Monday, January 30, 2012

சாதனை - தியானம்


குருவே சரணம்! குரு திருவடி சரணம்.

என் குருவின் பாதம் பணிந்து அவர் ஆசியுடன் இக்கட்டுரையை எழுதுகிறேன். இவை அனைத்தும் ஞான சற்குரு எங்களுக்கு உபதேசம் அளித்தவையே. அதை உங்களிடம் பகிர்வது மகிழ்ச்சி கொள்கிறேன்.சாதனை என்றால் தியானிப்பது - தவம் செய்தல் என்று பொருள். சாதனை என்பதற்கு மற்றொரு பொருள் அருஞ்செயல். எல்லோராலும் எளிதாக செய்ய முடியாத செயலை செய்தவரை சாதனை படைத்தார் என்கிறோம். அந்த விளையாட்டு வீரர் இதுவரை உள்ள சாதனைகளை முறியடித்து புதிய சாதனை படைத்தார் என்கிறோமல்லாவா? உலகத்தில் இன்று ஏதாவது சாதனை செய்தால் அதை "கின்னஸ் ரெகார்ட்" என்கின்றனர்.

ஞானிகள் புரிந்த சாதனைகள் ஒன்றா, இரண்டா? உலகியலிலும் ஆன்மீகத்திலும் அவர்கள் படைத்த சாதனைகளுக்கு நிகரேது?! செத்தவர்களை பிழைக்க வைத்தனர் எத்தனையோ ஞானிகள். விஞ்ஞானம் பேசும் மக்கள் யாரவது இதை செய்ய முடியுமா? நினைத்துகூட பார்க்க முடியாது. ஆன்மீகவாதிகளே சாதனை செய்து - கடுமையான தவமியற்றி, சாதனை பல படைத்துள்ளனர். ஈடு இணையற்ற சாதனையாளர்கள் ஞானிகளே!

ஆன்மீக சாதனை - தவம் புரிபவனுக்கே எல்லா ஆற்றலும் கிட்டுகின்றன. மனம் ஒருமைப்பாடு - மனம் குவிதல் என்பதை ஒரு ஆன்மீகவாதியால் மட்டுமே செய்ய முடியும். வைராக்கியத்தோடு இருப்பவன் மட்டுமே வெற்றி பெறுவான்.

இன்றைய விஞ்ஞானம் பூமியைப் பற்றி கிரகங்களைப் பற்றி பலவிதமாக ஆராய்ந்து கோடிகோடியாக பணம் செலவு செய்து ஏகப்பட்ட கருவிகளை வைத்துத்தான் பல செய்திகளை கூறுகின்றது.

ஆனால் நமது ஞானிகளால் உருவாக்கப்பட்ட ஜோதிட சாஸ்திரம் எந்த காலத்தில் உருவானது என்றே தெரியாது! மிக மிக துல்லியமாக கிரகங்கள் இருப்பிடம், தன்மை போன்ற அனைத்து விபரங்களையும் கூறுவதோடல்லாமல், அதன் ஆதிக்கத்தால் மனிதன் எவ்வாறு செயல்படுகிறான் என்றும் துல்லியமாக கணக்கிட்டு கூறுகிறது. பஞ்சாங்கத்தில் உள்ள விஷயங்களைத்தான் இன்றைய விஞ்ஞானிகள் ஏதோ புதிதாக கண்டுபிடித்தது போல கூறுகிறார்கள். இந்தியா என்கிற கொல்லனிடம் வெளிநாட்டவர் ஊசி விற்க வருகிறார்கள்!?

நம் பெருமை - மகிமை - அரிய சக்திகள் நாம் அறியாமலிருக்கிறோம்.

உலகிலுள்ள பழமையான மொழி என்றும் கலாச்சாரம் என்றும் இன்றைய உலகத்தவர்களால் சொல்லப்படுகிற கிரேக்கம், ஹீப்ரு, லத்தீன், சமஸ்கிருதம், தமிழ் என்ற ஐந்தினுள் இந்தியாவிலுள்ள சமஸ்கிருதமும் தமிழுமே நிலைபெற்றுள்ளன. ஏனையவை கிட்டத்தட்ட அழிந்தேவிட்டது.

நமது சமஸ்கிருதமும் தமிழும் தெய்வீகமானது. நமது காலாச்சாரம் எல்லாவற்றையும் தன்னகத்தே கொண்டது. இங்கு இல்லாதது ஒன்றுமேயில்லை! உலகுக்கே நாகரீகத்தை கற்றுத்தந்தவர்கள் நாம்தான்!
"ஐந்து கண்டம் அளாவியதமிழ் என திருமந்திரம் கூறுகிறது." இன்றைக்கு உலகெங்கிலும் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களால் சிவலிங்கங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. திருமூலர் கூற்று உண்மை என்பது இதன்மூலம் நிரூபணமாகிறது.

"தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி" என பாடிய பாடல் முற்றிலும் உண்மை. ஆதியிலே உலகெங்கும் இருந்தது சனாதனதர்மமே! பக்தியின் முடிவு ஞானத்தின் தொடக்கம் சிவலிங்க வழிபாடே! அறிந்தவர் அறிவர்.

இப்பேர்ப்பட்ட சனாதன நெறி வந்தவர்கள் நாம். சாதனை என்றாலே சாதித்தவர்கள் நாம்தான்! இன்னும் பல அரிய பெரிய உண்மைகளை, இரகசியங்களை நம் நாட்டின் மகத்துவத்தை நாம் அறியாமல் தான் இருக்கிறோம்.

நம்மவர்கள் தான் அறியாமையால் நாத்திகவாதம் பேசுகிறார்கள் மூடநம்பிக்கை என்று சாடுகிறார்கள். உனக்கு புரியவில்லை என்றால் இல்லை என்றாகிவிடுமா? உண்மை உணரும் அறிவு உன்னிடம் இல்லாததால் நாத்திகம் பேசுகிறாய்! நரேந்திரன் கடவுள் எங்கே காட்ட முடியுமா என ராமகிருஷ்ணரிடம் கேட்டார். அவர் உணரச் செய்தார்! நரேந்திரன் சுவாமி விவேகானந்தரானார். ராமகிருஷ்ணர் பரமஹம்ஸரானார்!

கேள்விகேள் - கேட்க வேண்டியதுதான். தகுந்தவரிடம் கேள். புரியவில்லையா, உன்னிடமே நீ கேள்! சாக்ரடீஸ் சொன்னாரே, உன்னையே நீ எண்ணிப்பார் என்று! இதைத்தான் வள்ளலாரும் பாடினார். தன்னையறிந்து இன்பமுற வெண்ணிலாவே ஒரு தந்திரம் நீ சொல்ல வேண்டும் என வெண்ணிலாவிடம் கேட்கிறார். சூரியனிடம் கேட்கவில்லை. ஆன்மீகவாதிகளே சிந்திக்க வேண்டியம் இடம் இது!?

நரேந்திரன் கேள்விக்கு பதில் தந்தார் நல்ல ஒரு குரு! இன்று ஏன் நாத்திகம் பேசுகிறவர் பெருகியிருக்கின்றனர் என்றால் நல்ல ஆன்மீக குரு இல்லாமையால்தான்!? இருக்கின்றவர்கள் இரகசியம் இரகசியம் என்று இல்லாமலாக்குகின்றனர். போலி குருமார்களும் போலி மடாதிபதிகளும் தான் நிரம்பியிருக்கின்றனர். இங்கே இருக்கின்ற பலமடாதிபதிகள் மட அதிபதிகள் தான்! ராஜபோக வாழ்க்கைக்காக மடத்தை பிடித்தவர்களே இவர்கள்! வேஷதாரிகள்!? ஆன்மீகத்திற்கும் இவர்களுக்கும் சம்பந்தமே கிடையாது! இன்னும் சொல்லப் போனால் ஆன்மீகம் என்ற வார்த்தைக்கே அர்த்தம் தெரியாதவர்கள்தாம். சந்தேகமேயில்லை!

"துறை இது வழி இது நீ செயும் முறை இது என மொழிந்த அருட்பெரும்ஜோதி" என திருவருட்பிரகாச வள்ளலார் இராமலிங்கசுவாமிகள் சுட்டிக்காட்டிய வழி - விழி வழியை நமது ஞானிகள் - சித்தர்கள் எல்லோரும் சுட்டிக்காட்டியதும் இதுவேதான்! எல்லோரும் அறியவே எங்கள் ஆசான் "கண்மணிமாலை" "அருள்மணிமாலை" என இவ்விருநூற்களையும் வெளியிட்டுளார்கள். அவருள் இருந்து வெளியிட வைத்தார் சற்குரு திருவருட்பிரகாச வள்ளலார் இராமலிங்க சுவாமிகள் என்பதுதான் முற்றிலும் உண்மை!

"சூடு கொண்ட திரு ஆடுதுறையை நோக்கில் சூரியனும் சந்திரனும் தோற்றமாமே" என அகத்தியர் திருவாகிய இறைவன் ஜோதியாக ஆடும் துறைமுகம் எது என அழகாக கூறுகிறார். துறை முகத்தின் கண்ணேயுள! இதில் என்ன, மறைத்தா சொல்லியிருக்கிறார்? எவ்வளவு ஆணித்தரமாக, இலகுவாக உண்மையை கூறியிருக்கிறார்! சற்று சிந்தியுங்கள். சிந்தித்தவனுக்கே சித்திக்கும்!!


இன்னும் இதுபோல பல லட்சக்கணக்கான ஆன்மீக பாடல்கள் உள்ளன. உண்மை விளக்கம் காணவேண்டும். மக்களை இறைவனிடம் கூட்டிச் செல்ல வேண்டும். திருஞானசம்பந்தர் தானும் தன் மணவிழாவிற்கு வந்தவர் அனைவரையும் கூண்டோடு கைலாசதிற்கு அழைத்து போனாரே அது போல இருக்க வேண்டாமா? இறைவன் இப்படி இருக்கிறான் நீ இப்படி சாதனை செய்தால் இறைவனை அடையலாம் என்று சொல்லக்கூட மாட்டேன் என்கிறீர்களே! தெரிந்தாலல்லவா சொல்வார்கள்!

இன்னும் ஒரு சில மேதாவிகள் அர்த்தம் புரியாமல் அனர்த்தம் செய்து மடையனாகி ஏனையோரையும் முட்டாளாக்கிவிடுவர். உதாரணமாக, அகத்தியர் ஞான நிலையை அழகாக தெளிவாக இலகுவாக கூறியது "பரப்பிலே விள்ளாதே தலையிரண்டாகும்" என்று ஒரு பாடல். இதற்கு மதகுருமார்கள் சொல்லும் விளக்கம் வெளியே சொன்னால் உன் தலை வெடித்துவிடும் என்பது தான்?! இதுவா பொருள்? இறைவனை அடைய வழிகாட்டும் ஒரு ஞானி இப்படியா சொல்லியிருப்பார்? சிறிதாவது சிந்திக்க வேண்டாமா? இப்படி மிரட்டியே பலர் பலரை சீடராக வைத்திருகின்றனர். என்ன குருவோ என்ன சீடனோ,

இராமானுஜரை அவர் குரு இப்படித்தான் பயமுறித்தினார். மந்திரத்தை வெளியே சொன்னால் நீ நரகத்திற்குத்தான் போவாய் என்று இராமானுஜர் என்ன சொன்னார். நான் ஒருவன் நரகத்திற்கு போனால் பரவாயில்லை மக்களே நீங்கள் எல்லோரும் சொர்க்கத்திற்கு போங்கள் என ஸ்ரீரங்கம் மொட்டை கோபுரத்தின் மீதேறி நின்று எல்லோருக்கும் மந்திரத்தை உபதேசித்தார். அதன் பிறகுதான் அவர் குரு தன் தவறை உணர்ந்தார். இராமானுஜர் ஒரு மாபெரும் மகான் ஆனார்.

பரப்பிலே விள்ளாதே தலையிரண்டாகும் என்றால் வெளியே சொல்லாதே தலை இரண்டு உண்டு என்பதே. நமக்கு ஒரு தலை தானே இருக்கிறது எப்படி இரண்டு என்கிறீர்களா? தலை இரண்டு என்பது தலைக்கு தலையாயது இரண்டு என்பதே. அதாவது தலையில் உள்ள முக்கியமான இரண்டு என்பதேயாகும். என் ஜாண் உடம்புக்கு சிரசே பிரதானம் அவரவர் கையால் அளந்தால் எல்லோரும் எட்டு ஜாண் தானே! ஐந்து பூதமும் ஒருங்கே அமைந்த கண்கள்! இதுவல்லவா முக்கியமானது. அதாவது உடம்பில் முக்கியமானது தலை. தலையில் முக்கியமானது இரு கண்கள். இதுவே சரியான விளக்கம். சப்தமாக மிரட்டும் தொனியில் சொன்னால், "பரப்பிலே விள்ளாதே தலையிரண்டாகும்" என்றால் பயப்படத்தான் செய்வான்".

அன்பாக அமைதியாக பிரித்துச் சொன்னால் ஞான இரகசியமே இதுதான். பரப்பிலே விள்ளாதே, தலை - இரண்டு ஆகும் என்றால் உண்மையை உணர்வான்!

இதைத்தான் பரிபாஷை இரகசியம் என்றனர். இவ்வாறே எல்லா ஞானிகள் பாடல்களையும் பொருள் கொள்ள வேண்டும். ஞானிகள் பாடல்களை படித்து உணர்வதற்கு பெரிய படிப்பு ஒன்றும் தேவையில்லை. பக்தியும், இறைவனை அடைய வேண்டும் என்ற ஆவலும் இருந்தாலே போதுமானது. கொஞ்சம் சிந்திக்க வேண்டும். சிவன் அவன் என் சிந்தையுள் நின்ற அதனால் அவனருளாலே அவர் தாள் (திருத்தாள் - திருவடி - இருகண்கள்) வணங்கி என மாணிக்கவாசகப் பெருமான் பாடுகிறார்.

சிந்தையுள் நின்ற சிவனே நம்மை சிந்திக்க வைக்கிறான். அந்த சிவனே நம் இரு கண்களிலும் சீவ ஒளியாக நின்றிலங்குகிறான். இதைத்தான் குருமூலம் அறிய வேண்டும்.

முதலில் இறைவன் அண்டத்திலுள்ளதைப் போல பிண்டத்திலும் கோயில் கொண்டுள்ளான் என்றும், தலையில் ஐந்து பூதங்களும் ஒருங்கே அமையப் பெற்ற கண்களில் ஒளியாக சீவனாக உள்ளான் என்றும் அறிய வேண்டும். சந்தேகமே இருக்கக்கூடாது. சந்தேக நிவர்த்தியே சுருதி உபதேசம்.

இரண்டாவதாக, கண்களில் ஒளியாக இறைவன் இருப்பதை உணர வேண்டும். உணர்த்துபவரே குருவானவர். "தொட்டுக்காட்டாத வித்தை சுட்டுப் போட்டாலும் வராது" என்றொரு பழமொழியுண்டு. எனவே தகுந்தவரிடம் உணர்த்தபெற வேண்டுவது அவசியம். "சுருதி" சொன்னதை "யுக்தி"யாள் உணர வேண்டியது முக்கியமாகும்.

மூன்றாவது, கண்களிலேயே ஒளி உணர்வு பெற்ற நாம் திருவருட்பிரகாச வள்ளலார் இராமலிங்க சுவாமிகள் பாடியது போல, "நினைந்து - நீ -நைந்து, உணர்த்து உணர்ந்து உணர்ந்து அன்பே நிறைந்து நிறைந்து ஊற்றெழும் கண்ணீர் அதனால் உடம்பு நனைந்து நனைந்து" இருந்து சாதனை செய்ய வேண்டும். இவ்வாறு சாதனை செய்யச் செய்ய கிட்டுவதே பேரானந்தம். இதுவே அனுபவப்படவேண்டும்.

நாம் காட்டும் ஈடுபாடு, வைராக்கியம் நம்மை மேனிலையடைவிக்கும்.

நம்மிடம் உள்ள "சத்"தாகிய சீவனை குறித்து தியானித்து வந்தால் சிவமாகிய ஒளியாகிய சீவனே நம் வசப்படும் நாம் நம்மை உணர்வோம். அதாவது "சித்"திக்கும் கைவல்யப்படும். அதனால் நாம் அடைவதே பரவசம் - பேரானந்தம் - பரமானந்தம் - "ஆனந்தம்." சத்து சித்தாகி ஆனந்தம் கிட்டும், அதைத்தான் சுருக்கமாக சத்சித் ஆனந்தம் என்று சச்சிதானந்தம் என்றார்கள் ஞானிகள்!

இதுபோன்ற உண்மை ஞான பொருள்களை நாம் அறிய வேண்டும். உணர வேண்டும். வாழ்வாங்கு வாழ வேண்டும். இதைத்தான் எல்லா ஞானிகளும் உபதேசித்தார்கள். பெற்றார்கள். இதை சொல்லிக் கொடுப்பது அருஞ்சாதனை! மிகமிக முக்கியமான இறைபணி! மக்கள் தொண்டு! இது ஒன்றே எங்கள் சற்குரு பணி, அனைவருக்கும் ஞானத்தை எடுத்து உரைப்பதே எமது பணி எங்கள் சபை அன்பர்கள் பணி!

தியானம் எப்படி செய்வது என பலநூறு வழிகளில் பல நிலைகளில் நமது ஞானிகள் சொல்லியிருக்கின்றார்கள்.

இவை அனைத்தையும் மொத்தம் 16 நிலையில் அடக்கி விடலாம். அவை சரியை, கிரியை, யோகம், ஞானம் என்ற 4 நிலையில் சரியையில் சரியை, சரியையில் கிரியை, சரியையில் யோகம், சரியையில் ஞானம் இப்படியே கிரியையில் சரியை என மொத்தம் 16 நிலைகளே.

திருவருட்பிரகாச வள்ளலாரும் சித்தர் பெருமக்களும் மக்களுக்கு காட்டும் பாதை ஞானப்பாதை! எத்தனையோ ஜென்மங்களாய் துன்பம் அனுபவித்து வரும் மக்கள் மீது கருணை கொண்டு இறைவனை அடைய வழிகாட்டும் ஞானமார்க்கத்தில் நேரடியாக செல்ல உபாயங்களை கூறியருளியிருக்கின்றனர்.

தியானம் செய்ய வள்ளலார் கூறும் உபாயம், பசித்திரு! தனித்திரு! - விழித்திரு! என்பதே.

இதில் பசித்திரு என்றால் வயிற்றுப்பசியோடு இருப்பதல்ல! இறைவனை காணவேண்டும் - அடைய வேண்டும் என்றும் நம்மை நாம் உணரவேண்டும் என்றுமுள்ள ஆன்ம பசிவேண்டும்! தனித்திரு என்றால் காட்டுக்கு போகவேண்டும் தனிமையில் இருக்கவேண்டும் என்பதல்ல! நாம் நம் ஆன்மாவோடு மட்டுமே தொடர்புகொண்டிருக்க வேண்டும். தனித்தன்மையுடன் விளங்க வேண்டும் என்பதே!

அடுத்து விழித்திரு என்றால் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்பதுடன், தியானம் செய்யும் போது கண்களை திறந்துதான் இருக்க வேண்டும். இது முக்கியமான ஒன்று. ஞான சாதனைக்கு கண்ணை திறந்திருந்துதான் செய்ய வேண்டும்.

நான் யார்? கடவுள் யார்? என்று அறியும் பசியோடு, மனதில் வேறு எண்ணங்களுக்கு இடம் கொடுக்காமல் நான் ஆத்மா என்ற தனித்த உணர்வுடன் இருந்து, கண்களை திறந்து - இருந்து தியானம் செய்க!

தியானம் செய்வது, ஆரம்பத்தில் ஏதாவது ஒரு உருவத்தை பார்த்து இருந்து செய்யவேண்டும். உருவம் என்றால் தெய்வத் திருஉருவங்களுக்கு போய்விடாதீர்கள். எல்லோராலும் ஒப்புக்கொள்ளப்பட்ட ஜோதியை வைத்துக் கொள்க. ஒருவிளக்கு ஏற்றிவைத்து அதன்முன் அமர்ந்து கண்களை திறந்து அந்த ஜோதியையே பார்த்து கொண்டிருக்க வேண்டும். சிலகாலம் அப்படியே இருந்து பழகிப்பழகி வரவர நாம்பார்க்கின்ற ஜோதியில் பலவித மாறுதல்கள் உண்டாகும். ஒரு நிலையில் ஒன்றுமே தெரியாமல் கூடபோகும். உங்கள் கண்களில் நீர் தாரை தாரையாக கொட்டும். அப்போது ஆடாதீர்! அசையாதீர்! வேறொன்றை நாடாதீர்!

அதன்பிறகு உங்களுக்கு பற்பல காட்சிகள் அனுபவங்கள் ஏற்படும். சற்குரு வழிகாட்டுவார். இதுவே ஞானத்தில் சரியை என்ற 13-வது படிநிலையாகும். இவ்வாறு பயிற்சி செய்து அனுபவபட்டால் பின்னர் விளக்கு ஏற்றிவைக்க வேண்டியதுமில்லை. எந்த இடத்திலிருந்தும் கண்களை திறந்து இருந்து தியானம் செய்யலாம்! அதுவே முக்திக்கு வழி.

திருவருட்பிரகாச வள்ளலார் இராமலிங்க சுவாமிகள் எப்படி தியானம் செய்தார் என அறிய வேண்டாமா? தன்னுடைய 9 வயதில் தன் வீட்டின் மாடியிலுள்ள ஒரு அறையில் சுவரில் கீழே ஒரு நிலை கண்ணாடியை வைத்து அதன் முன்னர் ஒருவிளக்கை ஏற்றி அதன்முன்னர் இருந்து பார்த்து தியானம் செய்தார். சுவரில் இருக்கும் கண்ணாடியில் தன் உருவமும் தன் கண்ணில் விளக்கின் ஒளியும் கண்டு தியானம் செய்தார்.

சில நாட்களிலே தன் "கண்" ஆடியிலே ஆறுஜோதிகொண்ட ஜோதிதரிசனம் பெற்றார். இதைத்தான், சீர்கொண்ட தெய்வ வதனங்கள் ஆறும் . . . என் கண் உற்றதே என பாடியருளினார். ஞான அனுபவ நிலை! சிந்திப்பவர்க்கே சிவம்! காணலாம் கண்ணிலே! கண்ணாலே காணலாம்! மிகமிக உயர்ந்த ஞான நிலை இதுவே.

இதை அறிந்தவன் பாக்கியவான்! இதை அனுஷ்டித்தவன் புண்ணியவான்! இதை அனுபவித்தவனே ஞானவான்!

ஆன்மநேய ஒருமைப்பாடுடைய மெய்யன்பர்களே, இதைவிட மேலான வழி உண்டுமோ? இன்றே இக்கணமே ஆரம்பமாகட்டும் உங்கள் சாதனை.

தானமும் தவமும் செய்க!

ஞான நூற்களை வாங்கி
ஞானதானம் செய்க!
மெய்ப் பொருளை உணர்ந்து
தவம் செய்க!

வாழ்க வளமுடன்!

P. மதிவாணன்
mathish0610@gmail.com


Monday, January 9, 2012

திரை சொன்ன கதை
கவலைகளை மறந்திருக்கத் திரையரங்கம் சென்றேன்
கொறிக்கக் கொஞ்சம் வாங்கிவந்து இருக்கையிலே அமர்ந்தேன்

விளக்கெல்லாம் அணைந்திருக்கத் திரையில் படம் ஓட

வியப்புடனே நடப்பதனை விழியகலக் களித்தேன்

எட்டிவந்த எட்டுப்பேரை எத்திவிட்ட நாயகன்

கிட்டவந்து காதலியைக் கட்டியணைத்துக் கொஞ்ச

மொட்டவிழ்ந்த மலர்போல இசையென்னை வருட
கொட்டக்கொட்டப் பார்த்திருந்தேன் எனைமறந்து

திரையை
எதிரில்வந்த அனைவருமே நிஜமெனவே தெரிந்தார்
எதிர்த்து நின்ற அனைவருமே குருதிகொட்ட நின்றார்

புதியதிந்த உலகமெனத் தலையைச் சற்று நிமிர்ந்தேன்

புதிரான புகைமூட்டம் தலைக்கு மேலே கண்டேன்


புகைவந்த திசைநோக்கி பார்வை சுழல விட்டேன்

ஒளிவெள்ளம் ஒருபுள்ளியில் தொடங்கிவரக் கண்டேன்

திரையில் விழுந்த அனைத்துமே நிழலெனவே தெரிய

அரைகுறையாய் ஏதோவொன்று எனக்குள்ளே புரிய


திரையில் வந்த எல்லாமே நிஜமில்லை இங்கு

ஒளியொன்று செலுத்திவர உயிர்த்ததவை என்று

நிஜமான நாயகனோ எனக்குப் பின்னே இயக்க

விதவிதமாய்த் தெரிவததின் மூலமிங்கு கண்டேன்


புரியாதது புரிந்தபின்னர் அதனில்நாட்டம் கொண்டேன்

தெரிகின்ற ஒளியொன்றில் மனமாழ்த்தி நின்றேன்

விரிகின்ற மலர்போல என்னுள்ளம் மலர

இறையவனும் இதுபோல என்பதிங்கு புரிந்தேன்


கண்ணெதிரே தெரிகின்ற காட்சியெல்லாம் நிழலே
விண்ணதிரக் காண்பதெல்லாம் என்றுமிங்கு பொய்யே

பின்னிருந்து இறையொருவன் இயக்கமொன்று செய்ய

முன்னிருக்கும் எல்லாமும் நகர்வதென்று தெளிந்தேன்


இறையொன்றில் நாட்டம்வைத்து அதனுள்ளே நினைந்தால்

கரைசேர்க்கும் காவலென அவனிங்கே வருவான்

பிறைநிலவும் வாங்குமொளி ஆதவனின் கருணை

திரைமீது வருமொளியும் பேரொளியின் துளியே


இன்னும் சற்றுப் புரியவேண்டி தாளிணையைப் பணிந்தேன்

மின்னுமொளி கூடிவர குருநாதன் வந்தான்
என்னுடனே வாவெனவே என்னைக் கூட்டிச் சென்றான்

தன்னருளால் இன்னலெல்லாம் எனிலகற்றிக் காத்தான்


பேரருளின் திறன் புரிய பேருலகம் கண்டேன்

பேருலகில் உள்ளதெல்லாம் இறையென்றே அறிந்தேன்

வேறுசுகம் வேண்டாத ஓர்நிலையில் நின்றேன்

பாருலகில் அனைவரையும் இறையெனவே புரிந்தேன்


படைத்தவனைப் புரிந்துவிட்டால் பாருமிங்கே ரசிக்கும்

கிடைத்ததிலே மகிழ்வுகொண்டால் சோர்வுமிங்கே பறக்கும்

பிடித்தவனைப் பற்றிக்கொண்டால் பயணமிங்கே ருசிக்கும்

விடையிதனைத் தெரிந்துகொண்டால் வாழ்வுமிங்கே செழிக்கும்


திரைப்படமும் முடிந்துவிட எழுந்தங்கு நடந்தேன்

கறையெல்லாம் தீர்ந்துவிட்ட மனத்துடனே வந்தேன்
உரைக்கின்ற எல்லாமும் யான் சொன்னதும் அல்ல

நிறைவான குருவருளால் சிலவிங்கு சொன்னேன்.

************

***********************************************************

குருவே சரணம்! குருதிருவடி சரணம்!


Courtesy: http://aaththigam.blogspot.com

எட்டும் இரண்டும்குருவே சரணம்! குரு திருவடி சரணம்.


அருட்பெரும்ஜோதி அருட்பெரும்ஜோதி தனிப்பெரும்கருணை அருட்பெரும்ஜோதி


எட்டும் இரண்டும் இனிதறி கின்றிலர்

எட்டும் இரண்டும் அறியாத ஏழையர்

எட்டும் இரண்டும் இருமூன்று நான்கெனப்

பட்டது சித்தாந்த சன்மார்க்க பாதமே ---- திருமந்திரம்


எட்டும் இரண்டும் இனிதான பேரின்பத்தைக் கொடுக்கும் என்பதனை, எட்டையும் இரண்டையும் அறியாதவர்கள், பணம் உள்ளவன் பணக்காரன் இல்லாதவன் ஏழை. அதுபோல எட்டும் இரண்டும் அறிந்தவன் ஞானமாகிய செல்வம் பெற்ற பணக்காரன். எட்டும் இரண்டும் அறியாதவன் ஞானமாகிய செல்வம் இல்லாத ஏழைகள்.


அவர்கள் அதன் இன்பத்தை அறிய மாட்டார்கள். என்ற கூறுகிறார். மேலும் எட்டும் இரண்டும் இரு மூன்று நான்கு அதாவது பத்து என்பதே சித்தாந்த சன்மார்க்க பாதம் என்கிறார் திருமூலர். இது என்னடா!? எட்டும் இரண்டும் பத்து என்பது முதல் வகுப்பு படிக்கும் சிறுவனுக்கே தெரியும் இதைச் சொல்ல திருமூலர் எதற்கு என்கிறீர்களா? ஞானிகள் கூற்று எல்லாமே எளியதான ஆனால் அதே சமயம் ஆழ்ந்த பொருள் உள்ளதாக ஞானத்தை விளக்கும் மறை பொருளாகவே இருக்கும்.


இனி திருமூலர் சொன்னதை பார்ப்போம்?


எட்டு என்பது " 8 " என்றும் தமிழில் "அ" என்றும், "சூரியன்" என்றும், வலது கண் என்றும் மறைபொருளாக உணர்த்தியதாகும்.


இரண்டு என்பது " 2 " என்றும், தமிழில் "உ" என்றும், "சந்திரன்" என்றும், இடது கண் என்றும் கூறுவர்.


இந்த எட்டும் இரண்டும் பத்து. 8 + 2 =10 , அ + உ = ய, சூரியனும் சந்திரனும் நம் சாதனையால் ஒன்று பட்டு உள்முகமாக சென்று பத்தாகிய. "ய" ஆகிய அக்னியோடு சேர்ந்தாலே திருவடியை. ஜோதியை, ஜீவனை பாதத்தை நாம் தரிசிக்க முடியும். இந்நிலையைத் தான் "முச்சுடரும் ஒன்றை முடிந்ததோர் ஜோதி பாதம் அச்சுதனும் அயனும் காண அனந்தமாபாதம்" என சித்தர்கள் கூறுவர்.


யமுனையில் கண்ணன் காளிங்க நர்த்தனம் புரிந்தான் என்பது புராணம். இதன் தத்துவம் பற்றி கொஞ்சம் சிந்தித்து பார்போம்.


"ய" - முனை "ய" என்ற கலை சேர்ந்த எழுத்தில் மூன்று முனை - சூரியன் சந்திரன் அக்னி என மூன்று கலை சேர்ந்த இடத்தில் - விஷத்தைக் கக்கும் காளிங்கன் - காம குரோதாதிகளை கொடுக்கும் பஞ்சேந்திரியங்களை வென்று அதன் மேல் ஏறி - ஒளியாகிய இறைவன் - கண்ணின் ஒளி - கண்ணன் ஆனந்த நடனமாடினான் என்பதே மெய்ஞான விளக்கம். "ய" - முனை மூன்றாக உள்ளது, அதை ஒன்று சேர்த்தாலே ஞானசாதனை . அப்படி சேர்க்கும்போது சூலாயுதம் போல் மூன்று கூறாக உள்ளது. வேல்போல் குவிந்து ஒன்றாகி விடும். முருகனுக்கு சக்தி கொடுத்தது ஞானவேல் அல்லவா? நாம் ஒவ்வொருவரும் ஞான வேலாக மிளிர வேண்டும்! ஒளிவிட்டு பிரகாசிக்க வேண்டும்!


அனுபவிப்போம் - உண்மை அறிவோம் !


இந்த ரகசியத்தை யாரவது சுட்டிக் காட்டினால்தான் நமக்குப் புரிய முடியும். அதனால்தான் "சுட்டிக்காட்டாத வித்தை சுட்டுப் போட்டாலும் வராது" என்ற பழமொழி நிலவுகிறது. பற்பல நூற்களையும் ஞானவான்கள் கூற்றையும் படிக்கும்போது பரம்பொருள் - ஒளி - கண் - என நினைத்து பாருங்கள் - படியுங்கள் - உண்மை விளக்கங்கள் அழகாக புரியும் ! சிந்திப்போம் தெளிவு கிடைக்கட்டும். பரம்பொருள் ஒளியாக - கண்ணில் காரியப்படுவதை நாம் உணர்வதுதான் ஞானத்தின் முதல்படி. திருவடி தீட்சை என்றும் சட்சு தீட்சை என்றும் இதைத்தான் குரு உபதேசம் செய்வார்.


உபதேசம் என்பதன் பொருள், உப = இரண்டு, தேசம் = இடம் . இரண்டு இடம் - இரண்டு கண் என்பதே ஆகும். இதை உறுதிப்படுத்ததான் சாஸ்திர விளக்கம் கூறுவர். அவரும் இதைதான் சொன்னார் - இவரும் இதைத்தான் சொன்னார் - எல்லாருமே இதைத்தான் சொன்னார்கள் என எல்லா ஞானிகள் நூற்களையும், அவற்றின் மறை பொருள்களையும் - பரிபாசையாக சொன்னவைகளை விளக்கித் தெளிவுபடுத்துவர். இந்த உபதேசத்தை ஒரு சடங்காகவே செய்வர். உபதேசம் பெற்றவன் அஞ்ஞான வாழ்க்கையை முடித்து ஞான வாழ்வுக்கு முயல்பவனாக மீண்டும் பிறந்தவனாக கருதப்படுகிறான் . மெய் பொருள் உணர்ந்த உபதேசம் பெற்றவர்களே இரு பிறப்பாளன் ஆகிறான்.


இயேசுநாதர் 2 மீன்களையும் 5 அப்பங்களையும் 5000 பேருக்கு பங்கிட்டுக் கொடுத்தார். மீதமுள்ளதை 12 கூடையில் வைத்தார் என பைபிள் கூறுகிறது. பைபிளின் முதல் பகுதியிலேயே வேத வாக்கியங்களை மேலோட்டமாக பார்க்காதீர். ஆழ்ந்து கவனியுங்கள் என கூறப்பட்டுள்ளது. மேலோட்டமாக பார்த்தால் 2 மீனையும் 5 அப்பத்தையும் எப்படி ஐயா 5000 பேருக்கு பங்கிட்டு கொடுக்க முடியும் ? கொஞ்சமாவது சிந்திப்போம்.


மீன் என்றால் தண்ணீரில் வாழும் மீன்அல்ல. மீன் போன்ற அமைப்புடைய நம் கண்கள். இயேசு 2 மீன்களாக தன் இரு கண்களாலும் 5 அப்பம் என்றது ஞானேந்திரியம் ஐந்தாலும் 5000 பேருக்கு உபதேசங் கொடுத்தார் என்று தான் பொருள் கொள்ள வேண்டும். அதாவது கண்ணால் பார்த்து அனைவருக்கும் ஞானதீட்சை கொடுத்தார் என்பதே பொருள்.


கண்ணில் உள்ள ஒளியால் அக்னியால் ஞானஸ்தானம் வழங்கினார் என்பதே பொருள். மீதமுள்ளவை 12 கூடையில் வைத்தனர். இது 12 கலையுடன் சூரிய நிலையில் நின்றனர் என்றே பொருள்படும். நமக்கு சூரிய கலை வலது கண்ணே.


இதையெல்லாம் உண்மை ஞானம் விளக்கம் பெற்றவர்கள் உடனே உணர்ந்து கொள்வார். அறியாதவர்கள் இல்லை என தர்க்கம் செய்யாதீர்கள். எவ்வளவு தூரம் இது உண்மை என அறிய முற்படுங்கள் சிந்தியுங்கள் என்பது எனது தாழ்மையான கருத்து.


கேளுங்கள் கொடுக்கப்படும் தட்டுங்கள் திறக்கப்படும் தேடுங்கள் கண்டடைவீர்கள்.


பைபிளில், கண்ணே சரீரத்தின் விளக்காய் உள்ளது. உன் கண் ஒளியுள்ளதாய் இருந்தால் உன் சரீரமும் ஒளி உள்ளதாய் இருக்கும். தேவன் ஒளியாய் இருக்கிறார். நீங்களும் ஒளியிலே நடந்தால் தேவனை தரிசிக்கலாம். உன் சரீரத்தின் விளக்கான கண்ணில் உள்ள தேவனாகிய ஒளியை பெருக்கி உன் சரீரத்தை ஒளிமயமாக்கினால் ஒளிமயமான தேவனை தரிசிக்கலாம் என கூறப்பட்டுள்ளதை சிந்திப்போம்! குர் ஆனிலும் இன்னும் உள்ள அனைத்து மத நூற்களிலும் இதையேதான் கூரியிருகின்றனர். படித்து , சிந்தித்து தெளிவடைவோம்.


இறைவன் எப்படிபட்டவர் என்றால், ஒரு சிறு உதாரணம்.


நாம் தேடும் குறிப்பிட்ட அன்பரை சரியான விலாசத்தில் தேடி கண்டுபிடித்து விட்டோம். வீடு பூட்டியிருக்கிறது. நாம் வீட்டுக் கதவைத்தட்டி நண்பரை பேர் சொல்லி கூப்பிடுகிறோம். நமது நண்பர் வீட்டில் எங்கிருந்தாலும் என்ன செய்வது கொண்டிருந்தாலும் ஓடோடி வந்து கதவை திறந்து வாருங்கள் வாருங்கள் உட்காருங்கள் ஏதாவது சாப்பிடுங்கள் என்று நம்மை வெகுவாக உபசரித்து வீட்டின் உள்ளே கூட்டிச் சென்று அமர வைக்கிறார்.


இதுபோலவே, நாம் இறைவன் குடிகொண்டிருக்கும் இந்த உடலின் உட்புகு வாசலை-கண்ணை-கண்மணியில்-நினைவால்-தட்ட வேண்டும். தட்ட வேண்டிய இடத்தில் தட்டவேண்டிய முறைப்படி தட்டிக்கூப்பிட்டால் எங்கு இருந்தாலும் இங்கே வந்து வாசலை திறந்து நம்மை உள்ளே அழைத்துச் செல்வான். கேட்டதெல்லாம் தருவான். அருள்வான். அருளாளன் அல்லவா இறைவன்! நம் கடன்-கடமை இறைவன் இருக்கும் வீட்டு வாசலில்-கண்ணில் நினைவை நிறுத்தி பணி-சாதனை -செய்து கிடப்பதே. நம்மை உள்ளே அழைத்துச் சென்று அருள் கொடுப்பவன் எல்லாம் வல்ல இ றைவன் செயலே.


வாசல் கதவை தட்டிக் கூப்பிட்டால் போதும்! நாம் செய்ய வேண்டியது இவ்வளவே! இந்த சின்ன வேலையைக் கூட நம்மால் செய்ய முடியாவிட்டால் எப்படி?! தட்டுங்கள் - திறக்கப்படும்.


நல்ல குருவைப் பெற்று சாதனை செய்யுங்கள், சத்சங்கம் கூடுங்கள். அப்பொழுதுதான் ஒருவருக்கொருவர் ஏற்படும் சந்தேகங்களை நிவர்த்தித்துக் கொள்ளலாம். "யான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம் ஊண் பற்றி நின்ற உணர்வுறு மந்திரம்தான் பற்றப் பற்ற தலைப்படுந்தானே". நமது ஊண் உடலைப்பற்றி நிற்கின்ற உணர்வுறு மந்திரமாகிய கண்ணில் ஒளியாக துலங்கும் ஜீவனை நாம் சாதனையால் பற்றப் பற்ற - சிக்கெனப் பற்றினால் - நமக்கு கைவல்யப்படும். "சுடரடி தொழுது எழு என் மனனே" என ஒரு பக்தர் பாடுகிறார். இறைவன் திருவடியாகிய சுடரை தொழு என் மனமே என்கிறார். திருவடியே - சுடர் என் ஜோதியே எவ்வளவு அழகாக கூறுகிறார் பாருங்கள்.!


"எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்

கண்ணென்ப வாழும் உயிர்க்கு"


நன்றி

மதிவாணன்

mathish0610@gmail.com

Next previous home
Related Posts Plugin for WordPress, Blogger...