Wednesday, May 14, 2014

அருட்பெருஞ்ஜோதி அகவல் - 24

இன்று ஒரு அகவல்ஓதாது உணர்ந்திட ஒளி அளித்து எனக்கே
ஆதாரமாகிய அருட்பெருஞ்சோதி (அகவல் வரி 24)

     தன்னைப் பற்றி வள்ளலார் கூறுகின்றார்.  அதாவது எந்த ஆசிரியரிடத்தும் சென்று கல்வி பயிலாமலேயே தான் எல்லா நூல்களையும் உணர்ந்து கொண்டதை அறிவிக்கின்றார்.  ஓதாது என்ற சொல் ஆசிரியரிடத்துச் சென்று கல்வி பயிலாததை மட்டுமின்றி எந்த நூலையும் தான் படிக்கவில்லை என்றும் வள்ளலார் கூறுவதாக அமைந்துள்ளது.

    வள்ளலார் தோன்றிய போதே ஞான அறிவுடன்தான் வந்தார் என்பதற்கு இதைவிட வேறு ஆதாரம் வேண்டுமோ?

    எந்தப் பள்ளியிலும் சென்று எந்த ஆசிரியரிடத்தும் எந்த நூலையும் ஓதாமலே எல்லாக் கலைகளையும் உணருமாறு ஒளி அளித்தது மன்றி என்னைத் தாங்கி வளர்த்து எனக்கு ஆதாரமாக அதாவது ஊன்று கோலாக விளங்கிய அருட்பெருஞ்சோதி என்கிறார்.

     ஓதாமல் உணருவது சாத்தியமா? சத்தியப் பெரு விண்ணப்பத்தில் தன்னைப் பற்றி வள்ளலார் கூறுவது:-

     "எல்லாமானவராயும் ஒன்றுமல்லாதவரையும், எல்லா அண்ட சராசரங்களின் அகத்தும் புறத்தும் நிறைந்து விளங்குகின்ற தனித் தலைமைக் கடவுளே! குமார பருவத்தில் என்னைக் கல்வியிற் பயிற்றும் ஆசிரியரையின்றியே என் தரத்தில் பயின்று அறிதற்கருமையாகிய கல்விப் பயிற்சியை எனதுள்ளத்தே யிருந்து பயிற்றுவித்தருளினீர்"

     ஓர் ஆசிரியரின்றி தான் அனைத்தையும் இறைவனிடமே அறிந்து கொண்டதாகக் கூறுகின்றார்.

     உபதேசக் குறிப்புகளில் வள்ளலார் கூறியுள்ளது.

"பத்து ஆள் சுமை ஒரு வண்டி பாரம்.  நானூறு வண்டிச் சுமை ஒரு சூல் வண்டி பாரம்.  சூல் வண்டி ஆயிரங்கொண்ட நூல்களை ஒரு ஜென்மத்தில் ஒருவன் அதி தீவிர ஜீவ முயற்சியால் படிக்கச் சிறிய உபாசனைச் சகாயத்தால் முடியும்.  அப்படிப்பட்டவன் ஆயிரம் ஜென்மம் எடுத்துப் படிக்கும் கலை அறிவை அருள் முன்னிடமாகச் சுத்த சிவ நோக்கத்தால் அறியத் தொடங்கினால் ஒரு கணத்தில் படித்துக் கொள்ளலாம்.  இது சத்தியம்."

     இதையே திருவருட்பாவிலும் ஒரு பாட்டில் குறிக்கின்றார்.

காரணமிது புரிகாரியமிது மேற் காரணக் காரியக் கருவிது பலவாய் 

ஆரணமாகம மிவை விரித்துரைத்தே அளந்திடும் நீ அவை அடைந்திடன் மகனே 

பூரண நிலை அனுபவ முறில் கணமாம் பொழிதினிலறிதி எப்பொருள் நிலைகளுமே 

தாரணி தனில் என்ற தயவுடையரசே தனி நடராஜ என் சற்குருமணியே
                                                                       (திருவருட்பா 3695)

     ஒவ்வொரு நூலையும் படித்துத்தான் அறிந்து கொள்ள வேண்டும் என்பதில்லை.  பூரண நிலை அனுபவம் ஏற்படும்பொழுது கணத்தில் எப்பொருள் நிலைகளையும் அறிய முடியும் என்கிறார்.

இன்னொரு பாட்டிலும் தான் கற்றது, கேட்டது, கண்டது, பெற்றது எல்லாம் இறைவனிடத்தே என்றும், தான் புரிந்தது பெருந்தவம் என்றும், இவ்வாறு தான் அடைந்தது அதிசயமே என்றுங் கூறுகின்றார்.

"சுற்றது மற்றவ்வழி மாசூதது என்றெண்ணாத்
தொண்டரரெலாங் கற்கின்றார் பண்டுமின்றுங் காணார்
எற்றதும்பு மணி மன்றில் இன்ப நடம்புரியும் 
என்னுடைய துரையே நான் நின்னுடைய அருளால் 
கற்றது நின்னிடத்தே பின் கேட்டது நின்னிடத்தே 
கண்டது நின்னிடத்தே உட்கொண்டது நின்னிடத்தே 
பெற்றது நின்னிடத்தே இன்புற்றது நின்னிடத்தே 
பெரிய தவம்புரிந்தேன் என் பெற்றி அதிசயமே  (திருவருட்பா 3044) 

தான் ஓதாது உணர்ந்ததைப் பற்றி வள்ளலாரே வெளிப்படுத்திய அகச் சான்றுகள் சிலவற்றைக் கண்டோம்.

அவரது முதல் மாணவராகக் கருதப்படும் தொழுவூர் வேலாயுத முதலியார் அவர்கள் சென்னை அடையாறு தியாசாபிகல் சங்கத்தார்க்கு அளித்த வாக்குமூலம் ஒன்றிலும் அடியிற் குறித்துள்ளவாறு கூறியுள்ளார்.

"இவர் தம் ஒன்பதாம் வயதிலேயே ஆரியர்களாலும், திராவிடர்களாலும் சரி சமானமாய் அபிமானித்தவர்.  அகத்தியர் முதலிய முனிவர்களால் எழுதப்பட்ட பாக்களை ஓதாமலே மனப்பாடமாய்ப் பாடும் நாவளத்தைப் பெற்றிருந்ததாகவும் சொல்லக் கேள்வி."


இவருக்கு முன்னும் அருணகிரியார், குமரகுருபரர்  போன்றோர் இறையருள் வல்லபத்தால் பாடல்கள் இயற்றினர் என்றும் அவர்களும் எந்த ஆசிரியரிடத்தும் கல்வி பயின்றவரில்லை என்றும் வரலாறு கூறுகின்றது.  எனவே ஓதாது உணர்தல் சாத்தியம் சாத்தியமே. 

No comments:

Next previous home
Related Posts Plugin for WordPress, Blogger...