Thursday, December 11, 2014

நிலவும், சுட்டிக் காட்டும் விரலும்
அறிவு முக்கியம் என்பதில் சந்தேகமில்லை. ஆர்வம் இருக்குமானால் அறிவைப் பெறுவதும் இன்றைய காலத்தில் பெரிய விஷயமல்ல. புத்தகங்களில் இருந்து அறிவு கிடைக்கிறது. அறிந்தவர்களின் பேச்சில் இருந்து அறிவு கிடைக்கிறது. இண்டர்நெட் போன்ற விஞ்ஞான வளர்ச்சி சாதனங்கள் மூலமாகவும் அறிவு கிடைக்கிறது. ஆனால் அறிந்து கொள்வது மட்டுமே போதுமா? அது ஞானமாகி விடுமா?

டான் மில்மன் என்ற பிரபல ஆங்கில எழுத்தாளர் தன் ஆன்மீக குருவாக ஒரு கேஸ் ஸ்டேஷனில் பணி புரியும் ஒரு வயதான மனிதரை ஏற்றுக் கொண்டிருந்தார். பணி சாதாரணமானதென்றாலும் அந்த மனிதரின் பக்குவம், பேச்சு, நடவடிக்கை எல்லாம் அவரை வித்தியாசப்படுத்தி ஆன்மீக முதிர்ச்சியைக் காட்டியதால் அவருக்கு சாக்ரடீஸ் என்ற பெயரிட்டு அழைத்தார்.

ஒரு முறை சாக்ரடீஸ் காரைத் துணியால் துடைத்துக் கொண்டு இருந்தார். அந்த சமயத்தில் டால் மில்மன் கேட்டார்.  "சாக்ரடீஸ், அறிவுக்கும் ஞானத்திற்கும் இடையே என்ன வித்தியாசம்?".

சாக்ரடீஸ் சொன்னார். "காரை எப்படித் துடைப்பது என்று அறிந்து வைத்திருப்பது அறிவு. அப்படியே துடைப்பது ஞானம்"

எதையும் அறிந்து கொள்ள ஆர்வமும், முயற்சியும் போதும். ஆனால் அறிந்தபடி நடப்பது அவ்வளவு சுலபமல்ல. எது சரி என்று அறிவது அறிவு என்றால், அந்த சரியான பாதையில் செல்வது ஞானம். எது சிறந்தது என்று அறிவு என்றால், அப்படிச் சிறப்பாக வாழ்வது ஞானம்.

அறிவுக்கு துல்லியமான அளவுகோல் இருக்கிறது. இவர் இத்தனை நூல்கள் படித்திருக்கிறார், இவர் இத்தனை விஷயங்களை அறிந்து வைத்திருக்கிறார் என்று சரியாகச் சொல்ல முடியும். ஆனால் ஞானம் அப்படி மேம்போக்காக சுலபமாக அளக்கக் கூடியதல்ல. உன்னிப்பாகக் கவனித்தால் மட்டுமே உணர முடியும். அதனால் தான் அறிவாளிகளை அடையாளம் கண்டு கொள்ள முடிந்த அளவுக்கு நம்மால் ஞானிகளை அடையாளம் காண முடிவதில்லை.

அதன் விளைவு ஆன்மீக அறிவாளிகளை எல்லாம் ஞானிகள் என்று கணிக்கும் தவறுகளை செய்து விடுகிறோம்.  'அவர் நான்கு வேதங்களையும் படித்தவர், மகா ஞானி' என்று பலர் சொல்லக் கேட்கலாம். வேதங்களைப் படித்தவர் என்பது உண்மை, ஆனால் ஞானி என்பது அனுமானம் மட்டுமே. வேதங்களைப் படித்ததால் மட்டுமே ஞானியாக விட முடியாது. படித்தது உணரப்பட்டு வாழ்க்கையில் வெளிப்பட்டால் மட்டுமே ஞானம் ஆகும். அது வரை அவருக்கு 'நான்கு வேதங்களைப் படித்தவர்' என்ற அடைமொழி மட்டுமே பொருந்தும். இந்த சூட்சுமத்தை அறியாமல் ஆன்மீக அன்பர்கள் எத்தனை பேரை ஞானியாக நம்பி ஏமாறுகிறார்கள் என்பதற்கு நிகழ்காலத்தில் எத்தனையோ உதாரணங்களைப் பார்க்கலாம்.

உண்மையாக ஆன்மீகத்தில் ஈடுபாடுகள் உள்ளவர்களில் பலரும் கூட அறிவதையே ஞானமாக எண்ணித் தங்களை ஏமாற்றிக் கொள்கிறார்கள். படித்துக் கொண்டே போகிறார்கள். சொற்பொழிவுகளைக் கேட்டுக் கொண்டே போகிறார்கள். இப்படிச் செய்வதன் மூலமாக தாங்கள் ஞானமார்க்கத்தில் வேகமாகப் போய்க் கொண்டு இருப்பதாக எண்ணுகிறார்கள். உண்மை அதுவல்ல என்பதே கசப்பான உண்மை. எத்தனை படித்தாலும், கேட்டாலும் ஒரு சிறு அம்சத்தைக் கூட பின்பற்ற முடியவில்லை என்றால் அந்த அறிவு வியர்த்தமே. எல்லாம் தெரியும் என்கிற தவறான அகங்காரம் மட்டுமே அந்த அறிவின் பலனாக இருக்கும்.

நல்ல விஷயங்களைப் படித்தோ கேட்டோ அறிந்தவுடன் நாம் செய்யக்கூடிய ஒரே உருப்படியான விஷயம் என்னவென்றால் இதை நம் வாழ்வில் எப்படி நடைமுறைப்படுத்த முடியும் என்று சிந்தித்து நடைமுறைப் படுத்துவது தான். அப்போது தான் அது அவ்வளவு சுலபமல்ல என்பதைப் புரிந்து கொள்ள முடியும். ஆனாலும் திரும்பத் திரும்ப அதை சிந்தித்து விடாமுயற்சியுடன் நடைமுறைப்படுத்தும் போது தான் ஞானம் சித்தியாகிறது. அந்த அறிவு வாழ்க்கைக்குப் பயனுள்ளதாகிறது.

ஆதிசங்கரர் ஒரு அழகான உவமையைச் சொல்வார். "நிலவைச் சுட்டிக் காட்டும் விரலையே பார்த்துக் கொண்டு இருந்தால் நிலவை நாம் காண முடியாது". விரல் எங்கு சுட்டிக் காட்டுகின்றதோ அங்கு பார்ப்பதே ஞானம். கற்கும் அறிவு அந்த விரல் போல. அது நிலவு அல்ல. நிலவு என்கிற ஞானத்தைக் காண பார்வையை விரலில் இருந்து எடுத்து அது காட்டும் திசைக்குத் திருப்ப வேண்டும். கற்ற விஷயங்கள் சொல்லும் வழியில் நம் வாழ்க்கையைத் திருப்ப வேண்டும். அதுவே ஞானம். 

வேதங்கள், உபநிஷத்துகள், திருக்குறள், கீதை, திருவருட்பா, திருவாசகம், திருமந்திரம்  போன்ற வழிகாட்டும் நூல்கள், சுயமுன்னேற்றப் புத்தகங்கள் எல்லாம் விரல்களே. அவற்றையே பார்த்துக் கொண்டிருந்து விட்டு நிலவைக் கண்டு விட்டதாக திருப்தியடைவது நம்மையே நாம் ஏமாற்றிக் கொள்வது போலத் தான். என்ன சொல்கின்றன என்றறிந்து அதன்படி வாழ ஆரம்பிப்பதே ஞானத்திற்கான ஆரம்பம்.

No comments:

Next previous home
Related Posts Plugin for WordPress, Blogger...