Thursday, November 10, 2011

நான்கு நிலைகள்!


எனது குரு எனக்கு உணர்த்தியதை உங்களிடம் பகிர்ந்து கொள்வது பெருமிதம் அடைகிறேன்.

நமது ஞானிகள் மனிதன் இறைநிலையை அடைய நான்குபடி நிலைகளை உருவாக்கித் தந்துள்ளனர். அவை, சரியை, கிரியை, யோகம், ஞானம் எனப்படும். உலகற மீது அவர்கள் கொண்ட கருணை அளவிட முடியாதது!

நாமெல்லாம் உயர்நிலை அடைய வழிகாட்டிச் சென்றுள்ளனர்.

சரியை – அங்கம் துலக்கி ஆலயம் தொழுவது,
அதன் முடிவு – சாலோகம், பக்தன் – தாச மார்க்கம்

கிரியை – அஷ்டாங்க பூஜை முதலியன செய்தல்,
அதன் முடிவு – சாமீபம், கர்மவான் – சத்புத்திர மார்க்கம்

யோகம் - பிராண வாயுவை கட்டுப்படுத்தி சாதனை புரிதல்,
அதன் முடிவு – சாரூபம், யோகி – சகமார்க்ம்

ஞானம் - தான் இன்னதென்று அறிந்து அம்மயமாதல்,
அதன் முடிவு – சாயுச்சியம், ஞானி – சன்மார்க்கம்சரியை:

அங்கம் துலக்கி ஆலயம் தொழுவது. முதல் நிலையில் மனிதன் அதிகாலையில் சூரியோதயதிற்கு முன் எழுந்து குளித்து தூய உடை அணிந்து கோவிலுக்குச் சென்று இறைவனை வழிபடுதலேயாகும். "கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்". என்றும் "ஆலயம் தொழுவது சாலவும் நன்று" எனவும் சான்றோர் கூறினார்கள். இதை நாம் சிந்தித்துப் பார்ப்போமேயானால் உண்மை புரியும். கோயில் வழிபாடு முதல் வகுப்புப் பாடம் குழந்தைகளுக்கு அரிச்சுவடிகற்றுகொடுப்பது போல இறைவனைப் பற்றி அறியாத குழந்தைகளுக்கு - மனிதர்களுக்கு, பெரியோர்கள் இறைவனை அடைய முதல்படியாக உருவ வழிபாடு அமைத்துக் கொடுத்தனர். புராணங்களும் ஏற்படுத்தினர். திருவிழாக்கள் நடத்தினர். இதில் நாம் பெருமைப்பட வேண்டியது என்னவென்றால் அவர்கள் கற்பித்த ஒவ்வொன்றும் தத்துவம் உள்ளதே! கோயில் கட்டியதிலேயே மனித உடலமைப்பைக் காட்டினர். தெய்வ திரு உருவங்களிலே புராணக் கதைகளிலே - தத்துவம் - ஞானம் வெளிப்படச் செய்தனர். மனிதன் சமுதாயத்தில் வாழ நல்ல நெறிமுறைகளை வகுத்துக் கொடுத்தனர். எதை எடுத்தாலும் ஞானப்பொருள் விளக்கமே புரிந்துள்ளனர்.
கிரியை:

மனிதன் வளர வளர கோயிலுக்குச் சென்று வழிபடுவதைவிட இன்னும் கடவுளிடம் நெருங்கும் ஆவல் வளருகிறது. அதுவரை கோயிலில் இறைவனுக்கும் பக்தனுக்கும் இடையில் பூசாரி என்று ஒருவர் இருந்தார்கள். பக்தனின் முதிர்ச்சி நிலை-தானே பூஜை செய்ய வேண்டும், தானே பாட வேண்டும், தானே சேவை செய்ய வேண்டும் என மனது துடிக்கிறது. வீட்டில் அதற்காக அவன் இஷ்டப்பட்ட கடவுள் வடிவம் வாங்கி வைத்து அவன் மனம் விரும்பும்படிஎல்லாம் பூஜை செய்து மகிழ்கிறான். தோத்திரம் பாடி மகிழ்கிறான். இறைவனுக்கும் அவனுக்கும் இடையில் வேறு ஒருவர் வருவதை அவன் விரும்புவதில்லை. முதல் நிலையில் ஊர் ஊராக பல புண்ணிய நதிகளில் நீராடி பல கோயில்களுக்கு சென்று வழிபட்டு வந்த பக்தன் இரண்டாம் நிலையில் பல கோயில் சென்று வழிபடுவதை குறைத்து தானே பூஜை செய்வதில் அதிக அக்கறை காட்டுகிறான். அதில் மேலும் மேலும் முயல்கிறான். அபிஷேகம், ஆராதனை, அலங்காரம், யாகம், ஹோமம், இப்படி பற்பல கிரியைகளிலும் ஈடுபட்டு மகிழ்கிறான், இதுவே கிரியை நிலையாகும்.


யோகம்:

ஆனால் எல்லோரும் இப்படி முன்னேறுவது இல்லை. தன் ஆயுள் முழுவதுமே கோயிலுக்குச் சென்று வழிபட்டு அதோடு தன வாழ்க்கை முடிவு பெற்றவர்கள் ஏராளம்! அடுத்த நிலையான கிரியைகள் வரை வந்து அதிலேயே மகிழ்ந்து ஆழ்ந்து போகிறவர்களும் ஏராளம்! கோயிலில் மட்டும்தான் சாமி இருக்கா? ஏன் வீட்டிலும் சாமி இருக்கு என்போருகளும் ஏராளம்! மூன்றாவது யோகம், முதன் நிலையில் கோயிலுக்கு சென்று வணங்கிய பக்தன், இரண்டாம் நிலையில்
தானே பூஜைகள் ஹோமங்கள் செய்து மகிழ்ந்த கர்மவான் இன்னும் கொஞ்சம் சிந்தனை வளரும்போது நாம் கல்லைதானே - செம்பைதானே வணங்கி போற்றி வந்துள்ளோம் - முன்னோர்களால் சாட்சியாக வைக்கபட்டவைதானே இவை என எண்ண ஆரம்பிக்கும்போது அதற்குரிய - அதை விளக்கும் - விளங்க வைக்கும் ஆட்களை தேடி அலைகிறான்.

"மூர்த்தி - தலம் - தீர்த்தம் முறையாக ஆடின பேர்க்கு வார்த்தை சொல் ஒரு சற்குரு வாய்க்கும் பராபரமே என தாயுமான சுவாமிகள் அருளியதை சிந்தித்துப் பாருங்கள். முதல் வகுப்பு ஒழுங்காக படித்தால் தேறி இரண்டாம் வகுப்புக்கு
அனுப்பபடுவான். அதிலும் ஒழுங்காக படிப்பானானால் அதிலும் தேறி மூன்றாம் வகுப்பு போவான். இப்படியே, முறையாக ஆசிரியர் கற்பிப்பதை ஒழுங்காக படிக்கும் மாணவன் உயர்நிலை அடைந்து பட்டம் பெறுவான். அதுபோல் நல்ல
பக்தனுக்கு ஆண்டவன் அடுத்த நிலையை, அதற்கு அடுத்த நிலையை வரிசையாக காட்டிக் கொண்டேயிருப்பான். நம் முன்னோர் சொல்லி வைத்த ஒழுக்க மேன்மையடைவான். பக்தர்களை பரமன் ஒருபோதும் கைவிடவே மாட்டான்.

மூன்றாவது வழிதேடி அலைபவன் பிரணாயாமம். கற்று பயிற்சி பண்ணுவான். பஞ்ச பூதங்களில் ஒன்றான வாயுவைப் பற்றி பற்பல யோக சாதனைகளையும் புரிவான். தீவிர வைராக்கிய சிந்தனையுடயவர்கள் சில பல சித்துகள் கைவர பெறுவர். உடல் பக்குவம் பெறும் பக்தனாய் பின் கர்மவானாய் பின் யோகியும் ஆவான். இதுவே படிப்படியாக வளரும் நிலை.

ஞானம்:

நான்காவது கடைசி நிலையான ஞானம் எனப்படுவது நாம் இதிலே ஆரம்பத்திலே இருந்து சொல்லி வருவது அதாவது முடிந்த முடிவான நிலை நாம் யார் என அறிவது - இது தான் அடைய வேண்டியது என பரிபூரணமாக உணர்தலே ஆகும். இறைவனிடம் நம்ம அழைத்துச் செல்லும் வழி ஞானவழியே, முதலில் பக்தனாய் இறைவனை வெளியே கண்டு வழிபட்டு, பின் கர்மவானாகி தானே பூஜைகள் செய்து, பின் பிராணனை கட்டுப்படுத்தி யோகியாகி முடிவில் வெளியில் காண விழைந்த இறைவனை தன் உள்ளே கண்டு - உணர்ந்து - தெளிந்து - தன்னை அறிந்து சன்மார்க்க நெறிநின்று எல்லாம் வல்ல இறைவனோடு ஐக்கியமாவது - மரணத்தை வெல்வது - உடல் அழியாத தன்மையை பெறுவது - மீதும் பிறவாத நிலையடைவது சாயுச்சிய நிலையடைவதாகும். பக்தனாய், கர்மவானாய், யோகியாய் முடிவில் ஞானியாய் மிளிரும் ஒருவன் தான் பெற்ற பேரின்ப நிலையை உலகம் உய்ய பறைசாற்றியே செல்கின்றனர்.

உடலும் அழியாத நிலை பெறுகின்றனர். மரணமில்லா பெருவாழ்வு அடைகின்றனர்.

சரியை - கிரியை - யோகம் - ஞானம் என்ற நிலைகளை கடந்து முடிவில் மனிதன் ஞான நிலைக்கு வருகிறான். சரியை நிலையுள்ள ஒருவன் இறந்து போனால் அடுத்த பிறவியில் விட்டகுறை தொட்ட குறை என்பார்களே அது போல அவன் கிரியை நிலையில் பணி செய்பவனாக பிறக்கிறான். கிரியை புரிகையிலேயே இறந்து போனால் யோகா சாதனையில் ஈடுபடுகிறான். அதிலேயே அப்பிறவி முடிந்து போனால் அடுத்த பிறவியில் ஞான நிலையடைய தகுதியாகிறான்,

இப்படியே ஒவ்வொருவருக்கும் ஆகலாம். அது அவரவர் முயற்சியை பொறுத்ததாகும். அவரவர் செய்த பாவ புண்ணியங்களின் அடிப்படையில் பிறக்கிறான். நல்ல குடும்பத்தில் பிறந்து, நல்ல விசயங்களையே பேசி நல்லவர்களோடு கூடி சத்து - சித்து - ஆனந்தத்தை அறிந்து சாதனை செய்து மேல் நிலையடைகிறான். அவரவர் வாழ்க்கை அவரவர் கையில்! இறைவன் எல்லாம் வல்லவர் - கருணை மயமானவர் - அருள் வடிவானவர் - தானே ஜீவனாகி நம் காரியங்கள் அடிப்படையில் பாவ, புண்ணியம் ஏற்பட்டு நமக்கு மௌனமாக இருக்கும் ஜீவனில் நம் மனதை நிலைநிறுத்தி சும்மா இருந்தால் இருவினைகளை சுட்டெரித்து மரணமில்லா பெருவாழ்வு அடையலாம் .


சரியை – கிரியை – யோகம் – ஞானம் இவை ஒவ்வொன்றும் நான்காக பிரிக்கப்பட்டு மொத்தம் 16 படி நிலை உருப்பெற்றுள்ளது. அவை

சரியையில் சரியை, சரியையில கிரியை, சரியையில யோகம், சரியையில ஞானம் என்றும் சரியையில் முக்தி சாலோகப் பதவி என்றும்,

கிரியையில் சரியை, கிரியையில கிரியை, கிரியையில யோகம், கிரியையில ஞானம் என்றும் கிரியையில் முக்தி சாமீப பதவி என்றும்,

யோகத்தில் சரியை,யோகத்தில கிரியை, யோகத்தில யோகம், யோகத்தில ஞானம் என்றும் யோகத்தில் முக்தி சாரூப்ப பதவி என்றும்,

ஞானத்தில சரியை,ஞானத்தில கிரியை, ஞானத்தில யோகம், ஞானத்தில ஞானம் என்றும் ஞானத்தில் முக்தி சாயுச்சியப் பதவி என்றும் சாஸ்திரம் கூறும்.

திருவருட் பிரகாச வள்ளலார் இராமலிங்க சுவாமிகள் ஜீவர்கள் மேல் கொண்ட கருணை இரக்கம் காரணமாக 13ஆவது படியாக உள்ள ஞானத்தில் சரியை நிலையைச் சொல்லி மக்கள் மேன்மையடைய வழிகாட்டினார், நல்ல நெறி
காட்டினார். இப்போது எல்லா பல்கலைக்கழகங்களும் குறிப்பிட்ட வயது வந்தோர் யாரும் பட்டப்படிப்பு தேர்வு எழுதலாம் என்றும் அதற்கு உதவியாக வீட்டிலிருந்தே படிக்கவும், அஞ்சல் வழிக் கல்வியும் பயிற்றுவிக்கிறார்கள் அல்லவா?,

ஞானம் பெற விருப்பம் ஆர்வம் உள்ளவர்களே தகுதியானவர்கள் பக்குவர்கள் என்றும் அவர்கள் அனைவருமே 13ஆவது நிலைக்கு வரலாம் என்று வள்ளல் பெருமான் எங்கள் குரு அவர்கள் கருவியாக கொண்டு திருவடி தீட்சை அளிக்கிறார்.

மெய்பொருளின் வாசல் கண்தான் என்று தெளிந்தாலும் திருவடி தீட்சை பெற்று நம்முள் உள்ள ஒளியாக நடனமிடும் ஜீவனாகிய இறைவனை உணர்ந்து. அவ்வுணர்வை மேலும் மேலும் சாதகன் தன் தவம்செய்து பெருகினால் மட்டுமே
மரணமில்லா பெருவாழ்வு நிலை அடைய முடியும். இதனை வள்ளல் பெருமான் ஞானசரியையில் தெளிவாக விளக்கியுள்ளார்.

“நினைந்து நினைந்து உணர்ந்து உணர்ந்து நெகிழ்ந்து நெகிழ்ந்து அன்பே
நிறைந்து நிறைந்து ஊற்றெழும் கண்ணீர் அதனால் உடம்பு
நனைந்து நனைந்து அருளமுதே நன்னிதியே ஞான
நடத்தரசே என்னுரிமை நாயகனே என்று
வனைந்து வனைந்து ஏத்ததும் நாம் வம்மின் உலகியலீர்
மரணமிலாப் பெருவாழ்வில் வாழ்ந்திடலாம் கண்டீர்
புனைந்துரையோன் பொய்புகலேன் சத்தியம் சொல்கின்றேன்
பொற்சபையில் சிற்சபையில் புகும் தருனம் இதுவே” – திருவருட்பா

நாம் நம் கண்-மணியில் ஒளியாக நடனமிடும் ஜீவனாகிய இறைவனை நினைந்து - மீதும் மீண்டும் நினைந்து, உணர்ந்து - திரும்பத் திரும்ப உணர்த்து இருப்போமானால் நமக்கு நெகிழ்ச்சி - உள்ள நெகிழ்ச்சி ஏற்படும். கண்களில் நீர்
ஆறாக பெருக்கெடுத்தோடி நம் உடலை நனைக்கும். இப்படியே பலகாலும் விடாது பழகிப்பழகி முயலும்போது நாமும் கருணை வடிவாவோம். நம்மிலே உள்ள ஜீவனை நாம் நெருங்க நெருங்க ஜீவன் தன் தன்மையை கொஞ்சம் கொஞ்சமாக வெளிப்படுத்துகிறது. நாம் எவ்வளவு தீவிர முயற்சி செய்கிறோமோ அந்த அளவுக்கு நமக்கு பலன் கிடைக்கும். இறைவன் அம்சமாகி ஜீவன் நாம் நினைந்து, உணர்ந்து, நெகிழ்ந்து அன்பு நிறையப் பெறப்பெற நம்மிலிருந்து வெளிப்பட்டு, தன்னை உணர்த்தி பின் அது அதன் இயல்பான நிலைக்கு வர ஆரம்பிக்கிறது.

ஜீவன் தன் இயல்பான நிலைக்கு - இறை நிலைக்கு வர வொட்டாமல், ஆணவம், கன்மம், மாயை ஆகிய மும்மலங்களால் நமது கண்ணில் நாம் உட்புகும் வாசல் துவாரம் அடைபட்டுள்ளது.

உடலுக்குள் நுழைய வாசல் “கண்” தான்! கண்ணைத்தான் ஞானிகள் மெய்பொருள் “திருவடி” என்றும் இன்னும் பற்பல பெயர்களிலும் பரிபாஷையாக கூறியிருக்கிறார்கள்! கண் மூலமாக எப்படி இறைவனை அடைவது என்ற
வழிமுறைகளையும் சொல்லி வைத்துள்ளனர். அவைகளை விரிவாக கண்மணிமாலை நூலில் முழுமையாக தந்துள்ளார் இதுதான் ஒரே வழி! உலகின் எந்தப் பகுதியிலுள்ள ஞானியானாலும் இதைத்தான் சொல்லியிருக்கிறார்கள்! முடிந்த முடிவான நிலை அடைய இதுவே வழி!

இதைத்தவிர வேறொன்ருமில்லை?… நம்புங்கள். நம்பினார் கெடுவதில்லை இது நான்கு மறைத் தீர்ப்பு. ஞானிகள் நூற்களைப் படித்து உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். விளக்கங்களை உள்ளே அறிந்து

மனதில் நிறுத்துக! அறிவார் அறிவர்! அறிவால் அறிவர்!

இறைவன் நம் கண்ணின் மத்தியில் ஊசிமுனை அளவு உள்ள துவாரத்தில் சிறு ஜோதியாக துலங்குகிறான். நம் கண்மணியின் மத்தியிலுள்ள அந்த சிறு துவாரம் ஒரு ஜவ்வால் அடைபட்டுள்ளது! இறைவனை மறைத்து இருக்கிறது. இந்த
ஜவ்வானது 7 மெல்லிய ஜவ்வுகளால் இணைக்கபட்டு ஒரு ஜவ்வாக அடைபட்டுள்ளது. இந்த அகநிலையை தான் வள்ளலார் அப்பட்டமாக தைப்பூச தினத்தன்று 7 திரைகளை நீக்கி ஜோதி தரிசனம் காட்டினார்.

பூமி தன்னைத் தானே சுற்றுவதுபோல கண்மணியும் சுற்றுகிறது! பூமி சுழல்வதற்கு ஆதாரம் அதன் உள் மத்தியில் கனன்று கொண்டிருக்கும் நெருப்புதான். கண்மணியும் அதன் மத்தியில் உள்ள, ஊசிமுனை துவாரத்தினுள் உள்ள சிறு ஜோதியால்தான் சுழல்கிறது!

பூமி எப்படி அந்தரத்தில் உள்ளதோ அதுபோலவே கண்மணியும் கண்ணின் கரு விழிக்குள் பிராண நீரில் மிதந்து கொண்டுதான் இருக்கிறது! ” பிராண நீரானதில் உருண்டு திரண்டதை கண்டு அறிந்திடு நீ” என சித்தர் உரைத்தது கண்மணியைத்தான்! “காளத்தியான் அவன் என் கண்ணில் உள்ளான் காண்” என திருநாவுக்கரசர் உரைத்ததை உணர்வீர்.

“உடம்பினை முன்னம் இழுக்கென்றிருந்தேன்,

உடம்பினுக் குள்ளே ஒரு பொருள் கண்டேன்,

உடம்பினுள் உத்தமன் கோயில் கொண்டானென்று,

உடம்பினை யான் இருந்தோம்புகின்றேனே;

உடம்பார் அழியின் உயிரார் அழிவார்,

திடம்பட மெய்ஞ்ஞானம் சேரவும் மாட்டார்,

உடம்பினை வளர்க்கும் உபாயம் அறிந்தே,

உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே;

நடுவு நின்றார்க்கன்றி ஞானமும் இல்லை,

நடுவு நின்றார்க்கு நரகமும் இல்லை,

நடுவு நின்றார் நல்லை தேவருமாவார்,

நடுவு நின்றார் வழி யானும் நின்றேனே;

உள்ளம் பெருங்கோயில், ஊணுடம்பு ஆலயம்,

வள்ளல் பிரானாக்கு வாய் கோபுர வாசல்,

தெள்ளத் தெளிந்தார்க்கு ஜீவன் சிவலிங்கம்,

கள்ளப் புலனைந்தும் காளாமணி விளக்கு” – திருமூலர்

வாழ்க வளமுடன்! எல்லா உயிரும் இன்புற்று வாழ்க!

குருவே சரணம்!
மதிவாணன்

6 comments:

Anonymous said...

iya aramba sadhagargalukku arumaiyana violakkam. nanri thangal iraipani thodarga vazga valamudan

Anonymous said...

Ayyah,
Valgha Valamudan,

Pala Natkkal nan enniya ,pala sinthanaikalai, onragha ,Koorvaiyagha alaghaka Eluthi Ullieerkal.
Mikka Nanri,
Arutperumjothi Aandavar Thunai,
Anbudan Maruthapillai/Malaysia

Mathivanan said...

மருதமலை அய்யா அவர்களுக்கு எனது நன்றிகள். மிக்க மகிழ்ச்சி இவை அனைத்தும் எனது ஞான சற்குரு அவர்கள் எங்களுக்கு உபதேசம் அளித்தது. நன்றிகள் அனைத்தும் எல்லாம் வல்ல இறைவனுக்கும் குருவுக்கும் மட்டுமே சேரும். நான் ஒரு சிறு கருவியாக மட்டுமே உள்ளேன். வாழ்க வளமுடன்.

Anonymous said...indha kalai moolamagavaa vallal peruman ulagthil ulla ella siddhigalai petraar???

namba mudiyavilaye?????


Anonymous said...ivalav sulbamana kalai irukarche ,appo edarku nam naatil ithanai yoga kalai,tantra kalai etc.....

ithanai ashramamgal,swamiyaargal edarku indha naatil ...????

besh..besh!!!

Mathivanan said...

வணக்கம் அய்யா! நல்ல கேள்வி. இப்பொழுது நம் வீட்டிற்கு வர வேண்டுமானால் பல வழிகள் இருக்கிகிறது அனால் சேரும் இடம் ஒன்றே. அதுபோல ஏதாவது ஒரு வழியை பிடித்து வந்து விட (இறை தரிசனம் என்ற வீட்டுக்கு) மாட்டார்களா என்று கூட சித்தர்கள் ஞானிகள் நினைத்து இருக்கலாம் போல.

தாங்கள் சொல்வது போல இந்த சுலபமான வழியை பின் பற்றுங்கள்.

Next previous home
Related Posts Plugin for WordPress, Blogger...