Monday, January 9, 2012

திரை சொன்ன கதை




கவலைகளை மறந்திருக்கத் திரையரங்கம் சென்றேன்
கொறிக்கக் கொஞ்சம் வாங்கிவந்து இருக்கையிலே அமர்ந்தேன்

விளக்கெல்லாம் அணைந்திருக்கத் திரையில் படம் ஓட

வியப்புடனே நடப்பதனை விழியகலக் களித்தேன்

எட்டிவந்த எட்டுப்பேரை எத்திவிட்ட நாயகன்

கிட்டவந்து காதலியைக் கட்டியணைத்துக் கொஞ்ச

மொட்டவிழ்ந்த மலர்போல இசையென்னை வருட
கொட்டக்கொட்டப் பார்த்திருந்தேன் எனைமறந்து

திரையை
எதிரில்வந்த அனைவருமே நிஜமெனவே தெரிந்தார்
எதிர்த்து நின்ற அனைவருமே குருதிகொட்ட நின்றார்

புதியதிந்த உலகமெனத் தலையைச் சற்று நிமிர்ந்தேன்

புதிரான புகைமூட்டம் தலைக்கு மேலே கண்டேன்


புகைவந்த திசைநோக்கி பார்வை சுழல விட்டேன்

ஒளிவெள்ளம் ஒருபுள்ளியில் தொடங்கிவரக் கண்டேன்

திரையில் விழுந்த அனைத்துமே நிழலெனவே தெரிய

அரைகுறையாய் ஏதோவொன்று எனக்குள்ளே புரிய


திரையில் வந்த எல்லாமே நிஜமில்லை இங்கு

ஒளியொன்று செலுத்திவர உயிர்த்ததவை என்று

நிஜமான நாயகனோ எனக்குப் பின்னே இயக்க

விதவிதமாய்த் தெரிவததின் மூலமிங்கு கண்டேன்


புரியாதது புரிந்தபின்னர் அதனில்நாட்டம் கொண்டேன்

தெரிகின்ற ஒளியொன்றில் மனமாழ்த்தி நின்றேன்

விரிகின்ற மலர்போல என்னுள்ளம் மலர

இறையவனும் இதுபோல என்பதிங்கு புரிந்தேன்


கண்ணெதிரே தெரிகின்ற காட்சியெல்லாம் நிழலே
விண்ணதிரக் காண்பதெல்லாம் என்றுமிங்கு பொய்யே

பின்னிருந்து இறையொருவன் இயக்கமொன்று செய்ய

முன்னிருக்கும் எல்லாமும் நகர்வதென்று தெளிந்தேன்


இறையொன்றில் நாட்டம்வைத்து அதனுள்ளே நினைந்தால்

கரைசேர்க்கும் காவலென அவனிங்கே வருவான்

பிறைநிலவும் வாங்குமொளி ஆதவனின் கருணை

திரைமீது வருமொளியும் பேரொளியின் துளியே


இன்னும் சற்றுப் புரியவேண்டி தாளிணையைப் பணிந்தேன்

மின்னுமொளி கூடிவர குருநாதன் வந்தான்
என்னுடனே வாவெனவே என்னைக் கூட்டிச் சென்றான்

தன்னருளால் இன்னலெல்லாம் எனிலகற்றிக் காத்தான்


பேரருளின் திறன் புரிய பேருலகம் கண்டேன்

பேருலகில் உள்ளதெல்லாம் இறையென்றே அறிந்தேன்

வேறுசுகம் வேண்டாத ஓர்நிலையில் நின்றேன்

பாருலகில் அனைவரையும் இறையெனவே புரிந்தேன்


படைத்தவனைப் புரிந்துவிட்டால் பாருமிங்கே ரசிக்கும்

கிடைத்ததிலே மகிழ்வுகொண்டால் சோர்வுமிங்கே பறக்கும்

பிடித்தவனைப் பற்றிக்கொண்டால் பயணமிங்கே ருசிக்கும்

விடையிதனைத் தெரிந்துகொண்டால் வாழ்வுமிங்கே செழிக்கும்


திரைப்படமும் முடிந்துவிட எழுந்தங்கு நடந்தேன்

கறையெல்லாம் தீர்ந்துவிட்ட மனத்துடனே வந்தேன்
உரைக்கின்ற எல்லாமும் யான் சொன்னதும் அல்ல

நிறைவான குருவருளால் சிலவிங்கு சொன்னேன்.

************

***********************************************************

குருவே சரணம்! குருதிருவடி சரணம்!


Courtesy: http://aaththigam.blogspot.com

3 comments:

enpaarvaiyil said...

விளக்கம் மிக அருமை அனைவரும் புரிந்து தெளியும் வகையில்
வாழ்க்கை நடைமுறையோடு விளக்கம் உள்ளது.ஆனால் இதை யாரும் படித்ததாக தெரியவில்லை. மீண்டும் மீண்டும் சிந்தித்தால் போதும் நம் மயக்கம் தீர்ந்து நல்வழி கிட்டும்.

Mathivanan said...

மிக்க நன்றியும் மகிழ்ச்சியையும் தெரிவித்து கொள்கிறேன். சேர வேண்டிய ஆன்மாவிற்கு கண்டிப்பாக இந்த விஷயம் போய் சேரும். உங்களுக்கு தெரிந்த அன்பர்களுக்கு தாங்கள் படித்ததை சொல்லுங்கள். அவர் ஒரு நாலு பேருக்கு சொல்வார்.

நன்றி அன்பரே!

Mathivanan said...

இந்த ப்ளாக்கை உங்கள் ப்ளாகில் இணைத்து கொள்ளுங்கள் நிறைய அன்பர்கள் பார்க்க நேரிடும்.

Next previous home
Related Posts Plugin for WordPress, Blogger...