Thursday, February 5, 2015

தேகமே திருக்கோயில்


தேகமே திருக்கோயில்
     தன்னைத் தான் அறிவது ஞானம். தன்னை அறிந்தால் தலைவனான கடவுளையும் அறியலாம்.

     அன்றும், இன்றும், என்றும் கடவுள்பால் அன்பு செலுத்துகின்றார்கள் மனிதர்கள்.

     கடவுள் என்றால் என்ன? இதை முதலில் சிந்திப்போம்.

     வாத்தியக் கருவிகளில் கடம் என்ற ஒரு வாத்தியம் உண்டு.  அது மண்ணாலான ஒரு பானை, இதுபோல் உடலும் முடிவில் மண்ணாகக் கூடியது. இதனால் உடலுக்கும் கடம் என்று பெயர்.  இதன் உள்ளேயிருந்து இயக்கும் சக்திக்கு உயிர் என்று பெயர்.  உள்கட, உள்கட என்று தத்துவங்கள் அத்தனையும், கடந்து கடவுள் நிலையை அடைவது தான் கடவுளை அடைவது.  உயிரைத்தான் கடவுள் என்று கூறுவர்.

     உயிருக்கு மனைவி மக்கள் இல்லை, உருவமுமில்லை.  உயிர் எங்கும் நிறைந்தது.  உயிர் இல்லாத இடமே இல்லை.  இதனால் தான், அடிப்பவனும் அவனே, அடிபடுபவனும் அவனே, என்று ஞானிகள் கூறுவர்.  அவனின்றி ஓர் அணுவும் அசையாது என்றும் கூறுவர்.

     எல்லா உடல்களிலும் உயிர் இருப்பதால், கடவுள் வாழ் இல்லங்களாக அனைத்துயிரையும் கருதிக் தொண்டு செய்யுங்கள்.  அன்பு செலுத்துங்கள் இதுதான் அன்பே சிவம் என்னும் அமுதான இறைகாட்டும் சிவநெறித் தத்துவம்.

     எங்கும் நிறைந்தவன் இறைவன்.  நம் உடல் முழுவதும் அவன் வியாபித்து இருக்கின்றான்.  நம் உடலுக்குள் இருக்கும் ஒவ்வோர் அங்கங்களிலும் வெவ்வேறு சக்தியாக அவன் பரிமளிக்கின்றான்.  இதை நம் முன்னோர்கள் எடுத்துக்காட்ட நினைத்தார்கள்.  அகத்தில் உள்ள அரும்பெரும் பரம்பொருளைப் புறத்தில் பாவனையாகக் கண்டு தொழுவதற்குப் பல கடவுள்களின் உருவங்களையும் படைத்தனர்.  அக் கடவுள்களுக்கான பல கோவில்களையும், இதிகாச புராணங்களையும் ஏற்படுத்தினர், இவற்றால் உண்மையை உணர்ந்து, பரிபக்குவம் பெற வகை செய்தார்கள்.

தேகமே ஆலயம்:


     நம் உடலில் உள்ள இறைவனை அறிந்து, அவனை அடையவேண்டி, நம் உடலையே மாதிரியாக வைத்துக் கோவிலாக் கட்டினார்கள்.

 அதாவது, பாதம் கோபுரம் பத்து விரலும் கலசம்.

ஆண்குறி துவஜஸ்தம்பம் (கொடிமரம்). இதற்குப் பத்துமாதம் கருதரிக்கச் செய்யும் சக்தி இருப்பதால், இதற்குக் கொடியேற்றிப் பத்துநாள் திருவிழாவும் நடத்துவார்கள்.

தொப்புள் பலிபீடம்.  வயிற்றுமேடு நந்தி. "நந்" என்றால் ஆகாரம், தீ என்றால் அதை எரிக்கும் சக்தி, அதனால் "நந்தி" என்று பெயர்.

வாய், உள்ளே செல்லும் வாசல் வழி, அண்ணாக்குக்கு மேல் இறைச்சக்தி இருப்பதால், இதனை லிங்கம் என்றனர்.

     உயிர் தூங்கா விளக்கு, ஆன்மா சிற்சபை.  அறிவு சுடர் ஒளி.  எண்சான் உடலுக்குச் சிரசே பிரதானம் அதனால், கோவிலுக்குள்ளே ஒரு சுற்றும், வெளியில் பிரகாரத்திலே ஒரு சுற்றும் சுற்றுவார்கள்.

     எந்தச் சிவன் கோயிலிலும் வலதுபுறம் விநாயகர் சந்நிதியும், இடதுபுறம் ஆறுமுகன் சந்நிதியும் சற்று முன்னாக இடதுபுறம், சக்தி சந்நிதியும் இருக்கும்.

     நமது மார்பில் வலதுபுறம் ஐந்துதலை உள்ள நாடி இருக்கின்றது.  "கணம்" என்றால் தேகம். "பதி" என்றால் ஆட்சி, இதைக் கணபதி என்றும் வினைகளுக்கு நாயகமாக இருந்து வேலை செய்வதால் விநாயகர் என்றும் கூறினர்.  ஐந்து தலை உள்ள விநாயகரும் உண்டு, இதைப் பஞ்சமுக விநாயகர் என்று கூறுவர்.

     நமது மார்பில் இடதுபுறம் ஆறுதலை உள்ள நாடி இருக்கின்றது.  இது எழுப்பத்தீராயிரம் (72,000) நரம்புகளுக்கும் வேலை செய்கின்றது.  இதை "ஆறுமுகன்" என்று கூறுவர்.

     நமது மார்பில், இடதுபுறம், சற்று முன்னதாக இருதயம் இருக்கின்றது.  இது இரத்த ஓட்டங்களுக்கும் உடல் பலத்திற்கும், சகல விசயத்திற்கும் மூல காரணமாக இருப்பது.  இதைச் "சக்தி" என்று கூறுவர்.  இதனால்தான் சக்தியைச் சிவப்பு நிறமாகவும், இவள் உடுக்கும் புடைவையைக்கூடச் சிவப்பு நிறமாகவும் அமைத்தனர்.  இவள் அணியும் குங்குமம் கூடச் சிவப்பு நிறமாக இருப்பதற்குக் காரணம் இதுதான்.  நம் உடலில் ஓடும் இரத்தமே சக்தி சொருபந்தான்.  சக்தி இல்லையேல் நாம் இல்லை.  இதனால் தான், பெரும்பாலோர் சக்தியையே போற்றி வழிபடுகின்றனர்.

குறிப்பு: அண்டத்தில் உள்ளது பிண்டத்திலும் உள்ளன.  பிண்டத்தில் அண்ட பிண்டம் உள்ளன.   நாம் இங்கே கூறிய விளக்கங்களை பிண்டத்தில் அண்ட பிண்ட தத்துவத்தை அறிந்து  சிந்தித்து தெளிவு பெற விரும்புகிறேன்.

பிண்டத்தில் அண்டம் பிண்டம் - கழுத்துக்கு கீழே பிண்டம் என்றும், கழுத்துக்கு மேலே அண்டம் என்றும் கூறுவர்.  கழுத்துக்கு மேலே அண்டத்தில் முருகன், விநாயகர், சக்தி என்பவள் எங்கு இருக்கிறார்கள்?  துவாரபாலகர்கள், சூரியன், சந்திரன், நந்தி எங்கு இருக்கிறார்கள்  சிந்தியுங்கள்.

நன்றி: அருள்ஞான வள்ளல் தியாகராய சுவாமிகள் - மெய்ஞானத்திரட்டு 

Wednesday, February 4, 2015

திருஅருட்பிரகாச வள்ளலாரின் "நித்திய பெருவாழ்வு"


திருஅருட்பிரகாச வள்ளலாரின் "நித்திய பெருவாழ்வு"மெய் அன்பர்களுக்கு வணக்கம்!

கீழே கொடுக்கப்பட்டுள்ள வலை தளத்தை கிளிக் செய்து "திரு அருட்பிரகாச வள்ளலாரின் "நித்திய பெருவாழ்வு" என்ற ஞான இரகசிய விளக்க புத்தகத்தை படித்து தெளிவு பெறலாம்.

https://play.google.com/books
Next previous home
Related Posts Plugin for WordPress, Blogger...