Wednesday, May 13, 2015

தசாவதார விளக்கம்

பத்து அவதாரங்கள்:
1. மச்சாவதாரம்:     முதன் முதலில் தண்ணீரில் தான் ஜீவசக்திகள் உண்டாயின.  அதாவது நம் கண்களுக்குத் தெரியாத ஜீவ அணுக்கள் உண்டாகிப் பாசியாக மாறிப் புழுபூச்சிகளாகின.  இப்படி எத்தனையோ வகையான உயிர் இனங்கள் உற்பத்தியாகிவிட்டன.  பொதுவாகத் தண்ணீரில் மீன் இனங்கள் தான் அதிக அளவில் பெருகிவிட்டன.   இதை மச்ச (மீன்) அவதாரமாகக் கொண்டனர்.


2. கூர்மாவதாரம்:      தண்ணீருக்கும் தரைக்கும் ஊர்ந்து செல்ல ஜீவப் பிரயத்தனம் உண்டாயிற்று.  அதாவது, மீன் தரைக்கு வர முடியாது.  தவளையும் ஆமையும் தண்ணீருக்கும் தரைக்கும் வந்துபோய் கொண்டிருக்கும்.  இதில் தவளை தண்ணீரில் முட்டையிட்டு இனப் பெருக்கத்தை உண்டாக்கும்.  ஆனால் ஆமை தரையில்தான் முட்டையிட்டு இனப்பெருக்கத்தை உண்டாக்கும்.  தரையில் முதன்முதலில் உண்டான உயிர் இனம் ஆமை.  இதைக் கூர்மை (ஆமை) அவதாரமாகக் கொண்டனர்.


3. வராகவதாரம்:      இதன்பிறகு பூமியில், இடத்திற்குத் தகுந்தாற்போல், சீதோஷ்ண நிலைக்கு ஏற்றவாறு பலதரப்பட்ட மிருக இனங்கள் உருவாயின.  இதில் பன்றி இனம் மட்டும், எல்லா மிருகங்களையும் விட மோசமானது.  மலத்தைத் தின்று, சேற்றில் புரளும்.  மண்ணைக் கிளறி புழுப் பூண்டுகளைத் தின்னும்.  அடிக்கடி பல குட்டிகளைப் போடும்.  அறிவு இன்றி முட்டாள் தனமாக நடந்து கொள்ளும்.  அதனால் தான், பன்றியை ஒன்றும் புரியாத ஆரம்பக்கால மிருகமாகவும், நிறைய, அதிகமான குட்டிகளைப் பெறுவதினாலும், மிருக இனங்கள் அதிக அளவில் உருவாகி விட்டன என்பதை உணர்த்தவே, வராக (பன்றி) அவதாரமாகக் கற்பித்தனர்.


4. நரசிம்மாவதாரம்:     இந்தக் காலத்து ஆராய்ச்சியில், குரங்கிலிருந்து மனிதன் தோன்றினான் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.  அந்தக் காலத்தில் நமது முன்னோர்கள், மிருகத்துக்கும் மனிதனுக்கும் தொடர்பு உண்டு, மிருகத்திலிருந்து தான் மனிதன் தோன்றியிருக்க வேண்டும் என்றார்கள்.  அவர்களுக்குச் சரியாகப்புரியவில்லை என்றாலும், மனிதன் ஏதாகிலும் ஓர் இன மிருகத்திலிருந்துதான் உருவாகி இருக்க வேண்டும் என்றே முடிவு செய்தார்கள்.  அப்படி மிருகத்திலிருந்து உருவான ஆதி மனிதர்களுக்குச் சிந்தனையற்ற மிருக அறிவுதான் இருக்கவேண்டும் என்றும் நினைத்தனர்.  இந்த எண்ணத்துடன், மிருகங்களுக்கு அரசனான சிங்கத்தின் தலையையும், மனிதனின் உடலையும் சேர்த்து ஒரு உருவமாகக் கற்பனை செய்தனர்.  இதையே நரசிங்க அவதாரமாகக் கூறினர்.


5. வாமனாவதாரம்:     இதன்பிறகு, மனிதர்கள், குள்ளமான உருவ அமைப்புடன் சிந்திக்க ஆரம்பித்து, பகுத்து அறியத் தெரிந்து கொண்டார்கள்.  உலகில் வாழவும் புரிந்து கொண்டார்கள்.  அனால், அளவு கடந்த ஆசையுடன் பிறர் பொருளைத் தந்திரமாக அபகரிக்கவும் நினைத்தனர்.  இதையே வாமன அவதாரமாக உருவகித்தனர்.


6. பரசுராமாவதாரம்:  இதன்பிறகு, தனித்தனிக் கூட்டங்களாகப் பிரிந்து, நீர் வளமுள்ள காடுகளைத் தேர்ந்த்தெடுத்து, மரங்களை வெட்டிச் சீர்படுத்தி, நாடு நகரங்களாகச் செப்பனிட்டுக் குடும்பம் குடும்பமாக வாழ மனிதர்கள் ஆரம்பித்தார்கள்.  அப்பொழுது மிருகங்களால் ஏற்படும் தொல்லைகளைச் சந்தித்தனர்.  வெவ்வேறு கூட்டத்தார்கள் அடிக்கடி வந்து, சண்டை சச்சரவுகளோடு போராடினார்கள்.  பெண்களையும், பொருள்களையும் கொள்ளையடித்துக் கொண்டு போனார்கள்.  இதையெல்லாம் சமாளிக்கத் தாடிமீசையுடன், எப்பொழுதும் கோடாலியைக் கையில் ஏந்தியபடியே இருப்பார்கள்.  மிருகத்தைத் தாக்கவும், எதிரியை வெல்லவும், மரம் வெட்டவும், விறகைப் பிளக்கவும் ஒரே ஆயுதமாகக் கோடாலியைப் பயன்படுத்தி வந்தார்கள்.  சிலர் குடும்பம் நசித்துவிட்டால் தவம் செய்ய மலைக் குகைகளுக்குச் சென்றுவிடுவார்கள்.  அப்பொழுதும் கூடக் கையில் கோடாலி இருக்கும்.  இதையே பரசுராம அவதாரமாகக் கூறினர்


7. இராமாவதாரம்:      இதன் பிறகு நாகரீகம் வளர்ந்து, இடத்திற்கு ஏற்றாற்போல் மன்னர்களின் ஆட்சிகள் உண்டாயின.  வில், வேல், வாள் இன்னும் சில ஆயுதங்களால் போரிடும் பயிற்சிக் கூடங்களும் எழுந்தன.  போர்த்தளவாடங்களும் உருவாயின.  மக்கள் அனைவரும் வீரர்களாகவும், நாட்டுப் பற்றுக் கொண்டவர்களாகவும், ஒருவனுக்கு ஒருத்தி என்று கற்பு நெறி தவறாதவர்களாகவும் இருந்தார்கள்.  ஒரு மன்னன் பல மன்னர்களை வென்று வெற்றி வாகை சூடிப் பெரும் சாம்ராஜ்யங்களை அமைத்தான்.  இதில் மக்கள் அனைவரும் அன்பு கொண்டவர்களாகவும் நீதி, நியாயம், உண்மை, இப்படிப் பல நற்குனங்களுடனும், சத்தியத்துடனும் வாழ்ந்து வந்தார்கள்.  இப்படி ஆண்ட அரசர்களும் அநீதியை அழித்து, நீதியை நிலை நாட்டி, நேர்மையுடன் அரசு பரிபாலனம் செய்து வந்தார்கள் இதையே இராம அவதாரமாகக் கூறினார்.

8. பலராமாவதாரம்:     இதன் பிறகு அரசும் மக்களும் ஒன்று கூடி தொழிற் கூடங்களும், அறிவுக் கூடங்களும், ஆராய்ச்சிக் கூடங்களும், பயிற்சிக் கூடங்களும் அமைத்தார்கள்.  இதில் ஓயாது உழைக்கவும் ஆரம்பித்து விட்டார்கள்.  பெரும்பாலும் மக்கள் விவசாயத்தில் ஈடுபட்டு, ஒவ்வொருவரும்.  கலைப்பையைத் தோளில் சுமந்தார்கள்.  உழவைத் தெய்வம் எனக் கருதி நிலத்தில் உழுது பாடுபட்டார்கள். பஞ்சம், பசி, பட்டினி என்பன இவர்களுக்குத் தெரியாது.  சந்தோஷமாகவே வாழ்ந்தார்கள்.  திருவிழாக்களைக் கோலாகலமாக நடத்துவார்கள்.  எப்பொழுதும் முகமலர்ச்சியுடன் இருப்பார்கள்.  இவர்கள் கள்ளம் கபடு தெரியாதவர்கள்.  இதையே பலராம அவதாரமாகக் கூறினர்.

9. கிருஷ்ணாவதாரம்:     இதன் பிறகு மனிதர்களுக்கு அறிவு வளர வளர, சூது, சூழ்ச்சி, வஞ்சகம், சதி இத்தகைய கொடிய எண்ணங்கள் இவர்கள் மனத்தில் உருவாகின.  இதனால் மனிதர்கள், பற்று, பாசம், உறவு என்பதைக் கூட நினையாமல், சூதுசெய்து சூழ்ச்சியில் இறங்கினர்.  வஞ்சக நெஞ்சத்தால், சாதியின் வேகத்தால், மன்னர்கள் ஒருவருக்கொருவர் இறக்கம் காட்டாமல், விளையாட்டாகச் சிரித்துதுக் கொண்டே போர்க் காரியத்தில் ஈடுபடுவார்கள்.  வெற்றி கொண்டவர்கள் நாடாளவும், தொல்வியுள்ளவர்கள் எல்லாம் இழந்து, நாட்டைவிட்டு வெளியே போகவும் நேரும்.  இப்படி எத்தனையோ கொடிய செயலில் ஈடுபட்டு, ஒருவருக்கொருவர் மோதிக்கொண்டு, பயங்கர யுத்தங்கள் நடத்தினர்.  இதில் கோடிக்கணக்கான மக்கள் மாண்டனர், இறந்தவர்களுக்கு வீர சொர்க்கம் உண்டென்றனர் இருப்பவர்கள் மன்னன் கட்டளைப்படி நடந்தால் இராஜ பக்தி என்றனர்.  இப்படிக் பொய் பித்தலாட்டத்தில் மனிதர்கள் வாழ்ந்து வந்தார்கள்.  இதையே கிருஷ்ண அவதாரமாகக் கற்ப்பித்தனர்.


10. கல்கி அவதாரம்:      ஜீவர்கள் ஆசையின் மோகத்தால், பல பிறவிகள் தோறும் செய்யும் பாவ புண்ணியங்களுக்கு ஈடாய், ஜெனன மரண துக்கங்களை அனுபவித்துக் கடைசியாய் மனிதப்பிறவி எடுத்துள்ளனர்.  இறைவனை அடைய வேண்டிய மார்க்கங்களைத் தெரிந்து தெளிந்து, அதன்படி ஒழுகி, ஞான அனுபவங்களைப் பெற்று, மனித உடலை அழித்து, ஐம்பூதத்தில் ஒன்றில் சேர்த்துவிட்டு, ஜீவனானது சச்சிதானந்த சொரூபமான இறைவனோடு இரண்டறக் கலத்தல் வேண்டும்.  அதாவது ஜீவாத்மாவானது, பரமாத்மாவோடு ஐக்கியம் ஆகவேண்டும்.  இதையே கல்கி அவதாரமாகக் கற்பித்தனர்.


     இவை எல்லாம் உலக வளர்ச்சியின் பரிணாமக் தத்துவங்கள்.  இதைக் கற்பனையாகக் கதை வடிவில், உண்மையாக நடந்தாற் போல், இடம், சம்பவம், பாத்திரங்களை எல்லாம் நன்றாக அமைத்து, வெகு நேர்த்தியாகப் பாகவதப் புராணமாக இயற்றியுள்ளார்கள். 


1 comment:

Baskaran Sharmila said...

பலராமன் ஆதிசேஷன் அம்சம் அல்லவா. அவரை எப்படி அவதாரம் என்று விளக்கம் தேவை.லக்ஷ்மணன்னும் ஆதிசேஷன் அம்சம் அப்படி என்றால் அவதாரம் பத்து அல்ல, பதினொன்னு.

Next previous home
Related Posts Plugin for WordPress, Blogger...