Friday, March 29, 2013

இரண்டரை கடிகையில் வருவேன்

இரண்டரை கடிகையில் வருவேன் என்றார் வள்ளலார்! மேட்டுக்குப்பம் சித்திவளாக திருமாளிகையை காப்பிட்டு உட்புகுமுன் சொன்ன
திருவார்த்தை இது! ஞான சற்குருமுன் அமர்ந்து ஞான தீட்சை பெறும்போது, நமது இரண்டு அறையாக விளங்கும் இரண்டு கண்களிலும்
ஒளியாக கணப்பொழுதில் உட்புகுந்து கொள்வார்!!

இப்போது நான் இங்கிருக்கிறேன்.   இனி எல்லோர் உள்ளத்திலும் புகுந்து கொள்வேன் என்று சொன்னது இதைத்தான்?!

இதற்கு மற்றொரு பொருளும் உண்டு! ஞான தீட்சை ஞான சற்குருவிடம் பெறுவது மூலம், நம் அகத்தில் பிரவேசிக்கிறார்! நம் ஆத்மாவை உணர்த்தி, கர்மவினைகளை நீக்கி ஞானம் பெற கூடவே இருந்து வழி நடத்துகிறார்!

புறத்திலே இரண்டரை கடிகை என்பது 150 வருடங்கள்! ஒரு கடிகை என்பது 60 தமிழ் வருடங்கள்! 2 1/2 கடிகை என்றால் 150 வருடங்களாகும்! நமது திருவருட்பிரகாச வள்ளலார் இராமலிங்க சுவாமிகள் ஒளியுடல் பெற்ற, மேட்டுக்குப்பம் சித்திவளாகத்தில் திருக்காப்பிட்டுக் கொண்ட ஜனவரி 30-ம் தேதியிலிருந்து 150 வருடம் கூட்டிப்பார்த்தால் 2024-ம் வருடம் ஆகும்.


 
வள்ளலார் மீண்டும் புது உத்வேகத்துடன் இன்னும் 12 வருடங்களில் 2024-ம் வருடத்தில் வடலூரில் தோன்றுவார்! எல்லோரது கண்களுக்கும் புலப்படுவார்! மரணமிலா பெருவாழ்வு உலகருக்கு அருள்வார்! திருஞான சம்பந்தரைப் போலவே எவ்வளவு பெரிய ஞான ரகசியம் இது! இனிவருங்காலம் சித்தர்கள் காலம் என்று வள்ளலாரே கூறுகிறார்! வடலூர் வள்ளல் பெருமானை காண வாருங்கள்! அருள்பெற உங்களை நீங்கள் தயார் படுத்துங்கள்! தகுந்த ஆச்சாரியன் மூலம் உங்கள் நடுக்கண்ணைத் திறக்கப்பெற்றுக் கொள்வது நலம்! என்றும், குருவை வணக்க கூசி நிற்காதே என்றும் தெளிவாக அழகாக கூறியருள்கிறார் திருவருட்பிரகாச வள்ளலார் அவர்கள்!

Tuesday, March 5, 2013

சாகாக்கால் - போகாப்புனல் - வேகாத்தலை


“சாகாக்கால்” “போகாப்புனல்” “வேகாத்தலை”

“தேறினேன் சாகாத கால்மேல் நின்று
தெளிந்துகொண்டு போகாத புனலைக் கண்டு
ஆறினேன் வேகாத தலையைக் கண்டு
அடங்கினேன் முப்பொருளு மடக்கினேன்”

சாகாக்கால்:

“சாகாத கால்” – நம் உடல்தான் அழியும் உயிர் உடலை விட்டு பிரிந்தால்! உயிருக்கு அழிவில்லை! அந்த உயிர் துலங்கும் இடம் நம் இரு கண்கள்!

ஒரு மனிதன் இறந்தபிறகு
6 மணிநேரம் வரை ஜீவ களையோடு இருப்பது அவன் கண்களே! கண்மட்டுமே! அதனால் தான் கண்தானம் செய்தவர்களின் கண்ணை அவர்கள் இறந்தபின் ஆறுமணி நேரத்திற்குள் எடுத்து வேறு ஒருவருக்கு வைக்கலாம்!

கண்ணிலே இருப்பது அவ்வளவு பெரிய மகத்துவம்! அப்படி சாகாத ஒளி துலங்கும் இடம் நம் கண்! கால் என்றால் திருவடி இறைவனுடைய திருவடியாகிய நம் கண்மணி ஒளியே “சாகாக்கால்” ஆகும்!! அந்த சாகாக்கால் – கண்மணி மேல் நின்று நிலைத்து தியானம் செய்யவேண்டும்!.

போகாப்புனல்:

“போகாப்புனல்” – சாகாக் காலாகிய கண்மணி ஒளியில் நின்று தவம் செய்யச் செய்ய கண்மணி ஒளி பெருகி உள் ஓடும் ஆறுபோல! ஆற்று வெள்ளம் போல் நெருப்பாறு பெருக்கெடுத்து ஓடும்.

நமது கண்ணிலிருந்து ஜீவஸ்தானம் வரை இரு மெல்லிய நாடி செல்கிறது! கண்மணியில் நம் தவத்தால் உருவாகும் அனல் இவ்விரு நாடி வழியாகத்தான் உள்ளே அக்னி ஸ்தானத்தை நம் ஜீவனை அடையும்!

புனல் – தண்ணீர் போல நெருப்பாறு ஓடிச்சென்று உள்ளே ஜீவனை அடையும்! நெருப்பாறு எப்படி போகும்?  மெல்லிய நாடிவழியாக கண்ணிலிருந்து உள்ளே ஜீவன்வரை செல்லும் மெல்லிய நாடி வழியாக போகும்! இந்த மெல்லிய நாடியே “மயிர்பாலம்” என்றும் அவ்வழியே உள்ஓடும் தீயையே “நெருப்பு ஆறு” என்றும் ஞானிகள் கூறினர்.

புனல் போக வேண்டிய இடத்தில் அனல் போகிறது! நீர் நிரம்பி ஓடுவதே ஆறு.  இங்கே தீ நிரம்பி மயிர்ப்பாலம் வழி நெருப்பாறு ஓடும்! புனல் போகா நாடி! இதையே “போகாப்புனல்” என்றனர்.  புனல் போகாததால் போகாப்புனல் என்றனர் அது மட்டுமா அங்கே அனல் போகுது?! போவது புனல் இல்லை அனல் என்பதை தெளிந்து கொள்ள அனுபவம் வேண்டும். தியான அனுபவம் வேண்டும்.

வேகாதத்தலை:

சாகாக் காலம் கண்ணில் நின்று நிலைத்து தவம் செய்தால் கண்வழி உள்ளே ஜீவஸ்தானம் வரை மயிர்பாலம் போல – மயிர் அளவு மெல்லிய நாடி வழியே கண்ணில் பெருகும் தீ போகும்! புனல் அல்ல அனல்தான் – மயிர்பாலம் வழியே நெருப்பாறு பாயும்! புனல் போகாத நிலை கண்டு அனல் போகும் திறம் அறிந்து தெளிந்து உணர்பவனே ஆத்ம சாதகன்! அப்படி, அனல் ஆறாக ஓடி ஜீவஸ்தானத்தை நம் தலை உல்மத்தியை அடைந்தும், வேகாமல் ஒளிவிட்டு பிரகாசிப்பதே நம் உயிராகிய அக்கினிகலைகூடிய ஜீவஸ்தானம்! பரமாத்ம சொரூபத்தின் அம்சமான ஜீவாத்மா! நெருப்பு ஆறாக பாய்ந்து வந்தாலும் அவியாமல், வேகாமல் எரியாமல் மேலும் ஒளிவிட்டு பிரகாசிக்கும் என்றால் அந்த ஜோதியை ஆதியை என்னென்பது?!  நம் தலையிலிருக்கும் தலையாய நம் ஜீவனே வேகாத தலையாம்!

“சாகாக்கால்” “போகாப்புனல்” “வேகாத்தலை” என்றால் என்ன? தெரியுமா எனக் கேளுங்கள் ஞான அனுபவம் உள்ளவரே அறிவர்! “மயிர்பாலம்” “நெருப்பாறு” எங்கே எனக் கேளுங்கள்! குருதீட்சை பெற்றவனே வாலை தீட்சை பெற்றவனே தசதீட்சை பெற்றவனே திருவடி தீட்சை பெற்றவனே பதில் கூறுவான்.


எல்லா தீட்சையும் ஒன்றுதான் என்பதே சத்தியமான உண்மை! இவ்வுண்மையை தெளிந்தவன் அடங்குவான்! முப்பொருளும் ஒன்றாகி போவது தெரிந்து கொள்வான்.  “முப்பொருளும் முப்பூவாச்சு ஆதி ஆதியென்ற குருவாச்சு!” முப்பூ என வைத்தியர்கள் என்னவெல்லாமோ சொல்வர்! முப்பூ என்றால் ஞானத்தில்
3 பூ.


மூன்று கண் மலர்களை குறிக்கும் வலது கண் சூரியன் அது ஒரு பூ.   இடதுகண் சந்திரன் அது ஒரு பூ.  இருகண்ணும் உள்ளே சேரும் அக்கினி அதுதான் நெற்றிக்கண் நடுக்கண் அது ஒரு பூ.  ஆக முப்பூ! மூன்று பூவும் சேர்ந்த நம் ஜீவஸ்தானமே பிரம்மஸ்தானம் பரப்பிரம்பம். அதுவே நமக்கு குருவாகி வின்னன்ர் நம்மை வழிநடத்தும்!


ஆதியே அநாதியே நம்முள்ளும் சூடி கொண்டிருக்கிறது.  இறைவனின் நம்முள்ளே இருந்தி வைத்துக்கொண்டு வெளியே ஊரிலேல்லாம் தெய்வத்தை தேடி அழைக்கிறோம்.
 
Next previous home
Related Posts Plugin for WordPress, Blogger...