Friday, September 27, 2013

திருமந்திரம் - பாடல் – 113

“விண்ணின் றிழிந்து வினைக்கீடாய் மெய்கொண்டு
தண்ணின்ற தாளைத் தலைக்காவல் முன்வைத்து
உண்ணின் றுருக்கியொ ரொப்பிலா ஆனந்தக்
கண்ணின்று காட்டிக் களிம்பறுத் தானே”.
பாடல் – 113


விண்ணின் றிழிந்து – நமது உடலில் விண் என்பது சிரசு, உச்சந்தலை. அதிலிருந்து ஒரு நாடி உள்ளே கீழே இறங்கி வருகிறது.

வினைக்கீடாய் மெய்கொண்டு – ஒவ்வொரு ஆன்மாவும் அவரவர் பூர்வ ஜென்மங்களில் செய்த பாவ புண்ணிய வினைகளுக்கு தக்கபடி உடல் எடுக்கிறது. இப்படி உருவான மனித தேகத்தில்

தண்ணின்ற தாளைத் தலைக்காவல் முன்வைத்து – குளிர்ச்சி பொருந்திய திருவடிகளை தலைக்கு காவலாக முன்பாகத்திலே வைத்து! காவல்காரன் வாசலில் தானே இருப்பான். நம் உடம்பின் உட்புகு வாசலாம் கண்ணே குளிர்ச்சி பொருந்திய இறைவனின் திருவடி தாமரை என்பதாகும்.

உள்ளே இருக்கும் இறைவனுக்கு வாயில் காப்போன் “கண்” “துவார பாலகர்கள்” – கண்மணியில் சிறு துவாரம் உள்ளது. அந்த கண்மணி இளசு. அதனால் பாலகர் என்றனர்.

துவாரம் கொண்ட பாலகர்கள் துவார பாலகர்கள். இறைவனின் வாயில் காவலர்கள்.

உண்ணின் றுருக்கி – நாம் நம் கண்மணி ஒளியை நினைத்து உணர்ந்து சும்மா இருக்கும் போது கண் உள்நின்று உருக்கி நம்மை நெகிழ்ச்சியடைய வைப்பது உள் ஒளியே ஆகும். உருகணும், உருகி உருகி தான் கரையணும்.

ஓரொப்பிலா ஆனந்தக் கண்ணின்று காட்டிக் – நாம் தவம் செய்யச் செய்ய கிட்டுவதே பேரானந்தம்.அது எதனால் கிட்டும் தெரியுமா? கண்ணில் நின்று களிதரும் ஒளியை காட்டுவதால்! நாம் நம் கண் ஒளியை கண்டாலே பேரானந்தம்.

களிம்பறுத் தானேநம் ஆன்மாவில் படிந்துள்ள களிம்பு நம் கர்மங்கள். இவைகளை ஒளியால் எரித்து சுத்தப்படுத்தினாலே ஆன்மா பரிசுத்தமாகும். கண் ஒளியைப் பெருக்கி உள்ளே கொண்டு போனால் உள் உள்ள ஆத்மஜோதியை மறைத்துக் கொண்டிருக்கும் வினைகள் அகன்று போகும். இதுவே ஞான தவம்.

Thursday, September 26, 2013

திருமந்திரம் - முதல் தந்திரம்என்னை நன்றாக இறைவன் படைத்தனன்
தன்னை நன்றாகத் தமிழ்ச் செய்யுமாறே
-
திருமந்திரம் - 81

"இறைவன் என்னை படைத்ததே தன்னைப் பற்றி தமிழில் உரைப்பதற்கே" என கூறுகிறார்.

"சாத்திரத்தில் சிறந்தது திருமந்திரம்" - திரு அருட் பிரகாச வள்ளலார்.

நான்கு வேதங்களையும் உபநிடதங்களையும் தன்னகத்தே கொண்டு மிகச் சிறந்த சாஸ்த்திர நூலாக விளங்குவது தான் திருமந்திரம்.

ஒரு மனிதன் உயர்வடைய வேண்டும் என்றால் அவன் படிக்க வேண்டியது திருமந்திரம் என்றார் வள்ளலார்.முதல் தந்திரம்

"ஒன்றவன் தானே இரண்டவன் இன்னருள்
நின்றவன் மூன்றினுள் நான்குணர்ந் தான்ஐந்து
வென்றவன் ஆறு விரிந்தனன் ஏழும்பர்ச்
சென்றனன் தானிருந் தாணுணர்ந் தெட்டே” பாடல் - 1

ஒன்றவன் தானே - இறைவன் ஒருவனே.

இரண்டவன் இன்னருள் - பரமாத்மாவாகிய ஏக இறைவனே ஜீவாத்மாவாக எல்லா ஜீவராசிகளிலும் துலங்குகிறார். நமது உடலில் உயிர் ஒன்று. அதை அடைய வழியாகிய விழிகள் இரண்டு ஆக இறைவன் அருள் விளங்குவது இரு கண்களில்!

நின்றனன் மூன்றினுள் - உடலில் உயிராகி துலங்கும் இறைவன், சூரிய கலையாக சிவமாக வலது கண்ணிலும், சந்திர கலையாக சக்தியாக இடது கண்ணிலும், இரு கண்களும் உள்ளே சேரும் இடத்தில் அக்னிகலையாகவும் ஆக மூன்று நிலையாக விளங்குகிறார்.

நான்கு உணர்ந்தான் - நான்கு வேதங்களாகிய ரிக், யாஜுர், சாம, அதர்வண வேதங்களாக உணர்த்தப்படுபவனே இறைவன். அவை சரியை கிரியை யோகம் ஞானம் எனும் நான்கு வழிமுறைகளை போதித்து ஜீவர்களை பக்குவிகளாக்குகிறது. அவைகளை அந்தக்கரணம் நான்கு வழி அதாவது மனம், புத்தி, சித்தம், அகங்காரம் வழி உணர வைத்து முக்தியை தருகிறது.

ஐந்து வென்றனன் - ஐம்புலன்கள் இறைவன் வழி திரும்பினால் மட்டுமே பேரின்பம்.

ஆறு விரிந்தணன் - நமது இரு கண்களாகி வெள்ளை விழி, கரு விழி, கண்மணி என மூன்று இரண்டு ஆகி ஆறுமுக - இரு கண் ஒளியாகுவும் துலங்குகிறார்.
இரு கண் உள் ஆறு போல் ஒளி பாய்ந்து செல்லும் தன்மையாக உள்ளார். நெருப்பாறு!

ஏழு ஊம்பர் சென்றனன் - ஆறு ஆதாரங்களையும் கடந்து ஏழாவது சகஸ்ர தளத்தையும் ஊடுருவி நடுவில் துலங்குபவன்.

தான் இருந்தான் உணர்ந்து எட்டே - இறைவன் "தான்" சிறு ஒளியாக நம் உயிராக இருந்து ஆண்டு கொண்டிருக்கிறான். "தான்" ஆகிய இறைவன், "நான்" ஆகி என் உடலிலே கோயில் கொண்டு உள்ளான்.
நாம் உணர்ந்து தான் அறிய முடியும். நம்முள் இருக்கும் நம் ஜீவனாகிய அந்த இறைவனை நாம் எட்டி பிடிக்க வேண்டுமானால் அதற்கு ஒரே வழி "எட்டேயாகும்". எட்டு என்றால் எண்ணில் "8", எழுத்தில் "அ". நமது கண்களே எட்டு.

அதை நீ எட்ட வேண்டும். எதற்கு? உள் இருக்கும் ஒளியான, ஜீவாத்மாவான அந்த இறைவனை எட்டி பிடித்திடவே!

இறுக பற்றிப் பிடி இறைவன் திருவடியாகிய நம் கண்களை. இறைவன் நம் கண்களில் ஒழியாக அந்த பரமனே இருப்பதை உணர முடியும்.

உடம்பூர் பவத்தை ஒளித்தருளும் மேன்மைக்
கடம்பூர்வாழ் என்இரண்டு கண்ணே

எத்தனையோ பிறவி எடுத்து உடம்பைப் பெற்று மனிதனாகப் பிறந்து இறந்து பிறந்து செய்யும் வினைகளை ஒளித்தருள்பவன் இறைவன் ஒருவனே. அவனை எங்கும் தேடி அலைய வேண்டாம். பார்க்கும் இடத்திலேதான் உள்ளான். மேன்மை வாய்ந்த கடம்பூர் தான் இறைவன் இருக்கும் ஊர். கடம்பூர் - கடம் ஆகிய ஊர் ! கடம் என்றால் உடல். கடத்தில் உள்ளே இருப்பதால் தான் கடவுள் என்று பெயர். உடலில் இரண்டு கண்களில் கண்மணியில் மத்தியில் ஊசிமுனை துவாரத்தின் ஒளியாக (தன்னைக் காட்டாது மறைந்து நின்று) துலங்குகிறான் இறைவன்...!
Next previous home
Related Posts Plugin for WordPress, Blogger...