Tuesday, November 15, 2011

உபதேசம்


குருவே சரணம்! குரு திருவடி சரணம்.


என் குருவின் பாதம் பணிந்து அவர் ஆசியுடன் இக்கட்டுரையை எழுதுகிறேன். இவை அனைத்தும் ஞான சற்குரு எங்களுக்கு உபதேசம் அளித்தவையே. அதை உங்களிடம் பகிர்வது மகிழ்ச்சி கொள்கிறேன்.

எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு”. – திருக்குறள்

மெய்ப்பொருளை ஆராய்வது எப்படி என்றால் எந்த பொருள் எப்படி நமக்கு காணப்படினும் அந்தப் பொருளில் எந்தப் பகுதி அழிவில்லாமல் என்றும் இருக்கும் என்று கண்டறிவதே மெய்ப் பொருளை ஆராய்ந்து அறியும் அறிவு.

நமது உடலில் அழியாதது உயிர். அது இருப்பது – துலங்குவது நம் உடலில் பற்றற்று இருக்கும் கண்களில் – ஜோதியாக! இதுவே நம் மெய்யாகிய உடலில் உள்ள உண்மை பொருள்.

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு. – திருக்குறள்

எந்தப் பொருளைப் பற்றி யாரார் எப்படியெல்லாம் சொன்னாலும் அவற்றையெல்லாம் கேட்டு அவற்றுள் எது உண்மை என்று கண்டுகொள்ளச் செய்வதுதான் அறிவு.

யாரார் ஏதேது சொன்னாலும் அதையெல்லாம் நம் உடலில் உள்ள ஒளிபொருந்திய கண்களாக – மெய்ப்பொருளாக கான்பவனுக்குத்தான் அறிவு இருக்கின்றது என்று பொருள்.

கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்
மற்றீண்டு வாரா நெறி - திருக்குறள்

இந்தமுறையில் ஆராய்ந்து அறியக் கற்றுக்கொண்டு புறத்திலே மெய்ப்பொருளை தேடியளையாமல்; நம் உடலாகிய மெய்யில் உள்ள பொருளாகிய கண்களை மெய்ப்பொருள் என உணர்ந்து கண்டு அறியக்கூடியவர்கள் மறுபடியும் இங்கே பிறவாதிருக்கும் மார்க்கத்தை அடைவார்கள். அதாவது பிறவிப் பிணியிலிருந்து மீள்வர்.

மனிதனாக பிறந்த நாம் பிறப்பு – இறப்பிலிருந்து விடுபட முதலில் மெய்ப்பொருளை உணர்த்தும் ஞானகுரு பாதம் பணிந்து உபதேசம் பெற்று வாழ்வாங்கு வாழ வேண்டும்.

நல்ஒழுக்கங்களை கடைபிடிக்க வேண்டும். நல்ல நெறியோடு வாழ வேண்டும்.

சுத்த சைவ உணவு உட்கொண்டு சதாகாலமும் இறை சிந்தையோடு வாழ வேண்டும்.

நாம் பிறந்தது இனி பிறவாமல் இருக்க! மெய்பொருள் அறிவதுதான் அறிவுடைமை! மெய்பொருள் உணர்வதுதான் ஞானம்!

மெய்யானது நம் உடல்!? ஏனெனில் அழிவில்லாத உயிர் இருக்கிறதல்லவா?

நம் முன்னோர் உரைத்த நெறிப்படி வாழ்வோமானால் நம் உடல் அழியாத தன்மை பெறலாம்! அழியாத தன்மையை உடலும் பெறமுடியும் அதனால்தான் முன்னோர் உடலை “மெய்” என்றனர்.

மெய் உணராத அறிவிலிகள் பொய்யான உலகத்திலே உழன்று தானும் பொய்யாகி விடுகிறான்; அழிந்து விடுகிறான். மெய்யிலேயே மெய்ப்பொருள் உணர்வதே சிறப்பு!

மனிதனாக பிறந்து நாம் தானதவம் செய்து முக்திபெற வேண்டும். மெய்பொருள் உணர்ந்து தவம் செய்ய வேண்டும். மெய்ப் பொருளை எல்லோருக்கும் அறிவிக்க ஞான தானம் செய்ய வேண்டும்.

தானங்களில் சிறந்தது அன்னதானம் என்பர்?! அதைவிட சிறந்த தானம் ஞானதனம்!

ஒருவேளை வயிற்றுப் பசியை போக்கும் அன்னதானத்தை விட, பிறந்து செத்து துன்புறும் ஒரு ஆன்மா விடுதலை பெற வழிகாட்டும் ஞானதானமே மிக மிக உயர்ந்தது! ஒப்பற்றது!

அன்ன சத்திரம் ஆயிரங்கட்டலை விட ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல் நன்று

1000 பேருக்கு அன்னதானம் வழங்கும் ஒரு சத்திரம்; ஆயிரம் சத்திரங்கள் கட்டி பல்லாயிரக்கனக்கானவர்களுக்கு அன்னதானம் கொடுப்பதை விட ஒருவருக்கும் எழுத்தறிவித்தல் நன்று! அதாவது எண்ணும் எழுத்தும் கண்ணென தகும் என்றார்களே அந்த மெய் எழுத்து அறிவிப்பதே நன்று மிகவும் உயர்ந்தது.

எழுத்தறிவித்தவன் இறைவன் ஆகும்

அப்படிப்பட்ட மெய் எழுத்தும் நம் மெய்யாகிய உடலில் நம் கண்கள் என்பதை அறிவுபூர்வமாக, உணர்வுபூர்வமாக எடுத்துரைத்து உணர்த்தி காட்டுபவனே இறைவன்!? ஞானகுரு!?

குரு உபதேசம் பெற்றாலே மோட்சம்!

உப = என்றால் இரண்டு
தேசம் = இடம்.
உபதேசம் என்றால் இரண்டு இடம்.

நம் உடலில் உள்ள இரண்டு இடம் இரண்டு கண்கள். இரண்டு கண்ணும் ஒரே மாதிரிதான் உள்ளது.

நம் உடலில் வேறு எதுவும் ஒன்றுபோல் மற்றொன்றுறில்லை!

நம் இரண்டு கண்கள் மட்டுமல்ல, இந்த உலகிலுள்ள
700 கோடி மக்களின் கண்களும் – கண்மணியும் ஒன்று போலவே உள்ளது. எவ்வித வித்தியாசமுமில்லை!.

நம் அனைவரிடமும் – மனிதர்களாகிய உலகமக்கள் அனைவரிடமும் இறைவன் கண்மணியாக அதில் விளங்கும் ஜோதியாக ஒன்றுபோலவே இருக்கின்றான்!?

ஒத்த தறிவான் உயிர்வாழ்வான் மற்றையான்
செத்தாருள் வைக்கப்படும்
- திருக்குறள்

உலகிலுள்ள
700 கோடி மக்களிடமும் ஒத்து இருக்கின்ற – ஒன்றுபோல் இருக்கின்ற – எவ்வித வித்தியாசமுமின்றி இருக்கின்ற ஒரே பொருள் கண்மணிதான்!?

அதை அறிந்தவன், உணர்ந்தவன் உயிர் வாழும், பிரிந்து போகாது மரணம் அடைய மாட்டான்.

கண்மணியில் காரியப்படும் ஒளியான இறைவனை உணராதவன் செத்துப் போவான்! இதுவே ஞானிகளின் சத்திய வாக்கு!.

எண்சாண் உடம்புக்கு சிரசே பிரதானம். நம் சிரசில் தலையில் உள்ள முக்கியமான உறுப்பு கண்கள்! தலைக்கு தலையாயது கண்ணே!

ஒரு தாயின் கருவில் முதன்முதலாக உருவாவது கண்மணி.!

நாம் பிறந்தது முதல்
100 வயதுவரை நம் உடலில் வளர்சியடையாதது முதிர்சியடையாத ஒரே உறுப்பு கண்மணி.!

உலகமக்கள் அனைவருக்கும் ஒரே அளவில் உள்ளது கண்மணி.!

நம் உடலில் இரத்தம் இல்லாதது; எலும்பு இல்லாதது; நரம்பு இல்லாதது’ உடலில் ஒட்டாமல் இருப்பது கண்மணி.!

உலகமே பஞ்ச பூதங்களால் ஆனது. நம் உடலும் பஞ்ச பூதத்தால் ஆனது. நம் உடலில் கண்களில் தான் பஞ்சபூதமும் உள்ளது.!

கண்தானம் செய்கிறார்கள் அல்லவா? யார் கண்ணையும் யாருக்கும் பொருத்தலாமல்லவா? இதிலிருந்து எண்ண தெரிகிறது?

கண்களில் சிறியவர் கண், பெரியவர் கண், என்று பேதமில்லை, உலகிலுள்ள எல்லோர் கண்ணும் ஒரேமாதிரி தான்! எனவேதான் யார் கண்ணை வேண்டுமானாலும் யாருக்கு வேண்டுமானாலும் தானம் செய்யலாம்!? கண்ணுக்கு எந்த வித்தியாசமுமில்லை!?

எந்தவித வித்தியாசமுமில்லாத அந்த கண்ணில் தான் இறைவனும் எந்தவித பேதமுமின்றி உலகோர் எல்லோரிடத்தும் ஒரேமாதிரி இருக்கின்றான்!?

ஒரேமாதிரி இருக்கின்ற அந்த இறைவன்தான் – ஒளி தான் நமக்கு தாயும் தந்தையுமாவான்!

ஒரே இறைவன்தான்! பேரொளி தான்! நம் தாயும் தந்தையுமானவன் தான்! நாம் அறிய வேண்டியது! எப்படி என உணர வேண்டியது!

நாம் எல்லோரும் – உலகமக்கலாகிய
700 கோடி மக்களாகிய நாம் அனைவரும் அந்த ஒரே அம்மையப்பனின் பிள்ளைகளே!

அப்படியாயின் உலகமக்கழகிய நாம்,
700 கோடி பேர்களும் சகோதரசகோதரிகள் தானே!?

பேரோளியாகிய – அருட்பெரும்ஜோதியாகிய நம் அம்மையப்பனாகிய அந்த இறைவன்தான் சின்ன ஒளியாக நம் அனைவரின் கண்மணியிலும் ஒளிர்கிறார்!? எவ்வித வித்தியாசமுமின்றியே.

நம் அம்மையப்பனை நாம் காண வேண்டாமா? உணர வேண்டாமா?!

எல்லாம் வல்ல இறைவன், எங்கும் நிறைந்த இறைவன், அணுவுக்குள்ளும் அணுவாக இருப்பவன் நம் உடலில் இல்லாமலிருப்பானா?

நம் உடலில் கண்ணில் மணியாக ஒளியாக இருக்கின்றான். இந்த உலகிலுள்ள எல்லா ஞானிகளும் இதைத்தான் கூறியிருக்கிறார்கள்.

வெட்டாத சக்கரம் பேசாத மந்திரம்,
வேறொருவர்க்கு எட்டாத புஷ்பம்,
இறையாத தீர்த்தம், இனி முடிந்து கட்டாத லிங்கம்,
கருதாத நெஞ்சம் கருத்தினுள்ளே,
முட்டாத பூசையன்றோ என் குரு நாதன் மொழிந்ததுவே” – பட்டினத்தார்

கண்தான் வெட்டாத சக்கரம்! கண்தான் பெசதமந்திரம்! கண்தான் வேறொருவருக்கும் எட்டாத புஷ்பம்! கண்தான் கட்டாத லிங்கம்! சிவலிங்கத்தை மேலிருந்து பார்த்தால்
3 வட்டம் தானே தெரிகிறது. கண் அதுபோலத்தானே உள்ளது.

கண்தான் கரும்பு – கரும் – பூ! உலகில் எவ்வளவோ கலர்களில் பூக்கள் இருக்கின்றனவே, கறுப்பு பூ உண்டா? கண்தான் கறுப்பு பூ!

அண்டம்போல் அழகியது கண்! அண்டம் என்றால் உலகம் – பூமி நாமிருக்கும் பூமி உருண்டையாக இருப்பது போலவே நம் கண்மணி உள்ளது.!

பூமி தன்னைத் தானே சுற்றுவதுபோல கண்மணியும் சுற்றுகிறது!

பூமி சுழல்வதற்க்கு ஆதாரம் அதன் உள் மத்தியில் கனன்று கொண்டிருக்கும் நெருப்புதான்.

கண்மணியும் அதன் மத்தியில் உள்ள, ஊசிமுனை துவாரத்தினுள் உள்ள சிறு ஜோதியால்தான் சுழல்கிறது!

பூமி எப்படி அந்தரத்தில் உள்ளதோ அதுபோலவே கண்மணியும் கண்ணின் கரு விழிக்குள் பிராண நீரில் மிதந்து கொண்டுதான் இருக்கிறது!

பிராண நீரானதில் உருண்டு திரண்டதை கண்டி அறிந்துடு நீ - என சித்தர் உரைத்தது கண்மணியைத்தான்!

காளத்தியான் அவன் என் கண்ணில் உள்ளான் காண் - என திருநாவுக்கரசர் உரைத்ததை உணர்வீர்.

மணியே மணியின் ஒளியே ஒளிரும் மணிபுனைந்த
அணியே அணியும் அணிக் கழகே அனுகாதவர்க்கு
பிணியே பிணிக்குமருந்தே அமரர் பெருவிருந்தே
பணியே னொருவரைநின் பத்மபாதம் பணிந்தபின்னே


அபிராமிபட்டர் நமக்கு உரைத்த அபிராமி அந்தாதி பாடல் இது.

மணியே என்பதற்கு இதுவரை உரை எழுதிய யாரும் சரியாக சொல்லவில்லை! மணியே என்றால் மாணிக்கமே என்றே பொருள் சொல்லியிருக்கின்றனர். அப்படியல்ல!

மணியே – கண்மணியே, மணியின் ஒளியே கண்மணியிலுள்ள ஒளியே, ஒளிரும் மணிபுனைந்த அணியே – ஒளிபொருந்திய மணியை உடைய கண்ணே, அணியும் அணிக்கழகே – கண்ணுக்கு அழகே, அதிலுள்ள மணியின் ஒளியே, அனுகாதவர்க்கு பிணியே – கண்மணி ஒளியை அனுகாதவர்களுக்கு பிறவிப் பிணியே, பிணிக்கு மருந்தே – பிறவியாகிய பிணிதீர மருந்து கண்மணி ஒளியே, அமரர் பேரு விருந்தே – தேவர்களுக்கும் பெரிய விருந்தே இதுதான், பணியேன் ஒருவரை நின் பத்மபாதம் பணிந்த பின்னே – கண்மணி ஒளியே இறைவனின் தாமரை திருவடி என்பது அதை பணிந்த நான் வேறொருவரை பணியேன் என்பதே இதன் பொருள்.

இதுவே ஞானப்பொருள். இந்த ஒரு பாடல்போதும் ஞானம் பெறுவதற்கு! அபிராமிபட்டர் பிணிக்கு மருந்தே என நம் பிறவிப்பிணி தீர நம் கண்மணியிலுள்ள ஒளிதான் மருந்து என்றார். இதையேதான் வள்ளலாரும் நல்ல மருந்து இம்மருந்து சுகம் நல்கும் வைத்தியநாத மருந்து, அருள்வடிவான மருந்து அருட்பெரும்ஜோதி மருந்து என்றார்.

ஆபிராமி பட்டர் இறைவன் திருவடிகளை பணிந்தபின் வேறொருவரை பணியமாட்டேன் என்றார். இதையே திருநாவுக்கரசரும் “நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம் நரகத்தில் இடர்படோம் என்று உறுதிபட கூறுகிறார்.

ஞானிகள் எல்லோர் கூற்றும் ஒன்றுதான்! நாம் ஞானம் பெற எல்லோரும் ஒன்றைத்தான் சொன்னார்கள்! நன்றைத் தான் சொன்னார்கள்!

கண்ணின் மணியை கருத்தின் தெளிவை
விண்ணில் நின்று விளங்கும் மெய்யினை
எண்ணி எண்ணி இரவும் பகலுமே
நண்ணு கின்றவர் நாந்தொழுந் தெய்வமே


தாயுமான சுவாமிகள் உரைத்த ஞானம்! இறைவனை, கண்ணின் மணியில் ஒளியாக இருப்பதை, எல்லாம் வல்ல இறைவனே விண்ணில் இருக்கும் மெய்யானவரே அது என்பதை, கருத்தில் இருத்தி இரவு பகலாக எப்போதும் எண்ணி எண்ணி தவம் செய்பவரே நான் கும்பிடும் கடவுள் என உரைக்கிறார் தாயுமான சுவாமிகள்.

இதுதான் உன்னதமான ஒப்பற்ற ஞானவழி! எல்லா ஞானிகள் கூற்றும் இதுவே!

தேவன் ஒளியாய் இருக்கிறார் நீங்களும் ஒளியிலே நடந்தால் தேவனை தரிசிக்கலாம் இது பைபிள் வாசகம்.

கண்ணே சரீரத்தின் விளக்காக இருக்கின்றது. உன் கண் ஒளியுள்ளதாக இருந்தால் உன் சரீரம் முழுமைக்கும் ஒளியாயிருக்கும்.” இயேசு கிறிஸ்துவின் உபதேசம் இது.

பேரொளியாக தேவனை அடைய, நம் கண்ணில் உள்ள சிறு ஒளியை பெருக்கி முதலில் நம் உடல் முழுவதும் ஒளியாக வேண்டும். அதுவே நாம் ஒளியிலே நடப்பது.

ஊன உடல் ஒளி உடலாக மாறினால்தான் ஒளியான தேவனை அடையலாம்!

ஊன உடல் ஒளியுடலாக பெற அக்னியினால் ஞானஸ்தானம் பெற வேண்டும்.

இப்படித்தான் வள்ளலார் தன் உடலின் ஒளியை பெருக்கி ஊன உடலை ஒளியாக்கி ஒளியுடல் பெற்று அருட்பெரும்ஜோதி மயமானார்! மரணமிலா வாழ்வு பெற்றார்.

இயேசு கொடுத்த அக்னியினாலான ஞான்ஷ்தானமே ஞானசற்குரு அவர்கள் கொடுக்கும் மெய்ப்பொருள் தீட்சை! திருவடி தீட்சை.

உலகிலுள்ள எல்லா ஞானிகளும் இதைத்தான் இப்படித்தான் உரைத்தார்கள்!

முகமது நபிக்கு அல்லா காட்சி கொடுத்ததும் ஒளியாகத்தானே!

எல்லோராலும் எப்போதும் ஒப்புக்கொள்ளப்பட்ட “இறைநிலை ஒளிதான்!”

அந்த ஒளிதான் அந்த இறைவன்தான் நம் கண்மணியிலும் ஒளியாக துலங்குகிறான்? நாம் அவனை உணர்ந்து தவம்செய்து ஞானம்பெற வேண்டும்! பெறலாம்!

வேதங்களில் சொல்லப்பட்டதும் இதுவே! கடோபநிசத்தில் நசிகேதனின் கேள்விக்கு எமனின் பதில், இறைவன் நம் உடலில் கட்டை விரல் அளவிலான இடத்தில் புகையில்லா ஜோதியாக விளங்குகிறான் என்பதே!

இதைச்சொல்லி விளக்க குருவில்லாமல் முடியுமா? இதுபோல பலவிதங்களிலும் பல நூல்களிலும் ஞானம் உரைக்கப்பட்டுள்ளது.

நம் கையில் ஆள்காட்டி விரலால் கட்டை விரலின் மத்தியை தொட்டு, மற்ற மூன்று விரல்களை நீட்டி இருப்பதை சின்முத்திரை என்பர்.

சின் முத்திரை வைக்கும்போது ஆள்காட்டிவிரல் கட்டை விரலின் மத்தியில் தொடும் இடத்திற்கு மேல், அதாவது பெருவிரல் – கட்டை விரலின் நுனியிலிருந்து நடுவில் உள்ள கோடுவரை உள்ள இடத்தின் அளவே நம் கண் அளவு! வைத்துப் பாருங்கள்.

இறைவன் கட்டைவிரல் அளவிலான கண்ணில் புகையில்லாத ஜோதியாக விளங்குகிறான்! புறத்திலே நாம் ஏற்றும் ஜோதி புகை உள்ளது. அகத்திலே உள்ள ஜோதி ஆத்ம ஜோதி புகையில்லாதது! அருட்பெரும்ஜோதி!

புருவ மத்தியில் இறைவன் விளங்குகிறார் என்கிறார்கள். புருவமத்தி எது என தெரியாமல் குழம்பி விடுகின்றனர், இதுபோல பலப்பல பரிபாஷைகளில் இறைவன் நம் கண்ணில் மணியாக ஒளியாக இருப்பதை உரைக்கிரார்கள்.

புருவமத்தி ஏதென்றக்கால் பரப்பிரம்ம மானதொரு அண்ட உச்சி” சித்தர் வாக்கு.

பரப்பிரம்மம் ஆகிய ஒளியாகிய அண்ட உச்சி. அண்டம் போல் அழகியதாம் என பட்டினத்தார் பாடல் உரைக்கிறது. அண்டம்போல் உள்ளது கண்மணி. அதன் உச்சி என்பது மத்திய பகுதி.

இதை உணர்ந்தால்தான் ஞானம்!? நம் நெற்றியில் இரு புருவங்களுக்கு இடைப்பட்ட ஆக்ஞை சக்கர இடமல்ல!

கையறவிலாத நடுகண் புருவ பூட்டு என வள்ளலார் உரைத்ததையும் காண்க!

குண்டலினி சக்தி எழ வேண்டும் என்கின்றனர் குண்டலினி சக்தி அடிவயிற்றில் என்கின்றனர். அது ஆறு ஆதாரங்களில் ஒரு ஆதாரம் யோக மார்க்கம்.

ஞானிகள் கூறியது இதுதான்! குண்டுபோல் பூமிபோல் உள்ளது கண்மணி! அதில் அனல் – தீ உள்ளது! அது தான் நீ – ஆத்மா – இறையம்சம்!

நம் உடலில் குண்டுபோல் இருக்கும் கண்மணியில் இருக்கும் அனல்தான் நீ! அந்த சக்தியை எழுப்பு என்பதே!

குண்டு + அனல் + நீ = குண்டலினி இதைச் சொல்லி உணர்த்துவதே உபதேசம்!

எல்லாம் வல்ல எங்கும் நிறைந்த அணுவுக்கும் அணுவான அந்த பெருஞ்ஜோதியாகிய இறைவன் நம் உடலில் கண்மணியின் மத்தியில் சிறு ஜோதியாக விளங்குகின்றான்.

இதுவே ஞான உபதேசம்! இதை உபதேசிப்பவனே ஞானகுரு! இதை உணர்த்துபவனே சற்குரு!

எல்லா உயிரும் இன்புற்று வாழ்க!

கண்மணியை தான் சித்தர்கள் கூறியிருக்கிறார்கள் என்பதை சுட்டிகாட்ட மெய்ப்பொருள் சித்தர்கள் பாடல்களை அடுத்த பகுதியில் பதிவு செய்கிறேன்.

வாழ்க வளமுடன்
மதிவாணன்

3 comments:

k.k.subramanian said...

vazhga valamudan mathivanan

Saravanan said...

neengal petra upathaasathai pagirnthatharku nandri....Aanal kalam kalamai " sithargalalum, gnanigalalum " sutchamamai solla patta upathaasathai vellipadayai sonnathel konjam varutham.........pasi ullavanukku onavoo kodupathe siranthathu, illathavanuku kodupathu sari agathu....

Mathivanan said...

சகோதரர் சரவணன், உங்கள் அன்புக்கு நன்றி.

சித்தர்களும் ஞானிகளும் பசித்தவர்களுக்கு மட்டுமா தேடிபிடித்து கொடுத்துவிட்டு சென்றார்கள்?

ஆன்ம பசி உள்ளவர்களுக்கு அவை கிடைத்தது சித்தர்கள் மற்றும் ஞானிகள் சொன்னவை கிடைத்தது புரிந்தது.

அவர்கள் சமுதாயத்தில் அனைவரும் ஞான கடைத்தேற வேண்டும் சிந்திக்க வேண்டும் என்று பரிபாசையாக சொல்லி விட்டு சென்று இருகிறார்கள். இதுபோல் நிறைய அன்பர்கள் இருகிறார்கள் அவர்களுக்கு இந்த உணவு கிடைக்கும் புரியும்.

சித்தர்கள் ரகசியம் என்று வைத்து இருந்தால் எதையுமே சொல்லி விட்டு சென்று இருக்க மாட்டார்கள். இந்த உலகத்தில் கெட்ட விஷயங்கள் ஆதிக்கம் நடக்கிற இந்த வேலையில் நல்லதொரு விஷயத்தை மக்களுக்கு சொன்னதில் பெருமிதம் கொள்கிறேன். எல்லா வல்ல இறைவனும் குரு அருளும் எம்மை ஆளும்.

நன்றியுடன்
மதிவாணன்.

Next previous home
Related Posts Plugin for WordPress, Blogger...