Tuesday, December 27, 2011

மறுபிறவி

குருவே சரணம்! குரு திருவடி சரணம்.


என் குரு
திரு அருட்பிரகாச வள்ளலார் பாதம் பணிந்து அவர் ஆசியுடன் இக்கட்டுரையை எழுதுகிறேன். இவை அனைத்தும் ஞான சற்குரு எங்களுக்கு உபதேசம் அளித்தவையே. அதை உங்களிடம் பகிர்வது மகிழ்ச்சி கொள்கிறேன்.


இந்தப் பிறவியே வேண்டாம் என்கிறோம் மறுபிறவியா? என யோசிக்காதீர்கள்!

இந்த பிறவியோட பிறவிப்பிணி முடிவுக்கு வரவே மறுபிறவி!?

இங்கு சொல்லப்படும் மறுபிறவி என்பது இந்த பிறவி முடிந்து இனியும் பிறப்பது அல்ல!?

இந்தப் பிறவியே இறுதியாக இருக்க வேண்டும்! அதற்குத்தான் நம் ஞானிகள் வழி கூறுகிறார்கள்!

அது என்ன? எப்படி? பிறந்து விட்ட நாம் ஞானகுரு ஒருவரைப் பெற்று உபதேசம் பெற்று சூட்சும நிலையில் பிறப்பதே மறுபிறவியாம்!

அதாவது உடலால் பிறந்த நாம், உணர்வால் நம் சூட்சும உடலை பிறப்பிக்க ஒரு குருவை பெற்றேயாக வேண்டும்!

யார் நம்மை, சூட்சும சரீரத்தை பிறப்பிக்கச் செய்கிறாரோ அவரே குரு!

நாம் வாழ்வின் பெறும் பேறே இதில்தான் இருக்கிறது. ஞானமடைய இதுவே வழி!


நம் ஸ்தூல தேகத்தை போலவே, நம் உடலினுள் ஒளிவடிவில் சூட்சும தேகம் உள்ளது! முதலில் அதை உணர வேண்டும்!

குருவானவர் தீட்சையின் மூலம் சூட்சும சரீரத்தை பிறப்பிக்கச் செய்கிறார்!

ஸ்தூலதேகத்தில் பிறந்த நாம் சூட்சுமதேகத்தில் பிறப்பதே மறுபிறவி. பிறந்த இப்பிறவியிலேயே மீண்டும் பிறப்பது என்பது இவ்வாறு தான்!

இதை யார் உணருகிறார்களோ அவர்களே ஞானம் பெறுகிறார்கள்.

வேதங்களில் சொல்லப்படுவது "துவிஜன்" இரு பிறப்பாளன் என்பதே.

துவிஜன் யார்? மீண்டும் பிறந்தவன்! பக்திமார்க்கதில் பிறந்த குழந்தை 8 வயது பூர்த்தியாகுமுன் உபநயனம் செய்து வைக்கிறார்கள்.

உபநயனம் ஆனவன் துவிஜன்! உலக நடைமுறையில் இன்று இது வெறும் சடங்காகவே இருக்கிறது.

துவிஜன் யார்? எதற்கு உபநயனம்? என உணர்ந்தவர்கல்வெகு சிலரே!

உபநயனத்தின் போது 3 நூல்களை சேர்த்து தோளில் போட்டு, காயத்ரி மந்திரம் உபதேசம் செய்கிறார்கள்.

உபநயனம் ஆனவன் துவிஜன் பிராமணன் என பெருமைப்பட்டு கொள்கிறார்கள்!

இதன் பொருள் தெரியுமா? உபநயனம் என்றால், உப=இரண்டு, நயனம் = கண் என பொருள். அதாவது உபநயனம் என்றால் இரண்டு கண்.

மூன்று நூலை சேர்த்து தோளில் போடுகிறார்கள். ஒரு முடிச்சு அது பிரம்ம முடிச்சி என்றும் சொல்வர் அது என்ன?

மூன்று நூல் சேர்க்க அறுவு
றுத்தியது, சூரியன் - சந்திரன் - அக்னி என்ற மூன்று கலைகளையும் இணைக்க வேண்டும். என்பதே!

காயத்ரி மந்திரம் கூறுவது என்ன? பிராமணர்கள் ஓதும் முக்கியமான மந்திரம் உருவாக்கியவர் சத்திரியரான விசுவாமித்திர மகரிஷி!

ஒருவன் பிராமணன் ஆகவேண்டுமாயின் அதாவது பிரம்மத்தை உணர்பவன் பிராமணன். பிரம்மத்தை சார்ந்து இருக்க வேண்டுமாயின் சத்திரியான விசுவாமித்திர மகரிஷி அருளிய காயத்திரி மந்திரத்தை உணர வேண்டும்.

காயத்ரி மந்திரத்தின் பொருள் தெரியாதவன் பிராமணன் அல்ல!?

காயத்ரி மந்திரத்தின் பொருள் உணர்ந்து அதன்படி வாழ்க்கையை அனுஷ்டிப்பவன் எவனோ அவனே பிராமணன் பிறப்பால் யாரும் பிராமணனல்ல!? பிறப்பில் யாருக்கும் ஜாதி இல்லை! மதம் இல்லை!

பிறந்தபின் ஏதாவதொரு ஜாதி பெயர் சூட்டி இன்ன ஜாதி பெயர் என்கிறார்கள்.

பிறந்த பின் ஞானஸ்தானம் சர்ச்சில் செய்தபின் தான் கிருத்துவன்!

சுன்னத் செய்தவன்தான் முஸ்லிம்! இப்படியே ஒவ்வொரு வரும் ஒவ்வொரு பழக்க வழக்கத்தை கொண்டிருக்கின்றனர்.

பிறக்கின்ற எந்த குழந்தையும் நிர்வாணமாகவே பிறக்கிறது. ஜாதி, மதம், இனம், மொழி,நாடு ஒன்றுமே குழந்தைக்கு கிடையாது!?

உடல் வளர வளரத்தான் மனிதன் எல்லா பேதங்களுக்கும் உற்றார் பெற்றோரால் உட்படுத்தப்படுகிறான்.

உடல் வளருகிறது. குறுகிய மனோபாவமே உடையவனாகிறான்! அறிவு வளர்வது இல்லையே!? இதை யாரவது உணர்ந்தார்களா?

நிர்வாணமாக பிறந்த குழந்தை வளர்ந்து ஆளாகி அறிவுடையனவாகி பிறப்பறுத்து மகா நிர்வாண நிலையடைய வேண்டும் என்பதுதான் இறைவன் படைப்பு!

நிர்வாணம் என்பது ஆடையை துறப்பது அல்ல! மனதை துறப்பது!?

பிறந்த குழந்தை எந்த பேதமுமின்றி எல்லாம் வல்ல இறைவனை அடைய வழிசொல்ல உபதேசிக்கப்படுவதே உபநயனம்.

நம் வலது கண்ணில் உள்ள சூரிய கலையையும் இடது கண்ணில் உள்ள சந்திர கலையையும் உள்ளே உள்ள அக்னி கலையோடு சேர்க்க வேண்டும்.

இரு கண்களில் உள்ள ஒளிவழி உட்புக வேண்டும். பிரம்மமாகிய பேரொளியை சேர வேண்டும். அதற்காக ஒவ்வொருவரும் உபதேசம் பெற வேண்டும். பிரம்மத்தை சார்ந்தவனே பிராமணன்.

மறுபிறப்பை பற்றி பைபிளில் தெளிவாக கூறப்படுகிறது.

"மறுபடியும் பிறவாதவன் பரலோக ராஜ்ஜியத்தில் பிரவேசிக்க மாட்டான்".

மறுபடியும் பிறந்தால்தான் பரலோக ராஜ்ஜியம்!? எப்படி?

எவன் ஒருவன் அக்னியாலும் பரிசுத்த ஆவியாலும் ஞானஸ்நானம் பெருகிறானோ? அவனே மறுபடியும் பிறந்தவன்! அவன்தான் பரலோக ராஜ்ஜியத்தை அடைவான்!

அக்னியால் ஞானஸ்நானம் என்பதுதான் அக்னியை பெருக்க வழிகூறும் உபநயனம்!

வெவ்வேறு பாசையில் சொல்லப்பட்ட ஒரே விஷயம்!

கடவுளை அடைய ஒரே வழி மீண்டும் பிறப்பதே!

துவிஜன் - மறுபடியும் பிறப்பவன்.

பிரம்மமாகிய ஒளியை - கடவுளை அடைய - உணர, பிரம்மத்தின் தன்மையாகிய ஒளி நம் கண்களில் துலங்குவதை அறிந்து உணர்ந்து, இரு கண்கள் வழி ஞான தீட்சை பெற்று, அக்னியால் ஞானஸ்தானம் பெற்று தியானம் செய்வதே மறுபிறவி பெறும் வழி! இறைவன் அருள்வார்!.

குரு மூலமாக உபநயனத்தில் தீட்சை பெற்று தவம் செய்தாலே பிறப்பறுக்கலாம்!

"மாற்றிப் பிறக்க வகையறிந்தாயில்லை" - என அகஸ்தியர் கூறுவதும் இதுவே.

பிறந்த இப்பிறவியில் குருமூலம் தீட்சை பெறுவதே மாற்றிப்பிறப்பது ஆகும்!

செத்துப் பிறப்பது நீங்க, மாற்றிப் பிறந்தாலே முடியும்.

இப்பிறவி தப்பினால் இப்பிறவி வாய்க்குமோ? அரிதான இம்மானிட பிறவியில் மீண்டும் பிறக்கின்ற இந்த ஞான நிலையை யார் உணர்கிறார்களோ அவருக்கு மறுபிறவி இல்லை!

எங்கள் ஞான சற்குரு இவ்விதம் புதிதாக நிறைய குழந்தைகளை பெற்றுளார்கள்.

ஞானதீட்சை - திருவடி தீட்சை பெறும் நாளே மீண்டும் பிறந்த நாள். சூட்சும சரீரத்தின் பிறப்பே மறுபிறப்பு, ஒளி பொருந்திய கண்களின் வழியே பேரோளியான இறைவனை தவம் செய்து அடைவதற்காகவே நாம் பிறந்திருக்கிறோம்.

"பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கும்" கண் எப்படி எதையும் பற்றாமல் இருக்கிறது என்பதை குருமூலம் தீட்சை பெற்று உணர்க!

பற்றற்ற இறைவன் நம் உடலில் பற்றற்ற கண்ணாக துலங்குகிறான்.

நாம் கொண்ட உலக பற்றுக்கள் நீங்க வேண்டும். அதுவே துறவு.

நம்மை கொண்ட கர்ம பற்றுக்கள் நீங்க வேண்டும். அதுவே ஞானம்.

உலக பற்றை விட்டால் நம்மைப் பற்றிய கர்ம பற்றை அறுக்கலாம்!

"பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கும் மற்று நிலையாமை காணப் படும்" - குறள்

பிறவிக்கு காரணமே பற்றுகள்தாம்.

பற்றுகளெல்லாம் அற்றுப்போன பிறகுதான். இனிப்பிறவாத நிலை அடைய முடியும். இல்லையானால் மீண்டும் நிலையற்ற பிறவிதான் வரும். "பற்றில்லாத கண்ணே இறைவன்"

"பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு" ---------குறள்

பற்றுகளை அறுப்பது மிகவும் கடினம்.

பற்றுகளை விட்டோழிப்பதற்கு பற்றற்றவனாகிய பகவானைப் பற்றிக்கொள்ள வேண்டும். அந்த பற்றை விடாமல் பின்பற்ற வேண்டும்.

பற்றற்றான் ஆகிய இறைவன் எந்த பற்றும் இன்றி பற்றற்றிருக்கும் நம் கண்ணில் மணியில் ஒளியாக உள்ளான்.

ஒளி எதையாவது பற்றினால் என்னாகும்? பற்ற வேண்டிய முறைப்படி பற்றவேண்டும். அதற்கு முதலில் பற்ற வைக்கத் தெரிந்த ஒரு ஞான குருவை சரணடைய வேண்டும். பற்ற வைக்க வேண்டிய முறைப்படி குரு பற்ற வைத்தால் தான் பற்றற்றானை நாம் பற்ற முடியும்!

"பற்றற்றான் பற்றினையே பற்றியிடல் வேண்டும் அது பற்றற்றால் அன்றி பலியாது ----------- திருவருட்பா

பற்றற்ற இறைவன் நம் உடலில் எந்த பற்றும் இன்றி, எதையும் பற்றாமல் ஒளியாக இருக்கும் துலங்கும் நம் கண்களை நாம் பற்ற வேண்டும்.

உறுதியாக உணர்ந்து நின்று நிலைக்க வேண்டும். அதற்கு நாம் உலகபற்றை விட வேண்டும். அப்போதுதான் இறைவனை பற்ற முடியும் என்கிறார் வள்ளலார்.

நம் பற்றை விட்டால்! பற்றற்ற இறைவனை பற்றினால் உடலால் பிறந்த இப்பிறவியிலேயே உணர்வால் சூட்சும சரீரத்தை ஞானகுரு கடாட்சத்தால் பிறப்பிக்கச் செய்து தவம் செய்தால்! பிறந்து-இறந்து-பிறந்து வாழும் நிலையிலிருந்து விடுபடலாம்! வீடுபேறு அடையலாம்! வருக!

"பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னும் செம்பொருள் காண்பது அறிவு" -------- குறள்

பிறப்பு என்னும் அறியாமை நீங்க வேண்டுமென்ற நோக்கத்தோடு நாம் அறிந்த பொருள்கள் எல்லாவற்றிலும் சிறந்ததும், குற்றமற்றுச் செம்மையானது மான பொருள் நமது கண்கள் தான் என்று கண்டறியும் அறிவுதான் மெய்யுணரும் அறிவு.

"உறங்குவது போலும் சாக்காடு உறங்கி விழிப்பது போலும் பிறப்பு" ------------- குறள்

உடல் அழிந்தாலும் உயிர் அழிவதில்லை; அதனால் மரணம் என்பது உயிருக்கு உறங்குவதைப் போன்றது. அந்த உயிர் வேறோர் உடலில் மீண்டும் பிறப்பது உறங்கி விழிப்பது போன்றது.

பிறப்பை பேதைமை என்கிறார். அறிவில்லாதவனே பிறந்து பிறந்து சாகிறான் பிறப்பறுக்க முயல்வோம்!

அழியாதது உயிர்! கடவுள் அம்சம்! அழிவது உடல் மட்டுமே!

உடலை அழியாத தன்மைக்கு மாற்றுவோமானால்! உயிர் உடலை விட்டு ஒருபோதும் பிரியாது!

அதற்குத்தான் ஞானிகள் வழி-விழி காட்டி உணர்த்துகிறார்கள்!?

உயிர் உறங்கி வழிகின்ற - அதாவது செத்து பிறக்கின்ற உடலில் இருந்து பிரிந்து வருகின்ற நிலைமாற வேண்டும்.

உயிர் உறங்கி விழிக்கின்ற நிலைமாற, நாம் தூங்காமல் தூங்க வேண்டும்! "தூங்காமல் தூங்கி சுகம் பெறுவது எக்காலம்" என ஞானிகள் இந்நிலையைத்தான் நமக்கு அறிவுறுத்துகின்றனர்.

தூங்காமல் தூங்குவது என்பது அறிதுயில்!? உணர்வதோடு இருப்பது.

பிணம்போல் தூங்குபவன் பிறிதொரு நாள் பிணமாகி விடுவான். உணர்வு அற்றுப்போனால், உயிர் உடலைவிட்டு போய்விடும்.

நம் உடலில் கண்களில் ஜோதியாக விளங்கும் நம் உயிரை - இறைவனை - எண்ணி எண்ணி உணர்ந்து உணர்ந்து தூங்காமல் இருந்து தவம் செய்வதே மாபெரும் சாதனை!

புற உணர்வு அற்று மெய் உணர்வுடன் தூங்காமல் லயிப்பதே தவம். அதில் கிடைப்பதே ஆன்மலயம்!

தூங்காமல் தூங்க குரு வழிகாட்டனும். நம்முள் இருக்கும் நாயகன் அருள் பாலிப்பார்!

தானமும் தவமும் செய்க!

ஞான நூற்களை வாங்கி
ஞானதானம் செய்க!
மெய்ப் பொருளை உணர்ந்து
தவம் செய்க!எல்லா உயிரும் இன்புற்று வாழ்க.

வாழ்க வளமுடன்
P. மதிவாணன்
mathish0610@gmail.com

6 comments:

k.k.subramanian said...

mathi nallathuru pathiu arumai
vazhga valamudan

k.k.subramanian said...

நல்ல தகவல் நவீன்றாய் நண்பா மதி உன் மதி அனைவருக்கும் வெகுமதி ...
எல்லாம் வல்ல இறைஅருளும் குருஅருளும் எப்ப்போதும் துணை இருக்கும் வாழ்க வளமுடன்

Mathivanan said...

உங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி அய்யா. வாழ்க வளமுடன்.

Saravanan said...

arumai....ARUTPERUMJOTHI..

enpaarvaiyil said...

உண்மைகளை போட்டு உடைத்துவிட்டீர்கள். உலக மாயையில் மூழ்கியுள்ள மக்களுக்கு இக்கருத்துகளை படிக்க மனமும் இல்லை பொறுமையும் இல்லை
உங்கள் பணி தொடரட்டும்
எறும்பு ஊற கல்லும் தேயும் பாராட்டுக்கள்
கடை விரித்து விட்டீர்கள். கொள்பவர்கள் கொள்ளட்டும்

Mathivanan said...

மிக்க நன்றி Enpaarvaiyil அவர்களே! தேடல் உள்ளவர்களுக்கு நிச்சயமாக போய் சேரும்.

Next previous home
Related Posts Plugin for WordPress, Blogger...