Friday, May 8, 2015

கிழவியும் குமரனும்

கிழவியும் குமரனும்     கிழவி என்பது முதிர்ந்து தளர்ந்த நிலையைக் காட்டுகின்றது.   குமரனென்பது இளமையைக் காட்டுகின்றது.  இந்த இரண்டும் ஒன்று படும்போது ஓர் இன்பம் விளைகின்றது.


     உலகிலேயே மாறுபட்ட இரண்டு பொருள்கள் ஒன்றுபடுகின்ற போது அழகும், இனிமையும், புதியதோர் அனுபவ இன்பமும் விளைகின்றது.


     வெப்பமும், தட்பமும் மாறுபட்டவை.  வெப்பமான நெருப்பும் தட்பமான நீரும் ஒன்றுபட்டு அதனால் உண்டாகிய நீராவியால் அநேக இயந்திரங்கள் இயங்குகின்றன.  இதனினின்றும் நாம் ஓர் பெரிய இரகசியத்தை அறியலாம்.


     "புனலுருவாய் அனலுருவில் திகழும் ஜோதி" என்று நம்மாழ்வாரும்

     "நீர் மேல் நெருப்பு" திருவருட்பிரகாச வள்ளலாரும்.

     "நீர் பூத்த நெருப்பு" என்று பெரியோர்களும் கூறுவதை சிந்திக்க இது நன்கு விளங்கும்.

     அதாவது நாம் உண்ட அன்னமானது பிராண நீராகின்றது.  நீரின் மேல் நெருப்பாக ஜோதியாக விளங்குகிறான் இறைவன்.  இறைவன் நம் உள்ளத்தில் நீர் மேல் நெருப்பாக இருந்து அதனினின்றும் ஏற்படும் ஆவியால் நம்மை இயக்குகின்றான்.

     "உள்ளுறையில் என் ஆவி நைவேத்தியம்" என்று தாயுமானாரும்,

     "பூசனை யீசனார்க்குப் போற்றவிக்காட்டினோமே" என்று அப்பர் அடிகளும் கூறுவதால் நம் ஆவியை ஆண்டவனுக்கு அர்ப்பணித்தலே நைவேத்தியமும், பூசனையுமாகும் என்பது விளங்குகிறது.

     நாராயணன் என்னும் சொல், (நாரம் - தண்ணீர், அயனம் = பிறத்தல்) ஆதலால் நாராயணன் நீர் அம்சம் என்பது விளங்குகிறது.

     சிவன் என்னும் சொல், செம்மை என்ற சொல்லிலிருந்து தோன்றியது.  (செம்மை - செந்நிறம்) சிவனை, செஞ்சுடர் மேனியனே என்பதால், சிவன் நெருப்பு அம்சம் என்பது விளங்குகிறது.

   
     இதனை "நீர் மேல் நெருப்பும், நெருப்பின் மேல் உயிர்ப்பும்" என்று அருட்பெரும்ஜோதி அகவலில் இராமலிங்க அடிகள் கூறுகிறார்கள்.


     "நெருப்பை மூட்டி நெய்யைவிட்டு நித்த நித்தம் நீரிலே 
     விருப்ப மோடு நீர்கு ளிக்கும் வேதவாக்யங் கேளுமின் 
     நெருப்பும் நீரும் உம்முளே நினைந்து கூற வல்லிரேல் 
     சுருக்கமற்ற சோதியைத் தொடர்ந்து கூடலாகுமே,

                                --- என்று சிவவாக்கியர் கூறுவதாலும் இதை நன்கு உணரலாம்.


     மேற்கண்ட ஞானக்கருத்து விளக்கங்களைத் தற்கால விஞ்ஞானத்தால் அறியலாம்.

     அதாவது மின்சார வெப்பநிலை (Therma Electrical) என்னும் சிறிய தத்துவத்தில் உள்ளது.

     இருதரப்பட்ட இரண்டு உலோகங்களோ அல்லது கலவை உலோகங்களோ ஒன்றாக இணைக்கப்பட்டு அதை ஏதாவது ஒரு நுனியை அனலில் தோய்த்தால் அது தானாகவே அடுத்த நுனியில் ஒரு இயக்கும் சக்தியை உண்டு பண்ண ஆரம்பித்து விடுகின்றது.  அனலில் தொடரப்படும் நுனிக்கு சுடு சந்திப்பு (Hot Junction) என்றும், வெளியில் இருக்கும் நுனிக்கு குளிர்ந்த சந்திப்பு என்றும் சொல்லப்படுகின்றது. குளிர்ந்த சந்திப்பு (Cold Junction) நுனிகள் இரண்டும் ஒரு மின் அளக்கும் கலத்தின் மூலம் இணைக்கப்பட்டால் அது இந்த நெருப்பின் மேல் இருக்கும், நெருப்பு அல்லாதநுனியில் இயக்கும் சக்தி பெற்றதை எடுத்துக் காட்டுகிறது.  இதிலிருந்து நெருப்பு அம்சம் இல்லாது நீரம்சமும் இல்லை.  நீராம்சம் இல்லாது நெருப்பு அம்சமும் இல்லை என்கிற தத்துவம் விளக்கப்படுகிறது.


வளையலும் காப்பும்:     இந்த தத்துவம் விஞ்ஞான மூலம் மக்கள் உணராத முற்காலத்திலேயே, குழந்தைகளுக்கும், கர்ப்பிணிகளுக்கும் சுலபமான முறையில் இந்த உபகரணத்தைக் கொண்ட "சூல்காப்பு" என்ற பெயரில் அணிவிப்பத்தின் மூலம் அனுகூலங்களைப் பெற்று வந்திருக்கிறார்கள்.  ஆனால் விளக்கம் தெரியாது சம்பிரதாயத்தின் பேரில் அதை அவசியம் அணிந்தே ஆக வேண்டும் என்ற நிபந்தனையின் மூலம் அணிவித்து அனுகூலம் அடைந்து வந்திருக்கிறார்கள்.


     அதாவது சூல்காப்பில் ஒன்று செப்புக்கம்பி, மற்றொன்று இரும்புக்கம்பி, இந்த இரண்டு கம்பியையும் சேர்ந்து முருக்கப்பட்டு, கர்ப்பிணியின் கையில் வளையலாகவும், சிறு குழந்தைகளுக்குக் காலில் காப்பாகவும் அணிவிப்பதே இதன் தத்துவ சுருக்கம் ஆகும்.

     வளையலும், காப்பும், கையிலும், காலிலும் அணிந்து அசைவதன் மூலம் அதிலிருந்து உண்டாகும் மின் சக்தி உடலில் உள்ள வெட்ப தட்ப, தாரதம்யங்களை எப்பொழுதுமே சமநிலையில் இருக்கச் செய்கிறது.  ஆதலால் நெருப்பில்லாமல் நீரில்லை, நீரில்லாமல் நெருப்பு மில்லை, இவ்விரண்டும் ஒன்று சேராமல், இயக்கவல்ல ஆவியும் இல்லை என்பது விளக்கப்படுகின்றது.


ஔவையார் கிழவியும் குமரன் முருகனும்:


     இங்கே கிழவி என்பது, நமது ஊன்உடல் கிழத்தன்மை அடைவதைக் காட்டும்,

     குமரன் என்பது, ஊன்உடலை இயக்கும் அணுவில் அமைந்திருக்கும் ஜோதியைக் காட்டும்.

     இதனை இராமலிங்க அடிகள், "அணுவுள்ளமைந்த பேர் ஒளியே அன்புருவாய் பரசிவமே" என்றார்கள்.

     ஊன் உடலுக்கு மூப்பு, தளர்ச்சி, கிழத்தன்மை எல்லாம் உண்டு.  ஆனால் அதன் உள்ளிருந்து இயக்கும் ஆத்ம ஜோதிக்கு கிடையாது.  அது என்றும் இளமையாக இருப்பதால் பாலகனென்றார்கள்.  தளர்ச்சியும், கிழத்தன்மையும் அடையக்கூடிய தேகாபிமானத்தை, என்றும் இளமையோடு இருக்கும் பாலகனாகிய ஆத்ம சொருபமாகிய ஜோதியினிடத்தில் ஒன்றுபடுத்த பேரின்பம் விளைக்கின்றது.  இதுவே சச்சிதானந்த சொரூபம்.  இதைக் குருமுகத்தில் அறிக.


     ஔவை என்றால் தாய் என்று பொருள்படும்.  இறைவன் தாயும் ஆனவன் அல்லவா, ஆகையால் ஆன்மசிற்சக்தியே முதிர்ந்த அறிவைப் பெறுவதால், மிக்க முதுமையுடைய ஔவையார் எனப்பட்டது.


     பாலகன் ஆ மேய்க்கும் சிறுவன் (ஆ - பசு - ஜீவன்) ஜீவான்மாவை மேய்க்கும், ஆத்ம ஜோதியை என்றும் பாலகனாகிய சிறுவன்.


சுட்டபழம் சுடாதபழம்:

     ஔவையார் நடந்தே நானிலம் முழுவதும் சுற்றித் தமிழ் பரப்பி வந்தனர்.  ஒரு சமயம் கோடையின் வெப்பம் மிகுதியைத் தாங்காது,  ஒரு தாமரைத் தடாகத்தில் கைகால்களைச் சுத்தி செய்து, சற்று தண்ணீர் பருகினார்.  குளிர்ந்த காற்று வீசும் தடாகத்தின் கரையில் உள்ள ஒரு நாவல் மரத்தின் நிழலில் தங்கினார்.  அம்மையார் பசி மிகுதியால் ஆயாசமாய் இருந்தனர்.  மேலே அண்ணாந்து பார்த்தார்.  மரத்தின் மீது ஒரு சிறுவன் அமர்ந்திருப்பதைக் கண்டார்.


     ஔவையார் அப்பாலகனைப் பார்த்து சிறுவனே நீ யார் என்று வினவினார்கள்.  அப்பாலகன் பாட்டி என்னையா கேட்கின்றாய், எனக்கு ஒரு பெயரா? இரு பெயரா? அவரவர்கள் விருப்பம் போல் பெயர் இட்டுக் கூப்பிடுவார்கள்.  பித்தரென்றும் அழைப்பார்கள்.  மேலும் எல்லா உயிரின் பெயரும் எம்பெயரே என்று சொன்னான்.  

     திருவருட்பிரகாச வள்ளலார் கூறும் பாடலைச் சிந்திக்க இது நன்கு விளங்கும்.


     "சிற்சபையில் நடிக்கின்ற நாயகனார் தமக்குச்
     சேர்ந்தபுறச் சமயப்பேர் பொருந்துவதோ என்றாய் 
     பிற்சமயத் தார்பெயரும் அவர் பெயரே கண்டாய் 
     பித்தர்என்றே பெயர் படைத்தார்க் கெப்பெயர் ஒவ்வாதோ 
     அச்சமயத் தேவர் மட்டோநின்பெயர் என்பெயரும் 
     அவர்பெயரே எவ்வுயிரின் பெயரும் அவர்பெயரே 
     சிற்சபையில் என்கணவர் செய்யும்ஒரு ஞானத் 
     திருக்கூத்துக் கண்டளவே தெளியும் இது தோழி."

   
     இதைக் கேட்ட ஔவையார் "பாலகனாய் உள்ள நீயா இவ்வளவு பெருமையுடைவனாய் விட்டாய், என நினைத்து எனக்கு மிகவும் ஆயாசமாக இருக்கிற படியால், நாவற்பழம் பறித்துப் போடு" என்று கேட்டாள்.  அதற்கு அந்தப் பையன் ஓ கிழவியே, உனக்குச் சுடுகிற பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா? சொல் என்று கேட்டான்.

   
     எல்லாம் தெரிந்த கிழவிக்கு அதுவிளங்கவில்லை, நாவற்பழத்திற் சுடுகிற பழமுமிருக்குமா என்று ஆலோசித்து ஒன்றுந் தோன்றவில்லை.  பனம்பழம் தான் சுட்டுத் தின்பார்கள், நாவல் பழத்தைச் சுடுவது என்பது இதுவரையிலும் நான் கேள்விப்பட்ட தில்லையே, இப்பாலகனிடம் அது என்ன என்று கேட்பதும் கூடாது என்று இறுமாப்புடன் "சுடுகின்ற பழம் எனக்கு வேண்டுவதில்லை." சுடாத பழமே வேண்டும் என்று கேட்டாள்.

     சிறுவன் புன்சிரிப்பாகச் சிரித்துக் கொண்டே மரக்கிளைகளைக் கையால் பிடித்துக் குலுக்கி விட்டான்.  அதிலிருந்து கனிந்த பழங்களும், கனியாத பழங்களும் கீழேயுதிர்ந்தன.  அப்போது ஔவையார் கனிந்த பழத்தைப் பார்த்து எடுத்து, அதனில் தலைப்பாயிலிருந்த மணல் ஒட்டிக் கொண்டிருந்தமையால், அதை வாயினால் ஊதினார்கள்.  ஓ பாட்டி, சுடாத பழங்கேட்ட நீ இப்போது சுடுகிற பழத்தைத் தின்னப்போகின்றாயே, வாய் வெந்து விடப் போகிறது.

      ஐயோ பாவம் நன்றாக ஊதி, ஊதி, ஆறின பின்னர் சாப்பிடு என்றான்.  ஔவையார் அப்போது சுடாத பழம் காய் என்று தெரிந்து கொண்டு இக்கருத்து நமக்குத் தெரியாமற் போயிற்றே என்று வெட்கித் தலை குனிந்து நின்றாள்.


     எடுத்த பழம் கையிலேயே நின்று விட்டது, பசி தாகம் பறந்து போயிற்று.  அச்சமும், நாணமும் கொண்டு மானம் வந்து உள்ளத்தை வருத்தின.   எல்லாப் புலவர்களையும் ஒரு கணத்தில் வென்று வெற்றி பெற்று, வீறு கொண்ட நான், ஆ(டு) மேய்க்கும் இப்பாலகனிடம் தொற்றேனே.  ஆ! ஆ!! அறிவு எங்கு போய் மறைந்திருக்கின்றது.


"கருங்காலிக் கட்டைக்கு நாணாக்கோ டாலி 
இருங்கதலித் தண்டுக்கு நாணும் பெருங்கானில்
காரெருமை மேய்கின்ற காளைக்கு நான் தோற்ற 
தீரிரவு துஞ்சாதென் கண்."

     இவ்வெண்பாவைக் கேட்டவுடனே அக்குமரன், ஔவையார் பால் அருள் மிகுந்து, மரத்தை விட்டு இறங்கி, அவர் கரங்களைப் பற்றிக் கொண்டு நான் உம்முடன் விளையாட வந்ததேயின்றி இகழ் வதற்கன்று, உம்மைப் போல் குற்றத்தை உணர்ந்தவர்கள் யாரிருக்கிறார்கள் இவ்வுலகத்திலே? ஆகையால் எம் அருள் பெற்ற நீ உலக மக்களுக்கு நீதியையும் ஞானத்தையும் எடுத்துப் போதித்திரு என்று ஆசி கூறினார். 

     ஆ உருவத்தைக் கண்டல்லவா! சிறுவன் என்று மதி மயங்கி இறுமாப்புற்று இருந்தோம் என்பதனை ஔவையார் நினைந்து நினைந்து உணர்ந்து உணர்ந்து கண்ணீர் விட்டு .... 

"பெரியோர் எல்லாம் பெரியரு  மல்லர் 
சிறியோர் எல்லாம் சிறியருமல்லர்"  - ஔவையார் 

"உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு
அச்சாணி அன்னார் உடைத்து" - திருக்குறளும் 

"இருநிலத்தே பசித்தவர்க்கு பசிநீக்க வல்லார் 
இவர் சிறியர் இவர் பெரியார் என்னல் வழக்க லாவே

------  என்று வள்ளலாரும் கூறியுள்ளதைச் சிந்திக்க இது விளங்கும். 

     ஔவையாரும், இனி எவ்வாற்றானும் கல்வியில் செருக்கடைய மாட்டேன் என்று கூறி, தனக்கு உண்மையைக் கூற வந்த கருணைக் கடலே, அருட்பெருஞ்ஜோதியே ஆராவமுதே, உன்பால் நான் தோற்றது எனக்குப் பெருமையே என்று துதித்து, அச்சிறுவன் பாதத்தில் விழுந்து வணங்கினாள்.  முற்றறிவு பெற்றிருந்த அச்சிறுவன் ஔவையாரைத் தேற்றி, கல்வியின் பயன் செருக்கடைவதற்க்கல்ல இறைவன் திருவடியை அறிந்து தொழுவதற்கேயாகும் என்றனன். 

"கற்றதனால் ஆய பயன் என்கொல் வாலறிவன் 
நற்றாள் தொழா அர் எனின்."

           ----     திருவள்ளுவர் கூறியுள்ளதைச் சிந்திக்க நன்கு விளங்கும். 

No comments:

Next previous home
Related Posts Plugin for WordPress, Blogger...