Tuesday, April 22, 2014

இறைவனுக்குத் தொண்டு



இறைவனுக்காக தியாகம் செய்கிறேன், இறைவனுக்குத் தொண்டு செய்கிறேன் என்று கூறி எந்த உலக காரியம் நிகழ்த்தினாலும் அது இறைவனுக்கு உடன்பாடானதாய்த் தெரியவில்லை. 

"அன்பினால் ஒன்றி அகம் குழைவார்க்கு அன்றி என் பொன்மணியை எய்த ஒன்னாதே" என்பார் திருமூலர்.

இந்த அகம் குழைதல் என்பது இறைவன் அருள் இருந்தால் மட்டுமே செய்ய முடியும். இதனால் தான் இறைவனைப் பற்றிய தத்துவங்கள், வாழ்வியல் போதனைகள் பல வண்டி வண்டியாய் இருந்தும் அதைப் படித்துவிட்டுப் பயன் பெறுபவர்கள் மிகச் சிலரே!

இறைவனும் எமக்கு ஒரு வாசகத்தை சொன்னார். அதாவது "உலகமே புத்தகச் சந்தையாகி விட்டது. நீயும் புத்தகம் எழுதி சந்தையில் விற்றுப் பணம் செய்ய விரும்புகிறாயா?" என்றார்.

இதனுடைய உள்நோக்கம் என்னவென்றால், நல்ல செய்தி சொல்லப்பட்டது போல மனம் கருதும். ஆனால், கடைப்பிடிக்க பலராலும் முடியாது. இறையருள் இல்லாவிட்டால் தத்துவங்களால் வழிநடத்த முடியாது. இது தான் ஆன்மீக உலகம் கண்ட அனுபவம் ஆகும். பல அருளாளர்களின் முயற்சி தோல்வி காண இதுவே காரணம்.

தத்துவங்களைப் படைக்கும் கர்த்தாக்களும் நமது போதனைகள் அனைவரையும் நெறிப்படுத்தும் என்று நம்பவும் இல்லை.

1330 குறள் எழுதிய வள்ளுவர் "கற்றதனால் ஆயபயன் என்கொல் வாலறிவனைத் தொழுவதே கற்பதன் நோக்கம்." என்றார். அவரே "நுண்ணிய நூல் பல கற்பினும், இறையருள் இல்லாவிட்டால் தனக்குள் வாழும் உண்மை அறிவே வெல்லும்" என்கிறார்.

3000 பாடல்கள் எழுதிய திருமூலர், "நுணங்கு கல்வியும் நூல்களும் என்ன பயன்?" என்கிறார்.

6000 பாடலுக்கு மேல் எழுதிய வள்ளலார், "இந்திர சாலம் மட்டும் சாலமல்ல, நூல் அனைத்தும் சாலமே!" என்கிறார்.

ஆயிரகணக்கில் பாடல்கள் எழுதிய பட்டினத்தார், "ஏற்றிக் கிடக்கும் எழுகோடி சாஸ்திரம் என்ன கண்டாய் ஆற்றில் கிடந்தது துறை தெரியாமல் அலைகின்றனையே!" என்கிறார்.

இப்படிப் பல அருளாளர்கள் தமது நூல்கள் பலருக்கும் படிக்கப் பயன்படும்; ஆனால் பக்குவம் பெறப் பயன்படாது என்பதை அறிந்து விட்டனர்.

No comments:

Next previous home
Related Posts Plugin for WordPress, Blogger...