Wednesday, December 28, 2011

தீட்சை

குருவே சரணம்! குரு திருவடி சரணம்.

என் குரு
திரு அருட்பிரகாச வள்ளலார் பாதம் பணிந்து அவர் ஆசியுடன் இக்கட்டுரையை எழுதுகிறேன். இவை அனைத்தும் ஞான சற்குரு எங்களுக்கு உபதேசம் அளித்தவையே. அதை உங்களிடம் பகிர்வது மகிழ்ச்சி கொள்கிறேன்.ஒரு மனிதன் எப்போது மனிதனாகிறான்? மாதா, பிதாவை பெற்றவன் மனிதனல்ல!?

குருவை பெற்றவன் தான் மனிதனாகிறான்! உருவத்தால் மனிதனானவன் உள்ளத்தாலும் பண்பட்டு உண்மையிலேயே மனிதனாவது ஒரு ஞான குருவை பெற்ற பின்னரே!

மாதா பிதாவை காட்ட! பிதா குருவை காட்ட வேண்டும்! குருதான் இறைவனை காட்ட முடியும்!

பழைய காலங்களில் சிறுவனாயிருக்கும்போதே எல்லோரையும் குருகுலத்தில் சேர்த்துவிடுவார். அங்குதான் அவனுக்கு எல்லாம் போதிக்கபடுகிறது.

உலகில் வாழவும் இறைவனை உணர்த்தியும், ஒருவனை முழு மனிதனாக மாற்றி விடுவது குருகுல வாழ்க்கையே!

இன்றைய கல்வி வெறும் ஏட்டுச்சுரைக்காயாகவே உள்ளது.

மாணவர்கள் மனனம் செய்து மதிப்பெண்களை பெறுகிறார்கள்?! யாரும் புரிந்துகொள்வதில்லை.

இன்றைய பெற்றோரும் தன்பிள்ளை அதிகம் சம்பாதிக்க எந்த கல்வி படிக்கனுமோ அதில்தான் சேர்த்து விடுகிறார்கள்.

பணம் பணம் என அலைகிறார்கள். முடிவில் பினமாகித் தான் போகிறார்கள்.

கம்ப்யூட்டர் மோகம் எல்லோரையும் பிடித்து ஆட்டுகிறது. கை நிறைய சம்பாதிக்கிறார்கள். சிறிது நாளிலேயே இயந்திரமாகி விடுகிறார்கள். வாழ்வில் நிம்மதியில்லை!

அமைதி இல்லை - ஓய்வில்லை என்று அதைத்தேடி மது, மாது என போதிக்கும் கேளிக்கைக்கும் அடிமையாகிறார்கள். முடிவில் அழிந்துதான் போகிறார்கள்.

"தம் மதி கெட்டவர்களுக்குதான் நிம்மதி இருக்காது" தடுமாறுவர்! தறுதலையாக திரிவர்!

இது எது போலென்றால் புதையலைத் தேடிப் போய் கரடியிடம் மாட்டிகொண்ட கதை தான்?!

ஒழுக்கமில்லாதவன் சேர்க்கும் பணம் நிலைப்பதில்லை பணம் அல்ல வாழ்க்கை!

அடிப்படை கோளாறு ஆரம்பக் கல்வியிலேயே! ஒழுக்கம் கற்பிக்கப்படுவதில்லையே!

மனித வாழ்க்கை ஒழுக்கம் என்னும் அஸ்திவாரத்தில் மேல் எழுப்பபடுவதே!?

"ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப்படும்" ------- குறள்

ஒருவனுக்கு மேன்மையுண்டாக்குவது நல்ல நடத்தைதான் அதனால் நல்ல நடத்தையை உயிரைவிடச் சிறந்ததாகப் பாதுகாக்க வேண்டும். ஒழுக்கம் இல்லாதவன் மனிதனல்ல மிருகம்?!

"கல்தோன்றி மண் தோன்றா காலத்து முன் தோன்றிய மூத்த தமிழ்" என்று உலகோரால் போற்றப்படும் நம் தாய் மொழியாம் தமிழில் எத்தனையோ ஞானநூற்கள் நீதி நூற்கள் உள்ளனவே!? படிப்பது யார்?

இன்றைய உலகில் பழைமையான மொழி தமிழ்! இங்கு இது சிறப்படைய காரணம் ஒழுக்கத்தை, நீதி நெறி தவறாத நல்ல வாழக்கையை அறிவுறுதிதயதுதான்.

உலகமக்கள் அனைவருக்கும் பொதுவான கலாசாரம் வாழ்க்கைமுறை இங்கு வழங்கப்பட்டதால் தான்!

இதுதான் சனாதன தர்மம்
இதுவே உன்னதமான கலாச்சாரம்!
இதுவே மனிதன் மனிதனாக வாழ வழிகாட்டியது!

"ஐந்து கண்டம் அளாவிய தமிழ்" என திருமூலர் குறிப்பிடுகிறார் என்றால் பழங்காலத்தில் உலகில் இருந்த 5 கண்டங்களிலும் தமிழ் தமிழர் கலாச்சாரம் - சனாதன தர்மமே தழைத்தோங்கியிருந்தது என்பதை உணரலாமல்லவா?!

மனிதன் பிறப்பு இறப்பு வாழ்க்கை நிலைகளை பார்த்தோமல்லவா? இந்த வாழ்வு முழுமைபெறுவது நாம் பெறும் "வீடுபேறில்" தான் இருக்கிறது. அறிந்தோமல்லவா?!

அதற்க்கு வழி ஒழுக்கம் - பின் குரு வழி உபதேசம் தீட்சை பெற்று நம் வாழ்வை மேம்படுத்துவதுதான்!

தவ வாழ்க்கையை தன்னை உணரும் வழி! பிறப்பு இறப்புக்கு காரணமான வினைகளை வேரறுக்க, ஒளியாகிய நம் உயிரைப் பற்றி நின்றாலே முடியும்!

"சிவத்தை பேணல் தவத்திற்கு அழகு"

ஔவையார் கூறியது, சிவமாகிய ஒளியை பேணி பெருக்குவதே தவம் என்பதே!


சக்கர நெறிநில்:
------------------------
ஔவையார் கூறியது சக்கரம்போல் உள்ள கண்மணியைப் பற்றித்தான்! "வெட்டாத சக்கரம்" என இன்னொரு ஞானி கூறியதும் இதைத்தான்!

கண்மணியை - அதில் உள்ள ஒளியை பற்றி அந்த நெறிப்படி வாழ் என்பதே பொருள்.!

மோனம் என்பது ஞானவரம்பு:
--------------------------------------------
மோனம் என்றால் மௌனம். மௌனமாக இருப்பதே ஞானிகள் செயல். மௌனகமா இருப்பது என்பது வாய் பேசாமல் இருப்பதல்ல!

மெளனமாக இருக்கும் கண்மணியை குறிப்பதாகும். "கண்டவர் விண்டிலர் விண்டவர் கண்டிலர்" என சொல்லப் படுவது இதுதான்.

காணுகின்ற கண்தான் கண்டவர் அது பேசாது. மௌனமாகவே உள்ளது. விண்டவர் என்பது பேசுபவர் வாய் தான். விண்டிடும் வாய் பார்க்க முடியாது.

காணும் கண்ணே மௌனம் - மோனம். மோனமாகிய கண்ணில் நிற்பதே ஞானம்.

"ஒத்த இடத்து நித்திரைகொள்"

முதுகுவலி கழுத்துவலி உடல் வலியால் அவதிப்படும் நோயாளிகளுக்கு இன்றைய டாக்டர்கள் சமதரையில் தலையணை இன்றி படுத்து உறங்க சொல்கிறார்கள். இது உடலுக்கு ஆரோக்கியம்.

ஒத்த இடம் - ஒன்று போல் இருக்கும் இரு இடம் நம் இரு கண்கள்தான்!

நம் கண்மணியில் உள்ள ஒளியில் நிலைத்து தூங்காமல் தூங்குவதே ஞானம்!

இப்படி பொருள் கொள்வதுவே அறிவு உள்ளவர்கள் செயல்.

"பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர ஒழுக்க
நெறி நின்றார் நீடுவாழ் வார்" - குறள்

போய் நீக்கி சத்தியமாக, ஒழுக்கமாக நல்ல நெறியோடு வாழ்பவர்; தன் உடலில் ஐந்து பொறிகளுக்கும் வாயிலாக கண்மணியில் உள்ள ஒளியில் ஐம்பூதங்களையும் சுட்டு எரித்து வந்தாலே மரணமின்றி நீடுடி காலம் வாழலாம்.

"அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு" ---- குறள்

எல்லா உயிர்களிடமும் அன்பு பாராட்டி வாழ்பவனே தன் உடலில் உள்ள - கண்மணியில் சிறு ஒளியாக துலங்கும் உயிரை அறிந்து உணர்வான், வாழ்வான். உடலும் அழியாது.

அன்பில்லாதவன் உடல் வெறும் எலும்பும் தோலுமான பிண்டமே.

"கண்ணிற்கு அணிகலம் கண்ணோட்டம் அஃதின்றேல்
புண்ணென்று உணரப் படும்.
---- குறள்

நம் கண்களின் சிறப்பு என்னவென்றால்; கண்மணியிலுள்ள சிறு ஒளியை அறிந்து உணர்ந்து உள் ஓடிஅக்னியுடன் சேர்வதே!? இதை அறியாதவர்களுக்கு இருப்பது புண்தான்!

"தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சிதன்
மெய்வருத்தத் கூலி தரும்" ------------ குறள்

எல்லாம் வல்லவன் என இறைவனை சொல்கிறோம்! அப்படியிருக்க தெய்வத்தால் ஆகாதது என வள்ளுவர் எதை சொல்கிறார்?

இங்குதான் குரு உபதேசத்தின் முக்கியத்துவம் உணரலாம்!

தெய்வம் பெரோளியானது! நம் கண். மணியில் சிறு ஒளியாக இருக்கிறது!

நம் கண்மணியின் மத்தியில் உள்ள சிறு துவாரத்தின் உள் இந்த இறைவன் சிறு ஜோதியாக துலங்குகிறான்.

நம் கண்மணியின் மத்தியிலுள்ள சிறு துவாரம் ஒரு ஜவ்வால் அடைபட்டுள்ளது! இறைவனை மறைத்து இருக்கிறது.

ஜவ்வால் அடைபட்ட துவாரத்தை திறக்க வைக்க முயற்சிப்பதே நாம் செய்யும் தவம்!

அந்த ஜவ்வு நீங்கி நாம் நம் உயிரான ஆத்ம ஜோதியை தரிசிக்க வேண்டும். இதுதான் நாம் செய்ய வேண்டியது.

இங்கே தெய்வம் உள்ளே உள்ளது. வாசலாகிய ஜவ்வு மறைத்துள்ளது இங்கே தெய்வத்தாலாகது!

குருமூலமாக தீட்சைபெற்று அந்த ஜவ்வு நீங்க தவம் செய்வதே நாம் செய்யும் முயற்சி.

நம் முயற்சி தீவிரமாக, தீவிரமாக தீ-உரமாக, தீ-உரமாக, தீ-விரைவாக பெருகி, சிறுவாசலை அடைத்து கொண்டிருக்கும் மெல்லிய ஜவ்வு உருகி கரைந்துவிடும்!?

இந்த ஜவ்வு - மறைப்புதான்; ஏழு திரைகளாக வைத்து அதன்பின் ஜோதிவைத்து வடலூரில் சத்திய ஞானசபையில் திவருட்பிரகாச வள்ளலார் இராமலிங்க சுவாமிகளால் ஜோதி தரிசனம் காண்பிக்கப்படுகிறது.

மனிதன் தன்னுள் காண வேண்டிய உணர வேண்டிய ஆன்ம தரிசனக் காட்சியே வள்ளலார் புறத்தே காட்டி நமக்கு அறிவுறுதியிருக்கிறார்கள்.

வள்ளலாரின் சிறப்பு இதுதான்! எல்லா ஞானிகளும் பற்பல விதங்களிலும் பரிபாசையாக சொல்லியிருக்கிறார்கள்.

வள்ளல் பெருமான் அகநிலையை அப்பட்டமாக அப்படியே புறத்தே காட்டி, அப்படியாவது மக்கள் உணர்ந்து மரணமில்லா பெருவாழ்வு அடையட்டுமே என்ற பேராசையால் நிர்மானித்துள்ளார்கள்.

ஜவ்வுதான் 7 திரைகள் என்று அதன் தன்மைகளை வெகு விளக்கமாக திருவருட்பா - அருட்பெரும்ஜோதி அகவலில் அருளியிருகிறார்கள்.

சைவ சித்தாந்தத்தில் பக்தியாக கூறியிருக்கிறார்கள். பதியாகிய இறைவனை பசுவாகிய ஆன்மாக்கள் அடைய தடையான பாசத்தை நீக்க வேண்டும் என்பதே.

பாசந்தான் மும்மலங்கள் - ஆணவம் கண்மம் மாயை என்பது! மும்மலங்கள் நீங்க சிவத்தை பணியவேண்டும்.

சிவம் என்றால் ஒளி!

ஒளியை பற்றினால் மும்மலமாகிய பாசத்திரையற்று பசு பத்தியை அடையலாம்!

இதை மிக மிக நுணுக்கமாக அறிந்து, உணர்ந்து நமக்கும் வழிகாட்டி, சத்திய ஞான சபை அமைத்து ஜோதி தரிசனம் காட்டி உலகோர் எல்லோரும் மரணமில்லா பெருவாழ்வு பெற உருவாக்கியிருக்கிறார், அருளியிருக்கிறார்.

அருளை அள்ளி அள்ளி கொடுத்தார் வள்ளலார்! அருள் வள்ளல் வள்ளலாரே! இதையெல்லாம் உபதேசித்து தீட்சையின் மூலம் உணர்த்துவதே எமது பணி!

எல்லா மகான்களும் துனையாயிருந்து வள்ளலார் வழி நடத்த, எங்கள் ஞான சற்குரு இருந்து தீட்சை கொடுப்பது இப்படியே!

நாம் எப்படி முயற்சி செய்ய வேண்டும் - தவம் செய்ய வேண்டும் என உபதேசித்து உணர்வு கொடுப்பதே தீட்சை.

தீட்சையின் மூலம் பெற்ற உணர்வால் தவமுயற்சி மேற்கொள்ள மேற்கொள்ள நம் மெய்யாகிய உடல் வருத்த தவம் செய்து, மெய்யிலுள்ள மெய்ப்பொருளாகிய கண்மணியில் உள்ள ஒளியை உணர்ந்து அவ்வொளியை பெருக்க முயற்சிப்பதே நம் முயற்சி.

இப்படி நாம் முயற்சி செய்தோமானால், நம் மெய் வருந்த முயற்சித்தோமானால் உள்ளிருக்கும் தெய்வம் வெளிப்படும்.

அதன்பின் எல்லாம் அவனே! அவனே நம்மை நடத்துவான்.

அவன் வெளிப்பட முயற்சிப்பதே தவம்! இந்த உலகில் நமது முயற்சி இது ஒன்றாகத்தான் இருக்க வேண்டும். இருந்தால்தான் காணலாம், அடையலாம் இறைவனை!

இதைத்தான் வள்ளல் பெருமான் ஞானசரியையில் கூறியிருக்கிறார் நம் முயற்சி எப்படி அமைய வேண்டும் என கூறுகிறார்.

நினந்துநினைந்த் துணர்ந்துணர்ந்து நெகிழ்ந்துநெகிழ்ந்த்தன்பே

நிறைந்து நிறைந் தூற்றெழுங்கண் ணீ ரதனால் உடம்பு

நனைந்துநனைந் தருளமுதே நன்னிதியே ஞான

நடத்தரசே என்னுரிமை நாயகனே என்று

வனைந்துவனைந் தேத்துதும்நாம் வம்மின்உல கியலீர்

மரணமில்லாப் பெருவாழ்வில் வாழ்ந்திடலாம் கண்டீர்

புனைந்துரையேன் போய்புகலேன் சத்தியஞ்சொல்கின்றேன்

பொற்சபையில் சிற்சபையில் புகுந்தருணம் இதுவே.

இவ்விதம் நம் முயற்சி தொடருமானால் மரணமில்லா பெருவாழ்வு பெறலாம்.


தீட்சை - தீக்கை என்றும் கூறுவர். அட்சத்தில் உள்ள தீயை உணர்த்துதல் தீட்சை! அட்சம் என்றால் கண்.

தீ உள்ள கையில் - கண்ணில் உணர்வு கொடுப்பதுதான் தீக்கை!

சீடன் கண்மணியில் உள்ள தீயை, குரு தன் கண்மணி ஒளியால் தூண்டுவதே தீட்சையாகும்!

தொடாமல் தொடுவது!
உணர்வால் உணர வைப்பது!
கண்மணியில் உணர்வை கொடுப்பது!
தீட்சை பெறுவதுதான் மறுபிறப்பு!

தீட்சை பெற்று பிரம்மமாகிய பரம்பொருளை பெருஞ்ச்ஜோதியை எண்ணி எண்ணி அதிலேயே லயிதிருப்பவனே - அதை சார்ந்திருப்பவனே பிராமணன்!

பிரம்மசாரி என்பவனும் இவனே! கல்யாணம் செய்யாமல் இருப்பவன் பிரம்மசாரி இல்லை!

"இல்லறமல்லது நல்லறமன்று"

திருமண வாழ்க்கை வேண்டாம் என்று, விரும்பி துறவி வாழக்கை மேற்கொண்ட ஔவையார் சொல்வது தான் "இல்லறமல்லது நல்லறமன்று"

ஔவையார் கூறிய இல்லறம் எது தெரியுமா? இல் - என்றால் இல்லம். நமது இல்லம் நமது உடல்தானே!

நமது இல் ஆகிய உடலில் குடிகொண்டிருக்கும் இறைவனோடு-உடலில் கண்மணியில் ஒளியில் நல்ல நெறியோடு அறத்துடன் வாழ்வதுதான் நல்லறம்!

ஆத்மாக்கள் அனைவரும் பெண். பரமாத்மா மட்டுமே புருசன். ஆத்மாக்களாகிய நாம் புருஷோத்தமனான பரமாத்மாவோடு கூடுவதே இல்அறம் என சிறந்த இல்லறம் என ஞானிகள் கூறுகின்றனர்.

ஜீவன் பிரம்மத்தோடு ஐக்கியமாவதே ஜீவ பிரம்ம ஐக்கிய வேதாந்தம் உரைக்கிறது.

ஜீவன் இருக்குமிடம் - கண்மணி ஒளியாக! கண் ஒளியை பெருக்கி நாம் பக்குவமாகிய பின்னரே; அதாவது பெண் ஆகிய நாம் பூப்பெய்திய பின்னரே பூ - கண்மலர், எய்துவது அடைவது பரமான்மாவை! பூப்பெய்திய பின் தானே கல்யாணம்!?

எல்லாமே ஞான்ந்தான்!

நம் நாட்டில் சொல்வது அனைத்தும் ஞானமே! அதனால் தான் இது ஞான பூமி என்கிறோம்!

பெண் ஆகிய ஆன்மா ஆகிய நாம் பக்குவம் பெறுவதே - கண் திறப்பதே - தீட்சையின் பலன்!?

சூட்சும சரீரமே ஆன்மசரீரம்; ஆன்ம சரீரம் பிறப்பது தீட்சையினால்தான்!

முதலில் பிறக்கணும்! பின்னர் பக்குவமாகணும்! பின்னரே கல்யாணம்!

வாருங்கள்! தீட்சையின் மூலம் மீண்டும் பிறக்க!

காத்திருக்கிறோம்! கடவுள் பணிசெய்ய! தீட்சை பெற்றவனே முழுமையான மனிதன்! பிறப்பின் நோக்கம் பூர்த்தியாக ஒரேவழி தீட்சை பெறுதலே!

"கையறுவிலாத நடுகண் புருவ பூட்டு கண்டு களி கொண்டு திறந்துண்டு நடுநாட்ட"


மேலும் இங்கே சொடுக்கவும் (click here) ஞான சற்குரு சிவ செல்வராஜ் அய்யாவின் திருவடி தீட்சை உரை வீடியோ தொகுப்பு.


வாரீர்! வாரீர்! வாழலாம்!

தானமும் தவமும் செய்க!

ஞான நூற்களை வாங்கி
ஞானதானம் செய்க!
மெய்ப் பொருளை உணர்ந்து
தவம் செய்க!

வாழ்க வளமுடன்!

P. மதிவாணன்
mathish0610@gmail.com

No comments:

Next previous home
Related Posts Plugin for WordPress, Blogger...