Tuesday, May 12, 2015

ஞான அனுபவ நிலை

விந்து குண்டலினி:

     நம் மூலாதாரத்தில் விந்துக் குண்டலினி பாம்பைப் போல் சுருண்டு படுத்துறங்கும்.  இதை ஞான சாதனை அப்பியாசத்தால் தட்டி எழுப்பினால், அது விழித்தெழுந்து பாம்பைப் போல் சீறிப் பாய்ந்து மேலே கிளம்பும் வேகத்தில், இங்கு ஓர் ஆவி உருவாகி, உச்சிக்கு நேர்முகமாகக் காற்றின் வேகத்தில் புறப்பட்டுச் செல்லும்.  இந்த ஆவியின் பெயர் நாதக் குண்டலினி.


     இந்த இடம்தான் திருப்பெருந்துறைக் கோயில் குறிப்பதாகும்.


     சீறிக் கிளம்பிய விந்துக் குண்டலினி, முதுகுத் தண்டான வீணாதண்டத்தின் உற்புறம் உள்ள, சுழுமுனை நாடியின் வழியே மேலேறிச் செல்லும்.


     இந்த இடம் தான் திருவையாற்றுச் கோவில் குறிப்பது.


சோமவட்டம்:

     நம் தலையில் பின்புறம், பிடரியில், மிளகுப் பிரமாணம் ஒரு கண் இருக்கின்றது.   இந்தக் கண்ணில் பிறர் பார்வைப் பட்டால் நம்மை அறியாமலே திரும்பி பார்ப்போம், இதை மறைக்க நம் முன்னோர்கள், பிடரியில் தலைமுடியைக் குடுமியாகக் கொண்டிருந்தனர்.  முதுகுத் தண்டின் உட்புறம் வழியாக வந்த விந்துக் குண்டலினி, இந்தப் பிடரிக் கண்ணில் சென்று மோதியதும், ஓர் ஒளிப் பிரகாசம் உண்டாகும்.  இதைச் சோமவட்டம் என்பார்கள்.


     இதைத்தான், கடவுளின் உருவப் படங்களிலும் மகான்களின் உருவப் படங்களிலும், தலைக்குப் பின்னால் வட்ட வடிவில் ஜோதி சொரூபமாக வரைந்து இருக்கின்றார்கள்.

உச்சிக்கண்:

     நம் தலையின் உச்சியில் கடுகுப் பிரமாணம் ஒரு கண் இருக்கின்றது.   பிடரியில் இருந்து மேலே புறப்பட்ட விந்துக் குண்டலினி, தலையின் உச்சிக்கு வந்து சேரும்.  அப்பொழுது, உச்சிக் கண்ணின் கூச்சத்தால், தலைக்குமேல், வட்ட வடிவில் ஓர் ஒளிப்பிரகாசம் உண்டாகும்.  இதைத்தான் சில மகான்களின் உருவப்படங்களில் தலைக்குமேல் ஒளி வட்டமாக வரைந்து இருக்கின்றார்கள்.


     நம் நெற்றியில், புருவநடுவில், ஊசி முனையின் பத்தில் ஒரு பாகமாக ஒரு கண் இருக்கின்றது.   உச்சியில் இருந்து  ஊர்ந்து வந்த விந்துக் குண்டலினி அமிர்த தாரையைப்போல் நெற்றியில் ஒழுகி, புருவநடுவைக் குடைந்து, ஏழு சவ்வுகளை நீக்கி, நெற்றிக் கண்ணில் வந்து பொருந்தும், அப்பொழுது மூன்று சுடர்களின் பிரகாசம் உண்டாகும்.  இதைத்தான் சூரியநாடி, சந்திர நாடி, அக்னி நாடி என்பார்கள்.

     இது ஞானிகள் அனுபவிக்கும் ஞானச்சுடர் நிலை இதற்கு முச்சுடர் நிலை, முச்சுடர், மூவிதழ், முப்பாழ், மஹாமேரு, லாடம், ஆக்கினாஸ்தானம் என்று பல பெயர்கள் உண்டு.  இதிலிருந்துதான் உத்தரவுகள் எல்லாம் பிறக்கின்றன.  எல்லா மதத்தினரும் தம்மை அறியாமல், தம் கைகளால் நெற்றி நடுவைத் தொட்டு வணங்குகின்றதும் இதனாலே தான்.

சகஸ்ர தளம்:

     நமது புருவ நடுவில், உட்புறம் சோதிப் பிரகாசம் உண்டானதும், இதன் வெளிச்சத்தினால், நம் மூளையின் மேல், நீர்ச் சக்தியுடன், மேடும் பள்ளமுமாக மூடிக்கொண்டிருக்கும் சவ்வானது, பஞ்சவர்ண நிறத்துடன், தாமரை இதழ்களைப் போன்று மலர்ந்து காட்சியளிக்கும், இதைத்தான் ஆயிரம் இதழ்க் கமலம், (சஹஸ்ர தள கமலம்) என்பார்கள்.

துவாத சாந்தம்:

     விந்துக் குண்டலியானது, புருவ நடுவில் உட்புறமிருந்து கிளம்பி, மூளையின்மேல் மெள்ளத் தவழ்ந்து, நெளிந்து, மெதுவாக மேலும் நகர்ந்து, தலை உச்சியின் நேர்கீழ்ப் பகுதியிலுள்ள மூளையின் நடுப்பகுதியை வந்தடையும்,  இந்த இடத்தையே பிரமரந்திரம், துவாதசாந்தம், ஓங்கார பீடம், ஸ்படிக மேடை எனப்பல பெயர்களால் குறிப்பிடுவார்கள்.


நாதக் குண்டலினி:


     மூலாதாரத்திலிருந்து கிளம்பிய நாதக்குண்டலியானது.  சுவாதிஸ்டானம், மணிபூரகம், அனாகதம், விசுத்தி ஆகியவற்றை ஒவ்வொன்றாகக் கடந்து, இந்திரயோனி என்னும் உள் நாக்கின் பின் புறம் உள்ள துவாரத்தின் வழியே, மூளையின் நடுப் பகுதியை வந்தடையும்.   ஏற்கனவே வந்த விந்துக் குண்டலினியைச் சிவமாகவும், நாத குண்டலினியைச் சக்தியாகவும் கொள்வார் இவ்விரண்டும் ஒன்றாகக் கூடிக் கலக்கும்.  இதைத்தான் சிவசக்தி ஐக்கிய பாவம் (பிந்து) என்பர்.


     இந்த இடம்தான் மதுரையால் குறிக்கப்படுவது.


     நமது கடவுள் உருவங்களுக்கு எல்லாம் வலது கைவிரல்கள் மேல் நோக்கியும், இடது கைவிரல்கள் கீழ் நோக்கியும் இருப்பதன் காரணம் என்ன? நம் விந்து மேலே சென்றால் பேரின்பம் என்பதையும், கீழே சென்றால் சிற்றின்பம் என்பதையும் நமக்குச் சூசகமாகக் குறிபிடுதற்காகத்தான்.


அனுபவ ஞான நிலை: 

   இதை மெய்த் தத்துவக் ஞான குருவால் தெரிந்து, தெளிந்து, அனுபவத்தால் உடலுக்குள்ளே உலாவும் உயிரையும், அந்த உயிரில் உணர்வாய் இருக்கும் இறைவனை அடையும் பொருட்டு, உந்தியின் கீழ் 2 அரை அங்குலத்திற்கு உட்புறம் இருக்கும் விந்துப் பையைச் சூடேற்றிக் கொதிக்க வைத்து, அது கொதித்தெழுந்த நீராவியின் ரசத்தால் முதுகுத் தண்டின் உட்புறம் உள்ள நாடியின் வழியே சென்று, பிடரியில் மோதி, அதில் சிதறும் சோம வட்டச் சுடரின் அருகில் சுழன்று, உச்சிப் பெருவழியில் வலம் வந்து, நெற்றியை நோக்கி ஊர்ந்து சென்று, அமிர்த தாரையைப் போல் நெற்றியின் நடுவில் ஒழுகி, புருவ நடுவைக் குடைந்து, ஏழு சவ்வுகளையும் விலக்கி, உள்ளே சென்று, பேரொளியைக் கண்டு, பேரறிவில் கலந்து மூளையின் வேலைகளை முடித்துக்கொண்டு, நடு மூளைக்குச் சென்று வலம்புரி சுற்றி, ரசத்தை மணியாக்கிக் காயத்தைக் கற்பம் செய்து, முகுளத்திற்கு சென்று, முக்திக்கு மூல இடத்தின் திருவுகோலைப் பற்றி எடுத்துக் கொண்டு திரும்பும்.


     அதே சமயம் மற்றோர் ஆவி, உந்தியின் கீழ் உட்புறமிருந்து சீறிச் சப்தத்துடன் உச்சிக்கு நேர் வழியாகக் கிளம்பி, உந்தியைக் கடந்து வயிற்றில் வலம் வந்து, இருதயத்தில் அமர்ந்து, அங்கிருக்கும் சப்தத்தையும் துணைக்கொண்டு, வெகு ஓசையோடு இரைச்சலுடன் கண்டத்தில் பொருந்தி, வீறிட்டுஓடி, அண்ணாக்கின் துவாரத்தின் வழியே மேலே கிளம்பி, மூளையின் நடுப்பாகத்தில் பரந்து செல்லும்.  அப்பொழுது முன் சென்ற ரசமணியும் வந்து சேரவும், ஆக இரண்டும் கலந்துவிடும்.  அங்கு ஊறும் அமுதப் பாலால் உடம்பு நனைந்து, சொர்ணதேகம் பெற்று, கடவுளை நம்மிடமே கண்டு நம்மில் சர்வமும் அடங்கி ஒடுங்கி நிறுத்தவே நாம் அதுவாகின்றோம்.

     இதுவே அனுபவ ஞான நிலை, இதுவே கடவுள் நிலையம் கூட.  ஏகமும், எல்லாமும் நிறைந்த பரம்பொருளில் இரண்டறக் கலந்து விடுவதே ஆனந்தம்.  இது திருவருட் செயலால் நடக்கக்கூடும்.  நடக்க நாமும் விரும்பவேண்டும். முயலவும் வேண்டும்.

     எல்லாம் இறைவன் செயல்! இறைவா என்று நாம் இருப்போம்!

********************************************************************************No comments:

Next previous home
Related Posts Plugin for WordPress, Blogger...