Wednesday, November 26, 2014

ஜீவகாருண்யமே முக்திக்கு முதற்படிதிருவருட்பா வசனம்
:

      நம்முடைய தலைவராகிய கடவுளை நாமடைவதற்கு அவரெழுந்தருளியிருக்கும் கோட்டையின் சாவியாகிய அருள் வேண்டும்.  இவ்வருள் அன்பினாவல்லது வேறு வகையால் அடைவது அரிது, இவ்வன்பு ஜீவகாருண்யத்தால் அல்லது வேறுவகையால் வராது.  ஜீவகாருண்யத்தின் லாபமே அன்பு.

      இந்த ஜீவகாருண்யம் உண்டாவதற்கு ஏது, அல்லது துவாரம் யாதெனில்.

      கடவுளுடைய பெருமையையும் தரத்தையும் – நம்முடைய சிறுமையையும் தரத்தையும் ஊன்றி விசாரித்தலே – அன்னிய உயிர்களுக்கு இம்சை செய்யாதிருத்தலே ஜீவகாருண்யம்.  இதுதான் முத்தியடைவதற்கு முதற்படியாயிருக்கிறது ஆதலால், இதைப் பாதுகாத்தல் வேண்டும்.

கடவுள் தயவும் – ஜீவ தயவும்:
தயவென்பது இரண்டு வகைப்படும், யாதெனில்,
             1. கடவுள் தயை
             2. ஜீவ தயை ஆகிய இரண்டு.

கடவுள் தயை – என்பது இறந்த உயிரை எழுப்புதல், தாவரங்களுக்கு மழை பெய்வித்தல், மிருக, பட்சி, ஊர்வனவாதிகளுக்கு ஆகாரம் நியதியின் படி, அருட்சத்தியால் ஊட்டி வைத்தல், சோமசூரியாக்கினிப் பிரகாசங்களைக் கால, தேச, வண்ணம் பிரகாசஞ் சேவித்தால், பக்குவிகளுக்கு அநுக்கிரகித்தல், அபக்குவிகளைச் செய்யவேண்டிய அருள் நியதியின்படி, தண்டனை செய்வித்துப் பக்குவம் வருவித்தல்.

ஜீவதயை – என்பது தன் சத்தியினளவு உயிர்க்கு உபகரித்தல், அல்லது ஆன்மநேய சம்பந்தம் பற்றித் தயாவடிவமாய் இருத்தல்         
                                         – திருவருட்பா வசனம்

      மெய்விளக்கே விளக்கல்லால் வேறு விளக்கு இல்லையென்றார் மேலோர், மெய்யுள்ளே விளக்கை ஏற்றி உயரத்தூண்ட ஓர் உபாயம் வேண்டும் என்று திருநாவுக்கரசர் கீழ்காணும் பாடலில் குறிப்பிடுகிறார்.

      மெய்யுள்ளே விளக்கை ஏற்றி வெண்டள வுயரத் தூண்டி
      உய்வதோர் உபாயம் பற்றி உகக்கின்றேன் உகவாவண்ணம்
      ஐவரை அகத்தே வைத்தீர் அவர்களே வலியர் சாலச்
      செய்வது ஒன்று அறியமாட்டேன் திருப்புக லூரனீரே.

விளக்கம்: என் உடம்பின் உள்ளே, உனது அருளாலே ஞான விளக்கை ஏற்றி, மும்மலங்களைக் கடக்க வேண்டியும், துவாதசாந்தத்தை எய்த வேண்டிய அளவு மேலே தூண்டி, பிறவித்துன்பத்தினின்று உய்ந்து வீடு பெறற்கேற்றதொரு உபாயத்தை உறுதியாகக் கடைப்பிடித்து, அதனாலே சிறிது மகிழ்கின்றேன்.  இம்மகிழ்ச்சிக்கு இடையூறாக ஐம்புலன்களாகிய ஐவரை வைத்தீர்.  அவர்களே என்னிலும் மிகவலியவர்கள் ஆதலால் இன்னது செய்வதென்று அறியமாட்டாதவனாயிருக்கிறேன்  திருப்புகலூர்ப் பெருமானே.

      விறகில் தீப்போலவும், பாலிற்பொருந்திய நெய் போலவும் கண்மணிச் சோதியானாகிய இறைவன் மறைய நின்றுளன்.  சற்குரு முகத்திலறிந்து, உணர்வைப் பெற்று தியானம் செய்ய முகத்திற்கு முன் அருட்பெரும்ஜோதி ஆண்டவன் நிற்பான் என்று திருநாவுக்கரசர் கீழ்காணும் பாடலில் குறிப்பிடுகிறார்.

      விறகில் தீயினன் பாலிற்படு நெய்போல்
      மறைய நின்றுளன் மாமணிச் சோதியான்
      உறவு கொல்நட் டுணர்வு கயிற்றினால்
      முறுக வாங்கிக் கடையமுன் நிற்குமே.

விளக்கம்:  விறகில் (அரணிக் கட்டையினிடத்தில் உள்ள) தீயைப் போலவும், நல்லபாலில் உள்ள நெய்யைப் போலவும், கண்மணியில் உள்ள ஜோதியைப் போலவும் மறைவாக இருக்கிறான்.  அவனிடத்து உறவு (ஒன்றி இருத்தல்) என்னும் கோலை நட்டு, உணர்வு என்னும் கயிற்றினால் நன்றாக, கடைந்தால் (அவ்வாறு கடைபவர்க்கு) அவன் முகத்திற்கு முன்னே வெளிப்பட்டு நிற்பான்.

குறிப்பு: விறகிலுள்ள தீயும் பாலிலுள்ள நெய்யும், கண்மணியிலுள்ள ஜோதியும் வெளியில் தோன்றாது மறைந்து நிற்பதுபோல அருட்பெரும்ஜோதி ஆண்டவன் நமது கண்ணுக்குத் தோன்றாமல் மறைந்திருக்கின்றான்.

      விறகில் உள்ள தீ முறுக வாங்கிக் கடைய முன்னிற்கும், அதுபோல தாமத குணமுள்ளவர்க்கு அருட்பெரும்ஜோதி ஆண்டவன் மிக்க பிரயாசைப்பட்டு தம்மனத்தே பக்தியை நிலை நாட்டித் தீவிரமான விவேகத்தால் உண்மைப் பொருளை மீண்டும் மீண்டும் சிந்திப்பதால் விளங்குவான்.

      பாலில் உள்ள நெய், வாங்கிக்கடைய முன்நிற்கும் அது போல இராஜஸ குணமுள்ளவர்க்கு அருட்பெரும்ஜோதி ஆண்டவன் மிக்க பிரயாசையின் பக்தியாலும், அன்பாலும் மீண்டும் மீண்டும் சிந்திப்பதன் பயனாக விளங்குவான்.
      கண்மணியிலுள்ள ஜோதி, கடைய முன்நிற்கும், அது போல சத்துவ குணமுள்ளவர்க்கு அருட்பெரும்ஜோதி ஆண்டவன் சிறிது முயற்சியோடு உள்ளத்தில் உணர்ந்து தியானித்த உடனே தோன்றுவான்.

      நமக்குள்ளேயே மறைந்து நிற்கும் ஆண்டவனை சற்குருமுகத்திலறிந்து, உணர்வைப் பெற்று தம்மை மறந்து தியானிப்பார்க்கு அருட்பெரும்ஜோதி ஆண்டவன் காட்சியளிப்பான் என்பது முடிந்த பொருள்.

      அருட்பெரும்ஜோதி ஆண்டவனை தெரிசித்து இரண்டறக் கலந்து பிறப்பும் இறப்பும் அறுதலே வாழ்க்கையின் பயனாகும்.

      உள்ளத்தில் மறைந்திருக்கும் மாயனை, உள்ளத்தினுள்ளே ஞானவிளக்கை ஏற்றி வைத்தவனை விட்டுப்பிரியாது அவனை நாடி வலையில் அகப்படுத்தினேன் என்கிறார் கீழ்க்காணும் மூன்றாம் திரு அந்தாதி –
94 ஆம் பாடலில்

      உய்த்து உணர்வு என்னும் ஒளிகோள் விளக்கேற்றி
      வைத்தவனை நாடி வலைப் படுத்தேன் – மெத்தெனவே
      நின்றார் இருந்தான் கிடந்தான் என்நெஞ்சத்துப்
      பொன்றாமை மாயன் புகுந்து.

விளக்கம்:  ஞானம் என்னும் பிரகாசமான விளக்கை மனத்தில் ஏற்றிவைத்து, ஆண்டவனை சிந்தித்து பெற்று வலையில் அகப்படுத்தினேன். எனக்கு வசமாக்கிக் கொண்டேன்.  அம்மாயனும் என் நெஞ்சிலே விட்டு பிரியாமல் புகுந்து மெல்ல எழுந்தருளி நின்றான்.  வீற்றிருந்தான், பள்ளி கொண்டான்.      மூலாக்கினியின் ஒளியைக்கண்டு கொள்வார்க்கு மேலேயுள்ள சிவவொளியானது நிலைத்து நின்று மோட்சத்தை கொடுத்து விடும் என்று திருமூலர் கீழ்காணும் பாடலில் குறிப்பிடுகிறார்.

      ஆன விளக்கொளி யாவ தறிகிலர்
      மூல விளக்கொளி முன்னே யுடையவர்
      காண விளக்கொளி கண்டுகொள் வார்கட்கு
      மேலை விளக்கொளி வீடெளி தாநின்றே 683

விளக்கம்:  மூலவிளக்காகிய ஒளியுள்ள நேத்திரத்தை முகத்துக்கு முன்பாக உடையவர்கள் சாதனையால் ஏற்பட்ட யாவற்றையும் விளக்கி வைக்கும் சிவவொளியாவதை அறியவில்லை. அஞ்ஞான தத்துவங்களும் இருட்டும் நிறைந்த நெற்றிக்குக்கிழக்கில், சிரசின் மேல்பாகத்தில் பன்னிரண்டு அங்குல அளவில் பிரணவுச்சியானது யாதொருகளங்கமுமற்று சுத்த வெண்மையாய்யெழும்பி நிற்கும் பொருளையே மேல் சொன்னா பெயர்களால் அழைக்கப்படும்.

      நீருஞ் சிரசிடைப் பன்னிரண்டங்குலம்
      ஓடும் உயிரெழுந் தோங்கி உதித்திட
    நாடுமின் நாதாந்த நம்பெரு மான்உகந்
   தாடும் இடந்திரு அம்பலந் தானே.
2764

               சிதம்பரமென்னுமூர் சாட்சிக்காக, காட்டப்பட்டிருக்கிறது.  இரு நேத்திரங்களிலும் சிவன் பரவிந்து சொரூப மாய்யிருப்பதால் “சிவனு மருகிருக்க” என்றார்.  சாட்சியாக காட்டியிருப்பதும், சிவன்தங்கி இல்லாதிருக்குமிடைத்தையே வெற்றம் பலம் என்றார்.

      நாதசத்தியானது பிந்து சத்தியை இழுக்கும் குணமுடைய தாதலால் பிறந்திடத்தைத் தேடுதே என்றார்.  நாதசத்தியின் மறுபிறப்பே அமுத பாலானதால் “கறந்திடத்தை நாடுதே” என்றார்.

      அருள்ஒளி விளங்க உள்ளத்தில் விளக்கை ஏற்ற ஆணவ இருள் அகன்று உளம் முழுவதும் பிரகாசிக்கச் செய்யும், என்று திரு அருட்பிரகாச வள்ளலார் அருட்பெரும்ஜோதி அகவலில் குறிப்பிடுகிறார்.

“அருளொளி விளங்கிட ஆணவ மேனுமோர்
இருளற வென்னுளத் தேற்றிய விளக்கே.” – அகவல்


      உள்ளத்தில் உள்ள சுடர் விளக்குதான் நித்திய விளக்கு.  புறத்திலே விளக்கை ஏற்றினால் அது புற இருளைப் போக்கும்.  ஆகாயத்தில் காணக்கூடிய சூரிய, சந்திர ஒளிக்கோளங்கள் புற இருளைப்  போக்கவல்லது எக்ஸ் கதிர், மின் காந்த அலையொளி போன்றவைகளால் உடலுக்குள்ளே இருப்பதைக் காணலாமே ஒழிய அகத்தில் உள்ள அறியாமையாகிய ஆணவ இருளைப் போக்க முடியாது.

      உள்ளத்தில் உள்ள ஒளி விளக்கில் மனம் ஒருமைப் பாடடைந்து தியானம் செய்ய அருள்ஒளி பிரகாசிக்கும்.  அதில் ஆணவ இருள் மறையும்.  ஆணவ இருளை அகற்ற வல்லது தான் அருள்ஒளி.

 துன்புறு தத்துவத் துரிசெலா நீக்கிநெல்
லின்புற வென்றுளத் தேற்றிய விளக்கே”அகவல்

      சீவர்களைத் துன்புறுத்தும்
96 தத்துவங்களைத் தத்துவத்துரிசு என்றார். (துரிசு – குற்றம்), இவற்றை எல்லாம் போக்கி கொள்ளுவது எளிதல்ல.  96 தத்துவங்களைத் தனித்தனியே கடந்து தத்துவாதீத மேல் நிலையில் சிவமாகிய ஒளிநிலையில் மனம்ஒத்து தியானம் செய்ய, துரிசு நீங்கி ஆனந்தம் உண்டாகும்.  அக விளக்காகிய நித்திய தீபத்தில் நித்தியானந்த வாழ்வு பெறலாம்.

“மயலற வழியா வாழ்வுமேன் மேலும்
இயலுற வென்றுளத் தேற்றிய விளக்கே.”
அகவல்

      அருள் உண்மை வெளிப்படாத மயக்க நிலையே மயல் எனப்படுவது.  மனித பிறவி மருள் நிலை நீங்கி அருள் நிலை அடையும் வரை மென்மேலும் பிறப்பும் இறப்பும் உண்டாகும் மேற்படி மயக்கம் நீங்க அழியா வாழ்வு உண்டாக உள்ளத்தில் ஒளி விளக்கை ஏற்றி நித்திய வாழ்வு என்றென்றும் விளங்க அருட்பெரும்ஜோதி நம் உள்ளத்தில் பிரகாசித்துக் கொண்டிருக்கிறது.

      பொறி, புலன்களினாலும் மனத்தினாலும் ஜீவ அறிவாலும் சற்றும், விளங்காத சுடர் விளக்கு இதுவாகும்.

      “சுடர் விளக்காயினும் நன்றாய் விளங்
      கிடத் தூண்டுகோல் ஒன்று வேண்டும்.”

என்ற சான்றோர் மொழிக்கு ஏற்ப குருமுகத்தில் அறியவும்.No comments:

Next previous home
Related Posts Plugin for WordPress, Blogger...