Friday, November 4, 2011

ஆண்டவன்

அருட்பெரும்ஜோதி அருட்பெரும்ஜோதி தனிபெரும்கருணை அருட்பெரும்ஜோதி!
வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!

குரு எமக்கு உணர்த்தியதை உங்களிடம் பகிர்ந்து கொள்வது மகிழ்ச்சி அடைகிறேன்.

ஆண்டவன் யார்? நம்மை ஆண்டு கொண்டிருப்பவன்! நம்மை தானாக மாற்றப் போகிறவன்!

ஆண்டவன் - இறைவன் - கடவுள் - பரமாத்மா இப்படி பலவிதமாக சொன்னாலும் எல்லாம் வல்ல அந்த ஆதிமூலமே அது !

தூணிலும் இருப்பார்! துரும்பிலும் இருப்பார்! சுருங்கக் கூறின், அவரில்லா இடம் இல்லை - எங்கும் நிறைந்தவன்!

ஆண்டவன் மனோ - வாக்கு காயத்திற்கு அப்பாற்பட்டவன். அவனை எப்படி மனத்தால் என்ன முடியும்? எப்படிச் சொல்லி விளங்க வைக்க முடியும்? உடலால் உணர முடியுமா? பார்க்க முடியுமா?
தத்துவ வித்தகர்கள் வாதம் புரிவர் பலவாராக. தான் கட்டறதை மட்டும் வைத்து யாரும் கதைக்க முடியாது.

ஆண்டவனை காணமுடியுமா? முடியும்!?

இறைவன் மனம் - சொல் - உடல் இதற்க்கு அப்பாற்பட்டவன் என்று தான் ஞானிகள் சொல்லியிருகிறார்கள்.

இந்த சொல்லிலே இறைவனை காண வழியும் கூறிவிட்டார்கள்! மனதிற்கு அப்பாற்பட்டவன் - எனவே நாம் நம் மனதை கொல்ல வேண்டும்! "மனமிறக்க கல்லார்க்கு வாயேன் பராபரமே" என்ற ஞானியின் வாக்கு நமக்கு பாடம். வாக்குக்கு அப்பாற்பட்டவன் - எனவே நாம் மௌனமாக வேண்டும்!
"மோனமென்பது ஞான வரம்பு" இப்படி ஒரு ஞானி கூறியதை சிந்திக்கவும் காயத்திற்கும் அப்பாற்பட்டவன் - எனவே எந்த உணர்வும் நம்மை பாதிக்கலாகாது!

"செத்தாரைப் போலத்திரி" இப்படியும் ஒரு ஞானி கூறியிருக்கிறாரே.

இப்போது நமக்கு விடை கிடைத்து விட்டது. மனமிறந்து மௌனமாகி ஜடம் போலாக வேண்டும்!
மனமிறந்து மௌனியாக செத்தாரைப் போல ஆனால் இறைவனை நம் உடலாகிய கோயில் உள்ளேயே காணலாம்.

மனோவாக்கு காயத்திற்கு அப்பாற்பட்டவன். அதாவது மனம் செயல்பட்டால் நமக்கு அப்பாற்ப்போய் விடுகிறான். பேச்சு இருந்தால் வெளியேதான் போகிறது. உடலுக்கு அப்பால் வேறு கோயில் விக்ரவம் இப்படி வெளியேதான் போகும்.

மனம் இருந்தால் சொல் இருந்தால் உடற்பற்றிருந்தால் இறைவனை உணரமாட்டோம். அதனால் தான் அப்பாற்பட்டவன் என்றார்கள்.

மனம் சொல் உடல் அற்ற நிலையில் வெளியேயல்ல. தன் உடலினுள்ளே இறைவன் கோயில் கொண்டுள்ளதை காணலாம். உணரலாம் பேசி மகிழலாம்.

சுருங்கக் சொல்வதனால் இறைவன் வெளியே இல்லை உன் உடலில் தான் கோவில் கொண்டுள்ளான் என்பதே பொருள் இது தான் சூட்சுமம்.

இதெல்லாம் முடியுமா? முடியும்!! முடித்துக் காட்டியவர்களைத்தான் சித்தர்கள் ஞானிகள் என்று நாம் போற்றுகின்றோம்.

அந்த சித்தர்கள் ஞானிகள் இறைவனை கண்ணால் கண்டார்கள்! உரையாடி மகிழ்ந்தார்கள் ! சத்து, சித்து, ஆனந்த நிலை எய்தினார்கள். அதைதான் "சச்சிதானந்தம்" என்றனர். திருவாகிய இறைவன் சின்ன இடத்தில் அம்பலமாக விளங்குகிறான் என்பதை கண்டனர் அதைத்தான் "திருச்சிற்றம்பலம்" என்றனர்.

ஆண்டவன் உன் உடலிலே கோவில் கொண்டுள்ளான் முதலில் உன் உடலினுள் பார்! உள்கட என்பதையே கட-வுள் என்றாகி கடவுள் ஆனது. பார் என்றால் உலகம். பார் என்றால் பார்ப்பது என்றும் பொருள். உலகம் எப்படி உருண்டையாக , எந்த பிடிப்பும் இன்றி சுழல்கிறதோ! அதுபோல உன் உடலில் கண்மணி உருண்டையாக எந்த பிடிப்பும் இன்றி இருக்கிறது! "பார் போல் உன்னிடத்தில் இருப்பதை பார்" என்றார்கள் சித்தர்கள்.

அனுப்பிரமாணமாக, நம் உடலில் பரமாத்மாவாகிய இறைவன் உயிராக ஜீவாத்மாவாக இருப்பதை கண்ணுற்ற எவன் ஒருவன் உணர்கிறானோ, அவனே ஆத்மானுபூதி பெற்றவன்!!

"அவன் தான் மனிதன்"

சென்னை - திருவொற்றியூரில் இறைவனை வழிப்பட சென்ற திருவருட் பிரகாச வள்ளலார் இராமலிங்க சுவாமிகள் அவர்களை அங்கே நிர்வாணமாக அமர்ந்திருந்து வருவோர் போவோரை எல்லாம் மாடு போகிறது நரி போகிறது பாம்பு போகிறது என் கூறிக்கொண்டிருந்த ஒருவர், தூரத்திலே வள்ளலார் வருவதை கண்டதும் அதோ ஒரு உத்தமமான மனிதன் வருகிறான் எனக் கூறியதோடு தன் கைகளால் உடலை வெட்கப்பட்டு மறைத்துக் கொண்டாராம்!

ஜீவா காருண்ய சீலரான, ஆத்மானுபூதி பெற்றவரான வள்ளலாரை மட்டுமே அந்த சித்தர் "மனிதர்" என்றார்.

நாமெல்லாம் எந்த நிலையிலிருக்கிறோம் என்பதை நம்ம நாமே சுய பரிசோதனை செய்து கொள்ளவேண்டும்.

நாமும் மனிதனாக வேண்டும்
நாமும் ஆத்மானுபூதி பெறவேண்டும்.

ஆண்டவன் பரிபூரணமாக அருள் தருவார்.

இந்த மாதிரியான பதிப்பு ஒரு ஞான பதிவு. இங்கே அகத்தாய்வு மட்டுமே செய்யப்படுகிறது. அகமும் புறமுமாக எங்கும் நீக்கமற நிறைந்திருக்கின்ற இறைவனை, எல்லாம் வல்ல அந்த பரம்பொருளை இந்த பரந்த உலகத்திலே, பிரபஞ்சத்திலே எங்கே தேடுவது? எங்கும் காணலாம்! எப்படி?

"வினை போகமே தேகம் கண்டாய்" என்றார் ஒரு ஞானி. நம் வினைகளுக்கொப்ப உடலால் மனிதனாக பிறந்து, அலைகளிக்கபட்ட நாம் பிறவித் தழையிலிருந்து விடுபட, வினைகளிலிருந்து விடுபட இறைவனை சரணடைவதைத் தவிர வேறு வழியில்லை இறைவா நீயே கதி என இருக்க வேண்டும்."

நமது உள்ள நெகிழ்ச்சி, தன்மை இவைகளுக்கேற்றவாறு சற்குரு கபாட்சம் கிட்டும், சற்குருவே இறைவனிடம் சேர்ப்பார்.

இன்றைய உலகில் இறைவனைப் பற்றி சிந்திப்போர். இறைவனை நாடுவோர் பெருகி வருகின்றனர். மகிழ்ச்சிதான்! இறைவன் யார் என்பதை அறியாமல் மனிதர்களை வணங்கி வழிபடுகிறார்கள். சிறு தெய்வ வழிபாடு செய்கிறார்கள். இதுவும் மூடத்தனம் தான்.

ஒரு சினிமா ரசிகன் தனக்கு பிடித்த நடிகரை போற்றுவது போல, ஒரு கட்சிக்காரன் தனக்கு பிடித்த அரசியல் தலைவனை போற்றுவது போல இன்றைக்கு ஊருக்கு ஒரு சாமியார்! அவர் பெயரால் மடம் ஆசிரமம் பக்தர் கூட்டம். இந்த பக்தர் கூட்டம் ஒரு சினிமா ரசிகனை போல, ஒரு கட்சி தொண்டன் போலத்தான் செயல்படுகிறான். இவர்களுக்குள் எந்த வேறுபாடும் இல்லை.

எல்லாம் வல்லவன், எங்கும் நிறைந்தவன் நம்முள்ளும் இருக்கிறான் என்பதை உணர்ந்து செயல்படவேண்டும். உணர்ந்தவர்கள், பண்டிதர்கள் சொன்னால் நாம் அவர்கள் சொன்னதை விட்டுவிட்டு அவர்களை போற்ற ஆரம்பித்து விடுகிறோம். இங்கேதான் முட்டாள்தனம் ஆரம்பிக்கிறது. மகான்கள் அறிவுரைப்படி செயல்படுங்கள்! மகான்களை கடவுளாக்கி விடாதீர்கள்!

இப்போது ஏகப்பட்ட குட்டி கடவுள்கள் ஆங்காங்கே உருவாக்கப்பட்டு விட்டது!

எங்கே இருக்கிறது பகுத்தறிவு? இன்னுமொரு வேடிக்கை பகுத்தறிவுப் பற்றி விடிய விடிய பேசியவன்
செத்ததும் சமாதி கட்டி வழிபடுகிறது அந்த அதிமேதாவி பகுத்தறிவு தொண்டர் கூட்டம்? எங்கே போய் முட்டிக் கொள்வது என்றே தெரியவில்லை.

ஒரு சமயம் வள்ளலார் வாழ்ந்த காலத்தில் தினமும் வள்ளலார் உபதேசங்கள் கேட்டு வந்த ஒரு அன்பர் ஆர்வ மிகுதியால் வள்ளலாரைப் போல மன்னால் ஒரு சிறிய பொம்மை செய்து கொண்டு போய் அவரிடமே காண்பித்தாராம். வள்ளலார் நம்ம பாராட்டுவர் - ஆசி தருவார் - என எண்ணியது அந்த உள்ளம் ஆனால் வள்ளலார் அதை கீழே போட்டு உடைத்தாராம்.

மண்ணுக்கு போக இருந்த உடம்பை பொன்னாக்கி ஒளியுடலாக மாற்றி வருகிறேன். நீ மண்ணாக்கி கொண்டு வருகிறாயே என வெகுவாக கடிந்து கொண்டாராம்.

அது மட்டுமல்ல, அடுத்து வள்ளலார் கூறிய வாசகங்கள் தான் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியவை!

எல்லாரும் இறைவனை அடைய எளிமையாக வழிகாட்டினேன்! எல்லோரும் மரணமில்லா பெருவாழ்வு பெற வேண்டியே! நான் சொன்னதை செய்யாமல் சொன்ன என்னை கடவுளாக்குகிறீர்களே! இதை விட மூடத்தனம் வேறுண்டோ? என்று கூறினாராம். வள்ளலார் வாழ்வில் இந்த நிகழ்ச்சிதான் வள்ளலாரின் மேன்மைக்கும் ஒப்புயர்வற்ற உன்னத நிலைக்கும் எடுத்துக்காட்டாகும்.

நாம் கட்டறுக் கொல்ல வேண்டிய பாடமும் இதுதான்.

பள்ளிக் கூடத்திலே ஆசிரியர் கற்று தரும் பாடங்களை ஒழுங்காக படித்து, தேறினால் தான் சிறந்த மாணவனாக முடியும். அடுத்த நிலைக்கு போகமுடியும். இதை விடுத்து பாடஞ்சொல்லித் தந்த ஆசிரியரை துதிபாடிக் கொண்டு அவர் சொன்ன பாடங்களை படிக்காமல் இருந்தால் அடுத்த வகுப்புக்கு போகமுடியுமா?

இதைப் போலதான் இன்றைக்கும் பற்பல இடங்களிலும் அறியாமை குடிகொண்ட கூட்டத்தினர் புதிது புதிதாக கடவுள்களை உருவாக்கி வருகின்றனர். இறைவன்தான் இவர்களையும் காத்தருள வேண்டும்.

அப்படியென்றால் கோயில்கள் எதற்கு என்றொரு கேள்வி எழும்! கோயில்களை உருவாக்கியது - உள்ளிருந்து அருள்பாலிப்பது எல்லாம் சித்தர்களும் மகான்களும் தான். எந்தவொரு சித்தனும் தன்பெயரை சொன்னதில்லை. இறைவனுக்குத்தான் கோயில் கட்டினான். இறைவன் பெயரால் தான் அருள்பாலிக்கிறான். தன்னை வெளிக்காட்டி கொள்வதில்லை.

எவன் ஒருவன் தன்னை வெளிக்காட்டி கொள்கிறானோ அங்கே ஆணவம் இருக்கிறது என்று பொருள். ஆணவ மலம் உள்ள இடத்தில் ஆண்டவனுக்கு ஏது வேலை?

கோயில்கள் - குழந்தைகளுக்காக! அறிவில் குறைந்தவர்களுக்காக வந்தன!! அறியாமையால் கோயில் வந்து இறைவனை வழிபடும் ஒருவன் படிப்படியாக அறிவு பெறுகிறான்! தன் நிலையிலும் உயர்கிறான். அதன் முடிபுதான், கோயில் - தன் உடல் என்றும், சிவன் - தன் சீவன் என்றும் உணர்கிறான்.

இதை அறியாமல் சாகும் வரை சங்கரா - சங்கரா என புலம்புவதில் என்ன பயன்? குழந்தையாக இருந்து பெரியவனாக நாம் வளர்கிறோம். உணவு, உடை, படிப்பு, வேலை, மனைவி, மக்கள், சொத்து சுகங்கள் என எல்லாவற்றிலும் படிப்படியாக முன்னேறும் நாம், இறைநிலையில் மட்டும் பிறந்ததிலிருந்து சாகும் வரை கோயிலிலேயே ஏன் சுற்றிக் கொண்டிருக்க வேண்டும்?

கோயில் என்றால் என்ன? இறைவன் யார்? சிவனா பார்வதியா முருகனா இப்படியே பற்பல நாமரூப பேதங்கள்! எத்தனை விதமான வழிபாடுகள்? குழப்பமா? குழம்பவே வேண்டாம் . உண்மை உணர்ந்த தத்துவ ஞான யோகிகள் ஆன்றவிந்தடங்கிய ஆன்றோர்கள் நாமுய்யும் பொருட்டு ஏராளமான ஆன்மீக நூல்களை விட்டுச் சென்றுள்ளார்கள். வாழையடி வாழையாக பற்பல ஞானிகளும் தோன்றி உலக மக்களை ஒப்புயர்வற்ற ஞானப் பாதைக்கு இட்டுச் செல்கிறார்கள்.

முடிந்த முடிபான ஞான சாதனைகள் புரிந்து இறைவனை நாமும் அடைய வேண்டாமா?

மெய்ப்பொருளை உணர வேண்டாமா? திருவடியை சரணடைய வேண்டாமா?

முதல் நிலையில் எந்த தெய்வத்தை எந்த முறையில் வழிப்பட்டாலும் சரி, முடிந்த நிலையில் ஏக தெய்வமே! ஏக சற்குருவே! ஏக சாதனையே!

"ஒன்றென்றிரு தெய்வம் உண்டென்றிரு"

மனமே உனக்கு உபதேசம் இதுவே. இது பட்டினத்தார் வாக்கு.

ஆண்டன்வன் - ஆத்மாவாக நம் உடலில் குடி கொண்டிருக்கிறான் . எப்படியிருக்கிறான் என்பதையும் ஞானிகள் கூறியிருக்கிறார்கள் .

திருவருட் பிரகாச வள்ளலார் இராமலிங்க சுவாமிகள் அவர்கள் "அருட்பெரும்ஜோதி" ஆண்டவர் என்கிறார். இறைவன் அருள்மயமானவன் எங்கும் பரந்த பெரியவன் ஜோதிமயமானவன் என் இரத்தின சுருக்கமாக கூறிவிட்டார்.

இங்கே உள்ள எல்லா சித்தர்களும் ஞானிகளும் மகான்களும் ஜோதியே சுடரே என்று தான் கூரியிருகின்றனர்.

"தேவன் ஒளியாயிருக்கிறான் - நீங்களும் ஒளியிலே நடந்தால் தேவனை தரிசிக்கலாம்" என்று இயேசு கிறிஸ்துவும் கூறியிருக்கிறார்.

இப்போது உலகத்தில் உள்ள எல்லா மதங்களும் ஒளியாகவே இறைவனை குறிப்பிடுகின்றனர். ஒரே தெய்வம் என்றும் தெளிவாக குறிப்பிடுகின்றனர். இன்னும் ஏன் குழப்பம்?

அடியார்களுக்கு தொண்டு செய்வது, ஏழைகளுக்கு அன்னமிடல், எல்லோருக்கும் உதவுவது இது போன்ற பற்பல காரியங்களும் நம்மை பக்குவப்படுதத்தானே யன்றி இதுவே முடிவல்ல! உள்ளம் பக்குவம் பெறும். பரோபகாரம் மூலம் பரந்த உள்ளம் கிட்டும்.

குறிப்பாக, முற்பிறவிகளில் நாம் செய்த பாவ வினைகளை இப்படி தொண்டுகள் புரிவதின் மூலம் நீக்கலாம். புண்ணியம் கிட்டும்.

சுந்தரர், அடியார்க்கும் அடியேன் என்று தன்னை தாழ்த்தி பாடியது அவரது பணிவை காட்டுகிறது. சிவனிடமட்டுமல்ல சிவனடியார்களிடமும் எத்தகைய பக்தி கொண்டிருந்தார் என்பதை அறியலாம்.
எல்லா ஞானிகளும் இயல்பும் இதுவே.

உலகத்தின் எந்த பகுதியில் உள்ள யாராக இருந்தாலும், எல்லாம் வல்ல அந்த ஒரே ஆண்டவனைத் தானே வணங்கி வழிபடுகிறார்கள் - பாடுகிறார்கள்! அப்படியிருக்க அனுபவ நிலைகளிலும் உபதேசங்களிலும் வித்தியாசம் வருமா என்ன?! எல்லோரும் "அன்பு" என்ற ஒன்றைத் தானே போதித்தார்கள்!

எல்லா உயிர்களிடமும் அன்பு காட்டுக என்றுதானே போதித்தார்கள் .

வெவ்வேறு மொழியில், உலகின் வெவ்வேறு பகுதிகளில் இருந்து சொன்னார்களே ஒழிய, ஏக இறைவனையே எல்லாரும் அடைய வழிகாட்டினார்கள்!

எனவே நாம் எந்த பேதமும் கருதாமல் "சிவானந்த போதம்" பருகி ஆண்டவரோடு ஐக்கியமாவோமாக!

வாழ்க வளமுடன்!

மதிவாணன்

9 comments:

Anonymous said...

நல்ல ஒரு சிந்தனையை தந்தமைக்கு நன்றிகள்

Anonymous said...

vazhga valamudan. Keep posting like this.

Lalitha said...

Good Work!

Vimal said...

Great Post Mathi!!!

Mathivanan said...

Thanks Vimal and Lalitha.

Ganpath said...

Vaazhga Valamudan

Nandri Nanbaa

Anbudan

Ganapathy

Mathivanan said...

Thank you Ganapath.

Ramarajan said...

Thanks for share. God Bless u

Mathivanan said...

Thank you Mr. Ramarajan, Everyone should know about GOD and self realizations.

Next home
Related Posts Plugin for WordPress, Blogger...