Thursday, February 23, 2012

வாழ்வாங்கு வாழலாம்!

சமரச சன்மார்க்கம்
"வாழ்வாங்கு வாழலாம்"


ஆன்மநேய ஒருமைப்பாடுடையீர்,


வந்தனம்! எண்ணிலடங்கா ஞானிகள் தோன்றிய இந்தியா புண்ணிய பூமியில் பிறந்த நாம், தமிழ்நாட்டில் பிறந்த நாம், மனித உருவில் பிறந்த நாம் நிச்சயம் புண்ணிய ஆத்மா தான்! அதிலும் எக்குறையுமின்றி, மானிடராக பிறந்த நாம் பிறந்த பலனை அடைய வேண்டாமா?

ஏன் பிறந்தோம்? எதனால் வாழ்கிறோம்? எப்படி வாழவேண்டும்? எங்கிருந்து வந்தோம்? நமது பிறப்புக்கு முன்னால் நம் பெற்றோர், அவர்கள் பெற்றோர்கள் பிறந்தார்கள் – பெற்றவர்கள் – வாழ்ந்தார்கள் – வீழ்ந்தார்கள்? நாம் பிறப்பதற்கு முன்பும் உலகம் இருந்தும் நம் அப்பா, தாத்தா மற்றும் மூதாதையர்கள் வாழந்தனரே?!

நாம் இறந்த பின்பும் நம் மகன் நம் பேரன் நம் மகனின் பேரனும் வாழத்தான் போகிறார்கள்?! இப்படியே போகின்ற வாழ்க்கை ஓட்டத்தில் நாம் இருப்பது, பூரண ஆயுள் என்றால் 120 வருடந்தான்?! ஆனால், இன்றைய உலகில் விஞ்ஞான வளர்ச்சியால் மனிதன் கூடாத பழக்கவழக்கங்களுக்கு அடிமையாகி, மாமிச உணவு உண்டு கிட்டத்தட்ட மிருகமாகவே வாழ்கிறான்!? இப்படிப்பட்ட மாக்களின் வாழ்வு அற்ப ஆயுளே! 70 வயதை தாண்டுபவர் அரிதிலும் அரிதே!

“பாவிகளே மனந்திரும்புங்கள் பரலோக ராஜ்ஜியம் சமீபத்திலிருக்கிறது” இது பைபிள் வாசகம். இவ்வாசகமே இந்து மத வேதங்களும் கூறும் உண்மை!? மனிதன் பிறப்பது பூர்வஜென்ம பாவ புண்ணிய கர்ம வினைப்படிதான் என்பதே உண்மை! சத்தியம்! வேதவாக்கு! பாவ புண்ணிய வினைப்படி பிறந்த மனிதன் பாவி தான்! பைபிள் கூறுவதும் உண்மைதான்! எல்லா ஞானிகளும் கூறும் உண்மை இதுவே!

கர்மவினை ஒவ்வொரு மனிதனுக்கும் வேறுபடுகிறது! அவரவர் வினைக்கேற்ப அவரவர் பிறப்பும் வாழ்வும் அமைகிறது?! யாருடைய கர்மமும் யாருக்கும் வராது! “அவரவர் வாழ்க்கை அவரவர் கையில்!” முந்தின பிறவிகளில் பட்ட கடன் வசூலிக்கவே இந்த பிறவியில் பிள்ளையாக, சொந்த பந்தங்களாக வந்து சேர்கிறார்கள்?! கடன் வசூலானதும் விட்டு நீங்கி விடுகிறார்கள்! அப்பனுக்கும் பிள்ளைக்குமே சம்பந்தமில்லை!? இது தான் வாழ்வு! இதுவே விதிக்கப்பட்ட கர்மம்! சுருக்கமாக “விதி” என்றனர் ஆன்றோர்.

இறைவன் அருளால் தான் நாம் பிறந்தோம்! இறைவன் தான் உலக மக்கள் அனைவருக்கும் அப்பா அம்மா – அம்மையப்பன் ஆவார்! நமக்கு உடல் கொடுத்தது நம் தாய் தந்தை பூர்வ ஜென்ம பந்தப்படி! உயிர் கொடுத்தது இறைவன்! கருணையே வடிவான கடவுள் நாம் உய்வடைய நமக்கு கொடுத்த ஒரு வாய்ப்பு இம்மானுடப் பிறவி! இப்பிறவியிலேயாவது இவன் உருப்படுகிறானா பார்ப்போம் என நம்மை பிறப்பித்தார்!? அம்மையப்பன்!

கர்ம வினையால், உலக மக்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதம் தான்! உடலால் ஆண் பெண் என இரண்டாக பிரித்த இறைவன், உயிரால் ஒன்றாகவே உள்ளான்! உலக மக்கள் அனைவரும், ஆத்மாக்கள் அனைவரும் எல்லாம்வல்ல அந்த இறைவனின், பரமாத்மாவின் அம்சமே! கர்மாவால் வித்தியாசப்பட்ட மக்கள் அனைவரின் ஆத்மாவும் – உயிரும் – ஜீவனும் ஒன்றே! வித்தியாசம் கர்மாவால் நமக்குள்ளேதான்! இறைவன் ஒருவரே! பரமாத்மா! அவரே ஜீவாத்மாவாக எல்லா உயிராகவும் துலங்குகிறார்!

உலக மாந்தரே, வினைகளால் வேறுபட்ட நாம் ஆத்மாவால் ஒன்றானவர்கள் என்பதை உணர வேண்டாமா?! ஒன்றான நம் ஜீவனை உணர தடையான நம் பாவ வினைகளை அகற்ற பாடுபட வேண்டாமா?! உலகில் ஒவ்வொரு விஷயத்தையும் சொல்லித்தர ஒவ்வொருவருக்கும் ஒருவர் தேவையல்லவா? நாம் பிறந்ததிலிருந்து அம்மா அப்பா உற்றார் சுற்றம் இப்படி பலரும் பலதயும் சொல்லித்தானே, பேசாமல், எதுவும் தெரியாமல் புரியாமல் பச்சை மண்ணாக நாம் வளர்ந்தோம்?! வாழ்கிறோம்? “அழ மட்டுமே தெரிந்த குழந்தையாக பிறந்த நாம், அழுது அழுது தான் ஞானக்குழந்தையாக வேண்டும்” என நம்மை எவ்வளவு அற்புதமாக படைத்திருக்கிறார் கடவுள் பாருங்கள்?!

நமக்கு உயிர் தந்த இறைவனை, நம் உயிராகவே இருக்கும் இறைவனை, நாம் அறிய வேண்டாமா? உணர வேண்டாமா? நம் பிறப்பின் நோக்கமே இது தானே!? நாம் பிறந்தது இனி பிறாவாதிருக்கவே! பிறந்த இப்பிறப்பில் தானே இறவாதிருப்பதே! மரணமிலாது வாழ்வதே! என்றும் இருப்பதே! சிரஞ்சீவியாவதே! எல்லோரும் ஒப்புக்கொண்ட ஒரே இறைவன் போரோளியானவர் தானே! அந்த பேரோளியான பரமாத்மாதான் நம் ஆத்மாவாக, சிற்றோளியாக, நம் உயிராக நமக்குள் துலங்குகிறார்! உண்மைதானே!

எங்கும் நிறைந்த இறைவன், ஒவ்வொரு அணுவுக்குள்ளும் ஒளிரும் இறைவன், நம் உடலில் தலையில், உள்ளே மத்தியில் நம் உயிராக – ஒளியாக மிளிர்கிறார்!? இதுவே வேதங்கள் எல்லாம் கூறும் உண்மை!! சிரநடு உள் ஒளிரும் அந்த இறைவன் நம் இருகண்களிலும் வெளிப்பட்டு அருள்கிறார்! “கண்ணே சரீரத்தின் விளக்கு” இது பைபிள் கூறுவது! “மனித தேகத்தில் கண்ணில் புகையில்லாத ஜோதியாக துலங்குகிறான் இறைவன்” இது கடோநிஷத்து கூறும் இரகசியம்!

எல்லோரும் மறைத்து வைத்த இந்த இரகசியங்களை, சத்தியத்தை திருவருட்பிரகாச வள்ளல் அருளால் எல்லோரும் அறிய சற்குரு சிவ செல்வராஜ் அய்யா அவர்கள் உரைகிரார்கள்! எல்லோரும் ஞானம் பெறட்டுமே! எல்லோரும் பிறந்த பலனை அடையட்டுமே! எல்லோரும் இறைவனடி சேரட்டுமே! என்ற உயர்ந்த நோக்கமே வள்ளலாரின் இலட்சியம்! “வம்மின் உலகியலீர் மரணமிலா பெருவாழ்வில் வாழ்ந்திடலாம்” என உலக மக்கள் அனைவரையும் கூவி அழைக்கிறார்!.

எந்த விஷயத்தையும் சொல்லித் தர ஒரு ஆள் வேண்டும் என்ற போது, இந்த ஒப்பற்ற ஞானத்தை சொல்லித் தர ஒரு ஆள் வேண்டாமோ?! இந்த ஞானத்தை, நாம் யார் என அறியும் அறிவை போதிக்க நமக்கு அவசியம் ஒருவர் வேண்டும்! அவரே “குரு”! உலக மக்கள் ஞானம் பெற உலகில் நான்கு வேதங்கள், பைபிள், குர் ஆன், திருமந்திரம், திருவருட்பா என எண்ணிலடங்கா ஞான நூற்கள் உள்ளன! எல்லா நூற்களும் ஒரே இறைவனை, பேரொளியை அடையவே வழிகாட்டுகின்றனர்!

சொல்லித்தர ஒரு குரு இருந்துவிட்டால் கேட்க நாம் தயார்தானே! அறியாமல் இருக்கும் நமக்கு அறிவிக்க வருபவர் தானே ஞானகுரு! அறியாமை இருளை அகற்றி நம்முள் ஞான ஒளியேற்றுபவரே ஞானசற்குரு! வாருங்கள்! கன்னியாகுமரிக்கு தங்க ஜோதி ஞான சபைக்கு!

வள்ளலார் இராமலிங்க சுவாமிகள் அருளால், ஆயிரம் பேர்களுக்கு சாப்பாடு கொடுப்பதை விட ஒரு ஆத்மா கடைத்தேற வழிகாட்டுவதே உன்னதமான சேவை என்பதை உணர்ந்ததால் ஞானசற்குரு சிவ செல்வராஜ் அய்யா அவர்கள் ஞானதானம் செய்து வருகிறார்கள். வயிற்றுபசிக்கு உணவு கொடுப்பதைவிட, கோடி பங்கு மேலானது ஆன்ம பசிக்கு உணவு கொடுப்பதே!! உலகத்திலேயே மிக மிக உயர்ந்த, உன்னதமான சேவை ஒவ்வொருவரையும் தன்னை உணரச்செய்ய வழிகாட்டுவதே! அய்யா அவர்கள் செய்து வருகிறார்கள்.

வள்ளலார் உரைத்த “சமரசம்”, ஜாதி மதம் இனம் மொழி எதுவும் இல்லாது உலக மக்கள் அனைவரும், “நாம் அனைவரும் இறைவனின் பிள்ளைகளே” என ஒன்றுபடுவதே! வள்ளலார் உரைத்த “சன்மார்க்கம்”, எவ்வித பேதமுமின்றி, எல்லோரையும் ஏற்றுக்கொண்டு இறைவனை அருட்பெரும்ஜோதியை அடைய முயலுவதேயாகும்! “முயற்சி திருவினையாக்கும்”!

நான்கு வேதம் புகழ்வது சமரச சன்மார்க்கம்!

பைபிள் கூறுவதும் சமரச சன்மார்க்கம்!

குர்ஆன் உரைப்பதும் சமரச சன்மார்க்கம்!

திருமந்திரம் திருவாசகம் திருவருட்பாவும் இதுவே!

“எல்லோரும் கூறுவது எல்லோரும் வாழவே”!

----ஆன்மீக செம்மல் ஞானசற்குரு சிவ செல்வராஜ்

கன்னியாகுமரி தங்க ஜோதி ஞானசபை

No comments:

Next previous home
Related Posts Plugin for WordPress, Blogger...