Friday, December 23, 2016

நான் பெற்ற இன்பம் பெறுகஇவ் வையகம் - திருமந்திர இரகசியம்நான் பெற்ற இன்பம் பெறுகஇவ் வையகம்
வான்பற்றி நின்ற மறைப்பொருள் சொல்லிடின்
ஊன்பற்றி நின்ற உணர்வுறு மந்திரம்
தான்பற்றப் பற்றத் தலைப்படும் தானே” - பாடல் - 85


     “நான் பெற்ற இன்பம் பெறுக இவ்வயைகம்” இந்த உலகில் தோன்றிய  ஒவ்வொரு மனிதனும் சிந்தையில் இருத்தி செயல்பட வேண்டிய பொன்னான வாக்கியம் இது!

     நான் பெற்ற நெடும் பேற்றை ஓதிமுடியாது என்போல் இவ்வுலகம் பெறுதல் வேண்டுவனே” என்று திருவருட்பிரகாச வள்ளலார் இராமலிங்க சுவாமிகள் இறைவன் அருளால் தான்பற்ற பெரும் பாக்கியங்களை எண்ணி வியந்து மகிழ்ந்து, இறைவா எனக்கு அருளியது போல உலகர் அனைவருக்கும் இப்பெரும் பேற்றினை நல்க வேண்டும் என்றும் பிரார்த்திக்கின்றார்!.

     திருமூலர் சொல் திருவருட்பிரகாசரும் சொல்கிறார்! ஞானிகள் இயல்பே இதுதான்! இறைவா எனக்கு அருளியதுபோல எல்லோருக்கும் அருள்புரி என்பதே எல்லா ஞானிகளின் வேண்டுதல் உள்ளவராய்விடுவர்!

     இறைவன் யார்? “வான்பற்றி நின்ற மறைப்பொருள்”! வான் – ஆகாயம்தான் இப்பிரபஞ்சமெங்கும் நிறைந்துள்ளது! அதில்தான் எண்ணற்ற கோள்கள் இயங்குகின்றன! ஆகாயமெங்கும் – பிரபஞ்சமெங்கும் நீக்கமற நிறைந்திருக்கின்ற ஓவ்வொரு அணுவிலும் அணுவாய் அந்த இறைவனே உள்ளார்! அணுவுக்கும் உள்ளே மறைவாக இருக்கும் அப்பொருள் மெய்ப்பொருள் ஜோதி! எங்கும் எதுவும் அணுத்துகள்களின் சேர்க்கையே! கோடிக்கணக்கான அணுசேர்ந்ததே நம் மானுடஉடலும். 

     நம் உச்சி முதல் உள்ளங்கால்வரை வியாபித்திருக்கும் அணுத்துகள்களை இணைத்து வைத்துதானே ஜீவனாக வந்து உடலில் சிரசின் உள் மத்தியில் மறைவாக நின்று நடத்துகின்றான்!  என்னென்று சொல்வது? இந்த லீலா வினோதத்தை! பரம்பொருளே ஜீவனாகி உடலினுள்ளே மறைந்து நின்று அருள்வதால் மறைபொருளாக விளங்குவதால் அந்த இறைவனை கூறும் நூல் மறை என்றும் வேதம் என்றும் அழைக்கப்பட்டது!.

     அணுவுக்கும் அணுவாக வான்வெளி – பரவெளி எங்கும் நிறைந்திருக்கும் பரமான்மா – பரம்பொருள் நாம் உய்யும் பொருட்டு நம் உடலினுள்ளும் ஜீவான்மாவாக மறைந்து இருந்து அருள்கிறார்!. இதை உணர்த்த வந்ததே வேதம்.  மறை! நான்மறை! தமிழில் உரைக்க வந்தார், இறைவனே அருளியதால் திருமூலர்! திருமந்திரம்! தமிழ்மந்திரம்! தமிழ் வேதம்! தமிழ் மறை! இந்த உடலுள் மறைவாக இருக்கும் பொருளை மெய்ப்பொருளை உணர்ந்து தவம் செய்யும் முறையான சும்மா இருக்கும் திறத்தினையும் தெளிவாக கூறுகிறார் திருமூல நாயனார்!.

     நம் உடலுள் நின்ற ஜோதியை உணர்ந்துதான் அறியமுடியும்! நாம் அதை பற்றப் பற்ற அது பற்றிக் கொள்ளும்! நினைந்து நினைந்து உணர்ந்து உணர்ந்து சும்மா இருப்பதே நாம் அதை பற்றும் நெறியாகும்!

    உணர்வு பெறுக குரு தீட்சையின்மூலம்! உணர்வு பெருக உடலின் ஊன் கண்மணி அதை பற்றி நிற்கும் ஜோதியை பற்றப் பற்ற கண்மணி ஊசிமுனை துவாரத்தின் உள் ஒளி ஊடுருவி ஆத்ம ஜோதியை அடைந்து பிரகாசிக்கும்! இதுவே ஞானம் பெறும் ஒரே வழியாகும். இதை எல்லோரும் பெற்று இன்பமடைதல் வேண்டும் என்கிறார் திருமூலர்!

“ஊன் பற்றி நின்ற உணர்வுறு மந்திரம்”  ஊன் என்றால் சதை நம் உடலில் உச்சிமுதல் உள்ளங்கால்வரை ஊன் – சதை தனியாக இல்லை! எல்லா இடங்களிலும் எலும்பு, மஜ்சை, நரம்பு இணைந்தே உள்ளது! ஒரே ஒரு இடத்தில் மட்டும் ஊன் மட்டும் உள்ளது! அதுதான் கண்மணி!  இறைவன் படைப்பில் அற்புதமானது கண்மணி! கண்மணியில் இரத்தம் இல்லை! நரம்பு இல்லை! எலும்பு இல்லை! நம் உடம்போடு எவ்வித தொடர்பும் இல்லை! அற்புதம்! நம் கண்ணில் கருவிழியின் மத்தியில் பிராண நீரில் மிதந்து கொண்டிருக்கும் ஒரு சதைக்கோளம்! கண்ணாடி போன்ற மெல்லிய ஜவ்வால் அடைக்கப்பட்ட ஊசிமுனை துவாரம் உடையது!

   பூமி எப்படி வானத்தில் அந்தரத்தில் இருக்கின்றதோ அதுபோல கண்மணி உள்ளது.  பூமி எப்படி தன்னைத்தானே சுற்றுகிறதோ அதுபோல கண்மணியும் லேசாக சுற்றுகிறது.  பூமி சுழல அதனுள் மையத்தில் நெருப்பு உள்ளதோ அதுபோல கண்மணியும் அதன் மத்தியில் ஜோதியை கொண்டுள்ளது.
    கண்மணியே ஒரு தாயின் கருவில் உருவாகும் முதல் உறுப்பு! இந்த உலகத்திலுள்ள 700 கோடி மக்களுக்கும் எந்தவித வித்தியாசமுமில்லாமல் ஒன்று போல இருப்பது கண்மணி மட்டுமே! நம் உடலிலே இருந்தும் உடலை தொடாமல் இருக்கும் சதைக்கோளம், ஒரே உறுப்பு கண்மணியே! இந்த கண்மணியைத்தான் சித்தர்களும் பற்பல வார்த்தைகளில் பரிபாசையாக சொன்னார்கள்!

     யாருமே இதுவரை வெளிபடுத்தாத இரகசியம் இது! அடியேன் 1992-ல் கண்மணிமாலை நூல் தொடங்கி 25-வது நூலான இந்த மந்திர மணி மாலை வரை எல்லா நூற்களிலும் கூறியிருக்கிறேன்.  இரகசியமும் இல்லை பாவமுமில்லை! ஏன்? “நான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்” என்ற என் எண்ணத்தால் தான்! உண்மை ஞானம் அறிந்தவர் உரைப்பர் உண்மை!

    ஞானமில்லா அறிவிலிகள் தான் உண்மை உணராதவர்கள் தான் இரகசியம் இரகசியம் என்று பொய் உரைப்பர்! உண்மையை கூறினால் தானே அறியாதவர்கள் அறிவர்! ஆர்வமுள்ளவர்கள் ஈடுபடுவர்! இரகசியம் என்று மறைத்தால் ஒருவரும் உண்மை உணராது போய்விடுவரே! இரகசியம் என உரைப்பதும் மறைப்பதும் கடவுளுக்கு விரோதமான செயலேயாகும்! அவர்கள் நிச்சயம் நரகத்துக்குதான் போவார்கள்!

    நீ அறிந்ததை மற்றவரோடு பகிர்ந்துகொள்! நீ உணர்ந்ததை எல்லோருக்கும் சொல்! உன்னால் ஒரு ஆன்மாவாவது கடைத்தேறட்டுமே! உண்மையைச் சொல்! நல்லதை செய்! உலகம் உன்னை வணங்கும்! குருவருள் கிட்டும்! இந்த உலகம் இதுவரை காணாத ஆன்மீக புரட்சி அடியேனின் 40 நூற்கள்!

   இன்றைய உலகம் வெகு வேகமாக சீரழிவைநோக்கி போகிறது! இன்றைய தலைமுறை மிகமிக புத்தி கூர்மையுள்ளவர்களாக திகழ்கிறார்கள்! அவர்களுக்கு பழைய பத்தாம்பசலித்தனம் ஒன்றும் புரியாது! ஏற்கவும் மாட்டார்கள்! தமிழில் உள்ள ஞானநூற்களுக்கு ஒருசிலரே பட்டும்படாமலும் ஞானத்தை ஓரளவு கூறியிருக்கின்றனர்.  தமிழறிஞர்கள் கவிஞர்கள் வித்துவான்கள் பண்டிதர்கள் வெறும் இலக்கண இலக்கியத்தோடு நின்று விடுவார்கள்.  சமய பிரச்சாரார்கள் வெறும் புராண கதை பேசியே காலம் கழிக்கின்றனர்! புற்றீசல் போல் ஆசிரமம்! சாமியார்கள்! மாமியார்கள் நிறைய பெற்றவர்களே இன்றைய சாமியார்கள் பின் அவர்களிடம் எப்படி இருக்கும் ஞானம்?

    யோகா எனக்கூறி ஏமாற்றும் போலிகள்தான் ஏராளம்! இப்படிப்பட்ட இந்த காலத்தில் தடுமாறும் மக்களை தடுத்து நல்வழிகாட்ட அடியேனின் உண்மை ஞானம் கூறி தீட்சை வழங்கும் செயலே பெருஞ்செயல் நற்செயல்! வள்ளலார் எம்முள்ளிருந்து ஞானத்தை வாரிவாரி வழங்குகிறார்! நானும் எதையும் மறைக்காமல் இரகசியம் என்று சொன்ன அனைத்தையும் எமது 40 நூற்களிலும் சொல்லிவிட்டேன்!

    இதுவரை யாரும் செய்யாத அருஞ்செயல் இது! நானே ஏன் கூறுகிறேன் என்றால் இந்த ஞானம் கிடைத்தற்கரியது! அபூர்வமானது! அரிதிலும் அரிதானது! பழைய காலங்களில் 12 வருடம் குருவோடு இருந்தாலே கிட்டும் இந்த ஞானம்! படித்து அறிய முடியாத பரிபாஷை நிறைந்தது அப்பேர்ப்பட்ட மெய்ஞானத்தை அடியேன் வெகு எளிதாக சிறுகுழந்தைகளும் புரிந்து கொள்ளும்படி சுலபமாக உபதேசிக்கின்றேன், எழுதி வெளியிட்டுள்ளேன்!

     உலகிலேயே ஞானத்தை அப்பட்டமாக கூறி, வெளிப்படுத்திய புத்தகமாக வெளியிட்ட முதல் ஆள் நான்தான்! இது எனக்கு நிச்சயம் பெருமைதான்! புண்ணியம்தான்! உலகம் ஞானம்பெற விரும்பிய ஞானிகள் அடியேனை நிச்சயம் ஆசிர்வதிப்பார்கள்!

    இந்த நூல் எவ்வளவு புனிதமானது உன்னதமானது ஞானம்பெற வழிகாட்டுவது என்பதை மக்கள் உணர வேண்டும்! சாதாரணமாக கருதிவிடக்கூடாது அல்லவா? அதற்குத்தான் மேலே கூறியவை! இதுவரை வந்த ஞானநூற்களின் விளக்கம் அடியேனின் 40 நூற்களில் சுருக்கமாக உள்ளது! 12 வருடம் காத்திருந்து பெற வேண்டிய ஞானத்தை 12 நாழிகைக்குள் அடியேன் உபதேசமும் தீட்சையும் தந்து பக்குவமாக்கிவிடுகிறேன்!?

     இந்த உலகத்து ஞானிகள் அனைவரது ஆசியுடனும் அடியேன் கன்னியாகுமரியில் தங்கஜோதி ஞானசபையிலிருந்து வாலைக்குமரி அருளால் தருகிறேன்! வாருங்கள் ஆன்மாக்களே! வந்தால் கிட்டும் ஞானம்!
“யான்பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்”!

   --- ஞானசற்குரு ஸ்ரீ சிவ செல்வராஜ் அய்யா அவர்கள் திருமந்திரத்துக்கு ஞான விளக்கம் அளித்த “மந்திர மணிமாலை” என்னும் நூலில் இருந்து”
2 comments:

Velsamy said...

இந்த பதிவுகளை படிப்பதற்கே புண்ணியம் செய்து இருக்க வேண்டும்....மிக்க நன்றி மதிவாணன் அவர்களே.

chella said...

நன்றி பல கோடி ஐயா... இதை என்றும் மறக்காமல் இருப்பேன்... நல்ல மனிதர்கள் மனதில் வாழ்வார்.

Next previous home
Related Posts Plugin for WordPress, Blogger...