Friday, June 12, 2015

8. சமாதி - (அட்டாங்க யோகம்)8. சமாதி:


     விந்துவும் நாதமும் மேருவில் ஓங்கிடிற் 
     சந்தியி லான சமாதியிற் கூடிடும் 
     அந்த மிலாத அறிவின் அரும்பொருள் 
     சுந்தரச் சோதியுந் தோன்றிடுந் தானே - 619


விளக்கம்:  நாதபிந்துக்களானது பிரணவத்தின் நுனியில் ஏறிவிட்டால் பிராணாபானன் சந்திக்கும் இடத்தில் சமாதியிற் சேர்ந்து விடும்.  முடிவற்ற அறிவினுடைய அருமையான பொருளாகிய அழகுள்ள சோதியும் தோன்றும்.

     மன்மனம் எங்குண்டு வாயுவும் அங்குண்டு
     மன்மனம் எங்கில்லை வாயுவும் அங்கில்லை 
     மனமனத் துள்ளே மகிழ்ந்திருப்பார்க்கு
     மனம்மனத் துள்ளே மனோலய மாமே. -- 620

விளக்கம்: பெருமை பொருந்திய மனம் எங்கிருக்கிறதோ வாயும் அங்குயிருகின்றது.  பெருமை பொருந்திய மனம் எங்கு இல்லையோ அங்கு வாயுவும் இல்லை.  நெருங்கியிருக்கும் மனதிலேயே மகிழ்ச்சி யோடிருப்பவர்களுக்கு அந்த மனதுக்குள்ளேயே அந்த மனமானது லயமாகி விடும்.

     விண்டலர் கூபமும் விஞ்சத் தடவியுங் 
     கண்டுணர் வாகக் கருதி யிருப்பவர்கள் 
     செண்டு வெளியிற் செழுங்கிரி யத்திடை 
     கொண்டு குதிரை குசைசெறுத்தாரே -- 621

விளக்கம்: பிரிவாகி மலர்ந்திருக்கும் கிணறு  ஆகிய நடுவீட்டையும் அறிவினிடத்திலும் அதைச் சுற்றியும் உள்ள அஞ்ஞான தத்துவங்களையும் பார்த்து அறிவாக எண்ணியிருப்பார்கள்.   அவர்கள் சிதாகாயத்தின் மத்தியில் செழுமையாகிய பிரணவ மேருவிடத்தில் சென்றால் பிராணாபானனை மேல் கொண்டு போக அதைக் கட்டியிருக்கும் மனமாகிய கயிற்றை அறுத்தான் பரமசிவம்.

குறிப்பு: நடுவீட்டையும், பிரணவத்தைச் சுற்றியிருக்கும் அஞ்ஞான தத்துவங்களையும் பார்க்கிறவர்கள் பிராணாபானனை பிரணவ நுனிக்கு ஏற்றும் போது சிவா அருளினால் மனம் நசுங்கி விடும்.  மன மடங்காமல் பிராணாதிகள் மேலேற்ற முடியாது.  இம்மந்திரம் மனோ நாசத்துக்கு தந்திரம் சொல்லப்பட்டது.

     பூட்டொத்து மெய்யிற் பொறிப்பட்ட வாயுவைத் 
     தேட்டற்ற வந்நிலஞ் சேரும் படிவைத்து 
     தேட்டத்தை மீட்டு நயனத் திருபார்க்குத் 
     தோட்டத்து மாம்பழந் தூங்கலுமாமே - 624


விளக்கம்: சூரிய, சந்திரர்கள் ஒத்து அதனால் தேகத்துக்குள் பிரணவத்தில் கட்டுப்பட்டுக் கொண்ட பிராணாபாணனை ஆராய்ச்சி செய்யமுடியாத அந்த நடுவீட்டில் சேரும்படி செய்து பார்வையைத் தன் வசப்படுத்திக் கொண்டு பிழக்கடையிலுள்ள மாம்பழத்தைப் போல வேறுவிதமாக ஒன்றையும் கருதாமலும் பார்வையைச் செலுத்தாமலும் நேத்திரத்திலேயே மனதைச் செலுத்தி நின்றால் தூங்காமல் தூங்கலாம்.


     நம்பனை யாதியை ஓதியைச் 
    செம்பொனின் உள்ளே திகழ்கின்ற சோதியை 
     அன்பினை யாக்கி யருத்தி ஒடுக்கிப் போய்க் 
     கொம்பேறி கும்பிட்டுக் கூட்டமிட்டாரே -- 626

விளக்கம்: சிவனை முதன்மையான வனை நான்கு வேதங்களும் குதிக்கும் படியான வனை நாதபிந்துக்குள்ளே பிரகாசிக்கின்ற சோதியை அன்பை அருளும்படி செய்து ஆசையை ஒடுக்கி பிராணவமாகிய கொம்பின் ஏறிப்போய் அஞ்சலி செய்து (பூரணமான கலைகளை) கூட்டமாகச் சேர்த்தார்கள்

     கற்பனை யற்றுக் கனல்வழியேசென்று 
     சிற்பனை எல்லாஞ் சிருட்டித்த பேரொளிப் 
    பொற்பினை நாடிப் புணர்மதி யோடுற்றுத் 
    தற்பர மாகத் தகுந்தண் சமாதியே -- 628 

விளக்கம்:  சங்கல்பமற்று கனலேறும் வழியே சென்று சித்திரங்களை எல்லாம் உற்பத்தி செய்த பெரிய ஒளியின் அழகைசேர்க்க வேண்டிய சந்திரனோடு பொருத்தமாக்கிக் கொண்டு மனதினால் நாடுவது குளிர்ச்சி பொருந்தியசமாதி அதனால் தானே சிவமாகத் தகும்.

     தலைப்பட் டிருந்திடத் தத்துவங் கூடும் 
     வலைப்பட் டிருந்தும் மாதுநல் லாளுங் 
    குலைப்பட் டிருந்திடுங் கோபம் அகலுந் 
     துலைப்பட் டிருந்திடுந் தூங்கவல் லார்க்கே -- 629

(பிரணவநுனியில் ஒளியோடு சந்திரனைப் பொருத்தி)  நின்றால் சிவதரிசனம் உண்டாகும்.  பார்வதியும் (பார்வையின் சக்தி) உன் வசமாய் இருந்திடுவாள்.  நடுக்கத்தைக் கொடுத்துக் கொண்டிருக்கும் கோபமானது ஒழியும்.  தூங்காமல் தூங்கும் சமாதி நிலையினால் சமபார்வை உறுதியாய் விடும்.

     சோதித் தனிச்சுட ராய்நின்ற தேவனும் 
     ஆதியும் உள்நின்ற சீவனு மாகுமால் 
     ஆதிப் பிரமன் பெருங்கடல் வண்ணனும் 
     ஆதி அடிபணிந் தன்புறுவாரே -- 630 


விளக்கம்:  சோதியாகியும் ஒப்பற்றசுடராயுமுள்ள பரமசிவன் அனாதியானவனும், தேகத்துக்குள்ளிருக்கிற சீவனுமாகும்.  ஆதி பிரம்மாவும் மாலாகிய கடலில் பள்ளி கொண்ட விஷ்ணுவும் ஆதியாகிய பரமசிவனடி பணிந்து அன்பைப் பெறுவார்கள்.

     சமாதி செய்வார்க்குத் தரும்பல யோகஞ் 
     சமாதிகள் வேண்டாம் இறையு டனேகிற் 
     சமாதிதா னில்லைத் தானவ னாகிற் 
     சமாதியில் எட்டெட்டுச் சித்தியும் எய்துமே - 631

விளக்கம்: சமாதி செய்கிறவர்களுக்குப் பல விதயோகமுந்தரும் சிவத்துடன் சேர்ந்தால் சமாதியிலிருக்க வேண்டாம்.  தான் சிவனாக விளங்கினால் சமாதி கிடையாது சமாதியினாலே அறுபத்து நான்கு சித்திகளையும் அடையலாம்.

அட்டாங்கத்தின் சுருக்கமான கருத்து:

இமயம்: ஒருவனிடத்தில் இயற்கையாயுள்ள ஞானவிரோதமானதை நீக்குவது

நியமம்: உலகத்திலுதித்தபின், சேர்க்கையால் நியமித்துக் கொண்டதை நீக்குவது.

ஆசனம்: தேகத்தை ஸ்திரத் தன்மையில் வைத்தல்

பிராயாணாமம்: சதா அலைந்து கொண்டிருக்கும் பிராணனை அசைவற்ற நிலையில் நிறுத்துதல்.

பிரத்தியாகாரம்: அதோ முகத்திலுள்ள சக்தியை சிரசுக்கு மேலேற்றுதல்

தாரணை: தைலதாரை போல் நிற்றல்.

தியானம்: சிவத்தில் தானும் ஒன்றாயிருத்தல்

சமாதி: சிவத்தில் லயமாவது.

     அட்டாங்கத்தின் கருத்தினைத் திருவருட் பிரகாச வள்ளலார் "வருகைக் கண்ணி" யில் குறிப்பிடுவதாவது.

     எட்டும் இரண்டும் என்றிட்டு வழங்குதல்ல 
     எட்டும்படி செய்தீர் வாரீர் 
     எட்டுரு வாயினீர் வாரீர்
     எட்டுரு என்பது அகர உரு.  அகரமே ஜீவன் 

     ஜோதியாயும் ஒப்பற்ற சுடராயுமுள்ள ஆண்டவன் தேகத்துக்குள்ளியிருக்கும் ஜீவனுமாகும்.

     எட்டு என்பது தமிழில் "அ" அத்துடன் "ரு" சேர்த்தால் "அரு" என்று ஆகும்.  அரு என்பது அணு.  அணு என்பது ஒளி.  இதனை அணுவில் அமைந்த பேரொளியே என்று வள்ளற்பெருமான் குறிப்பிட்டு இருப்பதும் சிந்திக்கத்தக்கது.

     எட்டுருவாகிய அணுவில் அமைந்த பேரொளியே உள்ளத்தில் அறிந்து, அதில் நினைவை ஒன்றுபடுத்தி தியானிப்பதுவே அட்டாங்க யோகமாகும்.

------ முற்றும் -------

2 comments:

Anonymous said...

நண்பரே உங்கள் பதிவுகளை தரவிறக்கம் செய்ய வசதி உள்ளதா .

Mathivanan said...

முடியும் அய்யா! Mozilla Browser இல் இருந்து பெற்று கொள்ளலாம்.

Next previous home
Related Posts Plugin for WordPress, Blogger...