Thursday, January 29, 2015

ஸ்ரீ பாலா திரிபுர சுந்தரி - தத்துவம்

ஸ்ரீ பாலா திரிபுர சுந்தரி 


     பாலா திரிபுர சுந்தரி தேவியின் படத்தைப் பாருங்கள்.  அதில் வலதுபுறம் விநாயகரும், இடதுபுறம் ஆறுமுகனும் உள்ளனர்.

   பிரம்மா, விஷ்ணு, ருத்ரன், மகேஸ்வரன் இந்த நாள்வரையும் நான்கு கட்டில் கால்களாகவும், சதாசிவனைப் பீடமாகவும் அமைத்துள்ளனர்.  இதற்கு மேல் பாலா திரிபுர சுந்தரி அமர்ந்து இருப்பதாகவும், அவளின் வலது பக்கம் லட்சுமியும், இடது பக்கம் சரஸ்வதியும் இருப்பதாகவும் காட்டியுள்ளனர்.  இவர்கள் இரு வரும் பாலா திரிபுர சுந்தரிக்கு ஆலவட்டம் வீசுவது போலவும் வரைந்து இருக்கின்றார்கள்.

இதன் உண்மை விளக்கம் என்ன?

     நம் உடலில் வலதுபுறம் ஐந்து தலை உள்ள நாடி இருக்கின்றது இது வினைகளுக்கு நாயகமாக இருந்து வேலை செய்வதால், இதை வினாயகராகப் பாவித்தனர்,

   இடதுபுறம் ஆறுதலை உள்ள நாடி இருக்கின்றது, இது எழுபத்தாராயிரம் (72,000) நரம்புகளை இயக்கி வேலை செய்வது இந்த உடலைப் பாதுகாப்பது. இதை ஆறு முகனாகப் பாவித்தனர்.

     நம் சிரசை அண்டம் என்றும், சிரசின் கீழ் உள்ள உடலை முண்டம் என்றும் சொல்வார்கள்.  பிரம்மா தத்துவம், விஷ்ணு தத்துவம், ருத்ர தத்துவம், மகேஷ்வர தத்துவம் ஆகிய நான்கும் தத்துவங்களையும் நான்கு கட்டில் கால்களாகக் கருதினர்.  சிரசில் புருவ நடுவில் சதாசிவ தத்துவம் இருப்பதால், இந்தத் தத்துவத்தைப் பீடமாக அமைத்தனர்.

     இதன்மேல், ஞானஒளி, முச்சுடராகப் பிரகாசித்தபடி இருப்பதால், இதனையே பாலா திரிபுர சுந்தரி மகாதேஜசுடன் அமர்ந்து இருப்பதாகவும், இந்தச் சக்தியைப் பெற வேண்டுமானால், அன்பின் பெருக்கமும், அறிவின் திறமையும் வேண்டும் எனவும் கூறினார்.  அன்பை லட்சுமியாகவும், அறிவை சரஸ்வதியாகவும் பாவித்தனர்.

 இவர்கள் இருவரும் ஆலவட்டம் வீசுவதற்குக் காரணம் என்ன? 

இவற்றைப் பெறச் சலியாது, ஓயாது உழைக்க வேண்டும் என்று நமக்கும் காட்டத்தான்.  இதை ஆதி சங்கரர் தம் அனுபவ ஞான நிலையால் அறிந்தவர். இதை விவரித்துப் பல சுலோகங்களைப் பாடியிருக்கின்றார்.  இதே வர்ணனையுடன் லலிதா பரமேசுவரியையும் சங்கரர் பாடியுள்ளார்.

ஓயாமல் உழைக்க என்ன செய்ய வேண்டும்?  எப்படி உழைப்பது? அதற்கு வழி என்ன? சிந்தியுங்கள் மெய் அன்பர்களே.  
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!

நன்றி: அருள்ஞான வள்ளல் தியாகராய சுவாமிகள் - மெய்ஞான திரட்டு 

No comments:

Next previous home
Related Posts Plugin for WordPress, Blogger...