்கள் - ஆணவம் கண்மம் மாயை என்பது! மும்மலங்கள் நீங்க சிவத்தை பணியவேண்டும்.

சிவம் என்றால் ஒளி!

ஒளியை பற்றினால் மும்மலமாகிய பாசத்திரையற்று பசு பத்தியை அடையலாம்!

இதை மிக மிக நுணுக்கமாக அறிந்து, உணர்ந்து நமக்கும் வழிகாட்டி, சத்திய ஞான சபை அமைத்து ஜோதி தரிசனம் காட்டி உலகோர் எல்லோரும் மரணமில்லா பெருவாழ்வு பெற உருவாக்கியிருக்கிறார், அருளியிருக்கிறார்.

அருளை அள்ளி அள்ளி கொடுத்தார் வள்ளலார்! அருள் வள்ளல் வள்ளலாரே! இதையெல்லாம் உபதேசித்து தீட்சையின் மூலம் உணர்த்துவதே எமது பணி!

எல்லா மகான்களும் துனையாயிருந்து வள்ளலார் வழி நடத்த, எங்கள் ஞான சற்குரு இருந்து தீட்சை கொடுப்பது இப்படியே!

நாம் எப்படி முயற்சி செய்ய வேண்டும் - தவம் செய்ய வேண்டும் என உபதேசித்து உணர்வு கொடுப்பதே தீட்சை.

தீட்சையின் மூலம் பெற்ற உணர்வால் தவமுயற்சி மேற்கொள்ள மேற்கொள்ள நம் மெய்யாகிய உடல் வருத்த தவம் செய்து, மெய்யிலுள்ள மெய்ப்பொருளாகிய கண்மணியில் உள்ள ஒளியை உணர்ந்து அவ்வொளியை பெருக்க முயற்சிப்பதே நம் முயற்சி.

இப்படி நாம் முயற்சி செய்தோமானால், நம் மெய் வருந்த முயற்சித்தோமானால் உள்ளிருக்கும் தெய்வம் வெளிப்படும்.

அதன்பின் எல்லாம் அவனே! அவனே நம்மை நடத்துவான்.

அவன் வெளிப்பட முயற்சிப்பதே தவம்! இந்த உலகில் நமது முயற்சி இது ஒன்றாகத்தான் இருக்க வேண்டும். இருந்தால்தான் காணலாம், அடையலாம் இறைவனை!

இதைத்தான் வள்ளல் பெருமான் ஞானசரியையில் கூறியிருக்கிறார் நம் முயற்சி எப்படி அமைய வேண்டும் என கூறுகிறார்.

நினந்துநினைந்த் துணர்ந்துணர்ந்து நெகிழ்ந்துநெகிழ்ந்த்தன்பே

நிறைந்து நிறைந் தூற்றெழுங்கண் ணீ ரதனால் உடம்பு

நனைந்துநனைந் தருளமுதே நன்னிதியே ஞான

நடத்தரசே என்னுரிமை நாயகனே என்று

வனைந்துவனைந் தேத்துதும்நாம் வம்மின்உல கியலீர்

மரணமில்லாப் பெருவாழ்வில் வாழ்ந்திடலாம் கண்டீர்

புனைந்துரையேன் போய்புகலேன் சத்தியஞ்சொல்கின்றேன்

பொற்சபையில் சிற்சபையில் புகுந்தருணம் இதுவே.

இவ்விதம் நம் முயற்சி தொடருமானால் மரணமில்லா பெருவாழ்வு பெறலாம்.


தீட்சை - தீக்கை என்றும் கூறுவர். அட்சத்தில் உள்ள தீயை உணர்த்துதல் தீட்சை! அட்சம் என்றால் கண்.

தீ உள்ள கையில் - கண்ணில் உணர்வு கொடுப்பதுதான் தீக்கை!

சீடன் கண்மணியில் உள்ள தீயை, குரு தன் கண்மணி ஒளியால் தூண்டுவதே தீட்சையாகும்!

தொடாமல் தொடுவது!
உணர்வால் உணர வைப்பது!
கண்மணியில் உணர்வை கொடுப்பது!
தீட்சை பெறுவதுதான் மறுபிறப்பு!

தீட்சை பெற்று பிரம்மமாகிய பரம்பொருளை பெருஞ்ச்ஜோதியை எண்ணி எண்ணி அதிலேயே லயிதிருப்பவனே - அதை சார்ந்திருப்பவனே பிராமணன்!

பிரம்மசாரி என்பவனும் இவனே! கல்யாணம் செய்யாமல் இருப்பவன் பிரம்மசாரி இல்லை!

"இல்லறமல்லது நல்லறமன்று"

திருமண வாழ்க்கை வேண்டாம் என்று, விரும்பி துறவி வாழக்கை மேற்கொண்ட ஔவையார் சொல்வது தான் "இல்லறமல்லது நல்லறமன்று"

ஔவையார் கூறிய இல்லறம் எது தெரியுமா? இல் - என்றால் இல்லம். நமது இல்லம் நமது உடல்தானே!

நமது இல் ஆகிய உடலில் குடிகொண்டிருக்கும் இறைவனோடு-உடலில் கண்மணியில் ஒளியில் நல்ல நெறியோடு அறத்துடன் வாழ்வதுதான் நல்லறம்!

ஆத்மாக்கள் அனைவரும் பெண். பரமாத்மா மட்டுமே புருசன். ஆத்மாக்களாகிய நாம் புருஷோத்தமனான பரமாத்மாவோடு கூடுவதே இல்அறம் என சிறந்த இல்லறம் என ஞானிகள் கூறுகின்றனர்.

ஜீவன் பிரம்மத்தோடு ஐக்கியமாவதே ஜீவ பிரம்ம ஐக்கிய வேதாந்தம் உரைக்கிறது.

ஜீவன் இருக்குமிடம் - கண்மணி ஒளியாக! கண் ஒளியை பெருக்கி நாம் பக்குவமாகிய பின்னரே; அதாவது பெண் ஆகிய நாம் பூப்பெய்திய பின்னரே பூ - கண்மலர், எய்துவது அடைவது பரமான்மாவை! பூப்பெய்திய பின் தானே கல்யாணம்!?

எல்லாமே ஞான்ந்தான்!

நம் நாட்டில் சொல்வது அனைத்தும் ஞானமே! அதனால் தான் இது ஞான பூமி என்கிறோம்!

பெண் ஆகிய ஆன்மா ஆகிய நாம் பக்குவம் பெறுவதே - கண் திறப்பதே - தீட்சையின் பலன்!?

சூட்சும சரீரமே ஆன்மசரீரம்; ஆன்ம சரீரம் பிறப்பது தீட்சையினால்தான்!

முதலில் பிறக்கணும்! பின்னர் பக்குவமாகணும்! பின்னரே கல்யாணம்!

வாருங்கள்! தீட்சையின் மூலம் மீண்டும் பிறக்க!

காத்திருக்கிறோம்! கடவுள் பணிசெய்ய! தீட்சை பெற்றவனே முழுமையான மனிதன்! பிறப்பின் நோக்கம் பூர்த்தியாக ஒரேவழி தீட்சை பெறுதலே!

"கையறுவிலாத நடுகண் புருவ பூட்டு கண்டு களி கொண்டு திறந்துண்டு நடுநாட்ட"


மேலும் இங்கே சொடுக்கவும் (click here) ஞான சற்குரு சிவ செல்வராஜ் அய்யாவின் திருவடி தீட்சை உரை வீடியோ தொகுப்பு.


வாரீர்! வாரீர்! வாழலாம்!

தானமும் தவமும் செய்க!

ஞான நூற்களை வாங்கி
ஞானதானம் செய்க!
மெய்ப் பொருளை உணர்ந்து
தவம் செய்க!

வாழ்க வளமுடன்!

P. மதிவாணன்
mathish0610@gmail.com

Tuesday, December 27, 2011

மறுபிறவி

குருவே சரணம்! குரு திருவடி சரணம்.


என் குரு
திரு அருட்பிரகாச வள்ளலார் பாதம் பணிந்து அவர் ஆசியுடன் இக்கட்டுரையை எழுதுகிறேன். இவை அனைத்தும் ஞான சற்குரு எங்களுக்கு உபதேசம் அளித்தவையே. அதை உங்களிடம் பகிர்வது மகிழ்ச்சி கொள்கிறேன்.


இந்தப் பிறவியே வேண்டாம் என்கிறோம் மறுபிறவியா? என யோசிக்காதீர்கள்!

இந்த பிறவியோட பிறவிப்பிணி முடிவுக்கு வரவே மறுபிறவி!?

இங்கு சொல்லப்படும் மறுபிறவி என்பது இந்த பிறவி முடிந்து இனியும் பிறப்பது அல்ல!?

இந்தப் பிறவியே இறுதியாக இருக்க வேண்டும்! அதற்குத்தான் நம் ஞானிகள் வழி கூறுகிறார்கள்!

அது என்ன? எப்படி? பிறந்து விட்ட நாம் ஞானகுரு ஒருவரைப் பெற்று உபதேசம் பெற்று சூட்சும நிலையில் பிறப்பதே மறுபிறவியாம்!

அதாவது உடலால் பிறந்த நாம், உணர்வால் நம் சூட்சும உடலை பிறப்பிக்க ஒரு குருவை பெற்றேயாக வேண்டும்!

யார் நம்மை, சூட்சும சரீரத்தை பிறப்பிக்கச் செய்கிறாரோ அவரே குரு!

நாம் வாழ்வின் பெறும் பேறே இதில்தான் இருக்கிறது. ஞானமடைய இதுவே வழி!


நம் ஸ்தூல தேகத்தை போலவே, நம் உடலினுள் ஒளிவடிவில் சூட்சும தேகம் உள்ளது! முதலில் அதை உணர வேண்டும்!

குருவானவர் தீட்சையின் மூலம் சூட்சும சரீரத்தை பிறப்பிக்கச் செய்கிறார்!

ஸ்தூலதேகத்தில் பிறந்த நாம் சூட்சுமதேகத்தில் பிறப்பதே மறுபிறவி. பிறந்த இப்பிறவியிலேயே மீண்டும் பிறப்பது என்பது இவ்வாறு தான்!

இதை யார் உணருகிறார்களோ அவர்களே ஞானம் பெறுகிறார்கள்.

வேதங்களில் சொல்லப்படுவது "துவிஜன்" இரு பிறப்பாளன் என்பதே.

துவிஜன் யார்? மீண்டும் பிறந்தவன்! பக்திமார்க்கதில் பிறந்த குழந்தை 8 வயது பூர்த்தியாகுமுன் உபநயனம் செய்து வைக்கிறார்கள்.

உபநயனம் ஆனவன் துவிஜன்! உலக நடைமுறையில் இன்று இது வெறும் சடங்காகவே இருக்கிறது.

துவிஜன் யார்? எதற்கு உபநயனம்? என உணர்ந்தவர்கல்வெகு சிலரே!

உபநயனத்தின் போது 3 நூல்களை சேர்த்து தோளில் போட்டு, காயத்ரி மந்திரம் உபதேசம் செய்கிறார்கள்.

உபநயனம் ஆனவன் துவிஜன் பிராமணன் என பெருமைப்பட்டு கொள்கிறார்கள்!

இதன் பொருள் தெரியுமா? உபநயனம் என்றால், உப=இரண்டு, நயனம் = கண் என பொருள். அதாவது உபநயனம் என்றால் இரண்டு கண்.

மூன்று நூலை சேர்த்து தோளில் போடுகிறார்கள். ஒரு முடிச்சு அது பிரம்ம முடிச்சி என்றும் சொல்வர் அது என்ன?

மூன்று நூல் சேர்க்க அறுவு
றுத்தியது, சூரியன் - சந்திரன் - அக்னி என்ற மூன்று கலைகளையும் இணைக்க வேண்டும். என்பதே!

காயத்ரி மந்திரம் கூறுவது என்ன? பிராமணர்கள் ஓதும் முக்கியமான மந்திரம் உருவாக்கியவர் சத்திரியரான விசுவாமித்திர மகரிஷி!

ஒருவன் பிராமணன் ஆகவேண்டுமாயின் அதாவது பிரம்மத்தை உணர்பவன் பிராமணன். பிரம்மத்தை சார்ந்து இருக்க வேண்டுமாயின் சத்திரியான விசுவாமித்திர மகரிஷி அருளிய காயத்திரி மந்திரத்தை உணர வேண்டும்.

காயத்ரி மந்திரத்தின் பொருள் தெரியாதவன் பிராமணன் அல்ல!?

காயத்ரி மந்திரத்தின் பொருள் உணர்ந்து அதன்படி வாழ்க்கையை அனுஷ்டிப்பவன் எவனோ அவனே பிராமணன் பிறப்பால் யாரும் பிராமணனல்ல!? பிறப்பில் யாருக்கும் ஜாதி இல்லை! மதம் இல்லை!

பிறந்தபின் ஏதாவதொரு ஜாதி பெயர் சூட்டி இன்ன ஜாதி பெயர் என்கிறார்கள்.

பிறந்த பின் ஞானஸ்தானம் சர்ச்சில் செய்தபின் தான் கிருத்துவன்!

சுன்னத் செய்தவன்தான் முஸ்லிம்! இப்படியே ஒவ்வொரு வரும் ஒவ்வொரு பழக்க வழக்கத்தை கொண்டிருக்கின்றனர்.

பிறக்கின்ற எந்த குழந்தையும் நிர்வாணமாகவே பிறக்கிறது. ஜாதி, மதம், இனம், மொழி,நாடு ஒன்றுமே குழந்தைக்கு கிடையாது!?

உடல் வளர வளரத்தான் மனிதன் எல்லா பேதங்களுக்கும் உற்றார் பெற்றோரால் உட்படுத்தப்படுகிறான்.

உடல் வளருகிறது. குறுகிய மனோபாவமே உடையவனாகிறான்! அறிவு வளர்வது இல்லையே!? இதை யாரவது உணர்ந்தார்களா?

நிர்வாணமாக பிறந்த குழந்தை வளர்ந்து ஆளாகி அறிவுடையனவாகி பிறப்பறுத்து மகா நிர்வாண நிலையடைய வேண்டும் என்பதுதான் இறைவன் படைப்பு!

நிர்வாணம் என்பது ஆடையை துறப்பது அல்ல! மனதை துறப்பது!?

பிறந்த குழந்தை எந்த பேதமுமின்றி எல்லாம் வல்ல இறைவனை அடைய வழிசொல்ல உபதேசிக்கப்படுவதே உபநயனம்.

நம் வலது கண்ணில் உள்ள சூரிய கலையையும் இடது கண்ணில் உள்ள சந்திர கலையையும் உள்ளே உள்ள அக்னி கலையோடு சேர்க்க வேண்டும்.

இரு கண்களில் உள்ள ஒளிவழி உட்புக வேண்டும். பிரம்மமாகிய பேரொளியை சேர வேண்டும். அதற்காக ஒவ்வொருவரும் உபதேசம் பெற வேண்டும். பிரம்மத்தை சார்ந்தவனே பிராமணன்.

மறுபிறப்பை பற்றி பைபிளில் தெளிவாக கூறப்படுகிறது.

"மறுபடியும் பிறவாதவன் பரலோக ராஜ்ஜியத்தில் பிரவேசிக்க மாட்டான்".

மறுபடியும் பிறந்தால்தான் பரலோக ராஜ்ஜியம்!? எப்படி?

எவன் ஒருவன் அக்னியாலும் பரிசுத்த ஆவியாலும் ஞானஸ்நானம் பெருகிறானோ? அவனே மறுபடியும் பிறந்தவன்! அவன்தான் பரலோக ராஜ்ஜியத்தை அடைவான்!

அக்னியால் ஞானஸ்நானம் என்பதுதான் அக்னியை பெருக்க வழிகூறும் உபநயனம்!

வெவ்வேறு பாசையில் சொல்லப்பட்ட ஒரே விஷயம்!

கடவுளை அடைய ஒரே வழி மீண்டும் பிறப்பதே!

துவிஜன் - மறுபடியும் பிறப்பவன்.

பிரம்மமாகிய ஒளியை - கடவுளை அடைய - உணர, பிரம்மத்தின் தன்மையாகிய ஒளி நம் கண்களில் துலங்குவதை அறிந்து உணர்ந்து, இரு கண்கள் வழி ஞான தீட்சை பெற்று, அக்னியால் ஞானஸ்தானம் பெற்று தியானம் செய்வதே மறுபிறவி பெறும் வழி! இறைவன் அருள்வார்!.

குரு மூலமாக உபநயனத்தில் தீட்சை பெற்று தவம் செய்தாலே பிறப்பறுக்கலாம்!

"மாற்றிப் பிறக்க வகையறிந்தாயில்லை" - என அகஸ்தியர் கூறுவதும் இதுவே.

பிறந்த இப்பிறவியில் குருமூலம் தீட்சை பெறுவதே மாற்றிப்பிறப்பது ஆகும்!

செத்துப் பிறப்பது நீங்க, மாற்றிப் பிறந்தாலே முடியும்.

இப்பிறவி தப்பினால் இப்பிறவி வாய்க்குமோ? அரிதான இம்மானிட பிறவியில் மீண்டும் பிறக்கின்ற இந்த ஞான நிலையை யார் உணர்கிறார்களோ அவருக்கு மறுபிறவி இல்லை!

எங்கள் ஞான சற்குரு இவ்விதம் புதிதாக நிறைய குழந்தைகளை பெற்றுளார்கள்.

ஞானதீட்சை - திருவடி தீட்சை பெறும் நாளே மீண்டும் பிறந்த நாள். சூட்சும சரீரத்தின் பிறப்பே மறுபிறப்பு, ஒளி பொருந்திய கண்களின் வழியே பேரோளியான இறைவனை தவம் செய்து அடைவதற்காகவே நாம் பிறந்திருக்கிறோம்.

"பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கும்" கண் எப்படி எதையும் பற்றாமல் இருக்கிறது என்பதை குருமூலம் தீட்சை பெற்று உணர்க!

பற்றற்ற இறைவன் நம் உடலில் பற்றற்ற கண்ணாக துலங்குகிறான்.

நாம் கொண்ட உலக பற்றுக்கள் நீங்க வேண்டும். அதுவே துறவு.

நம்மை கொண்ட கர்ம பற்றுக்கள் நீங்க வேண்டும். அதுவே ஞானம்.

உலக பற்றை விட்டால் நம்மைப் பற்றிய கர்ம பற்றை அறுக்கலாம்!

"பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கும் மற்று நிலையாமை காணப் படும்" - குறள்

பிறவிக்கு காரணமே பற்றுகள்தாம்.

பற்றுகளெல்லாம் அற்றுப்போன பிறகுதான். இனிப்பிறவாத நிலை அடைய முடியும். இல்லையானால் மீண்டும் நிலையற்ற பிறவிதான் வரும். "பற்றில்லாத கண்ணே இறைவன்"

"பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு" ---------குறள்

பற்றுகளை அறுப்பது மிகவும் கடினம்.

பற்றுகளை விட்டோழிப்பதற்கு பற்றற்றவனாகிய பகவானைப் பற்றிக்கொள்ள வேண்டும். அந்த பற்றை விடாமல் பின்பற்ற வேண்டும்.

பற்றற்றான் ஆகிய இறைவன் எந்த பற்றும் இன்றி பற்றற்றிருக்கும் நம் கண்ணில் மணியில் ஒளியாக உள்ளான்.

ஒளி எதையாவது பற்றினால் என்னாகும்? பற்ற வேண்டிய முறைப்படி பற்றவேண்டும். அதற்கு முதலில் பற்ற வைக்கத் தெரிந்த ஒரு ஞான குருவை சரணடைய வேண்டும். பற்ற வைக்க வேண்டிய முறைப்படி குரு பற்ற வைத்தால் தான் பற்றற்றானை நாம் பற்ற முடியும்!

"பற்றற்றான் பற்றினையே பற்றியிடல் வேண்டும் அது பற்றற்றால் அன்றி பலியாது ----------- திருவருட்பா

பற்றற்ற இறைவன் நம் உடலில் எந்த பற்றும் இன்றி, எதையும் பற்றாமல் ஒளியாக இருக்கும் துலங்கும் நம் கண்களை நாம் பற்ற வேண்டும்.

உறுதியாக உணர்ந்து நின்று நிலைக்க வேண்டும். அதற்கு நாம் உலகபற்றை விட வேண்டும். அப்போதுதான் இறைவனை பற்ற முடியும் என்கிறார் வள்ளலார்.

நம் பற்றை விட்டால்! பற்றற்ற இறைவனை பற்றினால் உடலால் பிறந்த இப்பிறவியிலேயே உணர்வால் சூட்சும சரீரத்தை ஞானகுரு கடாட்சத்தால் பிறப்பிக்கச் செய்து தவம் செய்தால்! பிறந்து-இறந்து-பிறந்து வாழும் நிலையிலிருந்து விடுபடலாம்! வீடுபேறு அடையலாம்! வருக!

"பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னும் செம்பொருள் காண்பது அறிவு" -------- குறள்

பிறப்பு என்னும் அறியாமை நீங்க வேண்டுமென்ற நோக்கத்தோடு நாம் அறிந்த பொருள்கள் எல்லாவற்றிலும் சிறந்ததும், குற்றமற்றுச் செம்மையானது மான பொருள் நமது கண்கள் தான் என்று கண்டறியும் அறிவுதான் மெய்யுணரும் அறிவு.

"உறங்குவது போலும் சாக்காடு உறங்கி விழிப்பது போலும் பிறப்பு" ------------- குறள்

உடல் அழிந்தாலும் உயிர் அழிவதில்லை; அதனால் மரணம் என்பது உயிருக்கு உறங்குவதைப் போன்றது. அந்த உயிர் வேறோர் உடலில் மீண்டும் பிறப்பது உறங்கி விழிப்பது போன்றது.

பிறப்பை பேதைமை என்கிறார். அறிவில்லாதவனே பிறந்து பிறந்து சாகிறான் பிறப்பறுக்க முயல்வோம்!

அழியாதது உயிர்! கடவுள் அம்சம்! அழிவது உடல் மட்டுமே!

உடலை அழியாத தன்மைக்கு மாற்றுவோமானால்! உயிர் உடலை விட்டு ஒருபோதும் பிரியாது!

அதற்குத்தான் ஞானிகள் வழி-விழி காட்டி உணர்த்துகிறார்கள்!?

உயிர் உறங்கி வழிகின்ற - அதாவது செத்து பிறக்கின்ற உடலில் இருந்து பிரிந்து வருகின்ற நிலைமாற வேண்டும்.

உயிர் உறங்கி விழிக்கின்ற நிலைமாற, நாம் தூங்காமல் தூங்க வேண்டும்! "தூங்காமல் தூங்கி சுகம் பெறுவது எக்காலம்" என ஞானிகள் இந்நிலையைத்தான் நமக்கு அறிவுறுத்துகின்றனர்.

தூங்காமல் தூங்குவது என்பது அறிதுயில்!? உணர்வதோடு இருப்பது.

பிணம்போல் தூங்குபவன் பிறிதொரு நாள் பிணமாகி விடுவான். உணர்வு அற்றுப்போனால், உயிர் உடலைவிட்டு போய்விடும்.

நம் உடலில் கண்களில் ஜோதியாக விளங்கும் நம் உயிரை - இறைவனை - எண்ணி எண்ணி உணர்ந்து உணர்ந்து தூங்காமல் இருந்து தவம் செய்வதே மாபெரும் சாதனை!

புற உணர்வு அற்று மெய் உணர்வுடன் தூங்காமல் லயிப்பதே தவம். அதில் கிடைப்பதே ஆன்மலயம்!

தூங்காமல் தூங்க குரு வழிகாட்டனும். நம்முள் இருக்கும் நாயகன் அருள் பாலிப்பார்!

தானமும் தவமும் செய்க!

ஞான நூற்களை வாங்கி
ஞானதானம் செய்க!
மெய்ப் பொருளை உணர்ந்து
தவம் செய்க!எல்லா உயிரும் இன்புற்று வாழ்க.

வாழ்க வளமுடன்
P. மதிவாணன்
mathish0610@gmail.com

Monday, December 26, 2011

தவம் எப்படிச் செய்ய வேண்டும்.

தவம் எப்படி செய்ய வேண்டும்? தவம் என்றால் மந்திர ஜபமல்ல! தவம் என்றால் பூஜை செய்வதோ யாகம் வளர்ப்பதோ அல்ல! தவம் என்றால் பிராணாயாமமோ வாசி யோகமோ இன்னபிற யோகங்களோ அல்ல! தவம் என்றால் உடலை வருத்தி செய்யும் எந்த செயலுமல்ல!

தவம் என்றால், நான் யார்? என அறிய உணர மெய்ஞ்ஞான சற்குருவிடம் ஞானதானம் பெற்று கேட்டதை உணர்ந்து அறிய சும்மா இருந்து செய்யும் பயிற்சியே! முயற்சியே!


இறைவன் நமது உடலில் கண்ணில் மணியில் மத்தியில் ஊசிமுனையளவு துவாரத்தின் உள்ளே ஊசிமுனையளவு ஒளியாக துலங்குகிறார்! ஊசிமுனையளவு துவாரத்தை மெல்லிய ஜவ்வு ஒன்று மூடியுள்ளது! இதைத்தான் வள்ளலார் திரை என்றார்!

இதுவே நமது மும்மலத்தால் ஆனது! மொத்தம் 7 நிலையாக 7 திரையாக சூட்சுமமாக விளங்குகிறது! உள்ளே இருக்குது ஜோதி! வடலூரில் சத்திய ஞானசபை ஜோதி தரிசனம் இந்த தத்துவ அமைப்பிலே தான் கட்டப்பட்டது! காட்டப்படுகிறது! "சத்திய ஞான சபையை என்னுள் கண்டனன் சன்மார்க்க சித்தியை நான் பெற்றுக் கொண்டனன்" என்று வள்ளல் பெருமான் கூறியதை கவனிக்கவும்!

குருதீட்சை பெற்று நம் கண்ணில் உணர்வு பெற்று அதை நினைந்து நினைந்து உணர்ந்து அதனால் ஏற்படும் நெகிழ்ச்சியில் திழைத்து திழைத்து சும்மா இருக்க இருக்க நம் கண்களில் கண்ணீர் ஆறாக பெருக்கெடுத்து கொட்டும் அருவியென!! இங்ஙனம் தவம் தொடர்ந்தால் பலவித அனுபவங்கள் நாம் பெறலாம்! நமது வள்ளல்பெருமான் ஞானசரியையில் கூறியபடி நாம் இங்ஙனம் தவம் செய்து வந்தால் பெறலாம் நல்ல வரமே! மரணமில்லா பெருவாழ்வே! பிறவாப்பெருநிலை! அருட்பெரும்ஜோதி இறைவனோடு அந்த பரமாத்மாவோடு பேரோளியோடு நாமும் ஒளியாகி இணையலாம்! ஐக்கியமாகலாம்! பேரின்பம் பெறலாம்!

இதுவே தவம்! இதனால் கிட்டுவதே ஞானம்! இன்றைய உலகில் ஏராளமான குருமார்கள் தோன்றி ஏராளமான பயிற்சிகளை சொல்லிக்கொடுக்கின்றனர். இவை எவையும் ஞானத்தை தராது! ஒரு சில பயிற்சிகளால் உடல்நலம் பெறலாம். ஒரு சில சித்துக்கள் கைக்கூடலாம் இதெல்லாம் ஒன்றும் ஞானம் இல்லை! ஞானம் தன்னை உணர்தலே!

"தவம் செய்வார்க்கு அவம் ஒரு நாளுமில்லை" ஔவையார் பிராட்டிதானே தானமும் தவமும் செய்ய சொன்னது! மனிதா தவம் செய்தால் உனக்கு ஒரு துன்பமும் கிடையாது என உறுதி கூறுகிறார்! ஞானதானம் குருவிடமிருந்து பெறு. நீ மற்றவர்க்கு ஞானதானம் செய். குரு மொழி தட்டாது தவம் செய் உன் பெரும்துன்பமான வினை கூட உன்னை பாதிக்காது!

தவம் செய்ய நாம் காட்டுக்கு போக வேண்டியதில்லை! குடும்பத்தை விட்டு ஓட வேண்டியதில்லை! காவி உடுத்து தாடி முடி வளர்த்து உருத்திராட்சம் அணிந்து உலகம் சுற்ற வேண்டியதில்லை! நமது உடலை வெறுத்து வருத்தாது துன்புருத்தாது இருக்க வேண்டும்! உணவை வெறுத்து இலை உணவாக வேண்டாம்! கடுமையான ஜப தாபங்கள் வேண்டாம்! சுருக்கமாக கூறுவதனால் ஒன்றும் செய்ய வேண்டாம்! சும்மா இருந்தாலே போதும்!

திருமணம் ஞானம் பெற ஒரு தடையல்ல! இப்போது எப்படி இருக்கின்றீர்களோ, என்ன செய்து கொண்டிருக்கின்றீர்களோ அப்படியே இருங்கள். இந்த தவத்தை மட்டும் விடாது தொடர்ந்து 30 நிமிடமோ ஒரு மணி நேரமோ செய்தால் போதுமானது! நீதி நேர்மை ஒழுக்கமே உங்கள் தவத்தை சிறப்பிக்கும்! வேஷம் போடாதீர்கள்! எந்த தீய பழக்கவழக்கமும் இல்லாது பார்த்துக் கொள்ளுங்கள்! குடும்ப பொறுப்பு உணர்ந்து உங்கள் கடமையை சரிவரச் செய்யுங்கள்! இறைவன் உங்களுள் இருக்கிறானல்லவா? வெளியே கோயில், குளங்களில், மலைகளில் தேடாதீர்!

அருளே வடிவான இறைவன் அரவணைத்து காப்பான்! எந்த ஆபத்தும் வராமல் தடுப்பான்! எந்த நிலையிலும் கைவிட மாட்டான்! தாயுமானவனாகி அரவணைத்து, தந்தையுமாகி பராமரித்து, குருவுமாகி நம்மை கண்காணித்து நானே நீ என்று அறிவித்து அடைவித்து அகங்குளிர்வித்து அன்போடு தன்னோடு சேர்த்துக் கொள்வான்.

தவம் செய்வோர் சுத்த சைவ உணவையே உட்கொள்ள வேண்டும். நல்லாரை காண்பது நமக்கு நன்மை பயக்கும்! நல்லார் உபதேசம் கேட்பது நமக்கு பல தெளிவுகள், பெற ஏதுவாகும்! நல்லோரை சார்ந்து அவரோடு செயல்படுதல் மேலும் மேலும் புண்ணியம் கிட்டிய வழியாகும்!

அதிகாலையில் பிரம்ம முஹூர்த்ததில் எழுந்து தவம்செய்தல் உத்தமம்! இந்த ஞான சாதனையை எப்பொழுதும் எந்த ஒரு இடத்திலிருந்தும் செய்யலாம்! ஆத்ம சாதகன் - தவம் செய்பவன் பட்டினி கிடக்கக்கூடாது. சிறிதளவாவது உணவு உட்கொள்ள வேண்டும். பிரச்சனைகளிலிருந்து விடுபடுவது உத்தமம். இனிய சொற்களையே அளந்து பேசு. பெசாதிருந்தும் பழகு!

இதுவா தவம் என எண்ணாதீர்கள்? கண்ணை விழித்துக் கொண்டு உணர்வை நிறுத்திக்கொண்டு சும்மா இருப்பது மட்டும் தவமல்ல! இதுபோன்று நம் அன்றாட வாழ்வில் நாம் செய்யும் ஒவ்வொன்றும் தவமாக வேண்டும்! நீதியாக நெறியாக ஒழுக்கமாக பண்போடு பக்தியோடு அன்போடு பணிவோடு தெளிவோடு நிதானமாக ஒவ்வொரு செயலிலும் பார்த்துக் பார்த்து செயல்பட வேண்டும்! அப்போதுதான் தவம் விரைவில் கைக்கூடும்! தவம் மட்டும் 1 மணிநேரம் செய்தால் போதாது? 24 மணி நேரமும் நம் ஒவ்வொரு சொல்லும் செயலும் தவத்தை பிரதிபலிபதாய் விளங்க வேண்டும் அப்படிப்பட்டவனே ஆத்மசாதகன்!

தவம் சித்திக்க வேண்டும் இறைவனோடு ஐக்கியமாக வேண்டும் நான் யார் என்பதை உணரவேண்டும் என்ற ஆன்ம பசியோடு நாம் இருக்கவேண்டும்! தவம் செய்வது நமக்காக! முதலில் இது சுயநலந்தான்! நாம் பலம் பெற்றாலே பலன் பெற்றாலே உலகுக்கு கொடுக்கமுடியும்! எனவே முதலில் நாம் பன்படவேண்டும். அதற்கு நாம் ஒரு நிலையடைவது வரைக்கும் எதிலும் சிக்காமல் தனித்திருத்தல் அவசியம்! தவம் செய்வது ஞானம் பெற! கண்ணை மூடிக்கொண்டு மனம்போன போக்கிலே போகாதே! போலிகளை கண்டு ஏமாறாதே. நன்றாக கண்ணை திறந்து பார்! எது சரி என சிந்தித்து சுருதி யுக்தி அனுபவம் அறிந்து விழித்திருப்பாயாக! விழிப்புணர்வுடன் இருப்பாயாக! கண்ணை திறந்தே தவம் செய்வாயாக!

விழித்திருந்து தியானியுங்கள் பரமபிதா நம்மோடு என்றே எல்லா ஞானியும் கூறுவர்! கண்ணை மூடினான் என்றால் செத்தான் என்றே பொருள். தூங்காது, மயங்காது விழிப்புணர்வுடன் இருப்பவனே மரணத்தை வெல்வான்! விழிப்புணர்வு என்றால், ஜாக்கிரதையாக என்றும் விழியில் புணர்வுடன் அதாவது கண்விழியினுள் உள்ள ஜோதியுடன் சேர்த்தல் என்று மெய்ப்பொருள் விளக்கம் கூறுவர்! நாம் செய்யும் தவம் விழியில்புணர்வு! ஞானம் பெற விழிப்புணர்வு மிக அவசியம்!

நாம் புராணங்களிலும் கதைகளிலும் ரிஷிகள் செய்த பலவித தவங்களை கேள்விப்பட்டிருக்கிறோம். அசுரர்கள் செய்த கொடும்தவம் பற்றியும் படித்திருக்கிறோம். இதையெல்லாம் பார்த்துதான் உலகில் பலருக்கும் அவ நம்பிக்கை பிறந்தது! அடடா! இந்த மாதிரியெல்லாம் நாம் தவம் செய்ய முடியாது! கடவுளை அடைய இப்படியெல்லாம் தவமா செய்ய வேண்டும் நம்மால் முடியாதப்பா! அதற்காக ஒரு ஜன்மம் எடுத்துதான் வர வேண்டும் என்று அலுத்துக் கொள்வர். இன்றும் இவ்வாறே எண்ணிலடன்காதவர்கள் இருக்கின்றனர்.

உலக மக்களே அவ நம்பிக்கை வேண்டாம்! உலகை உய்விக்க மெய்ஞானிகள் பலர் தொன்றியுள்ளளனர்! ஞான நூற்கள் பல தந்துள்ளனர்! கவலை வேண்டாம். காலம் செய்த கோலம் ஞானம் பலகாலமாக மறைக்கப்பட்டுவிட்டது? காரியவாதிகள் சூழ்ச்சி! ஞான சூரியன் திருவருட் பிரகாச வள்ளலார் பிறந்தார்! மடமை என்னும் கடைக்கண் காட்டினார் வள்ளலார்! ஞானம் துலங்க ஆரம்பித்தது! துளிர்விட ஆரம்பித்தது! வந்தார்! சொன்னார்! செய்தார்! வென்றார்! பெற்றார் ஒளியுடல்!! தான் பெற்ற ஞானத்தை மரணமில்லா பெருவாழ்வை சாகாக்கல்வியை எல்லோருக்கும் பறைசாற்றினார்! பயிற்றுவித்தார்! இன்றும் எங்கள் ஞான சற்குரு மூலம் பயிற்றுவித்துக் கொண்டும் இருக்கிறார்!! ஞானபாதைதான் மிக எளிதானது!

ஞானதானம் செய்து அதனால் கிட்டும் புண்ணியம் பலன் மேலோங்கி தவம் சித்தித்து ஞானம் பெற்று பேரின்பம் பெறுக! தானமும் தவமுமே ஞானம் பெற ஒரே வழி! ஞானதானமே ஞான சாதனையே நம்மை இறைவனிடம் சேர்ப்பிக்கும்.

குருவில்லா வித்தை பாழ்
குருவனடி பணிந்து கூடுவதல்லார்கு
அருவமாய் நிற்கும் சிவம்.

குருவை நாடி திருவடி அறிந்து உணர்ந்து இறைவனடி சேர்வோம்.


"அனைவரும் நடுக்கண்ணை தகுந்த ஆசாரியன் மூலம் திறக்கப் பெற்றுக் கொள்வது நலம். "

இது வள்ளல் பெருமான் உபதேசம். கண்ணில் நடுவில் இருக்கும் மறைப்பை நீக்கிவிட குருவை நாடுக. தீட்சை பெருக.

வள்ளலார் வழி காட்டுவார்.

வாழ்க வளமுடன்! எல்லா உயிரும் இன்புற்று வாழ்க!

P. மதிவாணன்
mathish0610@gmail.com

Saturday, December 17, 2011

உயிர்குருவே சரணம்! குரு திருவடி சரணம்.என் குருவின் பாதம் பணிந்து அவர் ஆசியுடன் இக்கட்டுரையை எழுதுகிறேன். இவை அனைத்தும் ஞான சற்குரு எங்களுக்கு உபதேசம் அளித்தவையே. அதை உங்களிடம் பகிர்வது மகிழ்ச்சி கொள்கிறேன்.

மனிதன்! உயிர் இருந்தால் தான்? இல்லையேல் பிணம்!

மனிதர்களாகிய நம் உடலினுள் உயிர் இருந்தால் தான் நாம் சிவம்! இல்லையேல் நாம் சவம்!

உயிர் இருந்தால் தான் வாழ்வு! உயிர் உடலைவிட்டு போய்விட்டால்? சாவுதான்!

உடலும் உயிரும் சேர்ந்திருந்தாலே பிரயோஜனம்! பிரிந்திருந்தால் இயக்கம் இல்லை! உடலோடு உயிர் இருந்தாலே இயக்கம்!

உடலைவிட உயிரே முக்கியமானது!

உயிர் உடலுடன் இருக்கும்போது ஆடாத ஆட்டமெல்லாம் ஆடுகிறான் மனிதன்.

இப்படி “தலை கால்” தெரியாமல் ஆடுபவனெல்லாம் அடிமுட்டாள்களே!

ஒருவன் எப்படி பிறக்கிறான்?

பிறப்பு என்றால் என்ன? ஏன் பிறக்கிறான்?

இதுதான் “தேவரகசியம்”. பிறப்பின் இரகசியம்.

ஆணும் பெண்ணும் சேர்ந்தால் குழந்தை பிறந்து விடுமா? நடக்காது!?

இன்றைக்கும் குழந்தையில்லாத தம்பதிகள் எத்தனையோ பேர் இருக்கின்றார்களே?

விஞ்ஞான வளர்ச்சி, டெஸ்ட்டியுப் குழந்தை உருவானது. ஆயிரம் பல்லாயிரம் முயற்சி செய்தால் ஒன்று உருவாகிறது! எல்லாம் ஜனிப்பதில்லை! எல்லோராலும் முடியாது!

விஞ்ஞானம் ஒரு வரையரைக்கு உட்பட்டதே! இன்றைய உலக வளர்ச்சி விஞ்ஞானத்தின் பரிமாணம் தான் மறுக்க முடியாது!

பஞ்சபூதங்களை அப்படி இப்படி, எதையாவது செய்து ஏதோதோ கண்டுபிடித்து சுகபோகமாக வாழ வழி கண்டனர் பலர்!

எல்லோரும் இந்த பூமியில் உள்ளவர்கள் தானே! இந்த பூமியில்தானே பிறந்தார்கள், இந்த பூமியில் தானே, எப்படியெப்படியோ வாழ்ந்து மடிந்தார்கள்.

இந்த மனிதர்கள் எங்கிருந்து பிறந்தார்கள்? பூமியில் கொஞ்சகாலம் வாழ்ந்தார்கள்! எல்லோரும் – பெரும்பாலானவர்கள் இறந்துபோயினர்! இறந்து அவர்கள் போனது எங்கே!?

பிறந்தவர்கள் எங்கிருந்து பிறந்தார்கள்? இறந்தவர்கள் எங்கு போனார்கள்? பிறந்தபோது வந்த உடல், இறந்தபோதும் இருக்கின்றதே?

அப்டியானால் பிறப்பு இறப்பு உடலுக்கு இல்லையே?! பின் எதற்கு? உயிர்கொண்டு உடல் வந்தாலே பிரயோஜனம்! உயிர் இன்றி உடல் இருந்தால் மண்தான்!.

உயிர்தான் பிரதானம்! உயிர்தான் பிறக்கிறது உடல் கொண்டு! உடலைவிட்டு உயிர் பிரிவதே மரணம்! பிறப்பும், இறப்பும் உயிர் வருவதும் போவதும் தான்!

நம்மை ஈன்ற தாய் நமக்கு கொடுத்தது உடல் மட்டுமே! அன்னையின் உடலில் உடலிலிருந்து மாதந்தோறும் வெளியேறும் உதிரமே, அன்னை தந்தையின் சுரோணித சுக்கில சேர்க்கையால் உருண்டு திரண்டு கருவாகி பிண்டம் உருவாகிறது!

தீட்டு என்கிறோமே – நம் உடலே தீட்டுதான்! நம் தாயின் தீட்டு தான் நாம்! மனிதன் மட்டுமல்ல எல்லா ஜீவராசிகளும் இப்படியே!

ஆணின் உயிர் சக்தி சுக்கிலம், பெண்ணின் உயிர் சக்தி சுரோணிதம் இரண்டும் சேர்ந்தால்தான் புதிய உயிர் தோன்றுவதற்கு அஸ்திவாரம்!

ஆணும் பெண்ணும், சிவமும் சக்தியும், பாஸிடிவ் நெகடிவ் சேர்ந்தாலே-இணைந்தாலே சக்தி பிறக்கும்-இயக்கம் ஆரம்பமாகும்!

தாயின் கருவிலே வயிற்றிலே உருவாகிறது பிண்டம், மூன்று மாதத்திற்கு பிறகு தான் உயிர் வருகிறது! இதுவே அற்புதம் கருவுக்கு உயிர் எப்படி வந்தது?

இங்கேதான் ஆரம்பிக்கிறது நமது மெய்ஞ்ஞானம்! தாயின் வயிற்றிலே குழந்தையின் உடல்தான் உருவாகிறது! உயிர் எல்லாம் வல்ல இறைவன் அருளால் வந்து சேர்க்கிறது!

இன்னாருக்கு இன்னார் வந்து பிறக்க வேண்டும் என்ற நியதி – விதி – கணக்கு எல்லாம் வல்லவன் வகுத்து வைத்தது! அவன் அருள் ஆக்ஞைபடியே உயிர் தாய் கருவிலே வருகிறது!

இதுவே தேவரகசியம்! எப்படி வருகிறது? யாரும் இதுவரை அறிந்திராத ஒன்று! இந்த காலத்தில் வருகிறது - வந்தது என்று அறியலாமே தவிர எப்படி வந்தது என அறிவார் இல்லை?!

“உயிர்” என்றால் என்ன? உயிர் எங்கிருந்தது? எப்படி உடலினுள் பிரவேசித்தது? உடலில் எங்கு இருக்கிறது? எந்த வடிவில் தன்மையில் இருக்கின்றது? இதையெல்லாம் அறிந்தவனே ஞானி!! அவனே சித்தன்!!

ஒரு சிசு தாயின் கருவிலே 10 மாதம் வளர்ந்து பூரணமாகிறது. ஒரு மாதம் என்பது 27 நாட்களே! 27 நட்சத்திரங்களே 1 மாதம். 10 மாதம் என்றால் 270 நாட்களே.

பிரசவ வலியே சிசுவின் பிரவேசத்திற்கு அறிகுறி! கன்னிக்குடத்திலே – குளத்திலே மிதந்து கொண்டு, ‘ஸ்டிரா” மூலம் குளிர்பானம் அருந்துவது போல, தொப்புள் கொடி மூலம் வேண்டிய உணவை தாயிடமிருந்து உறிஞ்சும் சிசு!

படைக்கும் பரமாத்மா உயிர்களை படைக்கும் ஆற்றல் இருக்கிறதே, அப்பப்பா அதிசயம்! அற்புதம்! எண்ணிப் பார்க்க இயலாத ஒப்பற்ற அதிஉன்னத செயலாகும்!

படைத்த பரமன் காக்க மாட்டானா? இறைவன் தான் நம்மை காப்பாற்றுகிறான்!! தாயின் கருவிலிருந்து எப்போதும் துணையாக இருந்து காப்பவன் இறைவன் மட்டுமே! கல்லினுள் தேரைக்கும் கருப்பை உயிர்க்கும் படியளப்பவன் காப்பவன் இறைவன் ஒருவனே!

நம்மை படைத்து காப்பவன் நம்மிடமிருந்து, நான் யார்? ஏன் பிறந்தேன்? எப்படி பிறந்தேன்? இதுபோன்ற எல்லாவற்றையும் மறைத்து ஒன்றுமறியா குழந்தையாக்கி உலகில் விட்டுவிடுகிறான்! என்னே! அவனின் திருவிளையாடல்!

பிறப்பிக்க வைத்த அந்த இறைவனே எல்லா உயிர்களுக்கும் வாழ்வில் பல சந்தர்ப்பங்களில் தன்னை வெளிப்படுத்திக் காட்டு கின்றான்! ஆனால் அறிவோர் உணர்வோர் வெகுசிலரே! எல்லாம் வல்ல அந்த இறைவனே கருணையே உருவானவன்! அருங்கடல்! எல்லா உயிர்களும் தன்னை அடைய அருள்மழை பொழிகிறான்! மனிதனாக பிறக்கும் அனைவருக்கும் இறைவன் அருளும் அரிய சந்தர்ப்பம் இது!

மனிதனை படைத்து காத்து மறைத்து அருளும் எல்லாம் வல்ல பரம்பொருளே அவரவர் வினைக்கு ஏற்ப வாழ்வை முடித்தும் வைக்கிறான்! அதாவது உடலை அழித்து அல்லது மாற்றி அவரவர் பரிபக்குவத்திற்குக்கேற்ற நிலையை தந்தருள்கிறார்!

எல்லாம் வல்ல இறைவன் ஒருவரே!
அவரே படைக்கிறார் அப்போது அவர் பிரம்மா!

அவரே காக்கிறார் அப்போது அவர் விஷ்ணு!

அவரே மறைக்கிறார் அப்போது அவர் மகேஸ்வரன்!

அவரே அருள்கிறார் அப்போது அவர் சதாசிவன்!

அவரே அழிக்கிறார் அப்போது அவரே ருத்திரன்!

ஆக ஏக இறைவனே எல்லாம் புரிகிறார்!

எல்லாமே அவன் செயலே!

அவனின்றி ஓர் அணுவும் அசையாது!

அணுவுக்கும் அணுவாக இருந்து எல்லாம் புரிந்து ஆள்வதும் அருள்வதும் அவன் திருவிளையாடல்களே! அற்புதங்களே!


அனுவுக்கு அனுவானவன், எல்லாம் ஆனவனே, எங்கும் நீக்கமற நிறைந்திருப்பவனே, அண்ட பகிரண்டமெங்கும் ஒளியாக ஒளிர்பவனே, நம் உயிராகவும் உள்ளான்!?


அணுவுக்கு அணுவாக ஒளிர்பவன் மனித உடலினுள் பலகோடி அணுத்துகள்கள் உள்ளத்தில் இல்லாமல் போவானா?! எங்கும் இருக்கும் இறைவன், தூணிலும் துரும்பிலும் இருக்கும் இறைவன் நம் உடலினுள்ளும் இருக்கிறான் “உயிராக”!!இதுவே ஆதிகாலம் தொட்டு நமது ஞானிகள் எல்லோரும் உரைத்த உண்மை! வேதங்களில் சொல்லப்பட்ட இறை இரகசியம்! “அகம் பிரம்மாஸ்மி”.இறைவன் பரமாத்மா பரம்பொருள் பெரும்ஜோதி ஆண்டவன் தானே சிறுஜோதியாக தன்னை குறுக்கிக் கொண்டு ஜீவாத்மாவாக உயிராக பிராணனாக நம்முள் இருக்கிறார்! நம் உள் மனம் கடந்த நிலையில் இருப்பதால் தான், உள்கடந்து இருப்பதால் தான் ஆன்றோர் கடவுள் என்றனர்!கட உள்ளே கடத்தினுள்ளே, உன் உடலினுள்ளே என்றுதான் இதற்கு பொருள்! கடவுளே என்று உலகத்திலே தேடுபவன் காண்பது அரிது! கடவுளே என்று உடலிலே தேடுபவன் காண்பான் கண்களினாலேயே! வெளியிலே தேடுவது பக்தி! உடலுள்ளே தேடுவது ஞானம்!இறைவன் கூப்பிடுதூரத்தில் உள்ளான் கைக்கெட்டின இடத்தில் இருக்கிறான் என்பர் பெரியோர்கள்! நம் உடலே இறைவன் வாழும் ஆலயம்! ஜீவர்களே நடமாடும் சிவம்!“உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்
வள்ளல் பிரானார்க்கு வாய் கோபுர வாசல்
தெள்ளத் தெளிந்தார்க்கு ஜீவன் சிவலிங்கம்
கள்ளப் புலனைந்தும் காளாமணி விளக்கே”


திருமந்திரம் கூறும் சத்தியம் இதுவே! தமிழ் மறையான இதுவே நாம் அறிந்து கொள்ள வேண்டிய மிகப்பெரிய உண்மை ஞானம்! இறை இரகசியம்!


நம் உடலாகிய கோயிலில் உயிராக தானே வீற்றிருக்கிறான் எல்லாம் வல்ல இறைவன்! இறைவன் பெருஞ்ஜோதியானவன் எங்கும் நிறைந்தவன்! இறைவனே ஜீவனாக சிறு ஜோதியாக நம் உடலில் உறைந்துள்ளான்! என்ன விந்தை இது?! அவனே படைத்து, காத்து, அழித்து, எதற்கு இந்த நாடகம்?! ஏனிந்த திருவிளையாடல்!?


இன்றுவரை இந்த உலகில் தோன்றிய மதங்களும், மார்க்கங்களும், மகான்கள் அனைவரும் சொன்னதும் ஒப்புக்கொண்டதும் இந்த உண்மை ஒன்றையே! இறைவன் ஒருவரே அவர் ஜோதி ஸ்வரூபம்! நம் உடலில் உயிராக இருப்பதும் அவரே! அவனின்றி ஓர் அணுவும் அசையாது! இதை மறுப்பவர் யாருமில்லை! எம்மதமும் இந்த உண்மைகளை மறுத்ததில்லை! உலகர் அனைவராலும் ஒப்புக்கொள்ளப்பட்ட ஒரே உண்மை இது ஒன்றே!!


எல்லாம் வல்ல இறைவன் பெருஞ்ஜோதிமயமானவன் என்றும் அவனே சிறுஜோதியாக நம் உடலில் உயிராக இருக்கின்றான் என்பதும் தான் மனிதனாக பிறந்த நாம் அரிய வேண்டிய மாபெரும் இரகசியம்!


இதை அறிந்தவன், தகுந்த குருமூலம் உணர்ந்தவன் தான் ஞானம் பெறுவான்! அறிந்தால் மட்டும் போதாது! குருமூலம் தீட்சை மூலம் உணரவும் வேண்டும்! தவம் செய்யவும் வேண்டும்! அப்போதுதான் ஞானம் கிட்டும்! இறையருள் பெறலாம்!


இந்த ஞான இரகசியத்தை அறியாமல் இந்த உலகில் நீங்கள் வேறு எதை செய்தாலும் ஞானம் கிட்டாது!?


தன் உயிரை அறிவதே, உணர்வதே இறைவனை அறிவதும் உணர்வதுமாகும்! தன்னை அறிவதே கடவுளை அறிவதாகும்! ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்!


உயிர் நம் உடலில் எங்கிருக்கிறது? என தெரிந்தால் தானே! எப்படி இருக்கிறது என்று தெரிந்தால் தானே தவம் செய்ய முடியும்?!


கடோபநிசத்தில் எமதர்மனிடம் நசிகேசன் உயிர் பற்றி, கடவுள் பற்றி கேட்க அவர் கூறுகிறார், “இறைவன் மனிததேகத்தில் சின்முத்திரை அளவான இடத்தில் புகையில்லாத ஜோதியாக விளங்குகிறான்”. என்று!? இதில் உடனே நாம் இரு விசயங்களை தெரிந்துகொள்ளலாம். ஒன்று இறைவன் மனித தேகத்திலும் உள்ளார் என்பது!


மனித தேகத்தில் உள்ளார் சரி!? நாம் வெளியே பார்க்கும் ஜோதி – தீ புகையுள்ளது இறைவன் பெருஞ்ஜோதியானவன் – தீ வண்ணன் புகையில்லாத ஜோதிஸ்வருபம் இதுவும் சரி!? நம் உடலில் எங்கிருக்கிறது? அந்த ஜோதி – உயிர் – இறைவன்? சின்முத்திரை அளவான இடம்! இதுதான் மாபெரும் இரகசியம்! குருஊபதேசம் மூலம் அரிய வேண்டியது! அடியேன் இங்கே குரு எங்களுக்கு உபதேசித்ததை எழுதுகிறேன்!


நன்றாக கவனமாக பாருங்கள்! மனித தேகத்தில் சின்முத்திரை அளவான இடத்தில் உள்ளார்! சின்முத்திரை பிடித்துக் கொண்டு உட்கார சொல்லவில்லை! சின்முத்திரை பிடித்தால் அதாவது நமது கை பெருவிரலும் ஆள்காட்டி விரலும் தொட்டுக் கொண்டநிலை அல்ல! ஆள்காட்டி விரல் மடக்கி பெருவிரலின் மத்தியிலுள்ள கோடை தொட்ட நிலையில் மற்ற மூன்று விரலும் நீட்டியபடி இருப்பதே “சின்முத்திரை”!


இப்படி சின்முத்திரை பிடித்தநிலையில் கை பெருவிரல் மத்தியிலுள்ள கோடு வரை உள்ள இடமே நம் கண் அளவு! வைத்துப் பாருங்கள்! சின்முத்திரை – கண்போல தோன்றும்! அதாவது இறைவன் மனித தேகத்தில் கண்ணில் ஜோதியாக துலங்குகிறான் என்பதே மாபெரும் ஞான இரகசியாமாம்!


“தேவன் ஒளியாக இருக்கிறார்! நீங்களும் ஒளியிலே நடந்தால் தேவனை தரிசிக்கலாம்! கண்ணே சரீரத்தின் விளக்காயிருக்கின்றது! உன் கண் ஒளி உள்ளதாக இருந்தால்! உன் சரீரம் முழுவதும் ஒளியுள்ளதாக விளங்கும்!” பைபிள் கூறும் ஞானம்! “ஒளியான தேவனை அடைய கண் ஒளியை பெருக்கு என்பதே”!

இயேசு கிறிஸ்து மட்டுமல்ல முகமது நபியும் புத்தரும் குருநானக்கும் மற்றும் உலகிலுள்ள எல்லா ஞானிகளும் உபதேசித்த உண்மை இதுவே!


“உயிரே கடவுள்!” உண்மை இதுவே! ஞானம் இதுவே! இதை அறிவதே குரு உபதேசம்! இதை உணர்வதே தீட்சை! இதை அறிந்து உணர்ந்து தவம் செய்பவனே! அடைவான் இறைவனை!


ஒருவன் ஞானம் பெற்றவனாயிருந்தால் இதை உபதேசித்திருப்பான்! தன்னை உணர்ந்து, தனக்குள் அந்த பரமாத்மாவே தன் உயிராக இருப்பதை அறிந்து, உணர்ந்து தவம் செய்பவனே பெறுவான் ஞானம்! அப்படி உணர்ந்தவன், கடவுளை போல எல்லோரிடமும் எல்லா உயிர்களிடமும் அன்பு பாராட்டுவான்! அவனே ஞானி!


வாடிய பயிரைக் கண்டு வாடியவர் வள்ளல் இராமலிங்கர்! தன்னகத்தே அருட்பெரும்ஜோதி ஆண்டவரை கண்டதால் தான் அவரிடம் மிளிர்ந்து ஆன்மநேய ஒருமைப்பாடு!


“காளத்தியான் அவன் என் கண்ணில் உள்ளான் காண்” என திருநாவுக்கரசு சுவாமிகள் அருளியுள்ளார்கள்! இறைவன், மனிதர்களின் கண்ணில் ஒளியாக துலங்குகிறான்!


நம் கண் ஒளியாக – பார்வையின் ஆற்றலாக விளங்குவது நம் உயிர் சக்தியே! நம் கண்ணால் உலகையே பார்க்கிறோம்! கண்ணை பார்க்க முடியாதே! இறைவன் நம்முள் மறைந்திருக்கிறான்! சூட்சமமாக உள்ளே துலங்குகிறான்! ஊனக்கண் தவம் செய்து செய்து ஞானக் கண்ணாக மிளிர வேண்டும்! ஒளிர வேண்டும்! அப்போது உள் விளங்கும் ஜோதியை காணலாம் நம் கண்களை நாம் காணலாம்!


இன்னுமொரு விஷயம்! மனித உடலில் கண்ணில் ஒளியாக துலங்குகிறான் இறைவன்! அப்படியானால் குருடர்களுக்கு உயிர் இல்லையா? இருக்கிறதே! “அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது கூன் குருடு செவிடு பேடு நீங்கி பிறத்தல் அரிது.” எக்குறையும் இன்றி நாம் பிறந்தது நாம் செய்த புண்ணிய பலத்தால்தான்!


மனித தேகத்தில் தலையில், உள்ளே, மத்தியில் நம் உயிர் இருக்கின்றது! அது துலங்குவது இரு கண்களில்!


திருமூலநாயனார் தமிழ் மறையான திருமந்திரத்தில் அப்பட்டமாக இந்த ஞான இரகசியத்தை கூரியருள்கிறார்! நமது சிரசிலிருந்து உச்சியிலிருந்து ஒரு நாடி கீழே இறங்குகிறது! அதுநமது கண் காது மூக்கு உள்ளே சேரும் மத்தியில், வாயின் உள் அண்ணாக்குவின் சற்று மேல் வந்து நிலைகொண்டு, அங்கிருந்து இருநாடியாக பிரிந்து இரு கண்களில் வந்து சேர்க்கிறது! ஞான இரகசியம் இது!


நாம், தாயின் கருவில் உருவாகும் போது, சுக்கில சுரோணித கலப்பால் முதலில் உருவாவது ஒரு கண்! பின் அது இரண்டாக பிரிந்து அங்குள்ள உஷ்ணத்தால் வெதுப்பி வெதுப்பி பிண்ட உற்பத்தியாகிறது! இதை “அங்கமதில் முதமுதலாய் தோன்றிய தலம் எது? சொல்ல வல்லார் உண்டானால் குரு என பணியலாமே” என சித்தர்கள் கூறுவர்! தாயின் கருவில் முதன்முதலில் உருவாகும் உறுப்பு கண்ணே!


இறைவன் அருளால் உயிர் வந்து சேரும்! ஒவ்வொரு மனிதனும் அவனவன் செய்த வினைகளுக்கு ஒப்ப உடல் எடுக்கிறான்! அதை தீர்மானிப்பது இறைவனே! எக்குறையுமின்றி பிறப்பவன் புண்ணியம் மிக்கவன்! அங்கஹீனமாக குறைகளுடன் பிறப்பவன் பாவாத்மா! இது அப்பா அம்மா மூதாதையார் செய்த பாவமல்ல! அவரவர் செய்த பாவ புண்ணியம் அவரவர்கே! “தாயும் பிள்ளையுமானாலும் வாயும் வயிறும் வேறுதான்”!


இதில் மிகப்பெரிய பாவம் குருடனாக பிறப்பதே! பார்வை ஆற்றல் இல்லையெனில் உலகில் அவன் நடமாடும் பிணம்தானே! இதில் இன்னும் மிகப்பெரிய துரதிஷ்டம் தவம் செய்ய – கண் ஒளி கண்டு உணர்ந்து தவம் செய்ய இயலாமல் போகின்றதே!


குருடன் ஞானம் பெறமுடியும். “உயிர்” இருகண்ணும் உள்ளே சேரும் இடத்தில் வாயினுள் அண்ணாக்கிண்மேல் உச்சிக்குகீழே தானே இருக்கிறது?! அதை எண்ணி எண்ணி இறையருளால் தவம் செய்து ஞானம் பெறலாம்! எல்லோருக்கும் இறைவன் அருள்வார்!


கண் பெற்றவர்கள் பாக்கியசாலிகள் அவர்கள் தேவனை காண்பர்! தேடுகிறவர்கள் கண்டடைவர்! பரமபிதா குடியிருக்கும் உடலில் கோயிலை தேடுகிறவர்கள் கண்டடைவர்! அதை தட்டுங்கள் உணர்வால்! திறந்து அருள்வார் பரம்பொருள்! நீங்கள் கேளுங்கள் உங்களுக்கு எல்லாம் கொடுக்கப்படும்! நீங்கள் தவம் செய்து இறைமகனானால் பிறகென்ன?! ஒன்றும் வேண்டாமே?!


மனிதனாக எக்குறையுமின்றி பிறந்து ஞான சற்குரு ஒருவரை பணிந்து ஞானஉபதேசம், திருவடி தீட்சை பெற்று தவம் செய்து தன் உயிராக இறைவனே இருப்பதை உணர்ந்து, ஊனே ஒளி உடலாக மாறப் பெறலாம்! ஞானம் பெறலாம்! மனிதனாக பிறந்தது இதற்காகவே! தன் உயிரை – தன்னை உணரவே! ஒளி ஆகவே.!


மனித உடலில் உயிர் இறைவனே என்றும் அது துலங்குவது கண்களிலே தான் என்று குரு உபதேசம் மூலம் அறிந்து உணர்பவனே பாக்கியவான்!


உயிரானது ஒரே அளவில், அதாவது ஊசிமுனை அளவான நெருப்பு – தீ – ஜோதியே! உலக மக்கள் அனைவருக்குமே!


உயிர் துலங்கும் கண் உலக மக்கள் அனைவருக்கும் ஒரே அளவில்தான் உள்ளது! அதாவது “கண்மணி”!! தாயின் கருவில் முதலில் உருவாகும் உறுப்பு கண்! பிறந்ததிலிருந்து 100 வயதானாலும் வளர்ச்சியோ முதிர்ச்சியோ அடையாத ஒரே உறுப்பு கண்! நம் உடலில் இருந்தாலும் எந்த பிடிப்பும் இன்றி, உடலோடு ஒட்டாமல் அந்தரத்தில் இருப்பது கண்மணி! “அந்தரத்தில் ஆடுகின்றார் பாங்கிமாரே” என வள்ளலார் பாடியது இதையே!


“பிராண நீரானதில் உருண்டு திரண்டதை கண்டு அறிந்திடு நீ” என்கிறார் சித்தர்கள்!! நமது கண் எப்படி இருக்கிறது தெரியுமா? வெள்ளை விழி அடுத்து கருவிழி அதற்கும் மத்தியில் கண்மணி! கண்மணி எதையும் தொடாமல் இருக்கும்! இலேசாக சுழன்று கொண்டும் இருக்கும்? கருவிழிக்குள் பிராணநீர் உள்ளது அதில்தான் கண்மணி மிதந்து கொண்டிருக்கும்!


கண்மணி – கிருஷ்ணமணி – பாப்பா தனித்து தான் இருக்கும்! இருக்க முடியும்? ஏன் தெரியுமா? அது சுழன்று கொண்டிருக்கிற தல்லவா?! சுழலும் பொருள் அந்தரத்தில் தானே இருக்கும்! கண்மணியின் மத்தியில் ஊசிமுனையளவு துவாரம் இருக்கின்றது! அதனுள் ஊசிமுனையளவு நெருப்பு உள்ளது! ஊசிமுனை துவாரம் மெல்லிய ஜவ்வால் அடைபட்டிருக்கும்! இதுவே கண்மணி நிலை!


முதலில் கண்மணி ஊசிமுனை துவாரத்தின் உள் உள்ள ஊசிமுனை அளவு ஜோதியை நாம் காணவேண்டும்! அதற்க்கு தடையாக இருப்பது கண்மணி. ஊசிமுனை துவாரத்தை அடைத்துக் கொண்டிருக்கும் மெல்லிய ஜவ்வே! இதைத்தான் வள்ளலார் திரை என்கிறார்! உள்ளே ஆத்மஜோதி பிரகாசிக்கின்றது அதை மறைத்துக் கொண்டிருக்கும் திரையே! ஜவ்வே நம் மும்மலத்திரை! வடலூரில் சத்திய ஞான சபையில் ஜோதி தரிசனம் காட்டும் தத்துவம் இதுவே! “சத்திய ஞான சபையை என்னுள் கண்டனன்”.


என்றல்லவா வள்ளலார் கூறுகிறார்! இன்னொரு சித்தர் ஊசிமுனை காட்டுக்குள் உலாவியே இருக்கலாம் வாரீர் என்கிறார்! கண்மணி ஊசிமுனை வாசலுக்குள் பிரவேசித்தால் அது பெருங்காடமே! என்ன விந்தை இது!


இப்படி “உயிர்” இருக்கும் இடம் போக ஞானிகள் வழி கூறியிருக்கிறார்கள்!


மனித உடலில் இருக்கும் உயிரை அறிய – உணர – உள்புகுந்து காண போகவேண்டிய வழியின் வாசல் நமது விழிகளே! கோபுர தரிசனம் கோடிபுண்ணியம் என்பர்! கோ ஆகிய இறைவன் உள்ளே இருக்கிறார்! புறத்திலே வாசலிலே கோபுரம் இருக்கும் புறத்தே வாசல் நமக்கு கண்களல்லவா? கோபுரம் என விளங்கும் இறைவன் இருக்கும் கோயிலின் வாசல் நமது கண்ணே! தரிசித்தால் நமக்கு புண்ணியம் கோடி தரும் என்பதாகும்!


கண்தானம் செய்கிறோமல்லவா? யார் கண்ணையும் யாருக்கும் கொடுக்கலாம்! உலகில் உள்ள அணைத்து மக்களுக்கும் ஒன்று போல் இருக்கும் ஒரே உறுப்பு கண்தான்! கண்ணில் எந்த பேதமும் இல்லை! கண்ணிலே குடியிருக்கும் கடவுளிடமும் எந்த பேதமுமில்லை!“ஒத்தது அறிவான் உயிர்வாழ்வான் மற்றையான்

செத்தாருள் வைக்கப் படும்”


இந்த ஒரு குறளுக்கு பொருள் தெரிந்தாலே போதும் அவனுக்கு ஞானம் கிட்டும்! இந்த உலகத்திலுள்ள அனைத்து மக்களுக்கும் ஒத்து இருப்பது ஒரே போல் இருப்பது கண்மணி என்பதை அறிபவன் உயிர்வாழ்வான்! சாகமாட்டான்! மற்றவர்கள் செத்துப் போவார்கள்! இதுவே நம் மெய்யாகிய உடலில் உள்ள பொருள் அதனால்தான் ஆன்றோர்கள் கண்ணை மெய்ப்பொருள் என்றனர்.


மெய்யான – சத்தியமான ஒளியான கடவுள் தங்கிய பொருள் என்பதாலும் கண்ணை மெய்ப்பொருள் என்பர்!


“பொருள் இல்லார்க்கு இவ்வுலகில்லை. அருள் இல்லார்க்கு அவ்வுலகில்லை” என்பர் செல்வம் இல்லாமல் இந்த உலகில் வாழ முடியாது! அருள் இல்லாமல் மேலுலகம் கிட்டாது என்பர். மெய்ப்பொருள் – கண் இல்லார்க்கு – குருடருக்கு இவ்வுலகில்லை மெய்ப் பொருளான கண்ணை அறியாதவர்களுக்கும் இவ்வுலகம் சோபிப்பதில்லை! மெய்ப்பொருளை அறிந்து தவம் செய்து இறைவன் அருள் பெற்றால்தான் விண்ணுலக வாழ்வு கிட்டும்! இதுவே ஞானம்!


“நான்” ஆகிய “ஆத்மா” சாவதில்லை! எத்தனை பிறவி எடுத்தேனோ தெரியாது! ஆனால் எடுத்த இப்பிறவியில் “ஆத்மா” தான் எல்லாம் வல்ல இறைவனின் கூறு என்பதை அறிந்தால் தப்பித்தேன்!? இல்லையேல் பிறவிச் சூழலில்! “நான்” தான் “அது”! “தத்வமஸி”! ஆத்மா தான் கடவுளின் ஒரு துளி ஒளி!!தானமும் தவமும் செய்க!

ஞான நூற்களை வாங்கி

ஞானதானம் செய்க!

மெய்ப் பொருளை உணர்ந்து

தவம் செய்க!வாழ்க வளமுடன்! எல்லா உயிரும் இன்புற்று வாழ்க!
P. மதிவாணன்

Next previous home
Related Posts Plugin for WordPress, Blogger...