Wednesday, November 26, 2014

ஜோதி வழிபாடு

ஜோதி வழிபாடு
 
     ஜோதி வழிபாடு என்னும் சொற்களை நன்கு சிந்தித்துப் பொருள் கொள்வோமானால் உண்மை ஞானம் நம்மால் உணர முடியாமல் போகாது.

     ஜோதி - உள்ளத்தில் ஒளிர்கின்ற ஜோதி

     வழிபாடு – அப்பியாசம் (தியானப்பயிற்சி) ஆராதனை

     ஜோதி வழிபாடு என்பது உள்ளத்தில் ஒளிர்கின்ற ஜோதியில் மனத்தை ஒன்றுபடுத்தி தியானம் செய்வதாகும்.

     இந்த உண்மை பொருளை அறியாது, புறத்தில் விளக்கை ஏற்றி வைத்து, அந்தச் ஜோதியையே இரு கைகளைக் கூப்பித் தலை வணங்குகிறார்கள்.  தலை வணங்குவது மட்டும் போதாது உள்ளம் வணங்குதல் வேண்டும் அதாவது கீழ்ப்படிந்து தியானிக்க வேண்டும்.  புறத்திலே விளக்கை ஏற்றி வைத்து அதனை வணங்குவதால், மனம் தூய்மை அடைந்து பக்தி ஏற்படுமே தவிர, உண்மை ஞான நிலை வெளிப்படாது.  உள்ளத்தில் ஒளி விட்டுக் கொண்டு இருக்கின்ற அருட்பெரும்ஜோதியை அறிந்து செயல் படுபவர்கள் அரிதினும் அரிதாவர்.

     கடவுளைக் காண எண்ணம் இருந்தும் பலருக்கு இரகசியம் வெளிப்படாததற்க்குக் காரணம், ஜோதி வழிபாடு என்பதற்குக் கை கூப்பித் தலை வணங்குவது என்று நெடு நாட்களாகப் பழக்கத்தில் வந்திருப்பதே ஆகும்.  இதனால் உலகம், ஏமாற்றம் அடைந்தது என்று கூறலாம்.

     ஜோதி வழிபாடு என்பதற்கு, இடக்கை, வலக்கை இரண்டையும் ஒன்று சேர்த்து தலை வணங்குதல் என்று உரைசெய்து பலனற்றிருக்கிறார்கள்.

     இடக்கை என்பது சந்திர கலையையும், வலக்கை என்பது சூரிய கலையையும் குறிப்பதாகும்.   மேலும் இடது கண் சந்திரன், வலது கண் சூரியன் என்று சித்தர் சிவவாக்கியார் பாடல்களில் கூறுவார். இரு கண்களில் உள்ள ஒளிக் கலைகளை உள் முகமாகச் சுழி முனையில் ஒன்று சேர்க்கும் தந்திரத்தை அறிந்து தியானம் செய்வது என்பது தான் பொருத்தமான பொருளாகும்.

     தலையையோ, உடலையோ தாழ்த்தி வணங்குவதால் பலன் ஏற்படாது.  எண்சாண் உடம்பிற்குச் சிரசே பிரதானம் என்பது முது மொழி.  ஞான கர்மத்திற்கு இந்திரியங்களே முக்கிய பொருள்களாய் இருப்பதாலும், அந்த ஞானேந்திரியங்களாகிய மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகியவை தலையினிடமே இருப்பதனாலும், இவற்றைப் பக்குவப் படுத்தியே தியானப் பழக்கம் செய்து ஞானத்தையடைய வேண்டியிருக்கின்றது.

     தலைவணங்குதல் என்பது, தலையில் உள்ள ஞானேந்திரியங்கள் ஐந்தையும் ஒரு முகப்படுத்தும் தந்திரத்தை சற்குரு முகத்தில் அறிந்து தியானப்பழக்கம் செய்வது என்பது தான் சிறந்ததும், பொருத்தமானதும் ஆகும்.

     ஒளிஒன்றே அண்டபகிர்அண்டம் எல்லாம் விளங்கி ஓங்குகின்றது.  எல்லாம் ஒளிமயமே அன்றி வேறில்லை.  அருட்பெரும்ஜோதியை உள்ளத்தில் அறிந்து தொழுத மாத்திரத்தில் உள்ளிருக்கும் மகத்தான ஞானச் செல்வங்கள் வெளிப்பட்டு நிற்கும்.  இதுஉண்மை அறிந்த ஞானிகளின் அனுபவமாகும்.

     ஞானிகள் உள்ளத்தில் இறைவனை ஜோதி மயமாகக் கண்டு அதில் மனத்தை ஒருமைப் படுத்தித் தம்மை மறந்து தியனாம் செய்து வெற்றிபெற்றார்கள்.  ஜோதி வழிபாடு உலகில் உள்ள எல்லா மதத்தினர்க்கும், உடன் பாடானதும் பொதுவானதும் ஆகும்.

     ஜோதி வழிபாட்டுக்கு முதலாவது உபதேசமே நேத்திரதைப் பற்றியது.  அதனால் திருமந்திரத்தில் முதலாவது உபதேசத்தில், திருமூலர் அடியிற் காணுமாறு பாடியுள்ளார்.

    
விண்ணின் றிழிந்து வினைக் கீடாய் மெய் கொண்டு
     தண்ணின்ற தாளைத் தலைக் காவல் முன்வைத்து
     உண்ணின்று ருக்கியொ ரொப்பிலா ஆனந்தம்
     கண்ணின்று காட்டிக் களிம்பறுத் தானே.
133

     சிதா காயத்திலிருந்து இறங்கி பீசத்திலுள்ள சுக்கிலத்தோடு கலந்து வினைக்கு ஈடாகத் தேகமேடுத்து, குளிர்ச்சி நிறைந்திருக்கும் படியான திருவடியாகிய நேத்திரங்களைச் சிரசின் முன் காவலாக வைத்து, உள்ளிருந்து உறுக்கி ஒப்பில்லாத ஆனந்தத்தைக் கண்ணின் மூலமாகக் காட்டி பரம் பொருளாகிய இறைவன் இருட்டை ஒழித்தான்.

     “அண்டங்கள் ஏழும் அகண்டமும் ஆவியும்
     கொண்ட சராசர முற்றுங் குணங்களும்
     பண்டை மறையும் படைப்பளிப் பாதியுங்
     கண்ட சிவனுமென் கண்ணின்றி யில்லையே.”
 
1871 – திருமந்திரம்

     பூதாண்டங்கள் ஐந்தோடு துவாதசாந்த வெளி அதோமுக வெளியாகிய ஏழும் எல்லாமாய் நிற்கும் நிலையும் சீவனும் அடைந்து சர-அசரங்கள் பூராவும் எல்லா குணங்களும் பழமையாகிய வேதங்களும் சிருஷ்டி, ஸ்திதி, சங்காரமும் தெரிசிக்கப்பட்ட சிவமும் என்னுடைய நேத்திரத் திலடங்கி இருப்பதேயல்லாமல் வேறில்லை.

     “ஆதியந்தம் ஆயினாய் ஆலவாயில் அண்ணலே
     சோதியந்தம் ஆயினாய் சோதியுள் ஓர் சோதியாய்
     கீதம்வந்த வாய்மையாற் கிளந்தருக்கி னார்க்கலால்
     ஓதி வந்த வாய்மையால் உணர்ந்துரைக்க லாகுமே”

                                       திருஞான சம்பந்தர் தேவாரம்

     திரு ஆலவாயில் அமர்ந்த பெருமானே முதலும் முடிவும் ஆனாய், முடிந்த முடிவான சோதியுமானாய் ஒளிக்குள் ஓர் ஒளியாய், பாடவல்ல திறமை உள்ளவர்கள் சொல்லினால் விவாதிக்கிறவர்களுக்கு அல்லாது, உண்மை உணர்ந்து ஓதி வந்த வாய்மையில் உரைத்தல் கூடும்.

     அருட்பெரும்ஜோதி ஆண்டவரது உண்மையாய் அறிந்து அவரைத் துதிப்பதற்கு நூற்கல்வியினால் பயன் பெறமுடியாது. குரு அருள் ஒன்றினால் தான் பயன்பெற முடியும்.

     “உடம்பெனும் மனை அகத்துள் உள்ளமே தகளியாக
     மடம்படும் உணர்நெய் அட்டி உயிர்எனும் திரிமயக்கி
     இடம்படு ஞானத்தீயால் எரிகொள இருந்து நோக்கில்
     கடம்பமர் காளை தாதை கழலடி காணலாமே”

                                     - திருநாவுக்கரசர் – தேவாரம்  

     உடம்பாகிய வீட்டுக்குள், உள்ளமாகிய தகளியில், அறியாமை நீங்குதற்குத் காரணமான நல் உணர்வாகிய நெய்யை ஊற்றி, உயிர் எனப்படும் திரியினைச் செம்மையாக அமைத்து, ஞானச் சுடரை (குருமுகமாய் இருந்து) ஏற்றிக் கொண்டு, அந்த ஞான ஒளியில் ஆழ்ந்து இருந்து நோக்கினால் இறைவன் திருவடிச் சுடரை காணும் பேறு பெறலாம்.     உலகம் நிலையற்றது என உணர்ந்து சிவமே ஜோதி என்ற தெளிந்த அறிவு உண்டாகும் போது சிவத்தின் அருள் ஒளிசிவனிடம் சேருமாதலின் திரி-உயிர், ஒளி, அறிவு ஆயிற்று.

     சோதியே! சுடரே! சூழ் ஒளி விளக்கே!”  மாணிக்கவாசகர் திருவாசகம்.
     பஞ்சேந்திரிய சக்திகள் பிரணவத்தில் சேருவதால் பிரணவவுச்சி பிரகாசிக்கும் அதையே சோதியே என்றார்.

     “சூரிய, சந்திர அக்கினிகளின் கூட்டுறவால் ஏற்பட்ட கதிர்களையே சுடரே என்றார்.

     பிரணவத்தின் மத்தியிலுள்ள இருதய கமலத்தைச் சுற்றி பிரகாசிக்கும் அக்கினியையே சூழ் ஒளி விளக்கே என்றார்.

     கேழில் பரஞ்சோதி! கேழில் பரங்கருணை!
     கேழில் விழுப்பொருள்கள்,”
மாணிக்கவாசகர் திருவாசகம்

     பரமாணு சம்பந்தப்பட்டதும், சமானமற்றதுமான அக்கினி சொரூபத்தையே கேழில் பரஞ்சோதி என்றார்.

    உவமையற்ற பரமாணுவானது சீவர்களிடம் கலக்கும் இயற்கைத் தன்மையே கருணை என்பதாகும்.  அதனால் தான் கேழில் பரங்கருணை என்றார்.

     பிராணன், அபானன், திருவடிகள், நாதகலை, விந்து கலை, பஞ்சேந்திரிய சத்திகள், இருதய கமலம், பஞ்சபூத சத்திகள் முதலியவற்றையே கேழில் விழுப்பொருள் என்றார்.

    

     “கண்ணாய் ஏழு உலகும் கருத்தாய் அருத்தமுமாய்
     பண்ணார் இன்தமிழாய்ப் பரமாய பரஞ்சுடரே
     மண்ணார் பூம்பொழில் சூழ்மழ பாடியுள் மாணிக்கமே
     அண்ணா நின்னை  அல்லால் இனியாரை நினைக்கேனே”

                         - சுந்தர மூர்த்தி நாயனார் – தேவாரம்
     ஏழு உலகங்களிலும் உள்ள உயிர்களுக்கெல்லாம் அறிவைத் தருதலின் கண்ணாகி, அவ்வுயிர்கள் எல்லாம் குறியாக கொள்ளுதற்குரிய மெய்ப்பொருள் கண்ணாகியும், இசை நிறைந்த இனிய தமிழ் மொழியுமாகி, எவற்றுக்கும் மேலாகிய பேரின்ப ஒளியும் ஆனவனே! மண்வளம் மிக்க பூஞ்சோலைகள் சூழ்ந்த திருமழபாடியுள் எழுந்தருளிய விலையில்லா மாணிக்கமே! மனதிற்கு எட்டாதவனே! உன்னையன்றி இனி வேறுயாரை நினைப்பேன்?

குறிப்பு: ஒளி அறிவித்தாலன்றித் தானே அறியாத்தன்மையதான உயிர்க்குச் சிவபெருமான் உயிர், ஒளி, அறிவாய் விளங்கி அறிவூட்டுதலின் வாழ்க்கையில் குறியாகக் கொள்ளுதற்குரிய அணு வடிவான மெய்பொருள் கண்தானே என்பதை உணர்த்துதலின் கருத்தாய அருத்தமுமாய் என்றார்.  அன்பு பெருகும்போது அதற்குப் போக்கு வீடாகக் கண்ணீர் வெளிப்படுதற்க்குக் கண்ணே துணையாகும்.  அவ்வாறு தமிழ்ப் பண்களால் பாடும் போது நிலையான பரஞ்சுடரே.  பேரின்ப மயமாதலின் பண்ணார் இந்தமிழாய்ப் பரமாய பரஞ்சுடரே என்றார்.

     “முடிச்சோதியாய் உனது முகச்சோதி மலர்ந்ததுவோ?
     அடிச்சோதி நின்ற தாமரையாய் அலர்ந்ததுவோ?
     படிச்சோதி அடையொடும் பல்கலனாய் நின்பைம்பொன்
     கடிச்சோதி கலந்ததுவோ? திருமாலே கட்டுரையே!”
      -  நம்மாழ்வார் திருவாய்மொழி


     முடிச்சோதி உன் திருமுகத்தின் கண்களில் சோதியாய் மலர்ந்ததோ? உனது ஒளியாகிய திருவடிநிற்கும் கண்கள் தாமரையாய் மலர்ந்ததோ?

     படி – வாசற்படி, பூமி, சம்பளம், ஓரளவு உடலினுள் நுழையும் இடமாகிய கண்ணே வாசற்படியாயிற்று.

     படிச்சோதி – கண்ணாகிய வாசற்படியில் உள்ள சோதி படி – இன்பம், ஒளி.

    கடிச்சோதி – இன்பமயமான சோதி.  இன்பமயமானசோதி அருட்பெரும் சோதியோடு கலந்ததோ? நீயே சொல்வாயாக.

     “உளியிட்ட கல்லையும் ஒப்பிட்ட சாந்தையும் ஊத்தையறப்
     புளியிட்ட செம்பையும் போற்றுகிலேன் உயர்பொன்னெனவே
     ஒளியிட தாளிரண் டுள்ளே யிருந்துவ துண்மையென்று
     வெளியிட் டடைத்துவைத் தேனினி மேலோன்றும் வேண்டிலனே”
-    பட்டினத்தார்
     உளியினால் செதுக்கப் பட்டகல்லையும், சுண்ணச் சாந்தினால் உருவாகச் செய்யப்பட்ட உருவத்தையும், களிம்பற புளியினால் தேய்த்து கழுவப்பட்ட செம்பினாலாகிய உருவத்தையும் ஆதரிக்க மாட்டேன்.  உயர்ந்த பொன் போன்று ஒளி உள்ள இரண்டு திருவடிகளையும் கண்களின் உள்பாகத்தில் இருத்துவது உண்மையானதென்று அவற்றை வெளியில் கண்ணிடத்திலிட்டு அடைத்து வைத்தேன்.  இதைத் தவிர இனி வேண்டப்படுவது ஒன்று மில்லை.

குறிப்பு: சாட்சியாக ஆலயங்களில் கல்லினாலும், சாந்தினாலும், செம்பினாலும் ஆக்கப்பட்டு, அறியாதவர்களால் வணங்கப்பட்ட தெய்வ உருவம் போன்றவற்றை இனி வணங்காது, சுடர் அடிகளைக் கொண்டு ஞான கர்மத்தைச் செய்வது தவிர மற்றவை பலனற்றவை என்பது கருத்து.


      ஜாதி,  மத, இன பேதமின்றி யார் வேண்டுமானாலும் வரலாம்! அருள் பெறலாம்!
    மாதா பிதாவை பெற்ற நீவிர்! உடலை தந்த  மாதா பிதாவை போற்றும் நீவீர் நம் உடலுக்குள் உயிரை தந்த இறைவனை உணர வேண்டாமா? அடைய வேண்டாமா?

    உடலுக்கும்,  உயிருக்கும் உள்ள சம்பந்தம் என்ன  என்பதை  அறிவிப்பவர் உணர்த்துபவர்  தான் குரு“!  அப்படிப்பட்ட ஒரு குருவை தேடுங்கள்.
    எத்தனையோ ஞானிகள்  இந்திய புண்ணிய பூமியிலே !. உரைத்த  ஞானமோ  ஒப்பற்றது!. இறை உண்மை! சத்தியம்!.

    ஆனால் புரிந்து கொள்பவர் அரிதினும் அரிதாகவே  உள்ளனர்!. படித்து அறிய இந்த பிறவி போதுமா?

    குருவிடம் பாடம் கேட்டு,  குருவிடம் உபதேசம் பெற்று.  ஞான தீட்சை  பெற்றாலே  உண்மை புரியும்! குருவருளின்றி திருவருள் கிட்டாது.

    நாம் நடமாடும் கோயில் என்பதை நமக்குள் உயிராக,  ஆத்மாவாக பிராணனாக எல்லாம் வல்ல எங்கும் நிறைந்த இறைவனே இருக்கிறான் என்பதை தீட்சை பெற்று உணர்ந்து கொள்ளலாம்! வாரீர்! வாரீர்!

குரு உபதேசம் உண்மை விளக்கம் !

குரு தீட்சை அனுபவ பாடம் !

மேலும் விபரங்கள் அறிய 
www.vallalyaar.com

No comments:

Next previous home
Related Posts Plugin for WordPress, Blogger...