Wednesday, November 26, 2014

ஜீவகாருண்யமே முக்திக்கு முதற்படிதிருவருட்பா வசனம்
:

      நம்முடைய தலைவராகிய கடவுளை நாமடைவதற்கு அவரெழுந்தருளியிருக்கும் கோட்டையின் சாவியாகிய அருள் வேண்டும்.  இவ்வருள் அன்பினாவல்லது வேறு வகையால் அடைவது அரிது, இவ்வன்பு ஜீவகாருண்யத்தால் அல்லது வேறுவகையால் வராது.  ஜீவகாருண்யத்தின் லாபமே அன்பு.

      இந்த ஜீவகாருண்யம் உண்டாவதற்கு ஏது, அல்லது துவாரம் யாதெனில்.

      கடவுளுடைய பெருமையையும் தரத்தையும் – நம்முடைய சிறுமையையும் தரத்தையும் ஊன்றி விசாரித்தலே – அன்னிய உயிர்களுக்கு இம்சை செய்யாதிருத்தலே ஜீவகாருண்யம்.  இதுதான் முத்தியடைவதற்கு முதற்படியாயிருக்கிறது ஆதலால், இதைப் பாதுகாத்தல் வேண்டும்.

கடவுள் தயவும் – ஜீவ தயவும்:
தயவென்பது இரண்டு வகைப்படும், யாதெனில்,
             1. கடவுள் தயை
             2. ஜீவ தயை ஆகிய இரண்டு.

கடவுள் தயை – என்பது இறந்த உயிரை எழுப்புதல், தாவரங்களுக்கு மழை பெய்வித்தல், மிருக, பட்சி, ஊர்வனவாதிகளுக்கு ஆகாரம் நியதியின் படி, அருட்சத்தியால் ஊட்டி வைத்தல், சோமசூரியாக்கினிப் பிரகாசங்களைக் கால, தேச, வண்ணம் பிரகாசஞ் சேவித்தால், பக்குவிகளுக்கு அநுக்கிரகித்தல், அபக்குவிகளைச் செய்யவேண்டிய அருள் நியதியின்படி, தண்டனை செய்வித்துப் பக்குவம் வருவித்தல்.

ஜீவதயை – என்பது தன் சத்தியினளவு உயிர்க்கு உபகரித்தல், அல்லது ஆன்மநேய சம்பந்தம் பற்றித் தயாவடிவமாய் இருத்தல்         
                                         – திருவருட்பா வசனம்

      மெய்விளக்கே விளக்கல்லால் வேறு விளக்கு இல்லையென்றார் மேலோர், மெய்யுள்ளே விளக்கை ஏற்றி உயரத்தூண்ட ஓர் உபாயம் வேண்டும் என்று திருநாவுக்கரசர் கீழ்காணும் பாடலில் குறிப்பிடுகிறார்.

      மெய்யுள்ளே விளக்கை ஏற்றி வெண்டள வுயரத் தூண்டி
      உய்வதோர் உபாயம் பற்றி உகக்கின்றேன் உகவாவண்ணம்
      ஐவரை அகத்தே வைத்தீர் அவர்களே வலியர் சாலச்
      செய்வது ஒன்று அறியமாட்டேன் திருப்புக லூரனீரே.

விளக்கம்: என் உடம்பின் உள்ளே, உனது அருளாலே ஞான விளக்கை ஏற்றி, மும்மலங்களைக் கடக்க வேண்டியும், துவாதசாந்தத்தை எய்த வேண்டிய அளவு மேலே தூண்டி, பிறவித்துன்பத்தினின்று உய்ந்து வீடு பெறற்கேற்றதொரு உபாயத்தை உறுதியாகக் கடைப்பிடித்து, அதனாலே சிறிது மகிழ்கின்றேன்.  இம்மகிழ்ச்சிக்கு இடையூறாக ஐம்புலன்களாகிய ஐவரை வைத்தீர்.  அவர்களே என்னிலும் மிகவலியவர்கள் ஆதலால் இன்னது செய்வதென்று அறியமாட்டாதவனாயிருக்கிறேன்  திருப்புகலூர்ப் பெருமானே.

      விறகில் தீப்போலவும், பாலிற்பொருந்திய நெய் போலவும் கண்மணிச் சோதியானாகிய இறைவன் மறைய நின்றுளன்.  சற்குரு முகத்திலறிந்து, உணர்வைப் பெற்று தியானம் செய்ய முகத்திற்கு முன் அருட்பெரும்ஜோதி ஆண்டவன் நிற்பான் என்று திருநாவுக்கரசர் கீழ்காணும் பாடலில் குறிப்பிடுகிறார்.

      விறகில் தீயினன் பாலிற்படு நெய்போல்
      மறைய நின்றுளன் மாமணிச் சோதியான்
      உறவு கொல்நட் டுணர்வு கயிற்றினால்
      முறுக வாங்கிக் கடையமுன் நிற்குமே.

விளக்கம்:  விறகில் (அரணிக் கட்டையினிடத்தில் உள்ள) தீயைப் போலவும், நல்லபாலில் உள்ள நெய்யைப் போலவும், கண்மணியில் உள்ள ஜோதியைப் போலவும் மறைவாக இருக்கிறான்.  அவனிடத்து உறவு (ஒன்றி இருத்தல்) என்னும் கோலை நட்டு, உணர்வு என்னும் கயிற்றினால் நன்றாக, கடைந்தால் (அவ்வாறு கடைபவர்க்கு) அவன் முகத்திற்கு முன்னே வெளிப்பட்டு நிற்பான்.

குறிப்பு: விறகிலுள்ள தீயும் பாலிலுள்ள நெய்யும், கண்மணியிலுள்ள ஜோதியும் வெளியில் தோன்றாது மறைந்து நிற்பதுபோல அருட்பெரும்ஜோதி ஆண்டவன் நமது கண்ணுக்குத் தோன்றாமல் மறைந்திருக்கின்றான்.

      விறகில் உள்ள தீ முறுக வாங்கிக் கடைய முன்னிற்கும், அதுபோல தாமத குணமுள்ளவர்க்கு அருட்பெரும்ஜோதி ஆண்டவன் மிக்க பிரயாசைப்பட்டு தம்மனத்தே பக்தியை நிலை நாட்டித் தீவிரமான விவேகத்தால் உண்மைப் பொருளை மீண்டும் மீண்டும் சிந்திப்பதால் விளங்குவான்.

      பாலில் உள்ள நெய், வாங்கிக்கடைய முன்நிற்கும் அது போல இராஜஸ குணமுள்ளவர்க்கு அருட்பெரும்ஜோதி ஆண்டவன் மிக்க பிரயாசையின் பக்தியாலும், அன்பாலும் மீண்டும் மீண்டும் சிந்திப்பதன் பயனாக விளங்குவான்.
      கண்மணியிலுள்ள ஜோதி, கடைய முன்நிற்கும், அது போல சத்துவ குணமுள்ளவர்க்கு அருட்பெரும்ஜோதி ஆண்டவன் சிறிது முயற்சியோடு உள்ளத்தில் உணர்ந்து தியானித்த உடனே தோன்றுவான்.

      நமக்குள்ளேயே மறைந்து நிற்கும் ஆண்டவனை சற்குருமுகத்திலறிந்து, உணர்வைப் பெற்று தம்மை மறந்து தியானிப்பார்க்கு அருட்பெரும்ஜோதி ஆண்டவன் காட்சியளிப்பான் என்பது முடிந்த பொருள்.

      அருட்பெரும்ஜோதி ஆண்டவனை தெரிசித்து இரண்டறக் கலந்து பிறப்பும் இறப்பும் அறுதலே வாழ்க்கையின் பயனாகும்.

      உள்ளத்தில் மறைந்திருக்கும் மாயனை, உள்ளத்தினுள்ளே ஞானவிளக்கை ஏற்றி வைத்தவனை விட்டுப்பிரியாது அவனை நாடி வலையில் அகப்படுத்தினேன் என்கிறார் கீழ்க்காணும் மூன்றாம் திரு அந்தாதி –
94 ஆம் பாடலில்

      உய்த்து உணர்வு என்னும் ஒளிகோள் விளக்கேற்றி
      வைத்தவனை நாடி வலைப் படுத்தேன் – மெத்தெனவே
      நின்றார் இருந்தான் கிடந்தான் என்நெஞ்சத்துப்
      பொன்றாமை மாயன் புகுந்து.

விளக்கம்:  ஞானம் என்னும் பிரகாசமான விளக்கை மனத்தில் ஏற்றிவைத்து, ஆண்டவனை சிந்தித்து பெற்று வலையில் அகப்படுத்தினேன். எனக்கு வசமாக்கிக் கொண்டேன்.  அம்மாயனும் என் நெஞ்சிலே விட்டு பிரியாமல் புகுந்து மெல்ல எழுந்தருளி நின்றான்.  வீற்றிருந்தான், பள்ளி கொண்டான்.      மூலாக்கினியின் ஒளியைக்கண்டு கொள்வார்க்கு மேலேயுள்ள சிவவொளியானது நிலைத்து நின்று மோட்சத்தை கொடுத்து விடும் என்று திருமூலர் கீழ்காணும் பாடலில் குறிப்பிடுகிறார்.

      ஆன விளக்கொளி யாவ தறிகிலர்
      மூல விளக்கொளி முன்னே யுடையவர்
      காண விளக்கொளி கண்டுகொள் வார்கட்கு
      மேலை விளக்கொளி வீடெளி தாநின்றே 683

விளக்கம்:  மூலவிளக்காகிய ஒளியுள்ள நேத்திரத்தை முகத்துக்கு முன்பாக உடையவர்கள் சாதனையால் ஏற்பட்ட யாவற்றையும் விளக்கி வைக்கும் சிவவொளியாவதை அறியவில்லை. அஞ்ஞான தத்துவங்களும் இருட்டும் நிறைந்த நெற்றிக்குக்கிழக்கில், சிரசின் மேல்பாகத்தில் பன்னிரண்டு அங்குல அளவில் பிரணவுச்சியானது யாதொருகளங்கமுமற்று சுத்த வெண்மையாய்யெழும்பி நிற்கும் பொருளையே மேல் சொன்னா பெயர்களால் அழைக்கப்படும்.

      நீருஞ் சிரசிடைப் பன்னிரண்டங்குலம்
      ஓடும் உயிரெழுந் தோங்கி உதித்திட
    நாடுமின் நாதாந்த நம்பெரு மான்உகந்
   தாடும் இடந்திரு அம்பலந் தானே.
2764

               சிதம்பரமென்னுமூர் சாட்சிக்காக, காட்டப்பட்டிருக்கிறது.  இரு நேத்திரங்களிலும் சிவன் பரவிந்து சொரூப மாய்யிருப்பதால் “சிவனு மருகிருக்க” என்றார்.  சாட்சியாக காட்டியிருப்பதும், சிவன்தங்கி இல்லாதிருக்குமிடைத்தையே வெற்றம் பலம் என்றார்.

      நாதசத்தியானது பிந்து சத்தியை இழுக்கும் குணமுடைய தாதலால் பிறந்திடத்தைத் தேடுதே என்றார்.  நாதசத்தியின் மறுபிறப்பே அமுத பாலானதால் “கறந்திடத்தை நாடுதே” என்றார்.

      அருள்ஒளி விளங்க உள்ளத்தில் விளக்கை ஏற்ற ஆணவ இருள் அகன்று உளம் முழுவதும் பிரகாசிக்கச் செய்யும், என்று திரு அருட்பிரகாச வள்ளலார் அருட்பெரும்ஜோதி அகவலில் குறிப்பிடுகிறார்.

“அருளொளி விளங்கிட ஆணவ மேனுமோர்
இருளற வென்னுளத் தேற்றிய விளக்கே.” – அகவல்


      உள்ளத்தில் உள்ள சுடர் விளக்குதான் நித்திய விளக்கு.  புறத்திலே விளக்கை ஏற்றினால் அது புற இருளைப் போக்கும்.  ஆகாயத்தில் காணக்கூடிய சூரிய, சந்திர ஒளிக்கோளங்கள் புற இருளைப்  போக்கவல்லது எக்ஸ் கதிர், மின் காந்த அலையொளி போன்றவைகளால் உடலுக்குள்ளே இருப்பதைக் காணலாமே ஒழிய அகத்தில் உள்ள அறியாமையாகிய ஆணவ இருளைப் போக்க முடியாது.

      உள்ளத்தில் உள்ள ஒளி விளக்கில் மனம் ஒருமைப் பாடடைந்து தியானம் செய்ய அருள்ஒளி பிரகாசிக்கும்.  அதில் ஆணவ இருள் மறையும்.  ஆணவ இருளை அகற்ற வல்லது தான் அருள்ஒளி.

 துன்புறு தத்துவத் துரிசெலா நீக்கிநெல்
லின்புற வென்றுளத் தேற்றிய விளக்கே”அகவல்

      சீவர்களைத் துன்புறுத்தும்
96 தத்துவங்களைத் தத்துவத்துரிசு என்றார். (துரிசு – குற்றம்), இவற்றை எல்லாம் போக்கி கொள்ளுவது எளிதல்ல.  96 தத்துவங்களைத் தனித்தனியே கடந்து தத்துவாதீத மேல் நிலையில் சிவமாகிய ஒளிநிலையில் மனம்ஒத்து தியானம் செய்ய, துரிசு நீங்கி ஆனந்தம் உண்டாகும்.  அக விளக்காகிய நித்திய தீபத்தில் நித்தியானந்த வாழ்வு பெறலாம்.

“மயலற வழியா வாழ்வுமேன் மேலும்
இயலுற வென்றுளத் தேற்றிய விளக்கே.”
அகவல்

      அருள் உண்மை வெளிப்படாத மயக்க நிலையே மயல் எனப்படுவது.  மனித பிறவி மருள் நிலை நீங்கி அருள் நிலை அடையும் வரை மென்மேலும் பிறப்பும் இறப்பும் உண்டாகும் மேற்படி மயக்கம் நீங்க அழியா வாழ்வு உண்டாக உள்ளத்தில் ஒளி விளக்கை ஏற்றி நித்திய வாழ்வு என்றென்றும் விளங்க அருட்பெரும்ஜோதி நம் உள்ளத்தில் பிரகாசித்துக் கொண்டிருக்கிறது.

      பொறி, புலன்களினாலும் மனத்தினாலும் ஜீவ அறிவாலும் சற்றும், விளங்காத சுடர் விளக்கு இதுவாகும்.

      “சுடர் விளக்காயினும் நன்றாய் விளங்
      கிடத் தூண்டுகோல் ஒன்று வேண்டும்.”

என்ற சான்றோர் மொழிக்கு ஏற்ப குருமுகத்தில் அறியவும்.ஜோதி வழிபாடு

ஜோதி வழிபாடு
 
     ஜோதி வழிபாடு என்னும் சொற்களை நன்கு சிந்தித்துப் பொருள் கொள்வோமானால் உண்மை ஞானம் நம்மால் உணர முடியாமல் போகாது.

     ஜோதி - உள்ளத்தில் ஒளிர்கின்ற ஜோதி

     வழிபாடு – அப்பியாசம் (தியானப்பயிற்சி) ஆராதனை

     ஜோதி வழிபாடு என்பது உள்ளத்தில் ஒளிர்கின்ற ஜோதியில் மனத்தை ஒன்றுபடுத்தி தியானம் செய்வதாகும்.

     இந்த உண்மை பொருளை அறியாது, புறத்தில் விளக்கை ஏற்றி வைத்து, அந்தச் ஜோதியையே இரு கைகளைக் கூப்பித் தலை வணங்குகிறார்கள்.  தலை வணங்குவது மட்டும் போதாது உள்ளம் வணங்குதல் வேண்டும் அதாவது கீழ்ப்படிந்து தியானிக்க வேண்டும்.  புறத்திலே விளக்கை ஏற்றி வைத்து அதனை வணங்குவதால், மனம் தூய்மை அடைந்து பக்தி ஏற்படுமே தவிர, உண்மை ஞான நிலை வெளிப்படாது.  உள்ளத்தில் ஒளி விட்டுக் கொண்டு இருக்கின்ற அருட்பெரும்ஜோதியை அறிந்து செயல் படுபவர்கள் அரிதினும் அரிதாவர்.

     கடவுளைக் காண எண்ணம் இருந்தும் பலருக்கு இரகசியம் வெளிப்படாததற்க்குக் காரணம், ஜோதி வழிபாடு என்பதற்குக் கை கூப்பித் தலை வணங்குவது என்று நெடு நாட்களாகப் பழக்கத்தில் வந்திருப்பதே ஆகும்.  இதனால் உலகம், ஏமாற்றம் அடைந்தது என்று கூறலாம்.

     ஜோதி வழிபாடு என்பதற்கு, இடக்கை, வலக்கை இரண்டையும் ஒன்று சேர்த்து தலை வணங்குதல் என்று உரைசெய்து பலனற்றிருக்கிறார்கள்.

     இடக்கை என்பது சந்திர கலையையும், வலக்கை என்பது சூரிய கலையையும் குறிப்பதாகும்.   மேலும் இடது கண் சந்திரன், வலது கண் சூரியன் என்று சித்தர் சிவவாக்கியார் பாடல்களில் கூறுவார். இரு கண்களில் உள்ள ஒளிக் கலைகளை உள் முகமாகச் சுழி முனையில் ஒன்று சேர்க்கும் தந்திரத்தை அறிந்து தியானம் செய்வது என்பது தான் பொருத்தமான பொருளாகும்.

     தலையையோ, உடலையோ தாழ்த்தி வணங்குவதால் பலன் ஏற்படாது.  எண்சாண் உடம்பிற்குச் சிரசே பிரதானம் என்பது முது மொழி.  ஞான கர்மத்திற்கு இந்திரியங்களே முக்கிய பொருள்களாய் இருப்பதாலும், அந்த ஞானேந்திரியங்களாகிய மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகியவை தலையினிடமே இருப்பதனாலும், இவற்றைப் பக்குவப் படுத்தியே தியானப் பழக்கம் செய்து ஞானத்தையடைய வேண்டியிருக்கின்றது.

     தலைவணங்குதல் என்பது, தலையில் உள்ள ஞானேந்திரியங்கள் ஐந்தையும் ஒரு முகப்படுத்தும் தந்திரத்தை சற்குரு முகத்தில் அறிந்து தியானப்பழக்கம் செய்வது என்பது தான் சிறந்ததும், பொருத்தமானதும் ஆகும்.

     ஒளிஒன்றே அண்டபகிர்அண்டம் எல்லாம் விளங்கி ஓங்குகின்றது.  எல்லாம் ஒளிமயமே அன்றி வேறில்லை.  அருட்பெரும்ஜோதியை உள்ளத்தில் அறிந்து தொழுத மாத்திரத்தில் உள்ளிருக்கும் மகத்தான ஞானச் செல்வங்கள் வெளிப்பட்டு நிற்கும்.  இதுஉண்மை அறிந்த ஞானிகளின் அனுபவமாகும்.

     ஞானிகள் உள்ளத்தில் இறைவனை ஜோதி மயமாகக் கண்டு அதில் மனத்தை ஒருமைப் படுத்தித் தம்மை மறந்து தியனாம் செய்து வெற்றிபெற்றார்கள்.  ஜோதி வழிபாடு உலகில் உள்ள எல்லா மதத்தினர்க்கும், உடன் பாடானதும் பொதுவானதும் ஆகும்.

     ஜோதி வழிபாட்டுக்கு முதலாவது உபதேசமே நேத்திரதைப் பற்றியது.  அதனால் திருமந்திரத்தில் முதலாவது உபதேசத்தில், திருமூலர் அடியிற் காணுமாறு பாடியுள்ளார்.

    
விண்ணின் றிழிந்து வினைக் கீடாய் மெய் கொண்டு
     தண்ணின்ற தாளைத் தலைக் காவல் முன்வைத்து
     உண்ணின்று ருக்கியொ ரொப்பிலா ஆனந்தம்
     கண்ணின்று காட்டிக் களிம்பறுத் தானே.
133

     சிதா காயத்திலிருந்து இறங்கி பீசத்திலுள்ள சுக்கிலத்தோடு கலந்து வினைக்கு ஈடாகத் தேகமேடுத்து, குளிர்ச்சி நிறைந்திருக்கும் படியான திருவடியாகிய நேத்திரங்களைச் சிரசின் முன் காவலாக வைத்து, உள்ளிருந்து உறுக்கி ஒப்பில்லாத ஆனந்தத்தைக் கண்ணின் மூலமாகக் காட்டி பரம் பொருளாகிய இறைவன் இருட்டை ஒழித்தான்.

     “அண்டங்கள் ஏழும் அகண்டமும் ஆவியும்
     கொண்ட சராசர முற்றுங் குணங்களும்
     பண்டை மறையும் படைப்பளிப் பாதியுங்
     கண்ட சிவனுமென் கண்ணின்றி யில்லையே.”
 
1871 – திருமந்திரம்

     பூதாண்டங்கள் ஐந்தோடு துவாதசாந்த வெளி அதோமுக வெளியாகிய ஏழும் எல்லாமாய் நிற்கும் நிலையும் சீவனும் அடைந்து சர-அசரங்கள் பூராவும் எல்லா குணங்களும் பழமையாகிய வேதங்களும் சிருஷ்டி, ஸ்திதி, சங்காரமும் தெரிசிக்கப்பட்ட சிவமும் என்னுடைய நேத்திரத் திலடங்கி இருப்பதேயல்லாமல் வேறில்லை.

     “ஆதியந்தம் ஆயினாய் ஆலவாயில் அண்ணலே
     சோதியந்தம் ஆயினாய் சோதியுள் ஓர் சோதியாய்
     கீதம்வந்த வாய்மையாற் கிளந்தருக்கி னார்க்கலால்
     ஓதி வந்த வாய்மையால் உணர்ந்துரைக்க லாகுமே”

                                       திருஞான சம்பந்தர் தேவாரம்

     திரு ஆலவாயில் அமர்ந்த பெருமானே முதலும் முடிவும் ஆனாய், முடிந்த முடிவான சோதியுமானாய் ஒளிக்குள் ஓர் ஒளியாய், பாடவல்ல திறமை உள்ளவர்கள் சொல்லினால் விவாதிக்கிறவர்களுக்கு அல்லாது, உண்மை உணர்ந்து ஓதி வந்த வாய்மையில் உரைத்தல் கூடும்.

     அருட்பெரும்ஜோதி ஆண்டவரது உண்மையாய் அறிந்து அவரைத் துதிப்பதற்கு நூற்கல்வியினால் பயன் பெறமுடியாது. குரு அருள் ஒன்றினால் தான் பயன்பெற முடியும்.

     “உடம்பெனும் மனை அகத்துள் உள்ளமே தகளியாக
     மடம்படும் உணர்நெய் அட்டி உயிர்எனும் திரிமயக்கி
     இடம்படு ஞானத்தீயால் எரிகொள இருந்து நோக்கில்
     கடம்பமர் காளை தாதை கழலடி காணலாமே”

                                     - திருநாவுக்கரசர் – தேவாரம்  

     உடம்பாகிய வீட்டுக்குள், உள்ளமாகிய தகளியில், அறியாமை நீங்குதற்குத் காரணமான நல் உணர்வாகிய நெய்யை ஊற்றி, உயிர் எனப்படும் திரியினைச் செம்மையாக அமைத்து, ஞானச் சுடரை (குருமுகமாய் இருந்து) ஏற்றிக் கொண்டு, அந்த ஞான ஒளியில் ஆழ்ந்து இருந்து நோக்கினால் இறைவன் திருவடிச் சுடரை காணும் பேறு பெறலாம்.     உலகம் நிலையற்றது என உணர்ந்து சிவமே ஜோதி என்ற தெளிந்த அறிவு உண்டாகும் போது சிவத்தின் அருள் ஒளிசிவனிடம் சேருமாதலின் திரி-உயிர், ஒளி, அறிவு ஆயிற்று.

     சோதியே! சுடரே! சூழ் ஒளி விளக்கே!”  மாணிக்கவாசகர் திருவாசகம்.
     பஞ்சேந்திரிய சக்திகள் பிரணவத்தில் சேருவதால் பிரணவவுச்சி பிரகாசிக்கும் அதையே சோதியே என்றார்.

     “சூரிய, சந்திர அக்கினிகளின் கூட்டுறவால் ஏற்பட்ட கதிர்களையே சுடரே என்றார்.

     பிரணவத்தின் மத்தியிலுள்ள இருதய கமலத்தைச் சுற்றி பிரகாசிக்கும் அக்கினியையே சூழ் ஒளி விளக்கே என்றார்.

     கேழில் பரஞ்சோதி! கேழில் பரங்கருணை!
     கேழில் விழுப்பொருள்கள்,”
மாணிக்கவாசகர் திருவாசகம்

     பரமாணு சம்பந்தப்பட்டதும், சமானமற்றதுமான அக்கினி சொரூபத்தையே கேழில் பரஞ்சோதி என்றார்.

    உவமையற்ற பரமாணுவானது சீவர்களிடம் கலக்கும் இயற்கைத் தன்மையே கருணை என்பதாகும்.  அதனால் தான் கேழில் பரங்கருணை என்றார்.

     பிராணன், அபானன், திருவடிகள், நாதகலை, விந்து கலை, பஞ்சேந்திரிய சத்திகள், இருதய கமலம், பஞ்சபூத சத்திகள் முதலியவற்றையே கேழில் விழுப்பொருள் என்றார்.

    

     “கண்ணாய் ஏழு உலகும் கருத்தாய் அருத்தமுமாய்
     பண்ணார் இன்தமிழாய்ப் பரமாய பரஞ்சுடரே
     மண்ணார் பூம்பொழில் சூழ்மழ பாடியுள் மாணிக்கமே
     அண்ணா நின்னை  அல்லால் இனியாரை நினைக்கேனே”

                         - சுந்தர மூர்த்தி நாயனார் – தேவாரம்
     ஏழு உலகங்களிலும் உள்ள உயிர்களுக்கெல்லாம் அறிவைத் தருதலின் கண்ணாகி, அவ்வுயிர்கள் எல்லாம் குறியாக கொள்ளுதற்குரிய மெய்ப்பொருள் கண்ணாகியும், இசை நிறைந்த இனிய தமிழ் மொழியுமாகி, எவற்றுக்கும் மேலாகிய பேரின்ப ஒளியும் ஆனவனே! மண்வளம் மிக்க பூஞ்சோலைகள் சூழ்ந்த திருமழபாடியுள் எழுந்தருளிய விலையில்லா மாணிக்கமே! மனதிற்கு எட்டாதவனே! உன்னையன்றி இனி வேறுயாரை நினைப்பேன்?

குறிப்பு: ஒளி அறிவித்தாலன்றித் தானே அறியாத்தன்மையதான உயிர்க்குச் சிவபெருமான் உயிர், ஒளி, அறிவாய் விளங்கி அறிவூட்டுதலின் வாழ்க்கையில் குறியாகக் கொள்ளுதற்குரிய அணு வடிவான மெய்பொருள் கண்தானே என்பதை உணர்த்துதலின் கருத்தாய அருத்தமுமாய் என்றார்.  அன்பு பெருகும்போது அதற்குப் போக்கு வீடாகக் கண்ணீர் வெளிப்படுதற்க்குக் கண்ணே துணையாகும்.  அவ்வாறு தமிழ்ப் பண்களால் பாடும் போது நிலையான பரஞ்சுடரே.  பேரின்ப மயமாதலின் பண்ணார் இந்தமிழாய்ப் பரமாய பரஞ்சுடரே என்றார்.

     “முடிச்சோதியாய் உனது முகச்சோதி மலர்ந்ததுவோ?
     அடிச்சோதி நின்ற தாமரையாய் அலர்ந்ததுவோ?
     படிச்சோதி அடையொடும் பல்கலனாய் நின்பைம்பொன்
     கடிச்சோதி கலந்ததுவோ? திருமாலே கட்டுரையே!”
      -  நம்மாழ்வார் திருவாய்மொழி


     முடிச்சோதி உன் திருமுகத்தின் கண்களில் சோதியாய் மலர்ந்ததோ? உனது ஒளியாகிய திருவடிநிற்கும் கண்கள் தாமரையாய் மலர்ந்ததோ?

     படி – வாசற்படி, பூமி, சம்பளம், ஓரளவு உடலினுள் நுழையும் இடமாகிய கண்ணே வாசற்படியாயிற்று.

     படிச்சோதி – கண்ணாகிய வாசற்படியில் உள்ள சோதி படி – இன்பம், ஒளி.

    கடிச்சோதி – இன்பமயமான சோதி.  இன்பமயமானசோதி அருட்பெரும் சோதியோடு கலந்ததோ? நீயே சொல்வாயாக.

     “உளியிட்ட கல்லையும் ஒப்பிட்ட சாந்தையும் ஊத்தையறப்
     புளியிட்ட செம்பையும் போற்றுகிலேன் உயர்பொன்னெனவே
     ஒளியிட தாளிரண் டுள்ளே யிருந்துவ துண்மையென்று
     வெளியிட் டடைத்துவைத் தேனினி மேலோன்றும் வேண்டிலனே”
-    பட்டினத்தார்
     உளியினால் செதுக்கப் பட்டகல்லையும், சுண்ணச் சாந்தினால் உருவாகச் செய்யப்பட்ட உருவத்தையும், களிம்பற புளியினால் தேய்த்து கழுவப்பட்ட செம்பினாலாகிய உருவத்தையும் ஆதரிக்க மாட்டேன்.  உயர்ந்த பொன் போன்று ஒளி உள்ள இரண்டு திருவடிகளையும் கண்களின் உள்பாகத்தில் இருத்துவது உண்மையானதென்று அவற்றை வெளியில் கண்ணிடத்திலிட்டு அடைத்து வைத்தேன்.  இதைத் தவிர இனி வேண்டப்படுவது ஒன்று மில்லை.

குறிப்பு: சாட்சியாக ஆலயங்களில் கல்லினாலும், சாந்தினாலும், செம்பினாலும் ஆக்கப்பட்டு, அறியாதவர்களால் வணங்கப்பட்ட தெய்வ உருவம் போன்றவற்றை இனி வணங்காது, சுடர் அடிகளைக் கொண்டு ஞான கர்மத்தைச் செய்வது தவிர மற்றவை பலனற்றவை என்பது கருத்து.


      ஜாதி,  மத, இன பேதமின்றி யார் வேண்டுமானாலும் வரலாம்! அருள் பெறலாம்!
    மாதா பிதாவை பெற்ற நீவிர்! உடலை தந்த  மாதா பிதாவை போற்றும் நீவீர் நம் உடலுக்குள் உயிரை தந்த இறைவனை உணர வேண்டாமா? அடைய வேண்டாமா?

    உடலுக்கும்,  உயிருக்கும் உள்ள சம்பந்தம் என்ன  என்பதை  அறிவிப்பவர் உணர்த்துபவர்  தான் குரு“!  அப்படிப்பட்ட ஒரு குருவை தேடுங்கள்.
    எத்தனையோ ஞானிகள்  இந்திய புண்ணிய பூமியிலே !. உரைத்த  ஞானமோ  ஒப்பற்றது!. இறை உண்மை! சத்தியம்!.

    ஆனால் புரிந்து கொள்பவர் அரிதினும் அரிதாகவே  உள்ளனர்!. படித்து அறிய இந்த பிறவி போதுமா?

    குருவிடம் பாடம் கேட்டு,  குருவிடம் உபதேசம் பெற்று.  ஞான தீட்சை  பெற்றாலே  உண்மை புரியும்! குருவருளின்றி திருவருள் கிட்டாது.

    நாம் நடமாடும் கோயில் என்பதை நமக்குள் உயிராக,  ஆத்மாவாக பிராணனாக எல்லாம் வல்ல எங்கும் நிறைந்த இறைவனே இருக்கிறான் என்பதை தீட்சை பெற்று உணர்ந்து கொள்ளலாம்! வாரீர்! வாரீர்!

குரு உபதேசம் உண்மை விளக்கம் !

குரு தீட்சை அனுபவ பாடம் !

மேலும் விபரங்கள் அறிய 
www.vallalyaar.com

Monday, November 24, 2014

திரு விளக்கு பூஜை


     தமிழ்நாட்டில் தொன்று தொட்டு ஒவ்வொரு வீட்டில் உள்ள மக்கள் அதிகாலையில் எழுந்திருந்து, நீராடி, அங்கம் சுத்தி செய்து, புற இருளைப் போக்கக் குத்துவிளக்கை ஏற்றி வைத்து அதற்கு வணக்கம் செய்து வருவது வழக்கத்தில் இருந்து வருகின்றது.  அதன் பிறகே மற்ற வேலைகளைச் செய்து வருகிறார்கள்.

     விளக்கு தன்னையும் விளக்கிக் காட்டி, பிறபொருள்களையும் விளக்கிக் காட்டுவதினால் விளக்கு என்னும் பெயரைப் பெற்றது.  குத்துவிளக்கை ஏற்றி வைத்து வணக்கம் செய்து வருவதால், உடல் நலம்பெற்று பக்தி ஏற்படுமே தவிர உண்மை ஞான இரகசியம் வெளிப்படாது.  இன்று நாடெங்கும் குத்துவிளக்குபூசை நடந்து வருகிறது, என்றாலும் இதில் அடங்கி இருக்கும் இரகசியத்தை சற்குரு மூலமாக அறிந்து வழிபாடு செய்பவர்கள் மிகவும் அரிது.

     குத்துவிளக்கை மூன்று பாகமாக பிரித்துப் பார்க்கலாம், விளக்கின் அடிப்பாகம் ஒன்று, அடுத்தது விளக்கின் தண்டு பாகம் இரண்டு, தண்டிற்கு மேல் ஐந்துமுகம் எரிகின்ற பாகம் மூன்று, அந்த குத்துவிளக்கின் மேல்பாகத்தில் தான் ஐந்து தீபங்கள் எரிகின்றது.


     உலகில் உள்ள விளக்கைப் பற்றி தெரிந்து வைத்திருக்கின்ற நாம் உலகோர் உள்ளத்தில் ஏற்றப்பட வேண்டிய விளக்கைப் பற்றியும் அறிந்து கொள்ள வேண்டும்.  குத்துவிளக்கைப் பற்றி அழுகணி சித்தர் ஒருபாடலில் கீழ்க்காணும் படி குறிப்பிட்டிருக்கிறார்.

     குத்து விளக்கேற்றி என் கண்ணம்மா,
     கோலமிட்டுப் பாரேனோ”.

நம்முடைய தேகமே ஒரு குத்து விளக்கிற்கு ஒப்பாகும்.  இது மூன்று பாகமாக பிரிந்திருக்கிறது.  குத்துவிளக்கை போலவே நம் தேகத்தையும் மூன்று பாகமாக பகுத்துப் பார்க்கலாம். 

1.   இடுப்பில் இருந்து பாதம் வரையில் ஒரு பாகம்.

2.   பின்புறம் இடுப்பிற்கு மேல் இருந்து கழுத்து வரையில் உள்ள முதுகுத்தண்டு இரண்டாவது பாகம்.

3.  முதுகுத்தண்டிற்கு மேல் சிரசின் உச்சி வரையில் உள்ள முகமே மூன்றாவது பாகம்.

     முகத்திலே தான் ஞானப் புலன்கள் ஐந்தும் ஒளிவிளக்காக அமைந்திருக்கிறது.

     குத்துவிளக்கு எது என்பதை அழுகணி சித்தர் குறிப்பிடுவதாவது, அது என் ‘கண் அம்மா’ என்று ஒரு பெண்ணை அழைப்பது போல் பரிபாடையாய் குறிப்பிட்டிருக்கிறார்.  இந்த இரகசியத்தை குரு முகத்தில் அறிந்து, தன்னை மறந்து தியானம் செய்தால், முகத்திற்கு முன்பல வண்ணக் கோலங்களைக் காணலாம்.  கோலம் போடுவதற்கு முன் புள்ளிவைத்து அதைச் சுற்றி வட்ட வட்டமாக கோலம் போடுகின்றனர்.  அதைப் போலவே நேத்திரத்தில் உள்ள அணு சொருபமான பேரொளியில் மனதை ஒருமைப்படுத்தி தன்னை மறந்து தியானம் செய்தால், உள்ளொளியைச் சுற்றிலும் ஒளி ஒளிர்வதைக் காணலாம்.  மேலும் முகத்திற்கு முன் பலவண்ணங்களாகவும் காட்சியளிக்கும்.

     குத்து விளக்கின் மேல் பாகத்தில் ஐந்துமுகம் எரிகின்றது போல நம் தேகத்தின் மேல் பாகமாகிய முகத்தில் தான் ஞான புலன்கள் ஐந்தும் ஒளி விளக்காக அமைந்திருக்கின்றது. இதனை திருமூலர் கீழ்காணும் சிவபூசை என்னும் பாடலில் குறிப்பிடுகிறார்.

உள்ளம் பெருங்கோயில் ஊனுடம் பாலயம்
வள்ளற் பிரானார்க்கு வாய் கோபுரவாசல்
தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம்
கள்ளப்புலனைந்துங் காளா மணி விளக்கே. –
1823

விளக்கம்: ஈகைத்தன்மையுடைய பரமசிவத்திற்கு மனமானது கோயிலாகவும், பிரணவ உச்சித்துவாரமானது கோபுரவாசற் படியாகவும் மாமிசத்தாலாகிய தேகமானது சிவன் லயப்படும் படியான இடமாகவும், சீவனானது சிவலிங்கமாகவும், சூதாகிய பஞ்சேந்திரியங்கள் சிறுமணி விளக்குகளாகவும் நன்றாய் அறிந்தவர்களுக்கு ஏற்படும்.

     குத்து விளக்கின் மேல் பாகத்தில் தான் ஐந்துமுகம் எரிகின்றது.   அதுபோல நம் சிரசில் உள்ள ஞானப் புலன்கள் ஐந்தும் ஒளி விளக்காக அமைந்திருக்கின்றது.  இந்த ஞானப் புலன்களை ஒன்றுபடுத்தும் தந்திரதினாலேயே ஞானத்தையடைய வேண்டும்.

     கீழ்மூலம், மேல்மூலம் என இரண்டு, இதில் கீழ்மூலத்தை தள்ளிவிட்டு நாம் அடைய வேண்டியது மேல் மூலம்.  இது சிரசில் உள்ளது.  இதைக் கீழ்க்காணும் அகஸ்தியர் துறையறி விளக்கம் என்ற பாடலில் காணலாம்.

“மூலமுத லாறுதளம் கீழே தள்ளி
முதிர்ந்து நின்ற மேலாறு தலத்தை நோக்கி”

     இறைவன் திருவடி ஆகிய ஒளி, தலையின் உச்சியில் உள்ளது. இதுவே மூலம் என்று திருமூலர் திருமந்திரத்தில் கீழ்கண்டவாறு குறிப்பிடுகிறார். 

தலையடி யாவதறி யார்கா யத்தில்
தலையடி யுச்சியில் உள்ளது மூலந்
தலையடி யான அறிவை யறிந்தோர்
தலையடி யாகவே தானிருந்தாரே
2426

               விளக்கம்: சரீரத்தில், திருவடிசிரசில் பொருந்தி இருப்பதை அறியவில்லை.  சிரசின் உச்சியில் உள்ளது திருவடி இதுவே மூலமாகும். சிரசில் உள்ள சுடர் அடியாகிய அறிவை அறிந்த ஞானிகள் தலையடியாகவே பொருந்தி இருந்தார்கள், ஆகவே சிரசில் உள்ள சுடர் அடியே மூலாதாரம்.

ஜீவன் இருக்கின்ற ஸ்தானம்.

     இந்ததேகத்தில் ஜீவன் இருக்கின்ற ஸ்தானம் 5.  அதில் முக்கியமானது 2.  அவையாவை? கண்டம், சிரம், சிரத்திலுள்ளது பரமாத்மா வென்னும் விசேஷ ஜீவன் இது இறந்து விடும்.

     மேற்படி தேகத்தில் பிரமபேதம் கீழும் மேலுமிருப்பதால், நாமடைய வேண்டிய பதம், பிரமபதம், லிட்டுணுபதம், ருத்திரபதம், மயேசுரபதம், சதாசிவபதம் முதலிய பதங்களின் இடம், இந்த மனித தேகத்தில் கண்டம் முதலிய உச்சிவரையில் அடங்கியிருக்கின்றன.  இந்த பதங்களுக்கு சுவர்க்கம் என்று பெயர். நரகம் நரகாதிகளுக்கிடம் – உந்தி முதல் குதபரியந்தம்.
இயமனிருக்குமிடம் குதத்திற்கு இடது பாகம்.திருவருட்பா வசனபாகம்

நமது தேகத்தில் கண்டத்திருக்கு கீழ் உள்ள பாகத்தை முடம் என்கிறோம்.   முண்டத்தால் ஒன்றையும் அறிய இயலாது.  ஆகையால் நாம் ஞானமடைய வேண்டிய அருட்பெரும்ஜோதி ஆகிய பாதம் சிரசில் பதிக்கப்பட்டிருக்கின்றது என்பதை நன்கு உணரலாம்.

விளக்கு – ஒளி, தீபம்
பூசை   - அன்னதானம், ஆராதனை

     ஆராதனை – பூசை, வணக்கம், வழிபாடு விளக்கு பூசை என்பது –உள்ளத்தில் உள்ள ஒளிக்கு வணக்கம் செய்வது அல்லது வழிபாடு செய்வது என்பது தான் பொருத்தமானதும் உண்மையானதுமாகும்.

     பூசை – அன்னதானம் – நடமாடும் கோயிலாக உள்ள பசித்தவர்க்கு அன்னமளித்து பசியை போக்குவது தான் பூசை.  அதுமனித தேகாலயத்திலுள்ள சிவத்துக்கே பிரயோசனமாகும்.  இதுவே ஜீவகாருண்யம்.  இதனை திருமூலர் மகேசுவர பூசை என்றே குறிப்பிட்டிருக்கிறார்.

படமாடக் கோயிற் பகவற் கொன் றீயில்
நடமாடக் கோயில் நம்பர்க் கங்காகா
நடமாடக் கோயில் நம்பர்க் கொன்றீயில்
படமாடக் கோயிற் பகவற்க தாமே
1857
விளக்கம்: கையினால் சித்திரிக்கப்பட்ட கோயிலில் மந்திர ஆவாகனத்தினால் ஏற்படுத்தியிருக்கும் பகவானுக்கு ஒரு பொருளைக் கொடுத்தால் நடமாடிக் கொண்டிருக்கும் தேகாயலத்தில் உள்ள சிவனுக்கு அது பயன்படாது.  மனித தேகாலயத்திலுள்ள சிவனுக்கு ஒரு  பொருளைக் கொடுத்தால், குண்டலியானது அசைந்து கொண்டிருக்கும் மனித தேகாலயத்திலுள்ள சிவத்துக்கே பிரயோசனமாகும்.

மேலும் ஞான இரகசியத்தை அறிய கீழ்கண்ட வலை தளத்தை பார்க்கவும்.

Wednesday, November 12, 2014

சாகாக்கல்வி தரும் மரணமில்லா பெருவாழ்வு

சாகாக்கல்வி தரும் மரணமில்லா பெருவாழ்வுதங்கஜோதி ஞான சபை அறக்கட்டளை
கன்னியாகுமரி

எல்லா ஜீவராசிகளைப் போலவே மனிதனும் பிறக்கிறான், வளர்கிறான், படிக்கிறான்,  பொருள் ஈட்டுகிறான், திருமணம் செய்து கொள்ளுகிறான்,  பிள்ளை பெறுகிறான்,  முடிவில் உடலை கீழே விட்டுவிட்டு செத்துப் போகிறான்.  சில அசாதாரண மான மனிதர்கள், சித்தர்கள் செத்துப் போகாமல் ஜீவனை தன்னுள் ஒடுக்கி சமாதியாகிவிடுகிறார்கள்.   இன்னும் சில அசாதாரணமான தவசீலர்கள் தங்கள் தவவலிமையால் பஞ்சபூதத்தால் ஆன உடலை பஞ்சபூதத்தில் ஆன ஏதாவதொன்றில் மாற்றிக் கொள்கிறார்கள்.  இவை எல்லாவற்றையும் தாண்டிய நிலையே உடலையே  ஒளியாக்குவது. உடலை கீழே விடாமல் ஒளியாகிய  பேரொளியில் கரைந்து போவது. 

ஒளி உடம்படைந்த ஒருவரின் உடலில் மண் பூதமே இருக்காது.  அந்த உடலில் நெருப்பால் எரிக்க ஏதும் இருக்காது. எனவே ஒளி உடம்படைந்த ஒருவரின் உடலை அழிப்பதென்பது இயலாத காரியம்.  அப்படி ஒளி உடம்பு எடுத்து இறைவனோடு ஐக்கியமானவர்கள் பலர்.  அவர்களில் நந்தனார், பத்திரகிரியார், கருவூரார், மணிவாசகர், ஆண்டாள், திருஞான சம்பந்தர் ஆகியோர் சிலர்.  மகாவதார பாபாஜி கங்கை கரையில் ஒளியாக காட்சி கொடுத்தார் என்று கேள்விப்பட்டிருக்கிறோம்.   இயேசு பெருமான் கல்லறையில் இருந்து மூன்றாம் நாள் ஒளியாக உயிர்த்தெழுந்தார்.  1874ல் வடலூர் மேட்டுக்குப்பத்தில் நமது திருவருட்பிரகாச வள்ளலார் இராமலிங்கசுவாமிகள் ஒளியாகி அருட்பெரும் ஜோதி ஆண்டவருடன் இரண்டறக் கலந்தார். உலகம் உய்ய, மனிதன் மரணமில்லா பெருவாழ்வு பெற வடலூர் வள்ளல் பெருமான் வழிகாட்டுகிறார்.  

சாகாக்கல்வி:

சாகாக்கல்வி சாகாத நிலை பெற்றவர்கள் உபதேசித்தது.  மனிதன் சாகாமல் இருக்கமுடியுமா என்றால் முடியும் என்கிறார்கள் அவர்கள்.  எல்லா சராசரி மனிதர்களும் சாகாமல் இருக்க முடியும் என்கிறார்கள் சித்தர்கள்.  சாகாமல் இருப்பது எப்படி என்ற ரகசியம் காலங்காலமாக மறைத்து வைக்கப் பட்டு விட்டது.  அந்த ஞானத்தை, ரகசியத்தை பல சித்தர்கள் மறை பொருளாக சொல்லி வைத்தார்களே தவிர சராசரி மனிதன் புரிந்து கொள்ளும்படி ஏனோ அவர்கள் வெளிப்படுத்தவில்லை.  வள்ளலார் அவர்களே அந்த ரகசியத்தை எல்லா மனிதர்களும் எளிமையாக புரிந்து கொள்ளும் வண்ணம் தந்து திருவருட்பாவில் வெளிப்படுத்தி அருளினார்கள்.  வழிகாட்டியதோடு மட்டுமல்லாமல், வாழ்ந்தும் காட்டி, ஒளியுடல் பெற்று இறையோடு கலந்து நமக்கு கண் முன்னே ஒரு உதாரண புருஷனாக ஒளியுடலோடு வாழ்ந்து கொண்டும் இருக்கிறார்.


இறைவன் திருவிளையாடல்:

மனிதனை படைத்து காத்து மறைத்து அருளும் எல்லாம் வல்ல பரம்பொருளே அவரவர் வினைக்கு ஏற்ப வாழ்வை ஆரம்பித்தும் முடித்தும் வைக்கிறான்.  எல்லாம் இறைவன் செயல்.  இறைவன் அணுவுக்கும் அணுவானவன்; எல்லாம் ஆனவன்; எங்கும் நீக்கமற நிறைந்தவன்; அண்ட பகிரண்டமெல்லாம் ஒளியாக ஒளிர்பவன்.  அவனன்றி ஓர் அணுவும் அசையாது.  அணுவுக்கும் அணுவாக இருந்து எல்லாம் புரிந்து ஆள்வதும், அருள்வதும் அவன் திருவிளையாடல்களே.  

இறைவன் நம் உயிராக, பிராணனாக, ஜீவனாக நம் தலையின் உள் மத்தியில் பத்திரமாக இருக்கிறார்.  உடல் இறைவனை, நம் உயிரை தாங்கிக் கொண்டிருக்கிறது.  ஆனால் உடலை இயக்குவது உயிரே.  இறைவன் எங்கோ எட்டாத உயரத்தில் இல்லை.  தூரத்தில் இல்லை.  அவன் கூப்பிடு தூரத்தில், கைக்கெட்டிய இடத்தில் தான் எட்டாக இரண்டாக மெய்ப்பொருளாக கண்களில் உள்ளார்.  கோயிலில் கற்பூர ஆராதனை முடிந்து தீபத்தை கண்ணில் ஒற்றிக்கொள்கிறோம் அல்லவா.  அது கண்ணில் ஒளியைப் பெருக்க வேண்டும் என்பதற்காகவே.   ஜீவாத்மாவாகிய பெண்களாகிய மனிதர்களுக்கு பரமாத்மாவாகிய ஆணாகிய பரம்பொருள் நம் கண்ணில் நாம் காணும் தெய்வமாக உள்ளது.  உடலில் பரம்பொருள் நம் கண்ணில் மெய்ப்பொருளாக உள்ளது. 

உயிர்:
உயிரானது உலக மக்கள் அனைவருக்கும் ஒரே அளவில், அதாவது ஊசிமுனை அளவான நெருப்பு தீ ஜோதியே.   உயிர் இருக்கும் உடலில் சூடு இருக்கிறது, உயிர்  இல்லாத உடல் (பிணம்) குளிர்ந்து காணப்படும்.  உயிரின் தன்மை உஷ்ணம் தான்,  சூடு தான், ஒளி தான்.  உயிர் இருந்தால் உடலில் சூடு இருக்கிறது.   கண்மணியில் ஒளி இருக்கிறது.  இதிலிருந்து கண்மணியில் தான் உயிர் துலங்குகிறது என்பது புரிகிறதல்லவா. 

உயிர் நம் உடலில் எங்கு உள்ளது?
எண் சாண் உடம்புக்கு சிரசே பிரதானம்”. நம் உயிர் நம் தலையின் நடுவில் அதாவது , நம் தலை உச்சிக்கு கீழ் நம் உண்ணாவுக்கு மேல் நம் இரு கண்ணும் உள்ளே சேரும் இடத்தில் இருக்கிறது. அது துலங்குவது இரு கண்களில்.  நமது சிரசில் உச்சியில் இருந்து ஒரு நாடி கீழே இறங்குகிறது. அது நமது கண் காது மூக்கு உள்ளே சேரும் மத்தியில், வாயில் உள் அண்ணாக்கின் சற்று மேல் வந்து நிலை கொண்டு , அங்கிருந்து இரு நாடியாக பிரிந்து இரு கண்களில் வந்து சேர்கிறது. இவ்விடத்தை லலாடஸ்தானம் , ஆன்ம ஸ்தானம், பத்தாம் வாசல், கடை கண் என்று சித்தர்கள் கூறுவர்.

பெருஞ்ஞோதி ஆண்டவனாகிய இறைவன், தானே சிறு ஜோதியாக தன்னை குறுக்கிக் கொண்டு ஜீவாத்மாவாக, உயிராக, பிராணனாக நம்முள் இருக்கிறார்.  நான்ஆகிய ஆத்மாசாவதில்லை.  ஆத்மா எல்லாம் வல்ல இறைவனின் கூறு.  ஆத்மா கடவுளின் பேரொளியின் ஒரு துளி ஒளி.  அவர் ஜோதி ஸ்வரூபம்.  நம் உள் மனம் கடந்த நிலையில் இருப்பதால் தான், உள்கடந்து இருப்பதால் தான் இறைவனை ஆன்றோர் கடவுள் என்கின்றனர்.  கடவுளை உடலினுள் தேடுபவன் காண்பான் கண்களினாலேயே.  கடவுளை உடலினுள் தேடுவதே ஞானம்.  நம் உடலே இறைவன் வாழும் ஆலயம்.  ஜீவர்களே நடமாடும் சிவம். மனித உடலில் இருக்கும் உயிரை அறிய, உணர, உள்புகுந்து காண போக வேண்டிய வழியின் வாசல் நமது விழிகளே.  இறைவன் இருக்கும் கோயிலின் வாசல் நமது கண்ணே.  கண்ணே மெய்ப்பொருள் என்றும் சொல்லப்படுகிறது

உயிரே கடவுள்.  உண்மை இதுவே.  ஞானம் இதுவே.  இதை அறிவதே குரு உபதேசம்.  இதை உணர்வதே தீட்சை. இதை அறிந்து உணர்ந்து தவம் செய்பவனே இறைவனை அடைவான்.   தன்னை உணர்ந்து, தனக்குள் அந்த பரமாத்மாவே தன் உயிராக இருப்பதை அறிந்து, உணர்ந்து தவம் செய்பவனே ஞானம் பெறுவான்.  ஞான தீட்சை மூலம் கண்மணியில் உணர்வு பெற்று உயிரை நோக்கி தவம் செய்பவன் ஞானி.  அப்படிப்பட்டவனே துவிஜன்ஆகிறான்.  மறுபிறப்பாளன் ஆகிறான்.  ஒரு தாயின் மடியில் பிறந்த மனிதன் குருவின் கருணையால் சூட்சும சரீர பிறப்பு எடுத்து மீண்டும் பிறக்கிறான். காரணமாயிருக்கும் கடவுளை அறிந்து உணர்ந்து மரணமில்லா பெருவாழ்வு பெற்றவனாகிறான்.  அப்படி உணர்ந்தவன், கடவுளைப் போல எல்லோரிடமும் எல்லா உயிர்களிடமும் அன்பு பாராட்டுவான். 

            நம் உடலிலே உள்ள உண்மைப்பொருள், சத்தியப் பொருள், அழியாத பொருள் நம் உயிர்.  அது எல்லாம் வல்ல பேரொளியான பரமாத்மாவின் ஒரு சிறு துளி ஒளி. அதை ஜீவாத்மா என்பர்.  அது துலங்கும் இடம் நம் உடலின் கண்.  மெய் துலங்கும் பொருளாக விளங்குவது கண்.

            நம் கண் ஒளியாக, பார்வையின் ஆற்றலாக விளங்குவது நம் உயிர் சக்தியே.   இறைவன் நம்முள் மறைந்திருக்கிறான்.  சூட்சுமமாக உள்ளே துலங்குகிறான்.  ஊனக்கண்ணால் உலகைக் காணமுடியும்.  ஆனால் உள்ளே இருக்கும் பெரும்ஜோதியைக் காணமுடியாது.   ஊனக்கண் தவம் செய்து ஞானக்கண்ணாக மாறும்போது உள் விளங்கும் பெரும்ஜோதி ஆண்டவரை நாம் காணமுடியும்.

            எல்லாம் வல்ல இறைவன் பெரும்ஜோதிமயமானவன்.” “அவனே சிறுஜோதியாக நம் உடலில் உயிராக இருக்கின்றான்.   இறைவன் மனித தேகத்தில் கண்ணில் ஜோதியாக துலங்குகிறான். இவையனைத்தும் மனிதனாக பிறந்த நாம் ஒவ்வொருவரும் அறிய வேண்டிய மாபெரும் ரகசியங்கள்.  மனித தேகத்தில் தலையினுள்ளே, மத்தியில் நம் உயிர் இருக்கின்றது.  அது துலங்குவது இரு கண்களில்.

இதை உறுதிபடுத்தும் சிலவற்றைக் காண்போம்:

1.      கடோபநிஷத்தில் எமதர்மனிடம் நசிகேதன் உயிர் பற்றி, கடவுள் பற்றி கேட்க அவர் கூறுகிறார்

 
இறைவன் மனித தேகத்தில் சின்முத்திரை அளவான இடத்தில் புகையில்லாத ஜோதியாக விளங்குகிறான்.”

2.      கீதையில் கிருஷ்ண பகவான் மந்திரங்களில் நான் காயத்ரி என்கிறார். காயத்ரி மந்திரத்தின் சாராம்சம் எல்லாவற்றிற்கும் மேலான அப்பெரோளி  கடவுளை தியானிப்போமாக என்பதே. 

3.      திருமூலநாயனார் திருமந்திரத்தில் நமது நாட்டம் நடுமூக்கில் வைக்கணும் என்கிறார். தண்ணீர் ஊற்றும் பாத்திரத்தில் நீர் வரும் பகுதியை மூக்கு என்று சொல்வோம். நமக்கு கண்ணீர் வரும் கண்ணே மூக்கு .  அதன் நடுபகுதியே ஊசிமுனை துவாரம் உள்ளதாகும்.   அதனுள் தான் ஊசிமுனை அளவு ஜோதி உள்ளது! இதில் தான் நம் நாட்டம் இருக்க வேண்டும் என ஞான ரகசியத்தை வெளிப்படுத்துகிறார்  திருமூலர்.

4.      நாட்டத்தை மீட்டு நயனத் திருப்பார்க்குத் தோட்டத்து மாம்பழந்தூங்கலுமாமேஎன்கிறார் திருமூலர்.  நயனம் என்றால் கண். இதற்கு மேலும் விளக்கம் தேவை இல்லை.

5.      “பிராண நீரானதில் உருண்டு திரண்டதை கண்டு அறிந்திடு நீ.என்கிறார்கள் சித்தர்கள்.  கருவிழிக்குள்  பிராணநீர் உள்ளது.  அதில் தான் கண்மணி மிதந்து கொண்டிருக்கிறது.


6.      ஊசிமுனை காட்டுக்குள் உலாவியே இருக்கலாம் வாரீர்என்கிறார் ஒரு சித்தர்.

7.      கண்மணி ஊசிமுனை வாசலுக்குள் பிரவேசித்தால் அது பெருங்காடாமேஎன்கிறார் ஒரு சித்தர்.

8.      அண்டம் போல் அழகியதாம் கண் மூன்றுடையதாம் ஒற்றி கடலருகே நிற்கும் கரும்புஎன்கிறார் பட்டினத்தார்.  கரும்பு என்பது கரும் - பு , கருப்பு பூ.  அது கண்மலரையே குறிக்கும்.

9.      கண்ணில் ஒளியை உணர்ந்து கண்ணை விழித்து பேசாது சும்மா இரு என்பதுவே ஆதிகுரு தட்சிணாமூர்த்தி சொல்லாமல் உணர்த்திய ஞான இரகசியம்.

10.   சின்முத்திரை என்பது கண்ணையே குறிக்கும்.

11.   ஒன்றான கடவுளோடு நான் ஒன்ற நம் கண் ஒளியில் சும்மா இருந்து விழித்திருந்து தவம் செய்வது ஒன்றே வழி.

12.   விழி தான் ஞானம் பெற ஒரே வழி.  விழித்திருந்து தவம் செய்வது ஒன்றே நம் கடமை.

13.   பரப்பிரம்மமான, அண்டம் போல் அழகான கண்மணியின் உச்சியான புருவமத்தி கண்மணி மத்தியிலுள்ள ஒளிஎன்கிறார் சித்தர் காகபுசந்தர்.

14.   கையற விலாத நடுக்கண் புருவபூட்டு கண்டு களி கொண்டு திறந்து உண்டு நடு நாட்டு. என்று புருவம் கண் என்று வெட்ட வெளிச்சமாக்கி விட்டார் வள்ளல் பெருமான்.  வள்ளலார் தான் இரு கண்களாலும் செய்த பெரும் தவத்தை தானே வியந்து போற்றுகிறார்.

15.   அங்கமதில் முதன்முதலாய் தோன்றிய தலம் எது?  சொல்ல வல்லார் உண்டானால் குரு என பணியலாமே  என்கிறார் ஒரு சித்தர்.  (அங்கமதில் முதன்முதலாய் தோன்றிய தலம் கண்)

16.   புருவமத்தி நடுமூக்கு என பரிபாசையாக சொல்லப்படுவது கண்ணே.                          

17.   பல ஞானிகள் புருவமத்தியான கண்ணை இருதயம் என்பர்.  இருதயம் என்பதை பிரித்து பாருங்கள்.   இரு + உதயம் . நம் உடலில் வலது  கண் சூரியன், இடது கண் சந்திரன், ஆக இதைத் தான் இந்த  சூரிய  , சந்திர உதயத்தை தான் இரு உதயமாக (இருதயமாக) கூறி உள்ளனர் ஞானிகள். இதை சிவவாக்கியர் எந்த ஒளிவு மறைவு மில்லாமல் கூறி உள்ளார்.

18.   கண்ணன் என்ற தமிழ் வார்த்தை நம் உடலில் இறைவன் துலங்குவதை குறிக்கும்.  கண் + அவன் = கண்ணன்.   இந்த கண்ணனை கண் ஒளியைத் தான் நாம் தியானிக்க வேண்டும். 

19.   வள்ளலார் திருவருட்பாவில் கண்ணே இறைவனை அடையும் வழி என பல்வேறு பாடல்களில் தெரிவிக்கிறார். 

20.   எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் கண்ணென்ப வாழும் உயிர்க்கு” – திருக்குறள்

21.   கண்ணுள் மணியாகிக் காரணமாய் நின்றான் மண்ணுமுயிர் பதியுமாறு” – காகபுசுண்டர்

22.   நேத்திரத்தை காகம்போல் நிச்சயமாய் நிற்க ஆத்துமத்தில் ஆனந்தமாம்” – காகபுசுண்டர்

மெய்பொருள் பற்றி சித்தர்கள் பாடல்கள்:

சிவவாக்கியர்:
"கண்ணில் நின்று கண்ணில் தோன்றும் கண்ணறிவிலாமையால் என்னுள் நிண்ட என்னையும் யானறிந்த தில்லையே"

அதே போல் வேறொரு பாட்டில் இடது கண் சந்திரன் வலது கண் சூரியன் என்று பாடி இருக்கிறார்.

கழுத்தையும் நிமிர்த்திநல்ல கண்ணையும் விழித்துநீர்,
பழுத்தவாய் விழுந்துபோன பாவமென்ன பாவமே,
அழுத்தமான வித்திலே அனாதியாய் இருப்பதோர்,
எழுத்திலா எழுத்திலே இருக்கலாம் இருந்துமே,
இடதுகண்கள் சந்திரன், வலதுகண்கள் சூரியன்,
இடதுகண்கள் சக்கரம் வலக்கை சூல மான்மழு,
எடுத்தபாதம் நீண்முடி எண்திசைக்கும் அப்புறம்,
உடல்கடந்து நின்றமாயம் யாவர்காண வல்லீரோ” –

பட்டினத்தார்:
"கண்ணாலே ஞானம் கருதாமல் நெஞ்சேநீ
எண்ணாத மாய்கையெல்லாம் எண்ணுகிறாய் - நண்ணாய்கேள் பார்க்க வேண்டும்தனையும் பத்தரை மாற்றுந்தங்கம் ஆக்கப் போகாதோ உன்னால்"

இடைக்காடர்:
"கண்ணுள் மணியை கருதிய பேரொளியை
விண்ணின் மணியை விளக்கொளியைக் போற்றீரே"

நிஜானந்த போதம்:
"புருவமென்ற சுழுமுனையில் மைந்தா கேளுபோதமென்ற அருள்ஞான செந்தீ பற்றித்
திருவிருந்த மாளிகையில் தீபங் காணும்செங்கமலக் கண்ணாலே நன்றாய்ப்பாரு
குருவிருந்த இருதயமாம் முக்கோணத்தில்
குவித்து மனக் கண்ணாலே தன்னைப் பார்த்தால்
கருவிருந்த பதியதுதான் மைந்தா மைந்தாகண் காணத் தோன்றுமடா கருவைப் பாரே"

கருவூரார் :
"காணாத காட்சியெல்லாம் கண்ணில் காணும்
கலங்காதே மெய் மயக்கம் மெத்தவாகும்
மயங்காதே மவுனத்தில் நில்லு நில்லு
கோணாத முக்கோணத் குறியைப் பாரு ............"

சட்டைமுனி நாயனார்:
"மனோன்மணியாம் புருவமையத்தூடே சென்று
ஒளியோடே மவுனத்தை யோட்டி யூதாய்"

காகபுசுண்டர்:
"காணாத காட்சியெல்லாங் கண்ணிற்கண்டு
காகமடா புசுண்டரென்று பேரும் பெற்றேன்"

காகம் போல ஏக பார்வையால் ஒளியை உற்று நோக்கி உள்ளே இருந்தால் கண்ணில் அதுவரை நாம் காணாத அற்புதக் காட்சிகளைக் காணலாம் என்கிறார். தான் அவ்வாறு கண்டு காகபுசுண்டர் எனப் பெயர் பெற்றதாகக் கூறுகிறார்.

அகத்தியர்:
"காணுகின்ற ஓங்கார வட்டம் சற்றுச்
கனலெலுப்பிக் கண்ணிலே கடுப்புத் தோன்றும்".

நாம் காணுகின்ற கண்களில் நமது கண்களில் கண்ணைத்தான் ஓங்கார வட்டம் என்றார். அங்கே ஜீவா ஒளி உள்ளது. நமது நினைவை கண்மணியில் நிறுத்தும்போது, சாதனை புரியும் போது கனல் எழும்பும் என்றும் அப்போது கண்களில் கடுப்பு தோன்றும் எனவும் அகத்தியர் அனுபவ நிலை பற்றி மறைப்புமின்றி வெளிப்படுத்தியிருக்கிறார்.


தாயுமான சுவாமிகள்:
"கண்ணுள் நின்ற ஒளியை கருத்தினை
விண்ணுள் நின்று விளங்கிய மெய்யினை
எண்ணி எண்ணி இரவும் பகலுமே
நண்ணுகின்றனர் நான்தொழும் தெய்வமே"

ஒரு சித்தர் ஒரு சொல் சொல்லியிருந்தால் இன்னொரு சித்தர் பாடலில் அதற்கு விளக்கம் இருப்பதைக் காணலாம். இப்படியே ஞானவான்களின் எல்லா நூல்களும் ஒன்றுகொன்று தொடர்புடையதாகவே காணும், ஏனென்றால் எல்லோரும் மெய்பொருள் பற்றிதானே சொல்கின்றனர்.

உதாரணத்திற்கு சில திருவருட்பா வரிகள்

கண்ணே கண்மணியே கண்ஒளியே கண்ணுட் கலந்து நின்ற கதிரே அக்கதிரின் வித்தே” –
பரமன் ஈன்றகண்ணே நின் தணிகைதனை கண்டு போற்றேன்
என் இரு கண்ணின் மேவும் இலங்கொளி மணியே போற்றி
கண்ணினால் உனது கழற்புதம் காணும் கருத்தினை மறந்து
சொல் ஆர்ந்த விண்மணியை என் உயிரை என் மெய்பொருளை ஒற்றியில் என் கண்மணியை நெஞ்சே கருது
தண்ணார் அளியது விண்ணோர் ஒளியது சாற்று மறைப்; பண்ணார் முடிவது பெண்ணார் வடிவது  பண்புயர் தீக்; கண்ணார் நுதலது கண்ணார் மணியது கண்டு கொள்ள; ஒண்ணா நிலைதொன்றுண்டே முக்கண்ணொடென் உள்ளகத்தே

கண்ணே அக்கண்ணின்மணியே மணியில் கலந்தொளிசெய் விண்ணே

என் இருகண்காள் உமது பெருந்தவம் எப்புவனத்தில் யார்தான் செய்வர்  வள்ளலார் தன் இரு கண்களாலும் செய்தபெரும் தவத்தை தானே வியந்து போற்றுகிறார்! நமது மெய் எனப்படும் உடம்பில் விளங்கு கண் எனப்படும்

காணுகின்ற கண்களுக்குக் காட்டுகின்ற ஒளியாய்
கண்ணிலே எனது கருத்திலே கலந்து கருத்தனே

அருட்ஜோதித் தெய்வம் எனை ஆண்டுகொண்ட தெய்வம், என்னிதய கமலத்தே இருந்தளுந் தெய்வம், என்னிரண்டு கண்மணிக்குள் இலங்குகின்ற தெய்வம், தூண்டாத மணி விளக்காய் துலங்குகின்ற தெய்வம், சாகாத வரம் எனக்கே தந்த தனித் தெய்வம்

கண்மணியில் நினைவை செலுத்த செலுத்த கண்களில் ரத்த ஓட்டம் மிகுந்து காவி கண்ணாகும். சந்நியாசியானவன் காவி கட்ட வேண்டும் என சொல்வது இதைத் தான். இப்படிப்பட்ட காவி ஏறிய கண்ணிலேயே வசிக்க வேண்டும். மனம் தங்க வேண்டும் கண்மணியின் ஒளியை,  இறைவனை துதிக்க வேண்டும்.  காவி உடைகள் தரித்தவனெல்லாம்  சந்நியாசி அல்ல என வள்ளலார் கூறுகிறார்.

பரமன் ஈன்ற கண்ணேநின் தணிகைதனைக் கண்டு போற்றேன்  என்கிறார் வள்ளலார்.
என்னிரு கண்ணின் மேவும் இலங்கொளி மணியே போற்றி
கண்ணினால் உனது கழற்பதம் காணும் கருத்தினை மறந்து

சொல் ஆர்ந்த விண்மணியை என்உயிரை மெய்ப்பொருளை ஒற்றியில் என் கண்மணியை நெஞ்சே கருது.  

இயேசு கிறிஸ்து: “தேவன் ஒளியாக உள்ளான், நீ ஒளியிலே நடந்தால் தேவனை தரிசிக்கலாம்”.

நம் மெய் எனப்படும் உடம்பில் விளக்கு கண் எனப்படும்.   கண்ணே சரிரத்தின் விளக்கு.  இதெல்லாமல் வேறு விளக்கு இல்லை.   உன் கண்கள் ஒளி மிகுந்ததாக இருந்தால் உன் உடல் ஒளி மிக்கதாக இருக்கும்  நம் கண் ஒளியை பெருக்கி அந்த ஒளியில் உள்   நடந்து தேவனை தரிசிக்க வேண்டும் .

திருநாவுக்கரசர்:  காளத்தியான் அவன் என் கண்ணில் உள்ளான் காண்

சமாதி நிலையும் சகஜ நிலையும்:

விழித்திரு.  உயிர் அறியாது ஒடுங்குவது தூக்கம்.  தூங்கும்போது நம் உயிர் ஒடுங்கி விடுகிறது.  உயிர் ஒடுங்கி விட்டால் நாம் செயல் இழந்து போய் விடுகிறோம்.   உயிரை அறிந்து ஆதாரத்தில் ஒடுக்குவது  சமாதி.  மகான்கள் தங்கள் உயிரை ஆதாரத்தில் ஒடுங்கச் செய்து, புறச்செயல் அற்று சமாதி கூடி அறிதுயில் கொள்கிறார்கள்.  இத்தகைய சமாதி ஒன்றும் மேலானதல்ல என்கிறார் வள்ளலார்.  சமாதியில் மூழ்குவது பெரிதல்ல.  உயிர் அனுபவம் உணர்ந்து, பெற்ற பேரின்ப நிலையிலேயே சகஜமாக எப்போதும் இருப்பதுவே சிறப்பு என்கிறார் வள்ளலார்.  சகஜ நிலையிலேயே எப்போதும் இருப்பதுவே மரணமில்லா பெருவாழ்வுக்கு வழியாகும்.

பல மகான்கள் தங்கள் உயிரை ஆதாரத்தில் ஒடுங்க செய்து  விடுவதால் புறச்செயல் அற்று சமாதியில் ஆழ்ந்து விடுகின்றனர், இப்படி சமாதி கூடி அறிதுயில் கொள்வது ஒன்றும் மேலானது அல்ல என வள்ளலார் கூறுகிறார், உயிர் அரியாது ஒடுங்குவது தூக்கம், உயிரை அறிந்து ஆதாரத்தில் ஒடுக்குவது சமாதி.

உயிரை அறிந்து ஆதாரங்களில் ஒடுங்கி விடாமல் உணர்வோடு இருப்பது ஞானநிலை!  மோனநிலை.

சமாதியில் மூழ்குவது பெரிதல்ல உயிர் அனுபவம் பெற்ற பேரின்பநிலையிலே எப்போதும் இருப்பது சிறப்பு.

சகஜ நிலையிலே எப்போதும் இருப்பதுவே மரணம் இல்லா பெருவாழ்வுக்கு வழியாகும்

யோகநிலை அனுபவத்தில் ஒவ்வொருநிலை அனுபவமும் பெற 8 முதல் 12 வருடம் வரை ஆகும். அதற்கு நமக்கு காலம் இல்லை எனபெருமான் உரைநடைப்பகுதியில் கூறியுள்ளார். எனவே இந்த ஆறுநிலைகளை கடந்துசெல்வது மிகக்கடினமானதாகும். 
  
சுத்தசன்மார்க்கத்தின் அனுபவநிலை கண்டத்திற்குமேல்எனபெருமான் கூறியுள்ளதை கருத்தில்கொண்டுநாம் புலை, கொலை, சாதி, சமயபேதங்களைத் தவிர்த்து எவ்வுயிரையும் தம்முயிர்போல பாவிக்கும் உணர்வை வரவழைத்துக்கொண்டால் அதிசீக்கிரமாக சுத்தசன்மார்க்க அனுபவநிலைகளுக்கு செல்லலாம்.

எனவே சன்மார்க்க அன்பர்கள் ஆறுநிலை அனுபவமானயோகநிலை அனுபவத்தில் முயற்சிப்பது தேவையற்றது. மனதை எப்பொழுதும் புருவமத்தியில் வைத்துப்பழகுதல் வேண்டும். (புருவமத்தி ஏதேன்றாகால் பரப்ரம்மமானதோர் அண்ட உச்சி என்கிறார் அகத்தியர்) மனம் அடங்கினால் காற்றும் அடங்கும், காற்று அடங்கினால் அருள் அனுபவம்கூடும்.

இதற்கு உபாயமாக திருவருட்பா பாடல்களை மெல்லெனப்பாடுதல்தியானம், தெய்வபாவனை போன்றவை செய்தல், மேலும் உண்மையான உயிர் இரக்க உணர்வோடு ஜீவகாருண்யப்பணிசெய்தாலும் அருள்நிலை அனுபவம் உண்டாகும்.

யோகநிலை அனுபவங்கள் மூலாதாரம், சுவாதிட்டானம், மணிபூரகம், அனாகதம், விசுத்தி, ஆக்ஞா என்ற ஆறுநிலைகளிலும் யோகநிலை அனுபவங்கள் ஏற்படுவது இயல்பு என சித்தர்களும், யோகிகளும் கூறியுள்ளனர்.

இந்தயோகநிலை அனுபவங்கள் ஒவ்வொன்றும் பல சித்து வேலைகளைச் செய்யத்தூண்டும். அப்படி சித்து வேலைகளை செய்தால் சன்மார்க்கத்தின் மேல்நிலை அனுபவமான மரணமில்லாப் பெருவாழ்வு பெறதடைஏற்படும்.

எனவே தான் சமாதிப்பழக்கம் பழக்கம் அல்ல சகஜப்பழக்கமே பழக்கம் எனவும்பெருமான்கூறியுள்ளார். ஏனெனில் யோகநிலை அனுபவத்தில் சமாதியில்சென்றுதான்முடிவடையும்

பிறப்பும் இறப்பும்:
மனிதர்களாகிய நம் உடலினுள் உயிர் இருந்தால் தான் நாம் சிவம்.  இல்லையேல் நாம் சவம்.  உடலோடு உயிர் இருந்தால் தான் இயக்கம்.  உடல் முக்கியமா இல்லை உயிர் முக்கியமா என கேட்டால் அழியக்கூடிய உடலைவிட அழிவற்ற உயிரே முக்கியமானது.  உயிர் இன்றி உடல் இருந்தால் மண்தான்.  உயிர் தான் பிரதானம்.  உயிர் தான் உடல் கொண்டு பிறக்கிறது.  உடலை விட்டு உயிர் பிரிவதே மரணம்.  உயிர் தங்கிய உடல் தான் அழிகிறது.  உயிர் அழிவதில்லை.  உடலில் உள்ள உயிர் ஒரேயடியாக தூங்கிவிடுவது தான் மரணம்.  பிறப்பும் இறப்பும் உயிர் வருவதும் போவதும் தான்.  இறந்தால் நரகமோ! சொர்க்கமோ! மீண்டும் பிறந்து தான் ஆக வேண்டும்.  இது சத்தியம்.   மரணமிலா பெருவாழ்வு பெற்றவர்க்கே மறுபிறப்பில்லை.
தன் உயிரை அறிவதே, உணர்வதே இறைவனை அறிவதும் உணர்வதுமாகும்.  தன்னை அறிவதே கடவுளை அறிவதாகும்.  மனிதனாக பிறந்தது தன் உயிரை, தன்னைஉணரவே.  ஒளி ஆகவே.  
                   இந்த உலகமே மனித குலத்துக்கு சொந்தம்.  நாம் அனைவரும் சகோதர சகோதரிகளே.  நாம் அனைவரும் ஜீவாத்மாக்களே.  எல்லா உயிர்களுக்கும் தாயும் தந்தையும் அம்மையப்பனாகிய இறைவனே.  ஒவ்வொருவருக்கும் வரக்கூடிய நல்லதுக்கும் கெட்டதுக்கும் அவரவரே தான் பொறுப்பு.  வேறு யாரும் கிடையாது.  தீதும் நன்றும் பிறர்தர வாரா.  அவரவர் செய்த செயல் களே புண்ணியம் என்றும் பாவம் என்றும் இருவினைகளாகி அதற்குரிய பலன்களை அவரவரே அனுபவிக்க செய்கிறது.  இதுவே இறைநியதி.  நாம் பிறர்க்கு செய்யும் நல்லதோ கெட்டதோ இனி ஒருநாள் நமக்கு வந்தே தீரும்.  வினை விதைத்தவன்  வினை அறுப்பான்.  எத்தனையோ பிறவிகளாக நாம் செய்த நல்வினை தீவினைகள் இப்படி மூட்டை மூட்டையாக இருக்கின்றது.  இறைவன் நம்மீது கருணை கொண்டு அவ்வளவு வினைகளையும் நம்மிடம் தராமல், நல்வினை தீவினை இரண்டிலும் கொஞ்சமாக எடுத்து நம் உயிரோடு இணைத்து விதிக்கப்பட்ட பிராரத்துவ கர்மத்துடன் நம்மை மனிதனாக இப்பூவுலகில் பிறப்பிக்கச் செய்துள்ளார்.  பிராரத்துவ வினைகளோடு பிறந்த நாம், நம் வாழ்நாளில் புரியும் கர்மங்கள் ஆகாமியம் எனப்படும்.  பிராரத்துவ வினைகளோடு ஆகாமியமும் சேர்ந்து நல்வினை, தீவினையாகிய வினைகள் கூடவோ குறையவோ செய்யலாம்.   இப்படி எதையாவது செய்து எதையாவது பெற்று அந்த வினைகளோடு மனிதன் செத்துப் போகிறான். ஒவ்வொரு மனிதனும் செத்து உடன் கொண்டு போவது அவனவன் செய்த வினை பயன்கள் மட்டுமே.  பற்றித் தொடரும் இரு வினையன்றி வேறொன்றில்லை பராபரமேஎன்கிறார் சித்தர் பெருமகனார்.  பிறப்பிறப்பின் இரகசியம் இது.  நாம் பிறந்தது பூர்வ ஜன்ம கர்மவினைப்படி விதிப்படியே என்றாலும் கண்மணியில் புள்ளியில் விளங்கும் ஜோதியைப் பற்றி அறிந்து உணர்ந்து தவத்தால் சாதனை புரிந்து இந்த விதியை மதியால் வெல்லலாம் என்பது உண்மை.

மரணம் இல்லாத பெருவாழ்வு:
மனிதா தூங்காதே.  விழி, உழை, ஓயாது உழை சாகாமல் இருக்கும் நமது லட்சியம் நிறைவேறும்வரை.  மரணம் ஏற்படாமல் அதாவது உடலை விட்டு உயிர் பிரியாமல் எப்போதும் இந்த உடலிலேயே இந்த உயிரை நிரந்தரமாக தங்க வைப்பதே மரணம் இல்லாத பெருவாழ்வு.  சாவாநிலை.  செத்தால் தானே உயிர் மீன்டும் பிறக்கும்! சாவைத் தவிர்த்தால் இனி பிறப்பையும் தவிர்க்கலாமே.  விதியோடு இறையருளால் பிறந்த மனிதன், எதைஎதையோ செய்து எஞ்சிய வினையோடு சாகாமல், எதைஎதையோ செய்யாமல் விதியிலிருந்து வினையில் இருந்து தப்பித்த ஞானிகள் உபதேசப்படி வாழ்க்கையை செம்மைப்படுத்திக் கொண்டால், வினைகளை அழித்துவிட்டால், சாகாமல் இருக்கலாமல்லவா! வினையிருந்தால் தானே சாவு. வினை இருந்தால் தானே மீண்டும் பிறப்பு ஏற்படும்.  வினைகளை இல்லாமல் செய்து விட்டால் பிறந்துவிட்ட நமக்கு இறப்பு கிடையாது.  இறப்பு இல்லையெனில் ஏது இனி பிறப்பு?  மரணமில்லா பெருவாழ்வே மறுபிறவி இல்லா நிலையைத் தரும்.

புருவ மத்தி என்பது எது?

ஆன்மீகத்தில் சிறிது நாட்டம் உள்ளவர்களிடம் தியானம் நாம் எங்கு செய்ய வேண்டும் என்று கேட்டால் கூறுவது மனதை புருவ மத்தியில் நிலை நிறுத்துங்கள் என்று கூறுவர்.

சித்தர்களும், ஞானிகளும் இதையே தான் புருவ மத்தியில் தியானம் செய்யுங்கள் என்று தான் கூறுகின்றனர் “.

புருவமத்தி என்பது நெற்றியில் பொட்டு வைக்கும் இடம் அல்ல.   சிறிது சிந்தித்து பார்த்தல் இது புலப்படும்.

அதற்கு முன் அவ்வை பிராட்டி நமக்கு கூறும் இந்த பாடலை நினைவில் கொள்ளுங்கள்

           “தேவர் குறளும் திருநான் மறை முடிபும்
            மூவர் தமிழும் முனி மொழியும் கோவை
            திருவாசகமும் திருமூலர் சொல்லும்
            ஒரு வாசகம் என்று உணர்

திருக்குறள் நான்கு வேதங்கள் தேவாரம் அகத்தியர் முதலான சித்தர் பாடல்கள் திருவாசகம் திருமந்திரம் இவை அனைத்தும் உரைப்பது ஒரு வாசகம். மெய். உண்மை. சத்தியம். மெய்பொருள்.   ஆக அணைத்து ஞானிகளும் ஒரே இடத்தில் தான் தியானம் செய் என்று கூறியிருப்பார் என்று தெளிவாகிறதல்லவா.

சரி முதலில் புருவ மத்தி எது என்று நாம் சிறிது சிந்திப்போம்?

நாம் பொட்டு வைக்கும் இடம் இரு புருவங்களிடையே உள்ளது. ஞானிகள் இரு புருவ மத்தி எனக் கூறவில்லையே?!    புருவ மத்தி என்று ஒருமையில் தானே கூறினர்.
ஒரு புருவம் என்றால், அதற்கு மத்தி என்று ஒன்றும் இல்லை.  புருவத்தின்  கீழ் இருப்பது கண்.
 
புருவ மத்தி என்று சொன்னது புருவத்தின் கீழ் உள்ள கண்ணின் மத்தியே. எல்லா சித்தர்களும் , ஞானிகளும் நாம் தியானம் செய்ய வேண்டிய இடம் புருவ மத்தியான கண்ணே என்று நேரடியாகவும், பரிபாசையாகவும் கூறிபிட்டுள்ளனர்.
புருவ மத்தி எதென்றக்கால் பரப்பிரம்மமானதோர் அண்ட உச்சி . – சித்தர் காகபுசந்தர்.

புருவமத்தி பரப்பிரம்மமான அண்ட உச்சி.   அண்டம் போல் அழகான , பூமி போல் அழகான கண்மணி, உச்சி என்றால் கண்மணி மத்தியாகும்.   அது பரப்பிரம்மமானது. அதாவது ஒளியானது புருவமத்தி கண்மணி மத்தியிலுள்ள ஒளி.

வள்ளல் பெருமான் கையற விலாத நடுக்கண் புருவபூட்டு கண்டு களி கொண்டு திறந்து உண்டு நடு நாட்டு. என்று புருவம் கண் என்று வெட்ட வெளிச்சமாக்கி விட்டார்.  நடுக்கண் தான் புருவபூட்டு  இதற்கு விளக்கமும் வேண்டுமோ.   மேலும்   வள்ளலார் தான் இரு கண்களாலும் செய்த பெரும் தவத்தை தானே வியந்து போற்றுகிறார்.

என்னிருகண் காள்உமது பெருந்தவம்எப் புவனத்தில் யார்தான் செய்வர்
தன் கண்ணில் தான் தானும் தவம் செய்தேன் என்று வள்ளலாரே குறிபிடுகிறார்:
இதை திருமூலர் திருமந்திரத்தில் பரிபாசையாகவும், நேரடியாகவும் குறிபிடுகிறார்:

                 “நாட்டம் இரண்டும் நடுமூக்கில் வைத்திடில்
                  வாட்டம் இல்லை மனைக்கும்  அழிவில்லை

இங்கு திருமூலர் நமது நாட்டம் நடுமூக்கில் வைக்கணும் என்கிறார். ஒரு சித்தர் புருவமத்தி என்றார், இங்கு திருமூலர் நடுமூக்கு என்கிறார். புருவமத்தி,  நடுமூக்கு இது பரிபாசை. ஞானத்திற்கு பொருள் காணனும்.! மேலோட்டமாக பார்த்து மூக்கு என்று ஏமாந்து போகாதீர். மூக்கை பார்த்து மோசம் போனவர் ஏராளம். இதன் விளக்கம் என்ன?

தண்ணீர் ஊற்றும் பாத்திரம் உண்டல்லவா அதில் நீர் வரும் பகுதியை மூக்கு என்று தானே சொல்வோம். நமக்கு கண்ணீர் வரும் கண்ணே மூக்கு .  அதன் நடுபகுதியே ஊசிமுனை துவாரம் உள்ளதாகும் அதனுள் தான் ஊசிமுனை அளவு ஜோதி உள்ளது! இதில் தான் நம் நாட்டம் இருக்க வேண்டும். கண் என நேரடியாக சொல்லாமல் நடுமூக்கு என்றது நாம் குரு மூலம் உபதேசம் பெற்று தெளிய வேண்டும் என்பதற்காக. தான்.

மேல் கூறிய விளக்கத்திற்கு சான்று மற்றும் ஒரு திருமந்திர பாடலே

                           “நாட்டத்தை மீட்டு நயனத் திருப்பார்க்குத்
                           தோட்டத்து மாம்பழந்தூங்கலு மாமே”  
நயனம் என்றால் கண். இதற்கு மேலும் விளக்கம் தேவை இல்லை.

கண்:
தாயின் வயிற்றில் கரு உருவாகும்போது முதலில் உருவாவது ஒரு கண்.  அது இரண்டாக பிரிந்து அங்குள்ள உஷ்ணத்தால் வெதுப்பி வெதுப்பி பிண்டம் உற்பத்தியாகிறது.  தாயின் கருவில் முதன்முதலில் உருவாகும் உறுப்பு கண்ணே.  உயிர் துலங்கும் கண் உலக மக்கள் அனைவருக்கும் ஒரே அளவில் தான் உள்ளது.  பிறந்ததிலிருந்து 100 வயதானாலும் வளர்ச்சியோ, முதிர்ச்சியோ அடையாத ஒரே உறுப்பு கண்.  நம் உடலில் இருந்தாலும் எந்த பிடிப்பும் இன்றி, உடலோடு ஒட்டாமல் அந்தரத்தில் இருப்பது கண்மணி.  அந்தரத்தில் ஆடுகின்றார் பாங்கிமாரேஎன வள்ளலார் பாடியது இதையே.  
நமது கண் எப்படி இருக்கிறது தெரியுமா?  வெள்ளை விழி, அடுத்து கருவிழி, அதற்கு மத்தியில் கண்மணி. கண்மணி அந்தரத்தில்  எதையும் தொடாமல் தனித்து தான் இருக்கும்.  சுழன்று கொண்டே இருக்கும்.
கண்மணியின் மத்தியில் ஊசிமுனையளவு துவாரம் இருக்கின்றது.  அந்த ஊசிமுனை வாசலினுள் ஊசிமுனையளவு ஜோதியாக ஆடிக்கொண்டிருக்கிறான் பரமாத்மா.   அங்கே துலங்குகிறது சிற்ஜோதி.  ஜோதியின் அசைவே நடனம். கண்மணியின் ஊசிமுனையளவு இடமே சிற்சபை.  திருவாகிய இறைவன் ஆடுகின்ற திருச்சிற்றம்பலம்.  சிற்சபை வழியே சென்றால் பொற்சபை.  இருகண்ணும் உள்ளே சேருமிடம்.  முக்கோண வடிவில் இரு கண்களும் கூடும் மூன்றாவது இடம். சூரிய சந்திர கலைகளாகிய வலது இடது கண்கள் உள்ளே ஒன்று சேருமிடம் மூன்றாவது கண்ணாகிய, அக்னிகலையாகிய ஆத்மஸ்தானம்.  நம் உடலில் தலையில் உச்சிக்கு நேர் கீழே நம் வாய் உட்புறத்தில் அண்ணாக்கின் மேலே மொத்தத்தில் நம் தலையின் உள் நடுவிலே இருக்குமிடமே நம் இரு கண்களும் உள் சென்று சேருமிடம்என்கிறார் திருமூலச் சித்தர்..

கண்மணியின் மத்தியில் ஊசிமுனையளவு துவாரம் இருக்கின்றது.  ஊசிமுனையளவு நெருப்பு உள்ளது.  ஊசிமுனை துவாரம் மெல்லிய ஜவ்வால் அடைபட்டிருக்கும்.    கண்மணியின் ஊசிமுனை துவாரத்தின் உள் ஊசிமுனை அளவு ஒளி நம் ஆத்மஜோதி துலங்குகிறது.  

 அந்த ஜோதியை நாம் காண வேண்டும்.   அதற்குத் தடையாக இருப்பது கண்மணியின் ஊசிமுனை துவாரத்தை அடைத்துக் கொண்டிருக்கும் மெல்லிய ஜவ்வே, நமது மும்மலங்களே.  இந்த துவாரத்தில் துலங்கும் நம் ஜீவ ஒளியை நம் வினைகள் சூட்சுமத்தில் 7 திரையாக அமைந்து மூடியுள்ளது என்கிறார் வள்ளலார்.  வள்ளலார் கண்ணாடி கூண்டின் உள் விளக்கினை ஏற்றி வைத்ததன் பொருள் இதுவே. இவ்வினைக்கு தகுந்தபடியே நம் மனம் வேலை செய்கிறது. நம் உடல் அமைப்பு, சுற்றம் போன்ற அனைத்தையும் நிர்ணயிப்பது இவ்வினைகள் தான். இவ்வினைகள் கண்ணாடி போல் உள்ளதால் நம்மால் பார்க்க முடிகிறது.  

இதையெல்லாம் சூட்சுமமாக சிருஷ்டித்தவன் எல்லாம் வல்ல இறைவன்.  திரைகளாகிய ஜவ்வே, நம் வினைகளே நாம் நீக்க வேண்டிய பொருள்.  திரை நீங்கினாலேயே நாம் நம் ஆத்மஜோதி யைக் காணமுடியும்.   இதுவே நாம் அடைய வேண்டிய மாபெரும் பேரின்ப நிலையாகும்.  மனிதனாக பிறந்த நாம் பெற வேண்டிய அதி உன்னத நிலையாகும்.

            பூட்டைத் திறப்பது கையாலே மனப்பூட்டைத் திறப்பது மெய்யாலேஎன்கிறார் ஒரு சித்தர்.  இங்கே கை எனப்படுவது நமது கண்களே.  நமது கண்கள் தான் இறைவனின் திருவடிகள்.  கண்மணி ஒளியே மெய்ப்பொருள் என்றும் சொல்லப்படுகிறது.  மனம் இருப்பது கண்ணில் தான்.  அதை ஒளியாகிய மெய் கொண்டு திற என்கிறார்.  கண்மணியில் உள்ள மனதை அகற்ற கண்மணியின் உள் உள்ள ஒளியை பிடி.  ஒளியை வைத்து மனதைத் திற.  கண்மணி வாசலை திறந்துவிடலாம் என்பதே இங்கு சொல்லப்படும் ஞான இரகசியம்.

            வெட்டாத சக்கரம், பேசாத மந்திரம், வேறொருவர்க்கு எட்டாத புஷ்பம், இறையாத தீர்த்தம், இனி முடிந்து கட்டாத லிங்கம் கருத்தினுள்ளே முட்டாத பூசையன்றோ என் குருநாதன் மொழிந்ததுவே என்கிறார் சித்தர் பெருமகனார். அனைத்துமே ஒரே பொருள் தான்; மெய்ப்பொருள் தான் கண் தான்.   கண்ணே வெட்டாத சக்கரம்; கண்மணியே பேசாத மந்திரம்; கண்மணியே வேறொருவர்க்கு எட்டாத புஷ்பம்; கண்ணில் உள்ள நீரே இறையாத தீர்த்தம்; வெள்ளை விழி, கருவிழி, கண்மணி என மூன்று வட்டமாக உள்ளதும், சிவமாகிய ஒளி, நம் ஜீவ ஒளி உள்ளதுமான கண்ணே சிற்பிகளால் உருவாக்கப்படாத முடிந்து கட்டாத லிங்கம்.  திருவடி தீட்சை பெற்று கண்ணில் செய்யும் தவமே கருத்தினுள்ளே முட்டாத பூசையாகும்.

கண்மணி தவம்:

           மெய்ப்பொருளான கண்மணியினுள் ஊசிமுனையளவு ஒளியாக இறைவன் இருப்பதை குருமூலம் அறிந்து உணர்ந்து, அந்த இறைவனை, நம் உயிரை அடைய தவம் செய்ய வேண்டும்.  நம் உயிரான கடவுளை அடைய நாம் செய்த வினைகளே விதியாகி உயிர் ஒளியை  மறைத்துக் கொண்டிருக்கிறது.  ஞான சற்குருவால் உபதேசம், தீட்சை பெற்று தவம் தொடர்ந்து செய்து வந்தால், நம் உயிர் ஒளியை மறைத்துக் கொண்டிருக்கும் வினைகளை, ஜவ்வை, திரைகளை கொஞ்சம் கொஞ்சமாக அகற்றிவிடலாம்.  சதாகாலமும் தவம் மேற் கொண்டோமானால், நமது வினைகள் எல்லாம் இல்லாமல் ஆவதுடன் நம்மை திருவாகிய இறைவனாகவே ஆக்கிவிடும்.  வினை இருந்தால் தான் நான்”.  வினையற்றால் அவன் தானே.  இறைவன் தானே.  நான் தான் அது; அதுதான் நான்; “தத்துவமஸிநிலை வந்து விடும்.  நான் அதுவானால் மரணம் ஏது? மரணம் இல்லாத போது மறுபிறப்பு ஏது?  துன்பம் ஏது?  எப்போதும் பேரின்பமே.  ஒளியை மறைத்த வினையகன்றால் ஒளி பிரகாசிக்கு மல்லவா?  ஒளி மேலும் மேலும் பெருக இந்த தூல உடல் ஒளியுடலாக மாறும்.  இது எல்லோராலும் முடியும்.  இப்பிறவியிலேயே  முடியும்.  இதற்காக தனியாக பிறவி ஒன்றும் எடுக்க வேண்டியதில்லை. வம்மின் உலகியலீர் மரணமிலா பெருவாழ்வு வாழ்ந்திடலாம் கண்டீர்என்கிறார் வள்ளலார்.  மனந்தளராமல் இடைவிடாது முயற்சி செய்கிறவர்கள் ஊழ்வினை களையும் வென்றுவிட முடியும்என்கிறார் திருவள்ளுவர்.   தவம் செய்பவருக்கு அவமாகிய வினைத்துன்பம் ஒருநாளும் வராதுஎன்கிறார் ஒளவையார்.

ஜீவ பிரம்ம ஐக்கியம்:   
மனிதன் தான் பிறந்தது நம்மை பிறப்பிக்கச் செய்த இறைவனோடு ஒன்றிவிடத்தான்.  எட்டும் இரண்டு மாகிய கண்களின் ஊசிமுனை வாசல்வழி கண்டு போனால் உய்யலாம்;  வாழலாம்;  பேரின்பம் பெறலாம்.  ஒன்றான இறைவனை இரண்டாக உள்ள கண்களிலே, மெய்ப்பொருளிலே நினைந்து உணர்ந்து நெகிழ்ந்தால் ஜீவாத்மா பரமாத்மா என்ற இரண்டற்று ஒன்றாகலாம்.  ஜீவன் முக்தராகலாம். 

மனிதர்கள் நாம் பெண்ணான ஆத்மாக்கள்.  பரமாத்மாவே ஆணான புருஷோத்தமன்.  இருவரும் இணைவதே ஜீவ பிரம்ம ஐக்கியம்.  அதுவே பேரின்பம்.  ஆத்மாவால் பரத்தில் பெறும் இன்பமே பேரின்பம்.  ஜீவ பிரம்ம ஐக்கியமே நாம் அறிந்து உணர்ந்து அடையவும் வேண்டியது ஆகும்.  மெய்ப்பொருள் அறிந்து விழித்திருந்து மெய்யிலே ஒளியைப் பெருக்கி மெய்யாகிவிடலாம் நாமுமே.

மூன்றாவது கண்:

வலது கண் சூரியனாகவும் இடது கண் சந்திரனாகவும் தோன்றி ஒளி உண்டாகும்.  நம் இரு கண்களையும் சூடு கொள்ள, உணர்வால் சூடு பெருக்கிட செய்து பார்க்கையில் சூரிய சந்திரனாகிய இரு கண் ஒளி ஒன்று சேர்ந்துவிடும். அங்கே மூன்றாவது கண்ணாகிய அக்னிகலை; அகக்கண்; ஞானக்கண்; நெற்றிக்கண் தோன்றும் அக அனுபவம் கிட்டும். மெய் அனுபவம் பெற வேண்டுமாயின் மெய்யிலே விளங்கும் மெய்ப்பொருளைப் பற்ற வேண்டும்.  மெய்யை மெய்யாக்கி விட வேண்டும். கண் இரண்டையும் ஒன்றாக்கினால் உள்ளே ஒளிரும் மூன்றாவது கண்.   ஓங்காரமான , சேர்ந்ததே ம்  மூன்றாவது கண்ணாகிய அக்னிகலை; அகக்கண்; ஞானக்கண்; நெற்றிக்கண். 

மெய்யை மெய்யாக்கு:

நமது உடல் எனும் மெய் இறைவனை அறியாதவனுக்கு பொய்; அந்த பொய் உடல் மரணத்தில் அது அழிந்து போகும்.  உண்மையில் நமது மெய் பொய்யல்ல.  நித்ய ஜீவனைத் தாங்கியிருக்கும் அது அழியாதது.  மெய் பொய்க்காமல், அழியாமல் வைக்கும் உபாயம் அறிந்து காத்தால் மெய்தங்கிய உடலும் உண்மையில் மெய்யாகி விடும்.  உடலிலே இருக்கும் மெய் துணைகொண்டு காயத்துள் நின்ற கடவுளை கண்டால் மெய் மெய்யாகிவிடும்.  பொன்னார் மேனியனை நம் மெய்யில் கண்டால் நம் உடலும் பொன் உடலாகும்.  இது உண்மை.  மெய் தந்தவனை, மெய்யினுள் மெய்ப்பொருள் தந்தவனை கண்களில் காணுங்கள்; உணருங்கள்.  நன்றி சொல்லுங்கள்.  இறைவன் நம் மெய்யிலே உள்ளார்.  இறைவனை நம் மெய்யிலே உணர்ந்தால் தான் பார்க்குமிடமெங்கும் நீக்கமற அந்த பரஞ்சோதியே நிறைந்திருக்கிறான் என்பதை தவத்தால் நம்மால் உணர முடியும்.  நம் உடல் என்னும் கூட்டை நம்முள் உயிராக இருக்கின்ற இறைவனே சதாகாலமும் தூக்கித் திரிகிறான் என்ற உண்மையையும் உணரமுடியும்.  

ஒளியுடல் பெறலாம்:

ஞானம் என்பது தன்னை உணர்தலே.  மனிதனாக பிறந்த நாம் இறைவன் நம் மெய்யில் இயங்கிக் கொண்டிருக்கிறான் என்று உணர்வதே ஞானம்.  இந்த ஞானம் பெற்றவரே சாகாக்கல்வியைப் பெற முடியும்.  சாகாக்கல்வி கற்று கண்மணியில் தவத்தை தொடர்ந்து செய்து வருபவர் இறைவனோடு  ஐக்கியமாவதுடன் தன் உடலையும் பொன்னுடலாக மாற்ற முடியும்.  தனது ஒளியுடலை இறைவனின் பேரொளியில் கரைத்துவிடவும் முடியும்.  அத்தகைய ஞானியரின் ஜீவபிரம்ம ஐக்கியத்தின் பின் அவர்களது தூல உடல் எதுவும் மிஞ்சி இருக்காது. 

ஞானதானம்:
தவம் கற்றவர்களின் முக்கிய சிறப்பு தானம் செய்வதாகும்.  எதையும் தானமாக கொடுக்கலாம்.  அன்னதானம் உயிரைக் காக்கும்.  ஞானதானம் மனிதர்களை இறைநிலையை அடையத் தூண்டும்.  பொருள் உள்ளவர்கள் பொருள் உள்ளவரை செய்ய வேண்டியது அன்னதானம்.  ஞானிகள் உயிர் உள்ளவரை செய்ய வேண்டியது ஞானதானம்.  மனிதா! உன் மெய்ப்பொருளை, உண்மைப் பொருளை உணர்வாயாகஎன்று எல்லோருக்கும் ஞானத்தை சொல்லிக் கொடுப்பதே, அவர் ஞானம் பெற வழிகாட்டுவதே ஞான தானம்.  உலக மாந்தர்களுக்கு மனமற்று உயிரை உணர ஞானதானம் செய்வதே சிறந்ததாகும்.  எல்லோரும் சாகாநிலை பெற உலகருக்கு தேவை ஞானதானம்.

வள்ளலாரின் ஞானதானம்:
விழிகளின் மேலாண்மையை எல்லோருக்கும் உணர்த்தியவர் வள்ளலார்.   உலக மக்கள் அனைவரும் மரணமில்லா பெரு வாழ்வு பெற வேண்டும் என்பதற்காக மிகவும் அரிதான சாகாக்கல்விஎனும் பிறப்பறுக்கும் ஞான கல்வியை உலகோருக்கு தெரிவித்தார்., ஞான இரகசியங்களை எல்லோரும் அறிய திருவருட்பாவில் வெளிப்படுத்தி னார்.  பாமரரும் புரிந்து தெளிந்து உணரும் படியாக வடலூரில் சத்திய ஞான சபையை கட்டி , உலகில் வேறு எங்கும் இல்லாதபடி , இறைவனை, கருணையே வடிவான பெரும்ஜோதியை எல்லோரும் கண்டு களிக்கும்படி , 7 திரை நீக்கிக்  காட்டியருளினார்.

தவமும் தவத்தின் பயனும்:

தவம் என்றால், “நான் யார்என அறிய உணர மெய்ஞ்ஞான சற்குருவிடம் ஞானதானம் பெற்று கேட்டதை உணர்ந்து அறிய சும்மா இருந்து செய்யும் பயிற்சியே, முயற்சியே.  நம் கண்ணில் உணர்வு பெற்று அதை நினைந்து நினைந்து உணர்ந்து உணர்ந்து அதனால் ஏற்படும் நெகிழ்ச்சியில் திழைத்து திழைத்து சும்மா இருக்க இருக்க நம் கண்களில் கண்ணீர் ஆறாக பெருக்கெடுத்து அருவியென கொட்டும்.   இங்ஙனம் தவம் தொடர்ந்தால் மரணமிலாப் பெருவாழ்வு, பிறவாப் பெருநிலை பெறலாம்.  அருட்பெரும் ஜோதி இறைவனோடு அந்த பரமாத்மாவோடு பேரொளியோடு நாமும் ஒளியாகி இணையலாம்.  ஐக்கிய மாகலாம்.  பேரின்பம் பெறலாம்.  தவம் செய்தால் உனக்கு ஒரு துன்பமும் கிடையாது.  தவம் செய்ய ஒன்றும் செய்ய வேண்டாம்.  இருக்குமிடத்திலேயே சும்மா இருந்தாலே போதும்.   இந்த தவத்தை மட்டும் விடாது தொடர்ந்து செய்து வாருங்கள்.  தனித்து உட்கார்ந்து கண்ணை விழித்து செய்வது மட்டும் தவம் என்றில்லாமல் உங்கள் வாழ்வில் ஒவ்வொரு சொல்லும் செயலும் கூட தவமாகி விட வேண்டும்.  

அதிகாலையில் பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து தவம் செய்வது நல்ல பலனை கொடுக்கும்.  தவம் செய்வது நமக்காக.  தவம் சித்திக்க வேண்டும். இறைவனோடு ஐக்கியமாக வேண்டும்.  நான் யார் என்பதை உணர வேண்டும் என்ற ஆன்ம பசியோடு நாம் இருக்க வேண்டும்.  தனித்திருந்து தவம் செய்வது நல்லது.  விழித்திரு என்பது எப்போதும் கண்ணைத் திறந்து வைத்திரு என்று பொருள் அல்ல.  விழிப்புணர்வுடன் இரு என்பதே அதன் பொருளாகும்.  விழிப்புணர்வு என்றால் ஜாக்கிரதையாக என்றும் விழியில் புணர்வுடன் அதாவது கண்விழியினுள் உள்ள ஜோதியுடன் சேர்தல் என்று பொருளாகும்.  கண் திறந்திருந்தாலும் சரி மூடியிருந்தாலும் சரி நமது கருத்து மட்டும் கண்மணியினுள் உள்ள இறையொளியைப் பற்றியிருக்க வேண்டும் என்பதே அதன் முடிவு.  உயிர் ஒளி ஆற்றலை தவம் செய்து பெருக்கி நம் உடலைப் பேணி வளர்த்தால் உடலும் அழியாது.  உயிரும் ஒளி மிகுந்து பேரொளியான இறைவனை அடையும்.

குரு:
இறைவன் மிகவும் எளிமையானவன்.   அனைத்து மக்களுக்குமே இறைவனே குருவாக வந்து ஞானத்தை மொழிகிறான்.  யார் ஒருவர் நம்மை இறைவனிடம் கொண்டு சேர்க்கிறரோ அவரே ஒருவருக்கு குரு ஆவார். நம் உடலில் உள்ள சத்யத்தை (உயிர் இறை அம்சம் ) பற்றி சுருதி, யுக்தி மற்றும் வாக்கியத்தால் புரிய வைத்து அந்த இறைவன் துலங்கும் இடத்தை (கண்களை) கூறுகிறாரோ அவரே சத்குரு. இந்த சத்யத்தை உணர நம் கண்களுக்கு உணர்வு கொடுத்து (தீக்ஷை) , தவம் செய்ய வழி காட்டுபவரே ஞான சற்குரு. இப்படி பட்ட ஞான சற்குருவை பெற்றவனே பாக்கியவான். அவனே தவம் செய்து இறை அருள் பெறுவான். 

மனிதனாக பிறந்த நாம் மனிதனாக, ஒழுக்கமாக, பக்தியோடு வாழ்ந்தால் போதும் நம் மனம் பக்குவப்படும்போது இறைவன் நல்ல குருவை நமக்கு அருள்வான்.

திருவடி உபதேசம்:
            மனித உடலில் உயிர் இறைவனே என்றும் அது துலங்குவது கண்களிலே தான் என்றும் குரு உபதேசம் மூலம் உணர்பவனே பாக்கியவான்.  காணும் கண்களுக்கு காட்டும் ஒளியாய், காட்டும் ஒளிக்கு காட்டுவிக்கும் ஒளியாய் பூணும் திருவடிகள்  என்றார் வள்ளலார்.   கண்கள் தான் திருவடி.   திருவடி நம் உடலில் உள்ள இடத்தை சுருதி , யுக்தி , வாக்கியம் கொண்டு விளக்கி தெளிய வைப்பது தான் திருவடி உபதேசம். திருவடியை அறிந்து உணர்ந்து தவம் செய்தால் தெய்வீக அனுபவங்கள் பெற்று நாம் நம்மை உணர்ந்து , நம் தலைவனான இறைவனை உணர்ந்து அடைய முடியும்.

திருவடி தீட்சை:
மனித பிறவி பெற்றதே இந்த தீட்சை பெற தகுதியாகும்.
தீட்சை எல்லா மனிதர்களும் பெறலாம்.

தீட்சை பெற முக்கிய தகுதி :

1 . சைவ உணவை மட்டும் உட்கொள்ள வேண்டும்.
2 . போதை , புகை போன்ற பழக்கங்களை அறவே விட்டு நீங்க வேண்டும்.
3 . ஒழுக்கத்துடன் வாழ வேண்டும்.
சுருங்க கூற வேண்டுமானால் பஞ்ச மாபாதகங்கள் செய்யாதவராக இருத்தல் வேண்டும்.
இவைகள் இருப்பின் இனி இவைகள் செய்வதில்லை என சங்கல்பம் செய்து இனி மேல் இவைகளை தவிர்த்து பின் தீட்சை பெறலாம்.
கண்களில் உள்ள தீயை (ஒளியை) ஞான சற்குரு தன் கண்களின் ஒளியினால் தூண்டுவதே தீட்சை.   தீட்சையின் மூலம் தன் கண்ணில் கண் மணியில் உணர்வு பெறுகிறான் சீடன்.   ஒரு ஞான சற்குரு தன் கண் ஒளியால் சீடனது கண் ஒளியை துண்டிய பின் தான் , சீடன் தனது கண் ஒளியைப் பற்றி கண் ஒளி பெருக்க தவம் செய்ய முடியும்.  நம் கண்மணியின் மத்தியில் ஊசிமுனை அளவு ஒரு சிறு துவாரம் உள்ளது. இந்த துவாரத்தை துலங்கும் நம் ஜீவ ஒளியை நம் வினைகள் சூட்சமத்தில் 7 திரையாக அமைந்து மூடியுள்ளது.  தீட்சையின் போது சீடனின் இவ்வினைத்  திரைகளை சற்குரு தன் கண் ஒளியால் பிளந்து சீடனின் கண் ஆகிய விளக்கினை ஏற்றி வைக்கிறார்.  குரு தீட்சையின் போது, தன் கண்மணி ஒளியால் தூண்டும் போது கடுகடுப்பு உணர்வு சீடனின் கண்களில் தோன்றும்.   அந்த உணர்வைத் தூண்டி தூண்டி ஒளியை பெருக்க வேண்டும்.  தீட்சையின் போது முதலில் நம் புற கண்ணை திறந்து குருவின் கண்ணை பார்க்க வேண்டும். தீட்சை பெற்ற பின் கண்ணைத்  திறந்து தான் தவம் செய்ய வேண்டும். கண் திறந்து கண்மணி உணர்வைப் பற்றி தவம் செய்தால் தான் கண் ஒளி பெருகும்.  நன்றாக புரிந்து கொள்ளுங்கள் நம் ஜீவ ஒளியும் , புற ஒளியும் ஒன்றல்ல. நம் ஜீவ ஒளியை தகுதி பெற்ற சற்குருவின் ஜீவ ஒளியை கொண்டு தான் தூண்ட முடியும். வேறு எந்த புற ஒளியை கொண்டோ வேறு எதனாலோ தூண்ட முடியாது.  இதுவே தீட்சை. இந்த உணர்வை பெறுவதே தீட்சை. இதை தான் சித்தர்கள் தொடாமல் தொடுவது” , “உணர்வால் உணர வைப்பதுஎன்றனர்.  சச்சு தீட்சை, நயன தீட்சை, தச தீட்சை என்று கூறுவது திருவடி தீட்சையான இதைத்தான்.  தச தீட்சை என்றால் 10 விதமான தீட்சை அல்ல. நம் உடலில் 8 ம்(வலது கண் ஒளி ) , 2 ம் (இடது கண் ஒளி) உள் சேர்த்தல் நம் உயிர் ஸ்தானமான அக்னி கலையை அடையலாம்.  10 ம் இடமான நம் இரு கண் உள் சேரும் இடத்தில்   தான் நம் உயிர் உள்ளது. இங்குள்ள உயிர் ஒளியை பெருக்கி தன் இரு கண்கள் மூலம் சீடனின் கண்ணை பார்த்து சீடனின் கண்களில் உள்ள ஒளியை குரு தூண்டுவதான் தீட்சை.

இதைத் தான் தசதீட்சை என்றனர். கண்களான நயனத்தின் மூலம் கொடுப்பதால் நயன தீட்சை என்றும் , திருவடி தீட்சை என்றும் இதற்கு பெயர்.  இதில் இரகசியம் என்று எதுவும் இல்லை.      நம் ஸ்தூல உடலில் உள்ள சூட்சும சரிரம் தீட்சையின் மூலம் பிறக்கிறது. குரு தனது கண் ஒளியின் மூலம் நமது கண் ஒளியை தூண்டி , கண்மணிக்கு உணர்வு கொடுத்து சூட்சும சரிரத்தை பிறக்க செய்கிறார். இதனால் தீட்சை கொடுத்த ஞான சற்குருவே தாய் தந்தை ஆகிறார்.   அக்னியின் மூலம் ஞானஸ்தானம்என்று பைபிள் இதையே குறிப்பிடுகிறது.  இயேசுநாதர் அக்னியால் வழங்கிய ஞானஸ்நானம் இதுவே.  தீட்சை பெற்றவனே துவிஜன், மறுபடி பிறந்தவன் ஆகிறான். பைபிள் மறுபடி பிறவாதவன் பரலோக சாம்ராஜ் ஜியத்தில் பிரவேசிக்க மாட்டான் என்றும் , அகத்திய மகரிஷி மாற்றி பிறக்க வகையறிந்தாய்  இல்லைஎன்றும் கூறுவது இதையே.   தொடர்ந்து தவம் செய்தால் யார் விரும்பினாலும் இறைவனை அடையலாம். மாதா பிதாவினால் பிறந்த மனிதன் குருவால் துவிஜனாகி தன் ஆன்மீக பயிற்சியைத் தவத்தைத் தொடர்ந்து செய்து முடிவில் இறைவனை அடைகிறான்.

சன்மார்க்கம்:

இறப்பொழிக்கும் மார்க்கம் சன்மார்க்கம்.  சாகாதவனே சன்மார்க்கி.  சாகாதவனே ஞான நிலையை உணர்ந்தவன்.  சாவாதிருந்திட பால்கற.  சிரமேல் இருக்கும் பால்கறஎன்கிறார் ஒரு சித்தர் பெருமான்.  நம் தலையில் உள்ள கண் ஒளியைப் பெருக்கினால் அது உள் ஊடுருவி போய் சிரசுக்கு போகும்.  அந்நிலையில் அங்கிருக்கும் அமுதம் வழிந்து நம் தொண்டையில் சொட்டும்.  இதுவே அமுதம் என்பர்.  மங்கா பால் உண்டு மலைமேல் இருப்போர்க்குஎன குதம்பை சித்தர் பாடியதும் இந்த அமுதம் சொட்டும் நிலை பற்றியேயாகும்.  

ஞானி:

ஞானிகள் இயல்பு, தான் பெற்ற இறை அனுபவத்தை, மெய்ஞானத்தை, உலகோருக்கு அன்போடு கருணையோடு உபதேசித்து எல்லோரையும் நல்வழிப்படுத்துவது ஒன்றே.  நீ ஞானியாகி ஞானதானம் செய்.  உடம்பினுள் இறைவனைக் காண்பதே உடம்பின் பயன் என்பதை எல்லோர்க்கும் எடுத்து இயம்பு. மக்கள் மாக்களாக வாழ்வதை விட்டு மக்களாக வாழ விழியே வழி என விழிப்புணர்வூட்டு.  உலகோர் பழித்தாலும் உன் கடமையைச் செய்.  பயனடைவோர் அடையட்டும். நம்பிக்கையுள்ளோர் ஞானம் பெறுவர், காண்பர் கண்ஒளியை, கண்மணியை, கண்ணான கடவுளை.

நாம் அறிய வேண்டியது:

இறைவன் அருள் பெறுவது மட்டுமே நம் ஒரே இலட்சியமாக இருக்க வேண்டும்.  நம்மில் உள்ள உயிரே இறைவனின் அம்சம்.  நம்மை போலவே எல்லோர் உள்ளத்திலும் இறைவனே குடி கொண்டுள்ளார்
பிற உயிர்படும் துன்பம் நீக்க உன்னால் முடிந்தவரை பாடுபடு.  அது தான் ஆன்ம நேய ஒருமை. வள்ளல் தன்மை பெற்றவர் தன்மை இதுவே.   குறைந்த பட்சம் அனைத்து மக்களின் பசியை நீக்குவதே மனித இயல்பு.   சைவ உணவு உண்பவனே இறைவன் அருள் பெற தகுதியானவன்.   நாம் பட்ட துன்பத்தை இனி யாரும் பெறலாகாது.   எல்லோரும் மரணமிலா பெருவாழ்வு பெற வழி காட்டுவதே நம் வாழ்வின் குறிக்கோளாகட்டும்.  எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!

நாம் செய்யவேண்டியது:

நமது ஆன்ம நிலையில் உலகில் உள்ள அனைவரும் ஒரே பரமாத்மாவின், அம்மையப்பனான இறைவனின் பிள்ளைகளே.  நாம் அனைவரும் சகோதர சகோதரிகளே.  நம் உடல்களின் தாய் தந்தையர்கள்  தான் வேறு என்பதால் உடலால் தான் நாம் வேறுபட்டிருக்கிறோம்.  எனவே ஜாதி, மதம், இனம், மொழி, நாடு என பிரித்துப் பார்க்காதீர்கள். எல்லா உயிரையும் தன்னுயிர் போல் நேசியுங்கள்.  எல்லோரிடமும் அன்போடும் கருணையோடும் நடந்து கொள்ளுங்கள். எல்லா உயிரும் இன்புற்று வாழ இறைவனை வேண்டுங்கள்.  இறைவனை அடையும் வழி அன்பு ஒன்றே.  உங்கள் ஜீவனை இரட்சிக்க தவறாமல் நீங்கள் தவம் செய்யுங்கள்.  கண் ஒளியில் கலந்து சும்மா இருந்து மானஸபூஜை செய்யுங்கள். ஜீவகாருண்யமே மோட்ச வீட்டின் திறவுகோல்.  நாம் சாகா நிலை பெற நல்ல ஒழுக்க நெறியையும், தவநிலையையும் தொடர்ந்து பின்பற்ற வேண்டும்.   எவ்வித பேதமும் யாரிடமும் காணாதீர்கள்.  தீய ஒழுக்கமும் புலை, கொலை செய்யும் புறவினத்தாரை விட்டு விலகுங்கள்.  நல்லொழுக்கமும் ஞானதவமும் செய்யும் அகவினத்தாரோடு இணைந்திருங்கள். நேற்று வரை நீங்கள் புறவினத்தானாக இருந்தாலும் பரவாயில்லை இன்று முதல் அகவினத்தானாக மாறுங்கள்.  ஞானம் பெறலாம்.

ஆதிகுரு தட்சிணாமூர்த்தி:

எல்லாம் வல்ல இறைவனே ஆதிகுரு தட்சிணாமூர்த்தியாக,  முதல் குருவாக வந்து மோன உபதேசத்தினை அருளினார்.  தென் திசையான எமனிடமிருந்து மீள, மரணமில்லாத பேரின்ப பெருவாழ்வு பெற தென்திசை நோக்கி இருக்கும் ஆதிகுரு தட்சிணாமுர்த்தியை நோக்கி நாம் வடதிசை நோக்கி அமரவேண்டும்.   கண்ணை திறந்து பேசாது சும்மாஇருஎன்பதுவே தட்சிணாமுர்த்தி ஆதிகுரு சொல்லாமல் உணர்த்திய ஞான இரகசியம். பேரொளியான இறைவனின் இருப்பிடம் சின்முத்திரையில் உணர்த்தப்பட்டது. சின்முத்திரை. இதுதான் மனித தேகத்தில் இறைவன் துலங்கும் இடம். நாம் தவம் செய்ய வேண்டிய ஸ்தலம். சும்மா இருக்க வேண்டிய இடம். சின்முத்திரை வைத்தபடியே கையை புரட்டி பார்த்தால் ஆள்காட்டி விரலும் கட்டைவிரலும் கூடிய பகுதியானது நமது கண்போலவே தோன்றும். கட்டை விரலின் மேல் நுனியிலிருந்து ஆள்காட்டி விரல் தொட்டு உள்ள கோடு வரையிலுள்ள இடமே நம் கண் அளவு. ஆக சின்முத்திரை என்பது கண்என்பதை மறைமுகமாக உணர்த்தப்பட்டது.     புகை இல்லாத ஜோதி, அருட்பெரும்ஜோதி நம் கண்மணி உள்ளே இருக்கும் சுயம் ஜோதி. எவ்வளவு பெரிய ஞான இரகசியம்.   இதைத் தெரிந்து கொண்டு  ஆதிகுரு தட்சிணாமூர்த்தி உணர்த்தியது போல கண்ணை திறந்து சும்மா இருந்து தவம் செய்ய வேண்டும்.   தட்சிணாமுர்த்தியாக ஆதிகுருவாக இறைவன் உணர்த்திய கண்ணில் ஒளியை உணர்ந்து விழித்து சும்மா இரு என்பதுவே உபதேசம். விழி தான் ஞானம் பெற ஒரே வழி என்பதை உணர்வீர். விழித்திருந்து தவம் செய்வது ஒன்றே நம் தவம் என்பதையும் உணர்வீர்.

யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்.  எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க.  பள்ளிக் கல்வியோடு கண்மணியில் ஒளியாய் இறைவன் இருக்கும் புள்ளிக் கல்வியான சாகாக்கல்வியையும் அனைவரும் கற்று தவ அனுபவம் சித்திக்கப் பெற்று மரணமில்லா பெருவாழ்வு பெற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

ஆன்மநேய ஒருமைப்பாடுடயீர்!
 ” ஞானம் தேடும் நல்ல உள்ளங்களே !
 ” நான் யார் ” , என அறிய விரும்புகிறீர்களா ?
 ” உண்மை அறிவு பெற ஆசையா ?
 ” மெய்பொருள் உணர வேண்டுமா ?
 ” பிரபஞ்ச இரகசியம் தெரிய வேண்டுமா ?
 ” கடவுளை காண உணர விருப்பமா ?
 ” ஆன்மா பற்றிய தெளிவான விளக்கமா ?
 இவைகளை அறிய உணர விருப்பம் உள்ளவர்கள் கலந்து கொள்ளுங்கள்.

இதுவரை இந்த உலகில் ரகசியம் ரகசியம் என மறைக்கப்பட்ட விஷயங்கள், திருவருட் பிரகாச வள்ளலார் மற்றும் பல சித்தர்கள் ஆசியால் , “கன்னியாகுமரிவாலை உலகன்னை பகவதியம்மன் அருளால் எமது ஞான சற்குரு சிவ செல்வராஜ் அய்யா அவர்கள் எல்லோரும் அறிய இரகசியங்களை வெளிப்படுத்தி உள்ளார்கள் ! உலகம் சுபிட்சமடைய வேண்டும். இதுவே ஒரு குறிக்கோள்! இலட்சியம்!

எமது ஞான சற்குரு சிவ செல்வராஜ் அய்யா மட்டுமே வள்ளல் அருளால் இரகசியங்களை பரிபாஷைகளை விளக்கி நூற்களாகவே வெளியட்டுள்ளார் !
 எல்லோரும் ஞானம் பெற வேண்டும் ! மரணமிலா பெருவாழ்வு பெற வேண்டும் .
Next previous home
Related Posts Plugin for WordPress, Blogger...