Wednesday, May 14, 2014

அருட்பெருஞ்ஜோதி அகவல் - 24

இன்று ஒரு அகவல்ஓதாது உணர்ந்திட ஒளி அளித்து எனக்கே
ஆதாரமாகிய அருட்பெருஞ்சோதி (அகவல் வரி 24)

     தன்னைப் பற்றி வள்ளலார் கூறுகின்றார்.  அதாவது எந்த ஆசிரியரிடத்தும் சென்று கல்வி பயிலாமலேயே தான் எல்லா நூல்களையும் உணர்ந்து கொண்டதை அறிவிக்கின்றார்.  ஓதாது என்ற சொல் ஆசிரியரிடத்துச் சென்று கல்வி பயிலாததை மட்டுமின்றி எந்த நூலையும் தான் படிக்கவில்லை என்றும் வள்ளலார் கூறுவதாக அமைந்துள்ளது.

    வள்ளலார் தோன்றிய போதே ஞான அறிவுடன்தான் வந்தார் என்பதற்கு இதைவிட வேறு ஆதாரம் வேண்டுமோ?

    எந்தப் பள்ளியிலும் சென்று எந்த ஆசிரியரிடத்தும் எந்த நூலையும் ஓதாமலே எல்லாக் கலைகளையும் உணருமாறு ஒளி அளித்தது மன்றி என்னைத் தாங்கி வளர்த்து எனக்கு ஆதாரமாக அதாவது ஊன்று கோலாக விளங்கிய அருட்பெருஞ்சோதி என்கிறார்.

     ஓதாமல் உணருவது சாத்தியமா? சத்தியப் பெரு விண்ணப்பத்தில் தன்னைப் பற்றி வள்ளலார் கூறுவது:-

     "எல்லாமானவராயும் ஒன்றுமல்லாதவரையும், எல்லா அண்ட சராசரங்களின் அகத்தும் புறத்தும் நிறைந்து விளங்குகின்ற தனித் தலைமைக் கடவுளே! குமார பருவத்தில் என்னைக் கல்வியிற் பயிற்றும் ஆசிரியரையின்றியே என் தரத்தில் பயின்று அறிதற்கருமையாகிய கல்விப் பயிற்சியை எனதுள்ளத்தே யிருந்து பயிற்றுவித்தருளினீர்"

     ஓர் ஆசிரியரின்றி தான் அனைத்தையும் இறைவனிடமே அறிந்து கொண்டதாகக் கூறுகின்றார்.

     உபதேசக் குறிப்புகளில் வள்ளலார் கூறியுள்ளது.

"பத்து ஆள் சுமை ஒரு வண்டி பாரம்.  நானூறு வண்டிச் சுமை ஒரு சூல் வண்டி பாரம்.  சூல் வண்டி ஆயிரங்கொண்ட நூல்களை ஒரு ஜென்மத்தில் ஒருவன் அதி தீவிர ஜீவ முயற்சியால் படிக்கச் சிறிய உபாசனைச் சகாயத்தால் முடியும்.  அப்படிப்பட்டவன் ஆயிரம் ஜென்மம் எடுத்துப் படிக்கும் கலை அறிவை அருள் முன்னிடமாகச் சுத்த சிவ நோக்கத்தால் அறியத் தொடங்கினால் ஒரு கணத்தில் படித்துக் கொள்ளலாம்.  இது சத்தியம்."

     இதையே திருவருட்பாவிலும் ஒரு பாட்டில் குறிக்கின்றார்.

காரணமிது புரிகாரியமிது மேற் காரணக் காரியக் கருவிது பலவாய் 

ஆரணமாகம மிவை விரித்துரைத்தே அளந்திடும் நீ அவை அடைந்திடன் மகனே 

பூரண நிலை அனுபவ முறில் கணமாம் பொழிதினிலறிதி எப்பொருள் நிலைகளுமே 

தாரணி தனில் என்ற தயவுடையரசே தனி நடராஜ என் சற்குருமணியே
                                                                       (திருவருட்பா 3695)

     ஒவ்வொரு நூலையும் படித்துத்தான் அறிந்து கொள்ள வேண்டும் என்பதில்லை.  பூரண நிலை அனுபவம் ஏற்படும்பொழுது கணத்தில் எப்பொருள் நிலைகளையும் அறிய முடியும் என்கிறார்.

இன்னொரு பாட்டிலும் தான் கற்றது, கேட்டது, கண்டது, பெற்றது எல்லாம் இறைவனிடத்தே என்றும், தான் புரிந்தது பெருந்தவம் என்றும், இவ்வாறு தான் அடைந்தது அதிசயமே என்றுங் கூறுகின்றார்.

"சுற்றது மற்றவ்வழி மாசூதது என்றெண்ணாத்
தொண்டரரெலாங் கற்கின்றார் பண்டுமின்றுங் காணார்
எற்றதும்பு மணி மன்றில் இன்ப நடம்புரியும் 
என்னுடைய துரையே நான் நின்னுடைய அருளால் 
கற்றது நின்னிடத்தே பின் கேட்டது நின்னிடத்தே 
கண்டது நின்னிடத்தே உட்கொண்டது நின்னிடத்தே 
பெற்றது நின்னிடத்தே இன்புற்றது நின்னிடத்தே 
பெரிய தவம்புரிந்தேன் என் பெற்றி அதிசயமே  (திருவருட்பா 3044) 

தான் ஓதாது உணர்ந்ததைப் பற்றி வள்ளலாரே வெளிப்படுத்திய அகச் சான்றுகள் சிலவற்றைக் கண்டோம்.

அவரது முதல் மாணவராகக் கருதப்படும் தொழுவூர் வேலாயுத முதலியார் அவர்கள் சென்னை அடையாறு தியாசாபிகல் சங்கத்தார்க்கு அளித்த வாக்குமூலம் ஒன்றிலும் அடியிற் குறித்துள்ளவாறு கூறியுள்ளார்.

"இவர் தம் ஒன்பதாம் வயதிலேயே ஆரியர்களாலும், திராவிடர்களாலும் சரி சமானமாய் அபிமானித்தவர்.  அகத்தியர் முதலிய முனிவர்களால் எழுதப்பட்ட பாக்களை ஓதாமலே மனப்பாடமாய்ப் பாடும் நாவளத்தைப் பெற்றிருந்ததாகவும் சொல்லக் கேள்வி."


இவருக்கு முன்னும் அருணகிரியார், குமரகுருபரர்  போன்றோர் இறையருள் வல்லபத்தால் பாடல்கள் இயற்றினர் என்றும் அவர்களும் எந்த ஆசிரியரிடத்தும் கல்வி பயின்றவரில்லை என்றும் வரலாறு கூறுகின்றது.  எனவே ஓதாது உணர்தல் சாத்தியம் சாத்தியமே. 

Sunday, May 11, 2014

அருட்பெருஞ்ஜோதி அகவல் - 22

இன்று ஒரு அகவல்
 
 


ஒன்றென இரண்டென ஒன்றிரண்டென இவை
அன்றென விளங்கிய அருட்பெருஞ்சோதி (அகவல் வரி - 22)

     திருவருட்பாவிலே கையாளப்பட்டுள்ள சொற்களில் எளிதில் விளங்கிக் கொள்ள முடியாத சில வார்த்தைக்கட்குப் பொருள் மற்ற நூல்களிலோ அகராதிகளிலோ தேடாமல் திருவருட்பாவிலே தேட வேண்டும்.

     ஒன்றென இரண்டென என்பதற்கு ஒவ்வொருவர் மனதிலும் ஒவ்வொரு பொருள் வரலாம்.  ஆனால் வள்ளலார் எந்தப் பொருளில் இதை எழுதியிருப்பார் என்று ஆய்ந்து பொருள் கண்டால் உண்மைப் பொருளை அறியலாம்.

     ஒன்று, இரண்டு என்றவர் அடுத்து மூன்று என்னாமல் ஒன்றிரண்டு என்கிறார். அதாவது ஒன்று என்றது எதுவோ, இரண்டு என்றது எதுவோ அவை இரண்டும் சேர்ந்தது ஒன்றிரண்டு.

     திருவருட்பா கீர்த்தனைப் பகுதியில் வாரீர் சிதம்பரவல்லி சிவகாமவல்லி மணானரே வாரீர் என்று தொடங்கி 104 கண்ணிகளை இயற்றியுள்ளார்கள்.  அவற்றில்  43வது கண்ணியைக் காண்க.
     "உருவாய் அருவாய் உருவருவாய் இவை
       ஒன்றுமல்லீர் இங்கு வாரீர்
        என்றும் நல்லீர் இங்கு வாரீர்". (திருவருட்பா 4396)


   இந்த கண்ணியை ஆயுமிடத்து

ஒன்று             -  உருவம்
இரண்டு          -  அருவம்
ஒன்றிரண்டு -  உரு அருவம்

    ஒன்றிரண்டு என்ற சொல்  ஒன்றையும் இரண்டையும் சேர்த்து உருவருவம் ஆயிற்று.

    இரண்டாவது வரியில் இவை அன்றென விளங்கிய அருட்பெருஞ்சோதி என்கிறார்.   கீர்த்தனைக் கண்ணியிலும் இவை ஒன்றுமல்லீர் என்கின்றார்.  எனவே இந்த அகவல் வரிக்கு எல்லா வகையிலும் பொருத்தமான விளக்கமாக இந்தக் கீர்த்தனைக் கண்ணி விளங்குகிறது.

     இதுவரை தோன்றிய அருளாளர்கள் அத்தணைபேரும் எந்தச் சமயத்தவராய், எந்த மதத்தவராய் இருந்தாலும் இறைவனை ஒரு சாரார் உருவமாக இருப்பவன் என்றும், மற்றொரு சாரார் இல்லை, இல்லை இறைவன் அருவமாகவே இருக்கின்றான் என்றும், இவை இரண்டையும் மறுத்து வேறொரு சாரார் இறைவன் இரண்டுமாக அதாவது உருவருவமாக இருக்கின்றான் என்று கூறியுள்ளனர்.  இறைவனைப் பற்றிய எல்லா விளக்கங்களும் இந்த மூன்றினுள் அடங்கிவிடும்.

     வள்ளலார் இந்த அகவல் வரியில் தரும் விளக்கமோ என்னவெனில் உருவமாக (ஒன்றென) அருவமாக (இரண்டென) உருவருவமாக (ஒன்றிரண்டு) இவையெல்லாம் விளக்கம் அன்று என்று விளங்கிய அருட்பெருஞ்சோதி.

Wednesday, May 7, 2014

அருட்பெருஞ்ஜோதி அகவல் - 20

இன்று ஒரு அகவல்ஐயமும் திரிபும் அறுத்து எனது உடம்பினுள் 
ஐயமும் நீக்கிய அருட்பெருஞ்ஜோதி (அகவல் வரி 20)


     ஐயம் என்பது உண்டா, இல்லையா - நடக்குமா, நடக்காதா - வருமா, வராதா - முடியுமா, முடியாதா என்பது போன்று மனதிலே எழும் சந்தேகமாகும்.

     திரிபு என்பது ஒன்றை மற்றொன்றாகத் தவறாக நினைப்பது ஆகும்.  அதாவது இரவிலே ஒரு கட்டையைப் பார்த்துக் கள்வனோ என்று திகைப்பதும், கீழே வளைந்து கிடக்கும் ஒரு கயிறைக் பாம்பாக எண்ணிப் பயப்படுவதும், கிளிஞ்சலை வெள்ளியாக எண்ணி ஏமாறுவதும், பித்தளையைப் பொன்னோ என எண்ணுவதும் திரிபு அல்லது மயக்கம் என்பார்கள். 

    மார்பகத்திலே சளி பெருக மூச்சு விட முடியாமல் திணற வைக்கும் நோய்வயப்பட்டு மரணப் படுக்கையில் உள்ளவர்க்கு இவ்வாறு நிகழுமானால் மரணம் உடனே சம்பவிக்கும் என்பார்கள். இந்தச் சீதளத்தைத்தான் உடம்பினுள் ஐயம் என்கின்றார். 

     மனதிலே உண்டாகிய சந்தேகத்தையும் மயக்கத்தையும் அறுத்து எனது உடம்பினுள் இருந்த சீதளத்தால் ஏற்படும் ஈரச் சளியையும் நீக்கிய அருட்பெருஞ்சோதி.


Tuesday, May 6, 2014

அருட்பெருஞ்சோதி அகவல் - 18

இன்று ஒரு அகவல் 
ஏறா நிலைமிசை ஏற்றி என்றனக்கே
ஆறாறு காட்டிய அருட்பெருஞ்சோதி (அகவல் வரி - 16)

     தமது பன்னிரண்டாம் வயதில் தவ வாழ்க்கை ஆரம்பித்த வள்ளலார் பூத நிலை கடந்து, நாதம், பரவிந்து, பரநாதம், திக்கிராந்தம், அதிக்கிராந்தம் முதலிய அனுபவங்களை ஒவ்வொன்றாக அடைந்து முடிவாக சுத்த சிவ நிலை அனுபவத்தையும் பெற்றுக் கடவுளுக்கு என்னென்ன குணங்கள், வல்லபம், தன்மை முதலியன உண்டோ அவையனைத்தும் அவர் பெற்றுக் கடவுளாகவே விளங்குகின்றார். தூல தேகமாக இருந்த அவரது தேகம், சுத்த தேகமாக; பிரணவ தேகமாக, ஞான தேகமாக மாறியது.  இதுவரை யாரும் அடைந்திராத அனுபவங்களை அவர் அடைந்தார். 

     பிரமர்கள், நாரணர்கள், உருத்திரர்கள் மற்றவர்கள் யாரும் அடையாத அனுபவத்தை வள்ளலார் அடைந்தார். 

     உருத்திரர்கள் ஒரு கோடி நாரணர் பல் கோடி
   உறுபிரமர் பல கோடி இந்திரர் பல கோடி
      பெருத்த மற்றைத் தேவர்களும் முனிவர்களும் பிறகும்

    பேசிலனந்தக்கோடி ஆங்காங்கே கூடித்
       திருத்தமுறும் திருச்சபையின் படிப்புறத்தே நின்று 

     தியங்குகின்றார் நடங்காணும் நானொருத்தியேறி 
        மாநடங்காண்கின்றேன் என் மாதவந்தான் பெரிதே. 
                                     (திருவருட்பா 5776)

     தான் அடைந்த பூரண நிலை அனுபவத்தால் மன நிறைவடைந்த வள்ளலார் பூரிப்படைந்து என்னிடமிருந்து துன்பத்தைக் கழற்றி எறிந்து விட்டேன் கவலையை ஒழித்துவிட்டேன் - தூக்கத்தை துறந்து விட்டேன் - சாவையும் நோவையும் தவிர்த்து விட்டேன் - இறைவனின் செல்வப் பிள்ளையும் ஆயினேன் - எனக்கிது போதும் என்று ஆனந்த எக்களிப்பில் துள்ளுகிறார். 


   கட்டமும் கழன்றேன் கவலை விட்டோழிந்தேன்
கலக்கமும் தீர்ந்தனன் பிறவிச் சட்டமும் கிழித்தேன்   
   தூக்கமும் துறந்தேன் சாவையும் நோவையும் தவிர்ந்தேன் 
சிட்டமுமடைந்தேன் சிற்சபையுடையான் செல்வ மெய்ப்பிள்ளை
  என்றொரு பேர்ப் பட்டமுந் தரித்தேன் எனக்கிது போதும் பண்ணிய தவம் பலித்ததுவே.  (திருவருட்பா - 4736) 

   என்னைப் போல நோவாது நோன்பு கும்பிட்டவரும் சாவா வரம் எனைப் போல் அடைந்தவரும் இறைவனே நின்பேரருளை என்போலப் பெற்றவரும் எவ்வுலகில் யாருளர் நீ சற்றே அறை என்று இறைவனையே வள்ளலார் கேட்கின்றார். 

      நோவாது நோன்பு எனைப் போல் நோற்றவரும் எஞ்ஞான்றும் 
  சாவா வரம் எனைப் போல் சார்ந்தவரும் - தேவா நின் 
      பேரருளை என் போலப் பெற்றவரும் எவ்வுலகில் 
    யாருளர் நீ சற்றே அறை.   (திருவருட்பா - 5624)

இறைவன் இவ்வினாவிற்கு விடை அளித்திருக்கிறான்.  உன்னைத் தவிர உலகில் வேறு யாரும் தகுதியானவர் எனக்கில்லாததினால்தான் எல்லாம் வல்ல சித்துக்களை உனக்களித்தேன் என்று வள்ளலாரிடம் இறைவன் கூறினான். 

(ஆதாரம்) 
        எல்லாம் வல்ல சித்து எனக்கு அளித்து எனக்குனை
        அல்லாதிலையெனும் அருட்பெருஞ்சோதி
(அகவல்வரி 298)

    இதுவரை யாரும் அடையாத அனுபவ நிலைக்கு வள்ளலார் ஏறி அடைந்தார் என்று கூறினால் மட்டும் விளக்கம் முழுமையடையாது. மனிதராய்த் தோன்றி கடவுள் மயமானவர் வள்ளலார்.  தான் பெற்ற அந்தப் பேற்றை இந்த வரியில் வள்ளலார் விளக்குகின்றார்.

    இதுவரை யாரும் ஏறியறியாத அனுபவ நிலைக்கு என்னை ஏற்றி என் தனக்கு முப்பத்தாறு தத்துவங்கள் நிலையை விளக்குவித்தருளிய அருட்பெருஞ்சோதி 


ஆறாறு என்பதை 6 * 6 - 36 என்றால் தத்துவங்கள் 36. 

இது ஞான அனுபவ நிலையை குறிக்கிறது.  தெரிந்து கொள்வதற்கு www.vallalaar.com என்ற லிங் சென்று பார்க்கவும்.

Monday, May 5, 2014

திருமந்திர பாடல் – 6“அவனை ஒழிய அமரரும் இல்லை
அவனன்றிச் செய்யும் அருந்தவம் இல்லை
அவனன்றி மூவரால் ஆவதொன் றில்லை
அவனன்றி ஊர்புகு மாறறி யேனே
திருமந்திர பாடல் – 6

அவனை ஒழிய அமரரும் இல்லை – அவன் – சிவம் –பரமாத்மா – இறைவன் – ஒவ்வொரு அணுவுக்கும் அணுவாக அந்த இறைவன் தானே ஒளியாக துலங்குகிறார்! அப்படி இருக்க அவனன்றி யாரும் இல்லையே! எதுவும் இல்லையே! பின் அமரர் மட்டும் இருப்பாரா என்ன? சுருங்கக் கூறின் இறைவன் அவன் இல்லாத இடமே இல்லை. அவன் இன்றி யாருமே இல்லை!

அவனன்றிச் செய்யும் அருந்தவம் இல்லை – “அவன்” தான் இறைவன் – நம் உடலினுள் உயிராக – நம் ஜீவாத்மாவாக துலங்குகிறான். அவனாகிய இறைவன் நம் சிர உள் நடுவிருக்கும் இடத்தையடைய நம் கண்களே வாசல்நம் கண்களில் துலங்கும் ஒளியை பெருக்கும் தவம் செய்யும் முறையை சற்குரு மூலம் உபதேசம் தீட்சை பெற்று உணர்ந்து செய்யும் தவமே தவமாகும்! வேரு என்ன செய்தாலும் பலனில்லை. அவன் உள் இருப்பதை உணர்ந்து உடலினுள் கடக்க நாம் செய்யும் தவமே தவமாகும்! வேறு என்ன செய்தாலும் பலனில்லை! அவன் உள் இருப்பதை உணர்ந்து உடலினுள் கடக்க நாம் செய்யும் இத்தவம் ஒன்றே அருந்தவம் ஆகும்! உண்மை ஞான வழி இது ஒன்றே!

அவனன்றி மூவரால் ஆவதொன் றில்லை – இறைவனாகிய பரமாத்மாவின் அருளாக்ஞைப் படியே சிவன், ப்ரம்மா, விஷ்ணு ஆகிய மும்மூர்த்திகளுமே செயல்படுகிறார்கள்! அப்படியிருக்க வேருயாரால் என்ன செய்ய முடியும்? அவனின்றி ஓர் அணுவும் அசையாது.

அவனன்றி ஊர்புகு மாறறி யேனே – அவனன்றி – இறைவனின்றி – அவன் அருள் துலங்கும் இரு கண் ஒளியின்றி நாம் எப்படி அவன் இருக்கும் ஊர் – நம் உடலினுள் புகுவது எங்ஙனம்? நம் உடலாகிய இறைவன் குடியிருக்கும் ஊரினுள் புகு வழி நம் விழியேயாகும் என்பதை உணர வேண்டும். இறைவன் இருப்பது நம் உடலூர்! 

உடலூரில் வடக்கில் வடலூரில் பார்வதிபுரத்தில்- பார்வை – துலங்கும் இடத்தில் உள்ளே சத்தியமான ஞான சபையில் ஒளியாக தங்கஜோதியாக துலங்குகிறார்! போக வழி எட்டாகிய விழிகளே! அறியுங்கள்! இதுவே உண்மை! இதுவே ஞானம்!

அருட்பெருஞ்சோதி அகவல் - 16

இன்று ஒரு அகவல்       எல்லையில் பிறப்பெனும் இருங்கடல் கடத்தி என் 
அல்லலை நீக்கிய அருட்பெரும்ஜோதி (அகவல் வரி - 16

ஒளியுடலும், எல்லாச் சித்திகளும் தான் வென்றதை முன் வரியில் கூறினார்.  

ஒளியுடல் பெற்றவர்க்கு மரணம் நீங்கிவிடும்.  மரணத்தை வென்றவர் இறப்பதுமில்லை - மீண்டும் பிறப்பதுமில்லை.  

எல்லையில் பிறப்பு என்பதை எல்லை + இல் + பிறப்பு என்று பிரித்திக் கொண்டால் அளவிட முடியாத பிறப்பு என்று பொருள்படும்.  எல்லை என்ற சொல்லுக்கு முடிவு என்றும் பொருளுண்டு. 

மனித வாழ்வின் முடிவில் மரணம் ஏற்படுகிறது. யாராயிருந்தாலும் மரணத்தைச் சந்திப்பவர்கள் மீண்டும் பிறந்தே ஆக வேண்டும்.  ஏனெனில் ஜீவன் உடம்பெடுத்தே இயங்கும் என்றும் தனித்து இயங்காது என்றும் எடுத்துக் காட்டியுள்ளார்.

     ஒளியுடம்பு பெற்றதன் பயனாக, முடிவே இல்லாத இறப்பு பிறப்பு எனும் இருண்ட பிறவிக் கடலை நான் கடக்குமாறு செய்து பிறவி என்ற துன்பத்தை நீக்கிய அருட்பெரும்ஜோதி. 

"பிறவிப் பெருங்கடல் நீந்துவார் நீந்தார் 
இறைவன் அடிசேரா தார் (திருக்குறள்

பிறவி என்னும் பெருங்கடலை தாண்ட வேண்டுமானால் இறைவன் அடியை சேர வேண்டும் என்கிறார் திருவள்ளுவர்.  மேலும் இறைவன் திருவடி என்ன என்பதை கீழ்க்கண்ட லிங்கை கிளிக் செய்து தெளிவு பெறுங்கள். 

http://tamil.vallalyaar.com/?p=1500


"தொல்லை நம் பிறவி எண்ணின் தொடுகடல்
மணலும் ஆற்றா எல்லைய'  (சிந்தாமணி)

Friday, May 2, 2014

அருட்பெருஞ்சோதி அகவல் - 14

இன்று ஒரு அகவல் ஊக்கமும் உணர்ச்சியும் ஒளி தரும் ஆக்கையும்

ஆக்கமும் அருளிய அருட்பெரும்ஜோதி (அகவல் வரி - 14)

மனங்கடந்த பெரு வெளிமேல் அரைசு செய்து அருட்பெருஞ்ஜோதி ஓங்கும் என முன் வரியில் கூறப்பட்டது. 

சும்மா இருக்கும் சுகமல்லவா மனம் கடந்த பெரு நிலை.
  அது எளிதில் கிட்டுமா? நம்மால் ஆகக் கூடிய செயலா என்றெல்லாம் எண்ணி எண்ணி முயற்சி செய்யாமல் விட்டு விடுவோமோ என அஞ்சினாரில்லை நம் பெருமானார். 

பன்னிரண்டாண்டு தொடங்கித் தவ வாழ்க்கையை மேற்கொண்டார்.
  விடா முயற்சியும், அடைந்தே தீர வேண்டும் என்ற அழுத்தமான உணர்ச்சியும் கொண்டார்.  அவர் பட்டபாடு இவ்வளவு என்று அளவு சொல்ல முடியாது. 

ஆதாரம்:
 

      பனிரன்டாண்டு தொடங்கி இற்றைப் பகலின் வரையுமே
படியில் பட்ட பாட்டை நினைக்கில் மழையும் கரையுமே
     துனியாதந்தப் பாடு முழுதும் சுகமதாயிற்றே
துரையே நின் மெய்யருளிங்கெனக்குச் சொந்தமாயிற்றே
                                                 (திருவருட்பா
 5041) 

      ஈராண்டு தொடங்கி இற்றைப் பகலின் வரையுமே
எளியேன் பட்ட பாட்டை நினைக்கில் இரும்பும் கரையுமே
      ஏராயந்தப் பாடு முழுதும் இன்பமாயிற்றே
 
இறைவா நின் மெய்யருளிங் கெனக்குச் சொந்தமாயிற்றே
                                              (திருவருட்பா
 5042)

இவ்வாறு அரும்பாடுபடுவதற்கு வேண்டிய ஊக்கமும், எப்பாடுபட்டாலும் அடைந்தே தீர வேண்டும் என்ற மிக மிக அழுத்தமான உணர்ச்சியும் ஆண்டவன் அருளினான்.   அதன் பயனாகத்தான் அவருடைய தூல உடம்பு ஒளி உடலாக மாறியது.  எல்லாச் சித்திகளும் அவருக்குக் கைவரப் பெற்றன.  தான் கொண்ட விடா முயற்சியாலும், அடைந்தே தீர வேண்டும் என்ற அதி தீவிர உணர்ச்சியாலும் ஒளி தேகமும் எல்லாம் செய் வல்லபமும் அவர் பெற்றார். 

ஊக்கமும் உணர்ச்சியும் ஒளி தரும் யாக்கையும் சித்தி வல்லபமும் தான் தன் முயற்சியால் அடைந்தேன் என்று கூறாமல் எல்லாம் அருட்பெருஞ்சோதியானது அவருக்கு அருளியதாம்.
 

Next previous home
Related Posts Plugin for WordPress, Blogger...