Thursday, September 10, 2015

ஊழ்வினை

ஊழ்வினை

     உலக மக்களைப் படைத்த கடவுள், மக்கள் எல்லோரையும் ஒரே மாதிரியாகப் படைக்கவில்லை.  அவரவர் ஊழ்வினைக்கேற்ப உருவம், நிறம், குணம், அறிவு, மனம், செயல்கள் அனைத்திலும் வித்தியாசமாக படைத்துள்ளான் என்று வேதம் சொல்லுகிறது.  நாமும் கண்ணாரப் பார்த்து இயற்கையாக ஏற்றுக் கொள்கிறோம்.

     எல்லா சமூகத்தினரும் இம்மாற்றத்தை ஏற்றுக்கொண்டு கூறும் காரணம் என்னவெனில் ஊழ்வினை என்பர். இதனை

     புண்ணியம் ஆம் பாவம்போம் போனநாள் செய்தஅவை
     மண்ணில் பிறந்தார்க்கு வைத்த பொருள் எண்ணுங்கால்

ஈதுஒழிய வேறில்லை எச்சமயத்தோர் சொல்லும்
தீதுஒழிய நம்மை செயல்
 
    --- மூதுரை

     பகுத்தறிவுள்ள மக்களாகிய நமக்கு பாவம், புண்ணியம் என்றதையும், ஊழ் வினையின் பயன்களையும் நாம் மனதில் கொண்டு வாழ்க்கையில் கடைப்பிடிக்கின்றோமா? எனில்,

     இக்காலத்தில் அனேகர் ஊழ்வினைப் பற்றி சிறிதும் கவலைப்படுவதில்லை, ஆசை எனும் மாயையில் சிக்கிய இவர்கள் பணியின் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி லஞ்சம், திருட்டு போன்ற செயல்களும், மற்றும் சிலர் பொறாமையால், கலகம், கொலை, கொள்ளை போன்ற தீவினையைச் செய்கின்றார்கள்.

     மேற்கூறிய தீவினையை திரட்டிக் கொண்டவர்கள், ஊழ்வினைக்கு ஆளாகி துன்பப்படும் போது நான் என் ஊழ்வினையை அனுபவிக்கின்றேன் என்று சொல்லி உணர்கிறார்கள் என்பதை நாமும் அறிவோம்.  மேலும் ஊழ்வினையால் வரும் துன்பங்களை எப்படி சந்திப்பது என்பதைப் பற்றி சிந்திப்போம்.

அடுத்து முயன்றாலும் ஆகும் நாளன்றி
எடுத்த கருமங்கள் ஆகா

     நாம் செய்த ஊழ்வினையின்படி ஆகும் நாள்வரை இறைவனை சிந்தித்து காத்திருக்க வேண்டும் என்பது விதி.  இறைவனுக்கு லஞ்சம் கொடுத்தாலும் ஆகா! கடவுள் சாஸ்திரி அல்ல, சத்தியன் ஆவான்!

     இன்றைய நூல்களில் தெய்வ நிலைகளைப் பற்றிவரும் வாசகங்களையும், ஞானிகள் மேற்கூறிய வாசகங்களையும் சிந்தியுங்கள்.

துன்பமும் தோஷமும் விலகி ஓடட்டும்:
தெய்வப் பிராத்தனைகள் நமக்கு மறுமையில் நற்கதி அளிப்பதோடு இம்மையில் வரும் இன்னல்களுக்கும் சிறந்த பரிகாரங்களால் தீர்ந்துவிடும் என்பர் சாஸ்திரிகள்.  அப்படி இன்னல் நீங்கி இன்பம் சேர்க்கும் சில தெய்வப் பிரார்த்தனைகளை தெரிந்து கொள்வோமா!

மக்களை மயக்கும் நூல் வாசகம்:
     நம் ஊழ்வினையை மாற்ற வழிகூறும், தம் வயிறு பிழைக்க வந்த மந்திர சாஸ்திரிகள் கூறுவதென்ன?

1. நட்சத்திர தோஷ நிவர்த்தி
2. மாத விடாய் துன்பம் நீங்க
3. தம்பதிகளிடையே பிணக்கு தீர
4. நன்மைதரும் தெய்வ மண்
5. தீய சக்திகள் விலகிட
6. செவ்வாய் தோஷம் நிவர்த்தி
7. மரணபயம் நீங்க
8. மாங்கல்யம் பலம் பெருக
9. பெண்களுக்கு செவ்வாய் தோஷம் தீர
10. தீய கணவன் திருந்திட செய்ய

(இவ்வாசகத்திற்கு நீங்கள் என்ன பதில் அளிப்பீர்கள்)

     நம் தமிழ் மக்களிடம் உள்ள பலவீனம் ஆகிய ஆண், பெண் பேதமையும் அறியாமையை சாஸ்திரிகள் கண்டு பத்து நிவர்த்திகளை உங்கள் உள்ள பட்டி மன்றத்தில் பதிவு செய்து உள்ளார்கள்.

பரிகாரம் செய்ய:
திருச்சி – குளித்தலை மணபாறை வழியில் உள்ள திருஐயர் மலையில் (1070 செங்குத்தான படிகள்) காவிரி நீரைச் சுமந்து சென்று பிரதோஷம் தோறும் சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்து, உட்பிரகாரத்தில் முருகன் சந்நிதிக்கு முன் உள்ள இரட்டை லிங்கங்களையும் வழிபட்டு, இங்கு ஏழைகளுக்கு இரட்டை ஆடைகளை அதாவது வேஷ்டி துண்டு, புடவை, ரவிக்கை என தானம் செய்துவர அதி அற்புதமான பலன்கள் ஏற்படும் என்பதே சாஸ்திரியாரின் விளம்பரம்).

     இவ்விளம்பரம் அறிந்தவுடன் பரம பக்தனான பரம்பரை பாமர தமிழ் குடிமகன்கள் தம்பதியோடு, காவிரி நீரை சுமந்து சென்று பிரதோஷம் தோறும் சிவனுக்கு அபிஷேகம் செய்து கொண்டிருந்தால் அதி அற்புதமான பலன்கள் கிடைக்குமா? உங்கள் கைப்பொருள் போன பிறகுதான் புத்திவரும்.  இச்செயல் காக்கை உட்கார பனம்பழம் விழுந்த கதை போல் இருக்க வெறும் பிரமை நப்பாசை தான்.  கடவுள் அருளால் பரிகாரத்தினால் பெற்றோம் என்ற அறியாமை, மூடநம்பிக்கை என்று உணரவேண்டும்.

கடவுளை நம்புங்கள்:
 நாம் கடலிலே ஒரு படி கொண்டு சென்று ஆழ அமுக்கி நீர் முகந்தாலும், ஒரு படி அளவுக்கு மேல் இரண்டு படியா வரும்? வராது, அதுபோல் செல்வமுள்ள கணவனை அடைந்தாலும் நம் ஊழ்வினை பயன் அளவே இன்பமும், துன்பமும் அடைவோம் என்பதை உணர்ந்து, பரிகாரம் தவிர்க்கப் படவேண்டும்.

மனித ஜனநாயகத்தில் பகுத்தறிவுள்ள மக்களே தன் விதியை ஊழ் வினையை தேர்ந்து எடுத்துக் கொள்வது நாமே என்று உணர வேண்டும்.

ஊழின் வலிமை:

     ஊழாவது முன்பு செய்த வினை, பின் விளையும் முறை ஐப்பசியில் விதைத்து தையில் அறுவடை செய்வது போல், முற்பிறவியில் நாம் புரிந்த நல்வினை, தீவினைகளின் விளைவை இப்பிறவியில் அறுவடை செய்கின்றோம்.

     ஆகையால் மனம், வாக்கு, காயத்தால் யாருக்கும் தீங்கு செய்வோமானால் தன்னை பின்தொடரும் என உணர வேண்டும்.

ஊழின் பெருவலியாவுள மற்றொன்று
சூழினுந் தான் முந்துறும்
– திருக்குறள்

     ஊழைவிட மிக்க வலிமையுள்ளவை, வேறு எவை உள்ளன? ஊழை விளக்கும் பொருட்டு மற்றொரு வழியை ஆராய்ந்தாலும் அங்கும் தானே முன்வந்து நிற்கும்.

     ஒரு ஊழை விலக்கும் பொருட்டு பல கோவில் ஸ்தலங்களுக்கு சென்று பரிகாரம் செய்தால் மற்றொரு ஊழாகிய வறுமை முன்வந்து நிற்கும்.

பேதைப் படுக்கும் இழஊழ் அறிவகற்றும்
ஆகலூழ் உற்ற கடை
– திருக்குறள்

     பொருள் இழப்பதற்கு காரணமான ஊழ் பேதையாக்கும், பொருள் ஆவதற்கு காரணமான ஊழ் அறிவை பேருக்கும்.

நல்வினை தீவினை என்றிரு வகையாற்
சொல்லப்படும் கருவினில் தோன்றி
வினைப்பயன் விளையுங்காலை உயிர்கட்டு
மனப்பேரின்பமும் கவலையும் காட்டும்
---- மணிமேகலை

அவரவர் வினைவழி அவரவர் வந்தனர் அவரவர் வினை வழியை அவரவர் அனுபவித்தே தீர வேண்டும் என்பது கடவுள் நம்முள் இருந்து இடும் கட்டளை விதியாகும்.

     நம் தீவினையை போக்க அவன் நம்முள் இருக்கும் இடம் அறிந்து தியானிப்பதே பூசை, ஆராதனை ஆகும்.  இல்லாத இடத்தில் இருப்பதாக நினைத்து ஊர் ஊராக சுற்றி கோயிலுக்கு சென்று பணத்தை செலவழித்து, பாபத்தை அழித்து புண்ணியத்தை பெற்று செல்வத்துடன் வாழலாம் என நினைப்பது அறியாமையாகும்.

     இந்து மதத்தில் பிரம்மச்சாரி என பெயரிட்டுக் கொண்டு சிலர் உண்மைக்கும், அறிவுக்கும் மாறான சாத்திரங்களை கூறி மக்களுக்கு ஆசைகாட்டி உண்மை ஞானத்தை மறைத்துவிட்டார்கள்.

     இறைவனுடைய அருளைபெற மாதங்களிலும், வாரங்களில் திங்கள் முதல் ஞாயிறு வரை தினமும் பூசைகள் நடத்துகின்றார்கள்.  மேலும் பிரார்த்தனை என்ற பெயரில் தம்பதிகள் குளித்துவிட்டு ஈரத்துணியுடன் கோயிலை சுற்றி அங்கபிரதஷ்டம் செய்தால் எல்லா பலன்களும் கிடைக்குமென்ற மூடநம்பிக்கையை கைவிடுவோம்.  உண்மை கடவுள் நிலை அறிந்து பக்தி செய்யுங்கள் கடவுள் அருளை பெறலாம்.  உண்மை தெய்வநிலை அறிய முற்படுவோம்.

     உயிருள்ள வேதாந்திகள் கூறுவதென்னவெனில், நாங்கள் கடவுள் சிலைக்கு மந்திர ஆகமங்கள் செய்துள்ளதால், சிலைகளுக்கு அருள் பாலிக்கும் சக்தி உள்ளது என்பது உண்மையாக இருப்பின் வேதாந்திகளுக்கு உயிரும், மந்திரங்கள் சொல்லும் அறிவு ஆற்றல் சக்தியும், இவர்களுக்கு யாரால் ஆகமப்படுத்தி இருக்க முடியும்? சிந்தியுங்கள்.

     மரப்பசுவில் பால்கறக்க முடியுமா? ஒரு பொம்மை பெண்ணுடன் சேர்ந்து சிற்றின்ப வாழ்க்கை நடத்த முடியுமா? முடியாதெனில் ஆரம்ப பள்ளியில் பாடப்புத்தகங்களில் படங்களை காட்டி கல்வி கற்பித்தது போல் ஆதியில் நமக்கு சிலைகள் மூலம் நல்லொழுக்கமும், பக்தியும் கற்ப்பிக்கப்பட்டது.  அப்படங்களையும் சிலைகளையுமே காட்டி இன்றும் ஆயுள்காலம் வரை ஐந்தாம் வகுப்பு பாடங்களையே குழந்தைகளைப் போல் படிப்பதும், நம்புவதும் அறிவுக்கு உகந்தது அல்ல என்பர் ஆன்றோர்.

நம்மிடம் உள்ள உண்மை தெய்வநிலை:

     அருள்ஜோதி தெய்வமெனை ஆண்டு கொண்ட தெய்வம்
     அம்பலத்தே ஆடுகின்ற ஆனந்த தெய்வம்
     இருட்பாடு நீக்கி ஒளி ஈந்தருளுந்தெய்வம்
     எண்ணியநான் எண்ணியவாறு எனக்கு அருளுந் தெய்வம்
.

என் மனக் கண்ணே என் அருட் கண்ணே
என் இருகண்ணே என்கண்ணுன் மணியே

     இவ்வுலகம் ஒளியாகிய சூரிய, சந்திரர் இன்றி உலகமில்லை, அதுபோன்றே மனித தேகத்தின் இதயத்தின் கண் ஆன்ம ஒளி, உயிர் ஒளி இல்லையேல் உடலில்லை என்பதை உணர வேண்டும்.

     இவ்வுண்மையை ஞானிகள் வெளிப்படையாக கூறவில்லை.  ஏனெனில் ஆறு அறிவுள்ள மனிதன் ஏற்றுக் கொள்ளமாட்டான். காரணம் மனிதனுக்கு கடவுள் அறிவும் கொடுத்து அதை மறைக்கும் மாயையாகிய மண், பெண், பொன் ஆசையை கொடுத்தான்.  ஆதலின் பரிபாசையாக ஞான நூல்கள்  எழுதப்பட்டுள்ளது.  மேற்கூறிய பொருள்கள் நிச்சயமற்றவை, நிம்மதியை தராது என்று உணர்ந்து தன்னை யார் என குருமுகம் அறிந்து சாதித்தவன் நித்தியன் (ஆன்மா) ஆவான்.  அதுவே முக்தியாகும்.

     ஞானிகள் இந்த உண்மையை மறைத்ததே நலம் எனக் கருதிய சாத்திரிகள் தங்கள் இட்டப்படி சாத்திரங்களையும், கடவுள்களையும் படைத்து நம்மையே மூலதனமாக கொண்டு பிழைக்க கற்றுக்கொண்டார்கள்.  உண்மை கடவுளை ஏன் மறைத்தார்கள் எனில்.

முகத்தின் கண்கொண்டு காண்கின்ற மூடர்கள்
அகத்தில் கண்கொண்டு காண்பதே ஆனந்தம்
மகட்குத் தாய்தன் மணாளனோடு ஆடிய
சுகத்தை சொல் என்றால் சொல்லுமாறு எங்கனே.

     முகத்திலே உள்ளே கண்களால் புறப்பொருளைக் கண்டு மகிழ்கின்ற மூடர்களே! அறிவுக் கண்கொண்டு காண்பதே ஆனந்தமாகும்.

     ஒன்பது வயது பெண் தன தாயைப் பார்த்து திருமணம், புருஷன், குழந்தை பிறப்பு எப்படி என்று கேட்டால் வாயினால் சொல்ல கூடியது அல்ல, குழந்தை கேட்டவை அனைத்தும் அவள் அந்த பருவத்தை அடைந்து உணரக் கூடியதாகும்.

     அதுபோல் சீடன் குருவின் கடவுள் அனுபவத்தை அவர் காட்டும் வழி சென்று உணரக் கூடியதே தவிர வாயினால் கூற முடியாததாகும்.

     லிங்கத்தை பல மலர்களால் அலங்காரம் செய்து தேங்காய் உடைத்து வைத்து, சாம்பிராணி தூபம் காட்டி ஒரு கையில் மணியடித்து, மற்றொரு கையில் கற்பூரத்தைக் காட்டி வரும் சடங்கையே தீபாராதனை என்கிறோம்.  இது சடங்கு இதனால் ஒரு பயனும் இல்லை.

தீபமும் ஆராதனையும் கூடியது தீபாராதனை ஆகும்.
தீபம் – சிரசில் உள்ள அருட்பெருஞ்சோதி
ஆராதனை – அப்பியாசம் தியானப்பயிற்சி

     சிரசில் உள்ள அருட்பெருன்ஜோதியின் இடத்தில் மனம் ஒன்றி இருந்து தியானிப்பதுவே தீபாராதனை ஆகும்.

     குறிப்பாக பெண்களுக்கு கண்கண்ட தெய்வமாக கணவன் தன் தேவையை கொடுக்க இருக்க, பேதமையால், பேராசையால் இல்லாததை பெற கோவில் கோவிலாக சுற்றுவதில் ஒரு லாபமும் கிடைப்பதில்லை.  நாம் வணங்கும் தெய்வத்தை மனத்தால் நினைத்து கண்ணீர் விடுங்கள், அந்த நினைப்பே தியானம்.
     உங்கள் உள்ளத்தில் உள்ள தெய்வம் உங்கள் குறையை தீர்ப்பான்.  நமசிவாய வாழ்க, நாதன் தாள் வாழ்க, இமைப் பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க எனவும் சிவாய நம எனவும் நினைமீன்கள்.

     சிலை மனிதர்களைப் போல் பஞ்சேந்திரியங்களின்று வெளிப்பட்டிருந்தும், பஞ்சேந்திரிய சக்தி செயலாற்றும், அந்தக் கரணங்களுமற்று அசைவற்ற நிலையிருந்த தன்மையை சாட்சியாகக் காட்டியிருக்கிறார்கள்.  இதுவே உண்மை தியானம்.


     குருமுகத்தில் உண்மை தெய்வ நிலையை அறிந்து, உள்ளத்தில் தீபத்தை ஏற்றி மனதை அதில் ஒருமுகப் படுத்தித் தியானம் செய்வதுவே தீபாராதனையாகும். 

No comments:

Next previous home
Related Posts Plugin for WordPress, Blogger...