Thursday, December 18, 2014

ஊசியும் நூலும்     தையல் வேலைக்கு மிகவும் அவசியமானது ஊசியும் நூலுமே ஆகும்.  ஊசியானது மூன்று அம்சங்களை உடையதாய் இருத்தல் வேண்டும்.  அவையாவன

1) ஒன்று முனை கூர்மையாய் இருக்க வேண்டும். 
2) இரண்டு உறுதியாய் இருத்தல் வேண்டும்.
3) மூன்று, காது இருத்தல் வேண்டும் – பிறகு நூலும் நல்ல நூலாக இருத்தல் அவசியமாகும்.

      மேற்சொன்ன மூன்று அம்சங்களும் நன்கு அமைந்த ஊசியின் காதில், நல்ல நூலினை நுழைத்து, இரு துண்டாக உள்ள துணிகளை நூலின் உதவியால் நன்கு இணைத்து ஒன்று படுத்த முடியும்.

     ஒரு மனிதன் சாஸ்திரங்களைக் கற்று வல்லவன் ஆவதற்கு மூன்று குணநலன்கள் வேண்டுவது அவசியம்.  அம்மூன்று குணங்களும் அவன் உள்ளத்திலேயே அமைந்திருத்தல் வேண்டும்.

ஒன்று, ஞான நூல்களின் உட் பொருள்களை நன்கு சிந்தித்து அறிதற்கு மிகக் கூர்மையான அறிவு.

இரண்டு, கல்வி கற்கும் போது, வேறு பயனற்ற வழிகளில் மனத்தைச் செல்ல விடாமல், நல்ல வழியில் ஒரே சிந்தனையாய் குருகுலு வாசமாக இருந்து சாதிக்கவல்ல திடமான உறுதி.

மூன்று, அறிவிலும், அனுபவத்திலும் முதிர்ந்த பெரியோரை அணுகிக் கீழ்படிந்து, அவர் உபதேசிக்கும் அறிவுரைகளையும், மிக நுட்பமான பொருள்களையும் செவியாரக் கேட்டு, மனங்குளிர வாங்கி, உள்ளத்தில் பதிய வைத்துக் கொள்ள வேண்டும்.

     கல்வி, கேள்வி இரண்டும் அறிவின் வளர்ச்சிக்கும் மிக அவசியமாகும்.  ஆதலால் கல்வி, கேள்விகளைக் கிரகிக்க கூடிய காதும் வேண்டும்.

     ஆகையால், கல்வி கற்பதற்கு வேண்டிய சாதனங்கள், நல்ல ஞானநூல்கள், அவற்றைக் கற்க மிகக் கூர்மையான அறிவு, அசையாத திட வைராக்கியம், கல்வி கேள்விகளை நன்கு கிரகித்துப் பலன் அளிக்கவல்ல காது, இவையாம்.  இதற்குப் பொருத்தமான உவமை ஊசியும் நூலும். இது சூட்சும ஞானத்தை விளக்க கூடியதாகவும் உள்ளது.

"ஐசுவரியவான் கடவுள் ராஜ்யத்தில் பிரவேசிப்பதைக் பார்க்கிலும், ஒட்டகம் ஊசியின் காதில் நுழைவது எளிது என்று இயேசு கூறினார்".லூக்கா
8 – 25

     மனத்தை அகத்தில் ஒட்டவை என்பதாகும்.  மனத்தை அகத்தில் ஒட்ட வைக்க (ஒருமைப்படுத்த) பிராண வாயுவானது, ஊசியின் காது போன்ற சிறிய துவாரத்தின் வழியாய்ச் சென்று, சிரசின் உச்சியை அடையும்.  அகத்தில் மனத்தை ஒட்ட வைத்தவர்கள்.  சிரசின் உச்சி ஸ்தானம் ஆகிய கடவுள் ராஜ்யத்தில் பிரவேசிப்பவன் எளிது என்ற கருத்தில் அவ்வாறு கூறினார்.

“காதற்ற ஊசியும் வாராது காண் கடை வழிக்கே” என்று பட்டினத்தார் அருளியுள்ளார்.

     அருளாளர்களின் அருள் மொழிகளைச் செவி மடுத்து உள்ளத்தில் பதிய வைத்துக் கொண்டவர்களே வாழ்வின் பயனாகிய திருவடி ஞானத்தைப் பெறத் தகுதியுடையவர் ஆவர்.  செவி மடுக்காதவர்கள், திருவடி ஞானத்தைப் பெறார் என்பது தோன்ற வாராது காண் கடை வழிக்கே என்றார்.  உள்ளத்தில் உறுதியும் இலட்சியமும் இல்லாதவர்களைக் காதற்ற ஊசிக்கு உவமையாகக் கூறினார்.

   
     ஊசியின் காதில் நல்ல நூல் நுழைந்து இருதுணிகளை ஒன்று படுத்தும்.  புறநிலையில் காணப்படுகின்ற ஊசியும் நூலும், அகநிலையில், ஒளிமயமான சிவத்தை உள்ளத்தில் அறிந்து, அந்த எல்லையிலேயே நின்று தியானிக்க, ஊசியின் காது போன்ற சிறிய துவாரத்தின் வழியாய் (திருக்க தவந் திறந்து) மனம் உட்சென்று ஒடுங்க, நாதகலை, விந்து கலை ஆகிய இரு திருவடிகளும் ஒன்றாகி, கடைவழிக்குச் செல்லும்.  ஞான இரகசியங்களைக் குரு முன்பாக உணரா தவர்கள் கடை வழிக்கு வாரார்கள் என்பது தோன்ற “காதற்ற ஊசியும் வாராது காணும் கடை வழிக்கே” என்றார். 

                                   நன்றி: ஞானசித்தர் ஜோதி இராமசாமி தேசிகர்.

Thursday, December 11, 2014

நிலவும், சுட்டிக் காட்டும் விரலும்
அறிவு முக்கியம் என்பதில் சந்தேகமில்லை. ஆர்வம் இருக்குமானால் அறிவைப் பெறுவதும் இன்றைய காலத்தில் பெரிய விஷயமல்ல. புத்தகங்களில் இருந்து அறிவு கிடைக்கிறது. அறிந்தவர்களின் பேச்சில் இருந்து அறிவு கிடைக்கிறது. இண்டர்நெட் போன்ற விஞ்ஞான வளர்ச்சி சாதனங்கள் மூலமாகவும் அறிவு கிடைக்கிறது. ஆனால் அறிந்து கொள்வது மட்டுமே போதுமா? அது ஞானமாகி விடுமா?

டான் மில்மன் என்ற பிரபல ஆங்கில எழுத்தாளர் தன் ஆன்மீக குருவாக ஒரு கேஸ் ஸ்டேஷனில் பணி புரியும் ஒரு வயதான மனிதரை ஏற்றுக் கொண்டிருந்தார். பணி சாதாரணமானதென்றாலும் அந்த மனிதரின் பக்குவம், பேச்சு, நடவடிக்கை எல்லாம் அவரை வித்தியாசப்படுத்தி ஆன்மீக முதிர்ச்சியைக் காட்டியதால் அவருக்கு சாக்ரடீஸ் என்ற பெயரிட்டு அழைத்தார்.

ஒரு முறை சாக்ரடீஸ் காரைத் துணியால் துடைத்துக் கொண்டு இருந்தார். அந்த சமயத்தில் டால் மில்மன் கேட்டார்.  "சாக்ரடீஸ், அறிவுக்கும் ஞானத்திற்கும் இடையே என்ன வித்தியாசம்?".

சாக்ரடீஸ் சொன்னார். "காரை எப்படித் துடைப்பது என்று அறிந்து வைத்திருப்பது அறிவு. அப்படியே துடைப்பது ஞானம்"

எதையும் அறிந்து கொள்ள ஆர்வமும், முயற்சியும் போதும். ஆனால் அறிந்தபடி நடப்பது அவ்வளவு சுலபமல்ல. எது சரி என்று அறிவது அறிவு என்றால், அந்த சரியான பாதையில் செல்வது ஞானம். எது சிறந்தது என்று அறிவு என்றால், அப்படிச் சிறப்பாக வாழ்வது ஞானம்.

அறிவுக்கு துல்லியமான அளவுகோல் இருக்கிறது. இவர் இத்தனை நூல்கள் படித்திருக்கிறார், இவர் இத்தனை விஷயங்களை அறிந்து வைத்திருக்கிறார் என்று சரியாகச் சொல்ல முடியும். ஆனால் ஞானம் அப்படி மேம்போக்காக சுலபமாக அளக்கக் கூடியதல்ல. உன்னிப்பாகக் கவனித்தால் மட்டுமே உணர முடியும். அதனால் தான் அறிவாளிகளை அடையாளம் கண்டு கொள்ள முடிந்த அளவுக்கு நம்மால் ஞானிகளை அடையாளம் காண முடிவதில்லை.

அதன் விளைவு ஆன்மீக அறிவாளிகளை எல்லாம் ஞானிகள் என்று கணிக்கும் தவறுகளை செய்து விடுகிறோம்.  'அவர் நான்கு வேதங்களையும் படித்தவர், மகா ஞானி' என்று பலர் சொல்லக் கேட்கலாம். வேதங்களைப் படித்தவர் என்பது உண்மை, ஆனால் ஞானி என்பது அனுமானம் மட்டுமே. வேதங்களைப் படித்ததால் மட்டுமே ஞானியாக விட முடியாது. படித்தது உணரப்பட்டு வாழ்க்கையில் வெளிப்பட்டால் மட்டுமே ஞானம் ஆகும். அது வரை அவருக்கு 'நான்கு வேதங்களைப் படித்தவர்' என்ற அடைமொழி மட்டுமே பொருந்தும். இந்த சூட்சுமத்தை அறியாமல் ஆன்மீக அன்பர்கள் எத்தனை பேரை ஞானியாக நம்பி ஏமாறுகிறார்கள் என்பதற்கு நிகழ்காலத்தில் எத்தனையோ உதாரணங்களைப் பார்க்கலாம்.

உண்மையாக ஆன்மீகத்தில் ஈடுபாடுகள் உள்ளவர்களில் பலரும் கூட அறிவதையே ஞானமாக எண்ணித் தங்களை ஏமாற்றிக் கொள்கிறார்கள். படித்துக் கொண்டே போகிறார்கள். சொற்பொழிவுகளைக் கேட்டுக் கொண்டே போகிறார்கள். இப்படிச் செய்வதன் மூலமாக தாங்கள் ஞானமார்க்கத்தில் வேகமாகப் போய்க் கொண்டு இருப்பதாக எண்ணுகிறார்கள். உண்மை அதுவல்ல என்பதே கசப்பான உண்மை. எத்தனை படித்தாலும், கேட்டாலும் ஒரு சிறு அம்சத்தைக் கூட பின்பற்ற முடியவில்லை என்றால் அந்த அறிவு வியர்த்தமே. எல்லாம் தெரியும் என்கிற தவறான அகங்காரம் மட்டுமே அந்த அறிவின் பலனாக இருக்கும்.

நல்ல விஷயங்களைப் படித்தோ கேட்டோ அறிந்தவுடன் நாம் செய்யக்கூடிய ஒரே உருப்படியான விஷயம் என்னவென்றால் இதை நம் வாழ்வில் எப்படி நடைமுறைப்படுத்த முடியும் என்று சிந்தித்து நடைமுறைப் படுத்துவது தான். அப்போது தான் அது அவ்வளவு சுலபமல்ல என்பதைப் புரிந்து கொள்ள முடியும். ஆனாலும் திரும்பத் திரும்ப அதை சிந்தித்து விடாமுயற்சியுடன் நடைமுறைப்படுத்தும் போது தான் ஞானம் சித்தியாகிறது. அந்த அறிவு வாழ்க்கைக்குப் பயனுள்ளதாகிறது.

ஆதிசங்கரர் ஒரு அழகான உவமையைச் சொல்வார். "நிலவைச் சுட்டிக் காட்டும் விரலையே பார்த்துக் கொண்டு இருந்தால் நிலவை நாம் காண முடியாது". விரல் எங்கு சுட்டிக் காட்டுகின்றதோ அங்கு பார்ப்பதே ஞானம். கற்கும் அறிவு அந்த விரல் போல. அது நிலவு அல்ல. நிலவு என்கிற ஞானத்தைக் காண பார்வையை விரலில் இருந்து எடுத்து அது காட்டும் திசைக்குத் திருப்ப வேண்டும். கற்ற விஷயங்கள் சொல்லும் வழியில் நம் வாழ்க்கையைத் திருப்ப வேண்டும். அதுவே ஞானம். 

வேதங்கள், உபநிஷத்துகள், திருக்குறள், கீதை, திருவருட்பா, திருவாசகம், திருமந்திரம்  போன்ற வழிகாட்டும் நூல்கள், சுயமுன்னேற்றப் புத்தகங்கள் எல்லாம் விரல்களே. அவற்றையே பார்த்துக் கொண்டிருந்து விட்டு நிலவைக் கண்டு விட்டதாக திருப்தியடைவது நம்மையே நாம் ஏமாற்றிக் கொள்வது போலத் தான். என்ன சொல்கின்றன என்றறிந்து அதன்படி வாழ ஆரம்பிப்பதே ஞானத்திற்கான ஆரம்பம்.

விரும்பியதை அடைய ஒரே வழிசமுத்திரத்துக்கே சென்றாலும் கொண்டு போன பாத்திரத்தின் அளவைப் பொறுத்தே ஒருவன் தண்ணீரை எடுத்து வர முடியும். தம்ளரை எடுத்துச் சென்றவன் குடத்தில் தண்ணீரை எடுத்துக் கொண்டு வருபவனைப் பார்த்து பொறாமைப் படுவதில் அர்த்தமில்லை.  'அவனுக்கு அதிகம் தண்ணீரைத் தந்திருக்கிறாயே' என்று சமுத்திரத்திடம் கோபித்துக் கொள்வதில் நியாயமில்லை. எத்தனை வேண்டுமானாலும் தர சமுத்திரம் தயாராகத் தான் இருக்கிறது. யார் எடுத்தும் அதில் தண்ணீர் குறையப் போவதில்லை. அதிகம் வேண்டுபவர் பெரிய பாத்திரத்தை எடுத்துச் செல்ல வேண்டும். எடுத்து வரும் தண்ணீரைச் சுமக்கும் திராணியும் இருக்க வேண்டும். அது தான் தேவை.

கடவுள் அல்லது பிரபஞ்சம் அந்த சமுத்திரத்தைப் போல என்று சொல்லலாம். மனிதர்களின் அருகதையை அந்தப் பாத்திரமாகச் சொல்லலாம். எந்த அளவு ஒருவன் தன் தகுதியையும், அருகதையையும் வளர்த்துக் கொள்கிறானோ அந்த அளவுக்குத் தகுந்தாற் போல எல்லாவற்றையும் உலகில் பெறுகிறான். தான் பெறுவது குறைவு என்று நினைப்பவன் தன் அருகதையைப் பரிசோதித்துக் கொள்வது நல்லது.

பாத்திரம் பெரிதாக இருந்தாலும் ஒருவன் அந்த சமுத்திரத்திடம் போக வேண்டும், தண்ணீரைப் பாத்திரத்தில் நிரப்பும் முயற்சியை மேற்கொள்ள வேண்டும், அதை சுமந்து கொண்டு வரத்தயாராக இருக்க வேண்டும். அப்படிச் செய்தால் மட்டுமே பாத்திரமும் ஒருவனுக்குப் பயன்படும். இல்லாவிட்டால் பெரிய பாத்திரமும் கூட காலியாகவே இருக்கும். இத்தனையும் செய்ய முடிந்தவன் வைத்திருப்பது சிறிய பாத்திரமானாலும் அதில் தண்ணீரை நிரப்பிக் கொண்டு வருவது சாத்தியமே. எனவே தான் அருகதை இருந்தும் முயற்சி இன்மையால் சிலர் வெற்றுப் பாத்திரமாகவே இருப்பதை நாம் காண முடிகிறது. அதே போல அந்த அளவு அருகதை இல்லாதவனும் தன் முயற்சியால் அதற்கேற்றாற் போல சிறப்பாக வாழ்வதையும் காண முடிகிறது.

பாத்திரமும் பெரிதாக இருக்கிறது. சென்று தண்ணீர் எடுக்கும் முயற்சியும் நடக்கிறது. ஆனால் பாத்திரத்தில் ஓட்டை இருக்கிறது என்றாலும் எடுத்த தண்ணீரைத் தக்க வைத்துக் கொள்ள முடியாமல் போகும் அவலநிலையும் ஏற்படும். சிலர் தங்களிடம் ஏகப்பட்ட திறமையை வைத்துக் கொண்டு இருந்தாலும் அதையெல்லாம் போக்கடிக்கிறாற் போல ஒருசில பலவீனங்களை வைத்திருந்தாலும் பெற்றதை இழக்கும் அபாயம் ஏற்படும். எனவே திறமையையும், திறமையை வீணடிக்கும் பலவீனத்தையும் ஒருசேரப் பெற்றிருந்தாலும் ஒருவன் வெற்றுப் பாத்திரமாக மாறும் நிலை ஏற்படலாம்.

ஆகவே மனிதர்களே, நீங்கள் எதை அடைய விரும்பினாலும் அதற்கேற்ற அருகதையை வளர்த்துக் கொள்ளுங்கள். அருகதை பெற்ற பின் விரும்பியதை அடையத் தேவையான முயற்சியை மேற்கொள்ளுங்கள். உங்கள் குறிக்கோளுக்கு எதிரான பலவீனம் உங்களிடம் ஏதாவது இருக்குமானால் முதலில் அதைப் போக்கிக் கொள்ளுங்கள். எதை விரும்பினாலும் நீங்கள் அதை அடைவது உறுதி. அடைந்ததை தக்க வைத்துக் கொள்வதும் உறுதி.

மற்றவர் பெறுவதால் நமக்குக் கிடைப்பது குறைந்து விடும் என்ற பயமும் வேண்டாம். எத்தனை பேர் எத்தனை தண்ணீர் எடுத்தாலும் சமுத்திரம் குறையப் போவதில்லை. எல்லோருக்கும் எத்தனையும் தர குறைவில்லாத சமுத்திரம் தயார். பாத்திரங்களுடன் நீங்கள் தயாரா?

சத்விசாரம் செய்வது எப்படி?சத்விசாரம் செய்வது எப்படி? 
சுத்தசன்மாக்க சாதனங்களாக வள்ளல் பெருமான் நமக்கு கூறுவது இரண்டு, அவைகள் பரோபகாரம், சத்விசாரம்.

அதில் சத்விசரமாக  வள்ளலார் கூறுவதை பற்றி இக்கட்டுரையில் பார்போம்.

இன்று சத்விசாரம் செய்கிறேன் என்று பல வள்ளலார் பக்தர்கள் இணைய தளத்திலும், நேரிலும் விவாதம் செய்து கொண்டிருகிறார்கள்.

மற்றும் சிலரோ விஞ்ஞானத்தினை கொண்டு விளக்கம் கூற முயல்கின்றனர்.
ஆனால் இதையா வள்ளல் பெருமான் சத்விசாரம் என்றார்?

ஆன்ம அறிவினால் தான் கடவுளை அறிய முடியும் என்றும் ஆண்டவர் தான் நமக்கு தெரிவிக்க வேண்டியதை தெரிவிப்பார் என்று வள்ளல் பெருமான் தெளிவாக கூறுகிறார். அதனால் வெறும் புத்தகத்தினை படிப்பதாலோ அல்லது விவாதம் புரிவதாலோ எக்காலத்திலும் உண்மையினை அறிய முடியாது என்று தெரிந்து கொள்ளுங்கள். எனெனில் மேல்கூறிய முறைகள்  நமது அந்தகரணங்களான மனம்,  புத்தியை கொண்டு தெரிந்து கொள்ள முற்படுவது. அதனால் மேற்கூறியயாவும் சத்விசாரம் அல்ல.

சத்விசரமாக வள்ளல் பெருமான் கூறுவது இதையே:

சத்விசாரமென்பது கடவுளினது புகழையும் ஆன்மாவின் தரத்தையும் நமது சிறுமையையும் கடவுளின் தரத்தையும் இடைவிடாது விசாரித்து, நமது குறையெல்லாம் கடவுளின் திருவடியில் விண்ணப்பிப்பது.” - உரைநடை பகுதி 

வள்ளல் பெருமான் மேல் கூறி உள்ள வரிகளை இன்னொரு முறை படித்து நினைவில் வைத்து கொண்டு அடுத்து படிக்கச் தொடருங்கள்.

சத்விசாரம் என்னவென்று பேருபதேசத்திலும்,  உரைநடை பகுதியிலும் வள்ளல் பெருமானே மேலும் விளக்கி உள்ளார்.

சத்விசாரம் = சத் + வி + சாரம். சத் (அ) சத்தியம் .

நமது உடலில் சத்தியமாக
,  அழியாததாக விளங்குவது நமது ஆன்மா.
வி விலக்குதல் / நீக்குதல். சாரம் துன்பம் / துக்கம்.
அதாவது சத்விசாரம் எனில் நமது ஆன்மாவினது துக்கத்தினை நீக்குதல் என்று பொருள் படும்.

ஆன்மாவிருக்கு உள்ள துக்கத்தினை நிவர்த்தி செய்து கொள்வது தான் சத்விசாரம். ஆன்மாவிருக்கு துக்கம் எதனால் உண்டாகிறது? ஆன்மாவிருக்கு துன்பம் (அ) குறை அதை பற்றியுள்ள அதன் திரைகளே என்கிறார் வள்ளலார்.

ஆன்மாவிற்கு துன்பம் தரும் இத்திரைகளை நீக்க நாம் செய்யும் நன் முயற்சியே சத்விசாரம் ஆகும்.

இம்முயற்சியாக வள்ளல் பெருமான் கூறுவது நமது திரையை நீக்க எந்நேரமும் இடைவிடாது தெய்வத்தினை  நினைத்தும் , ஸ்தோத்திரித்தும் நமது குறையை ஊன்றியும் வருவதே.

தெய்வத்தின் புகழ் பாடுதல்,  நமது சிறுமையினை நினைத்தல் இவைகள் நமக்கு மன நெகிழ்ச்சியை உண்டாக்கும். (மன நெகிழ்ச்சியே பக்தி.)  பணிவினை கொடுக்கும்.
ஆகா சத்விசாரத்திற்கு நமக்கு முதலில் வேண்டியது பக்தியும்,  பணிவும்.
அடுத்து குறையினை கடவுள் திருவடியில் விண்ணப்பியுங்கள் என்கிறார்.

இங்கு நன்றாக கவனியுங்கள் கடவுளிடம் விண்ணபிக்க சொல்ல வில்லை. கடவுள் திருவடியில் விண்ணபிக்க  சொல்கிறார்.

குறை என்பது நமது ஆன்மாவினை பற்றி உள்ள திரைகள் என்று அறிந்தோம். அடுத்து கடவுள் திருவடி என்பது எது? எவ்வாறு விண்ணப்பிப்பது என்று அறிய வேண்டும் அல்லவா?  இந்த  திருவடியினை போற்றி  திருவடி புகழ்ச்சியில் பல நூறு பாடல்களை பாடி உள்ளார் வள்ளல் பெருமான்.

திருவடி என்பது நமது கண்கள் தான் என்பதை எங்கள் இணைய தளம் முழுவதும் எல்லா ஞானிகளின் பாடல்களை கொண்டு ஆதாரத்தோடு விலக்கி உள்ளோம்.

காணும் கண்களுக்கு காட்டும் ஒளியாய் , காட்டும் ஒளிதனக்கு காட்டுவிக்கும் ஒளியாய் பூனும் திருவடிகள்” – திருவருட்பா

கண்ணாகவும், கண்மணி ஒளியாகவும்,  அந்த ஒளிக்கு ஒளி தரும் ஒளியாகவும் இறைவன் திருவடிகள் விளங்குகிறது என்பதே இதன் பொருள்.
சூட்சுமமாக கண்ணில் துலங்கும் ஒளியில் தான் நமது வினை திரை அழிந்து இல்லாமல் போகும். அதனால் தான் இறைவன் திருவடியில் விண்ணபியுங்கள் என்கிறார் வள்ளல் பெருமான்.

இறைவன் திருவடியில் விண்ணப்பிபது எவ்வாறு?

பேருபதேசத்தில் சுத்த அதியுஷ்ணத்தினால் தான் திரைகள் நீங்கும் என்று கூறி உள்ளார்கள். இறைவன் திருவடியே இந்த சுத்த அதியுஷ்ணத்தினை உண்டு பண்ண முடியும்.

ஆக கண்மணியில் கண்மணி ஒளியினை கொண்டு உஷ்ணதினை  உண்டு பண்ணுதலே கடவுள் திருவடியில் சமர்பித்தல் / விண்ணபித்தல் ஆகும். கடவுள் திருவடியில் (அ) கண்மணி ஒளியினால் ஏற்படும் உஷ்ணம்  அதனால் இது சுத்த உஷ்ணம் எனப்படும்.

சாதாரண மனிதர்களுக்கு கண்மணியில் ஒளி இருப்பினும் ஏன் இந்த உஷ்ணம் ஏற்படுவது இல்லை?

ஏனெனில் நம்முள் உள்ள இறைவன் செயல் படாமல் நம் வினை செயல்படுவதால் தான். இறைவன் தான்  செயல்படமால் சாட்சியாக இருந்து வினை வழியே நம்மை ஆட்டுவிப்பதினால்.

நமது கண்மணி மத்தியில் ஊசி முனை அளவு ஒரு துவாரம் இருக்கிறது. இதில் தான் நமது ஆன்ம ஒளி துலங்குகிறது. சூட்சமமாக உள்ள இந்த ஆன்ம ஒளியினை சூட்சுமமான வினை திரைகள் மறைத்து உள்ளன.

வள்ளல் பெருமான் போன்ற ஞானி ஒருவரது ஒளியினால் வினை திரைகள் துளைக்கப்பட்டு,  நமது கண்மணி ஒளி துண்டப்பட வேண்டும். அப்போது தான் நம் உள் இருக்கும் இறைவன் செயல் பட ஆரம்பிபார். இதை தான் குரு அருள் இல்லையேல் திருவருள் இல்லை என்கிறார்கள்.

சரி எவ்வாறு நாம் வள்ளல்பெருமானின் ஒளியை பெறுவது?!.  

அருட்பெரும்ஜோதியாகி உள்ள வள்ளல் பெருமானை நாம் நேரடியாக  பெறவோ (அ) காணவோ இயலாது . அதனால் மனித உருவில் உள்ள குருவின் மூலமே வள்ளலார் நம்முள் பிரவேசிப்பார்.
நமக்கு உயிர் தந்தது எல்லாம் வல்ல இறைவன் தான் ஆனால் தாய் தந்தையின் மூலம் தானே இந்த நாம் உலகத்தில் பிரவேசித்தோம். அது போலfவே நம்முள் வள்ளல் பெருமானை பெற மனித உருவில் ஒரு குரு வேண்டும். வள்ளல் பெருமான் நம்முள் வர காரணமாக உள்ளவரை தான் ஞான சற்குரு என்கிறோம்.

அதனால் தான் பல இடங்களில் வள்ளல் பெருமான் குருவினை பெறுங்கள் என்று கூறி உள்ளார்கள்.

இந்நிகழ்வினை  தான் திருவடி தீட்சை என்பர்.

தீட்சை என்றால் மலம் ஒழித்தல் என்றும்,  தீ+ அட்ச்சை என்று பொருள்.
இறைவனை (கண்மணி ஒளியை) செயல்படாமல் செய்யும் மலத்தினை நீக்குதல் தான் தீட்சை. அதாவது நமது கண்ணில் சுத்த உஷ்ணத்தினை பெற நாம் நம்முள் வள்ளலாரை பெறுவதே தீட்சை.

இவ்வாறு நமது கண்ணில் பெரும் உஷ்ணத்தில் (உணர்வில்) வள்ளல் பெருமானின் துணை கொண்டு நாம் ஒன்றுவதே சத்விசாரம் ஆகும். இது தான் திருவடி தவம் ஆகும். பக்தியோடு செய்யும் இந்த திருவடி  தவத்தின் மூலம் தான் யோகிகள் காட்டிற்கு சென்று செய்யும் தவத்தினை விட அதிக உஷ்ணம் பெற முடியும் என்கிறார் வள்ளல் பெருமான். இறைவன் திருவடியில் நமது மனதினை எப்போதும் வைத்து இருபது தான் சும்மா இருத்தல் ஆகும்.

இந்த சத்விசாரம் தொடர தொடர நமது திரைகள் சிறிது சிறிதாக நீங்கும்.    ஆண்டவர் வெளிபடுவார். நமக்கு தெரிவிக்க வேண்டியதை தெரிவிப்பார். பெறவேண்டியதை பெற்றுகொள்ளலாம்.

இதுவே சுத்த சன்மார்க்கத்தின் சாதனம். இதை விடுத்து வெறும் விவாதம் புரிவதாலோ அல்லது விஞ்ஞானம் பேசுவதாலோ ஒரு பயனும் இல்லை. இவைகளால் மனம் அதிகம் செயல் பட்டு திரையின் கடினத்தினை தான் அதிகபடுத்தும்.


Next previous home
Related Posts Plugin for WordPress, Blogger...